உலகமே தென் கொரியத் தொடர்களை ஏன் விரும்புகிறது?

உலகமே தென் கொரியத் தொடர்களை ஏன் விரும்புகிறது?
Published on

ஓடிடி தளங்கள் அறிமுகமான பின்னர் நடந்தவற்றில் முக்கியமான ஒன்று, மொழி, நாடு, கலாசார எல்லைகளைக் காணொலிப் படைப்புகள் கடந்துள்ளன. இவ்வாறாக தமிழிலும் தென்கொரிய வெப்சீரீஸ்கள் மிக ஆர்வமாகப் பார்க்கப்படுகின்றன. உதாரணத்துக்கு பார்க்கவே சற்று உதறல் எடுக்க வைக்கும் Squid Games தொடர் இங்கே பரவலாக இளையோர் மத்தியில் பார்க்கப்பட்டுள்ளது. அதேசமயம் அனைத்து வயதினரும் பார்க்கும்படி உணர்வுபூர்வமாக பல கொரியத் தொடர்கள் உள்ளன. ஏராளமான தொடர்களைப் பார்த்து அவற்றில் மூழ்கியவர்களில் நானும் ஒருத்தி. எல்லாவற்றையும் இங்கே எழுதமுடியாது என்பதால் சிலவற்றைப் பற்றி மட்டும் சுருக்கமாக...

பெண் மையத் தொடர்கள்

ஸ்டார்ட் அப்

சகோதரிகள் இருவர்.  பணத்தைத் தேடிச் செல்லும் அம்மா உடன் ஒருவர், ஏழ்மை நிலையில் இறந்த தந்தையின் நினைவுடன் பாட்டியுடன் வாழும் இன்னொருவர். பணம் மட்டுமே முக்கியமில்லை என தந்தை பக்கம் இருந்த எளிய பெண் தன் முயற்சியால் ஒரு நிறுவனத்தை தொடங்கி பல தடைகளை தாண்டி எவ்வாறு வெற்றியடைகிறார் என்பதே கதை. இதனிடையே தனக்கு உதவி செய்யும் இளைஞர்கள் இருவரில் யாரை அவள் தன் காதலனாக தேர்ந்தெடுப்பாள் என்ற பதட்டத்தையும் இயக்குநர் நம்மிடையே உருவாக்குகிறார்.   இரு நாயகர்களும் நல்லவர்களாக இருப்பதால், பாட்டி தனது பேத்திக்கு சரியான துணையை தேர்ந்தெடுக்க தடுமாறுவார், சிறு வயதிலிருந்து துயரங்களை மட்டுமே சந்தித்த தன் பேத்திக்கு நல்வாழ்வு கிடைக்க தன் வயதையும் பொருட்படுத்தாமல் போராடுவார். தனது காதலியின் துயரங்களை கண்டு இரு நாயகர்கள் வெளிப்படுத்தும் உணர்ச்சிகள் அழகு, அதில் கிம் சியோன் ஹோ (Kim seon-ho) தன் காதலிக்காக தவிக்கும் காட்சிகள் அற்புதம். இத்தொடரை அனைத்து வயதினரும் ரசித்து பார்க்கலாம்.

தி எம்ப்ரஸ் கி

இது கொரியன் ராணி பற்றிய உண்மையான வரலாற்றுத் தொடர். சிறு வயதில் தந்தையைப் பிரிந்த நிலையில், கொள்ளைக்காரர்களால் அம்மாவும் கொல்லப்பட்டதால்  கீ (Ki) தனித்துவிடப்படுகிறாள். அவள் ஆண் வேடமிட்டு அரசுப்படையில் சேர்கிறாள். அங்கே பல கடத்தல்களை தடுக்கிறார், இதனால் அரசரின் கவனத்துக்கு உட்படுகிறாள். தன் தாயை கொலை செய்தவனை பழிவாங்க துடிக்கும் அதேநேரம், பிரிந்த தன் தந்தையையும் தேடுகிறாள். வில் வித்தையில் சிறந்து விளங்கும் கீ (Ki) யை படைத் தளபதி கவனிக்கிறார். அவர் தான் கீ (Ki)யின் தந்தை, அவரும் தன் மகளை தேடுகிறார். ஒரு கட்டத்தில் தன் தந்தையை அறிந்து கொண்டாலும் கீ (Ki) யால் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள முடியவில்லை. தன் நாட்டை இக்கட்டான கட்டத்தில் மீட்கிறார், இதனால் அரசனின் அன்பு கிடைக்கிறது, அவள் பெண் எனத் தெரிந்த பின் கீ (Ki)யை அரசனும் விரும்ப ஆரம்பிக்கிறார், ஆனால் கால சுழற்சியில் கீ (Ki)  சீனத்தின் பேரரசனை திருமணம் செய்து மகாராணியாகிறார். பேரரசனின் எதிரிகளை கீ (Ki) சமாளித்து, எப்படி மகாராணியாக வாழ்ந்தார் என்பதே கதை. கீ (Ki) யாக நடித்த ஹே ஜி - வோன் (Ha Ji-won) சண்டை காட்சியில் அடித்து நொறுக்கியிருப்பார். தாய், தந்தையை இழக்கும் போதும், காதலனை விட்டு பிரியும்போதும், தன்னைக் காதலிக்கும் பேரரசனை காப்பாற்றும்போதும் ஹே ஜி - வோன் (Ha Ji-won) மிகையில்லாமல் நடித்திருப்பார். திறமையில்லாத பேரரசனாக ஜி ஜாங்க் வோக் (Ha Ji-won) அசத்தி யிருப்பார். உண்மையில் தென்கொரிய மக்களுக்கு மகாராணி கீ(ஓடி) மீது மிகுந்த வெறுப்பு உள்ளது, இருப்பினும், வேண்டிய ஏற்ற இறக்கங்களுடன் கதையை துணிவுடன் இயக்குநர் கையாண்டு சிறப்பாக முடித்திருப்பார்.

ஏஜென்சி

பணபலம், ஆள் பலம், அதிகாரம் எதுவும் இல்லாத  ஒரு பெண், இவையனைத்தும் இருக்கும் ஒரு பெண், இவர்கள் இருவரும் தலைமைப் பதவியில் அமர முயலும் வழியில் சந்திக்கும் பிரச்னைகள் பற்றிய தொடர். லீ போ யாங் (Lee Bo-Young) வேலையில் பேய் போல் உழைப்பவள், எடுத்த வேலையை முடிக்க யாரை வேண்டுமானாலும் எதிர்ப்பவள். இதனால் தனக்கு அரக்கி பட்டம் கிடைப்பதையும் பொருட்படுத்தாமல் தன் இலக்கை நோக்கிச்

செல்வாள். மறுபக்கம் சோன் நா - யுன் (Son Na-eun) வாழ்க்கையில் கஷ்டங்களை உணராத, போகும் இடங்களில் சிவப்புக் கம்பள விரிப்புக்கு மட்டுமே பழக்கப்பட்ட சிறு பெண். அவளுக்கு தலைமைப் பொறுப்பின் மீது ஆசை, ஆனால் அது எளிதாக கிடைக் காது என புரிந்து கொண்டு அதற்கேற்ப தனக்கு பழக்கப்படாத விசயங்களிலும் இறங்கி முன்னேறுவாள். பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை என தெரிந்து கொண்டு தனது துணையையும் தேர்ந்தெடுப்பதில் வரும் சிக்கல்களையும் கடப்பாள். இதில் வில்லன்கள் பலர் இருந்தாலும் சோ சியாங் - ஹா (Cho Seong-ha) நடிப்பினால் மட்டுமே தொடர் சூடு பிடிக்கிறது. அலுப்பு தட்டாமல் செல்லும் தொடர்.

ரூக்கி ஹிஸ்டாரியன்

வரலாற்றைப் பதிவு செய்வதற்கு இருக்கும் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதத்தில் எடுத்திருக்கும் தொடர். பெண்களுக்கு மதிப்பே இல்லாத நாட்டில் அவர்களுக்கு  அரசவையில் வரலாற்று ஆசிரியர் வேலை தர முன்வருகிறான் அரசன். இதற்கு நாட்டில் பெரும் எதிர்ப்பு கிளம்ப அதற்கு அரசன் விளக்கம் கொடுத்து பெண்களை வேலைக்கு அமரவைப்பான். ஆனால் அந்த வரலாற்று ஆசிரியைகளுக்கு உரிய மதிப்பு கிடைக்காது. இதையெல்லாம் மீறி அந்தப் பெண்கள் எப்படி அரசப் பதவிகளை வகித்தார்கள் என காதல், நகைச்சுவை கலந்து சொல்லும் தொடர்.

மாயா ஜாலக் கற்பனைத் தொடர்கள்

கார்டியன்: தி லோன்லி அண்ட் கிரேட் காட்

கொரியன்  மாயாஜாலத் தொடர்களில் பேய்கள், ஆன்மாக்கள்,  தேவதைகள்  போன்றவை மனிதர்கள் மத்தியில் வாழும் கதைகள் சகஜமாக எடுக்கப்படுகின்றன. பள்ளி மாணவியான கிம் கோ - யுன் (Kim go-eun) தனியாக வளர்கிறாள், தனது குறைகளைப் பேச யாரும் இல்லாததால் கடலிடம் சொல்லி அழுவாள். மனிதர்களின் கண்ணுக்குத் தெரியாத பேய்கள், தேவதைகள் அவள் கண்ணுக்குத் தெரியும். இதனால் மரணமடையாத ஆத்மாவாக அலையும் கோங் யோ (gong yoo) யுடன் பழகும் கிம் கோ - யுன் (Kim go-eun) காட்சிகள் மிகுந்த அழகாக இருக்கும். குழந்தையை போல் நடந்து கொள்ளும் கிம் கோ-யுன் (Kim go-eun) வின் செயல்கள் கோங் யோ (gong yoo) விற்கு மகிழ்ச்சியைத் தரும். இதனிடையே மனிதர்களின் ஆயுளை முடிக்கும் வேலையில் ஈடுபடும் (க்ரிம் ரீப்பர்)  லீ டோங் - வோக் (Lee dong-wook) இவர்களுடன் இணைந்து ஒரே வீட்டில் தங்குகிறார். அவர்களிடையே நடக்கும் வாக்குவாதங்களும், காதலும், நகைச்சுவையும் அனைவரையும் ரசிக்க வைக்கும். இத்தொடரை உருவாக்கியவர்கள்  பார்வையாளர்களை  சற்றும் குழப்பாதபடி எடுத்திருப்பது பாராட்டுக்கு உரியது. 

எக்ஸ்ட்ராடினரி யூ

சொந்த வாழ்க்கை எனும் புத்தகத்தில் தாங்களே ஹீரோக்கள் என்பதை அடிப்படையாக கொண்டத் தொடர். அதனால் தங்கள் வாழ்க்கை மட்டுமே முக்கியம் என அனைவரும் நினைப்பார்கள். பள்ளி மாணவர்களின் இடையே நடக்கும் இந்தத் தொடர் ஒரு காதல் கதை. இதய நோயால் அவதிப்படும் நாயகி திடீரென தான்  இன்னொரு உலகத்திலிலும் தான் வாழ்வது போல் உணர்வாள். தனக்கு மட்டும் ஏன் இரண்டு வாழ்க்கை என குழம்பி கடைசியாக அது ஒரு வெப்டூன் (Webtoon) கதாபாத்திரங்கள் அதில்  வெறும் நிழலாக வரும் பாத்திரம் மட்டுமே தான் என அறிந்து சோகமாவாள். அவள் காதலனும் மறைந்து போவான், அவனுடன் திரும்ப சேர்வாளா?  தன் இதய நோயை வென்றாளா? என்று பரபரப்பாக தொடரைக் கொண்டு செல்கிறார் இயக்குநர். முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கும் கிம் யே&யுன் (Kim Hye-yoon) தனது குறும்புத்தனத்தாலும், இயலாமையால் திணறும் போதும், காதலில் தவிக்கும் போதும் நம் மனதைக் கொள்ளை கொள்கிறார். நொடிக்கு நொடி பார்வையாளர்களை படபடப்புடன் பார்க்க வைக்கும் தொடர்.

மிஸ்டர் குயீன்

நிகழ்காலத்தில் குளத்தில் விழும் ஒருவன் வெளியே வரும் போது 400 ஆண்டுகளுக்கு முன் வாழும் அரசியின் உடலில் இருப்பான். கையில் போன் இல்லாமல், பெண் உடலில் எப்படி ஆணாக சிந்திப்பது என காமெடியாக செல்லும். சிம்மாசனத்துக்காக பலர் முயல, அது அரசனின் உயிருக்கு ஆபத்தாகிறது. அரசி பல போராட்டங்களுக்கு அரசனை காப்பாற்றி பின் மயக்கமடைகிறாள்.  விழித்தால் நிகழ்காலத்தில் தனக்குச் சொந்தமான ஆணின் உடலில் இருப்பான். இதில் அரசியாக நடித்திருக்கும் சின் ஹே - சன் (Shin Hae-sun) காமெடியிலும், பழைய உலகத்திற்கு திரும்ப செல்ல தவிப்பதிலும் வெளுத்து கட்டியிருப்பார். இத்தொடர் ஜாலியாகவும், அதே நேரம் சீரியசாகவும் மாறி மாறி காட்சிகள் ரசிக்க வைக்கிறது.

டபிள்யூ: டூ வேர்ல்ட்ஸ் அபார்ட்

நிகழ்காலத்தில் வாழும் உலகத்திலிருந்து ஒரு புத்தகத்தின் காமிக் கதைக்குள் நுழையும் கதை. நாயகியான மருத்துவர் ஹான் யோ - ஜோ (Han hyo joo) மாறி மாறி வேறுவேறு உலகத்திற்கு செல்லும் போது பதட்டத்துடன், காமெடியும் நடக்கிறது. நாயகி, இந்த மாற்று உலகில் ஒரு கொலை வழக்கில் சிக்குகிறார். நாயகியை மீட்கும்  நாயகனான லீ ஜோங் - சுக் (Lee Jong-suk) காமிக் உலகத்திலிருந்து நாயகியின் உலகத்திற்கு  திருப்பி அனுப்புகிறான். அதன்பின் அவள் நாயகனை மறக்க முடியாமல் இருக்கும் நிலையில் அவனும் அவள் உலகிற்கு வருகிறான், ஆனால் அவனுக்கு நாயகியை அடையாளம் தெரியவில்லை. ஆக்சன், காமெடி, திரில் நிறைந்த தொடர்.

ஐ ஏம் நாட் எ ரோபாட்

மனிதர்களைத் தொட்டால் நாயகனுக்கு வியாதி வரும், புது வகையான இந்த நோயைப் பற்றி வெளி உலகிற்கு தெரியாமல் பார்த்துக் கொள்வான். அதனால் தன் வீட்டில் எந்த மனிதர்களும் வராதப்படி, அனைத்து வேலைகளையும் ரோபோட்டுகளை வைத்தே முடிப்பான். ரோபோவாக ஒரு பெண் நடிக்க வேண்டிய சூழல். மனிதர்களை நம்பாத அவனுக்கு அந்த ரோபோ ஒரு மனித பெண் எனத் தெரியாது. அதே போல் அந்த பெண் ரோபோவை தொட்டாலும் அவனுக்கு வியாதி வரவில்லை. அதற்கு காரணம் ரோபோ மேல் அவன் வைத்த நம்பிக்கை எனத் தெரிய வந்தது. அதனால் மனிதர்களை நம்பித் தொடும் போது அவனுக்கு வியாதி வராது. ரோபோட்டுகளுக்கும் அவனுக்கும் நடக்கும் நிகழ்வுகள் சுவாரசியமாக, காமெடியாக, உணர்ச்சிமயமாகவும் இருக்கும்.

பிஹைண்ட் யுவர் டச்

சிறு நகரத்தில் நடக்கும் முழு நகைச்சுவை கதை. கால்நடை மருத்துவரான ஹான் ஜி-மின் (Han ji-min)க்கு பிறரை தொட்டு பார்த்து அவர்கள் தினசரி வாழ்க்கையில் என்ன நடந்தது என அறியும் சக்தி கிடைக்கிறது. அதே சிறு நகரத்தில் போலீசான லீ மின் கி (Lee min ki)க்கு அங்கு வேலை செய்ய பிடிக்காமல் வாழ்கிறான். அவர்கள் இருவரும்

சேர்ந்து நகரத்தில் நடக்கும் கொலைகளை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்கள். இத்தொடரில் வரும் அனைவரும்  சிறப்பாக நகைச்சுவை நடிப்பில் பின்னுகிறார்கள். காமெடியுடன், திரில் கலந்த கதை. 

காதல் தொடர்கள்

வாஸ் இட் லவ்

ஒற்றைப் பெற்றோராக தன் மகளை வளர்க்கும் ஒரு பெண் இயக்குநர், தந்தையின் சுவடே தெரியாதவாறு மகளை வளர்க்கிறார். இருப்பினும் மகள் தந்தையை பற்றி வீட்டுக்கு தெரியாமல் தேடுகிறாள். அதே நேரம் அப்பெண் இயக்குநர் 14 ஆண்டுகள் கழித்து தன் காதலனைச் சந்திக்கிறாள். அவனோ பிரிவுக்கு அவள் தான் காரணம் என குற்றஞ்சாட்டுகிறான். ஆனால் அவள் துணை இன்றி தனியாக மகளை வளர்ப்பதை கண்டு பரிதாபப்படுகிறான். தொடர்ந்து அவளை பழைய காதலன் உட்பட 4 பேர் காதலிக்க, அவள் மறுக்கிறாள். 4 பேரும் அவள் மீது காதலைப் பொழிவார்கள். அதில் பழைய காதலன் அவள் பின்னாலே அலைவான். தன் காதலை மீண்டும் சொல்வான், சோன் ஹோ - ஜீன் (Son ho-jun)  இந்த பாத்திரத்தில் அழகாகக் கலக்கியிருப்பது, இத்தொடரின் வெற்றிக்கு முக்கிய காரணம்.

டிஸ்ஸண்டண்ட்ஸ் ஆப் தி சன்

இந்தத் தொடரில் வரும் காதல் கதைகள் நகரத்திலும், போர்க்களங்களிலும், மருத்துவமனையிலும் நடக்கும். ராணுவ வீரரராக இருப்பதால் நிலையில்லாத வேலை  என காதலனை ஒதுக்கும் காதலி சாங் யே-கியோ (Song hye -kyo), பின்னாளில் தானே போர்க்களத்துக்கு சென்று வேலை பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். அங்கே மீண்டும் தன் காதலனை சந்திப்பாள். இவர்களுக்குள் நடக்கும் முரண்கள், காதல், வாழ்க்கை பற்றிய புரிதலுடன் ஆக்‌ஷன் காட்சிகளையும் காணலாம். முக்கியமாக நாயகன் சாங் ஜோங்-கீ (Song joong ki) செய்யும் குறும்புத்தனங்கள் மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றும். அதேநேரம், இரு பெண்கள் பள்ளிப் பருவத் தோழனுக்காக தங்கள் காதலன் அருகில் இருப்பதை மறந்து

சண்டையிட்டு காதலனிடம் மாட்டிக் கொள்வது போன்ற ரசிக்க வைக்கும் காட்சிகள் கொரியன் தொடரில் மட்டுமே காணமுடியும்.

ஷூட்டிங் ஸ்டார்

மக்கள் தொடர்பு நிறுவனத்தில் (PR Agency) வேலை பார்க்கும் பெண் லீ சாங்-யோங் (Lee Sung-kyung), நாட்டின் முக்கிய நடிகன் கிம் யாங் - தே (Kim young-dae) இருவருக்கும் நடக்கும் காதல் கதை. இதில் வரும் சண்டைகளும், அதன்பின் வந்த காமெடிகளும் அழகாக இருக்கும். அதிலும் கிம் யாங் - தே (Kim young-dae) நடிப்பை சோகத்திலும், கிறுக்குத்தனத்திலும், காதல் மழை பொழிவதிலும் வைத்த கண் எடுக்காமல் பார்க்கலாம். ஒரே கதையில் பல ஜோடிகளின் காதல் கதை சொல்லப்பட்ட விதம் அருமை.  அனைத்து ஜோடிகளின் காதல் காட்சிகளும் ஒவ்வொரு விதத்தில் ரசிக்கவும் வைக்கும் ஒரே தொடர்.

ட்ரூ டு லவ்

எப்படி காதலில் வெற்றி பெறுவது என ரேடியோவில் அறிவுரை கூறும் புகழ் பெற்ற பெண்ணுக்கு, காதல் தோல்வி ஏற்பட்டால் என்ன நடக்கும் என கதை செல்லும். அவள் எது உண்மையான காதல் என ஆராய்வாள். காதலில் உண்மையாக இருக்க எது தடையாக இருக்கிறது என்பது மட்டுமில்லாமல், காதலில் பிரிவு ஏற்படுவதும் இயல்பு என இயக்குநர் கூறுவார். தொடரில் வரும் பல ஜோடிகளில் சிலர் உண்மையாகவும், சிலர் குழப்பத்திலும், சிலர் பொய்யாகவும் தங்கள் காதலை வெளிப்படுத்துவார்கள். அவரவர் உண்மைத் தன்மைக்கு ஏற்ப அவர்கள் வாழ்க்கை அமையும் என தொடர் கலக்கலாக போகும். ரொமாண்டிக் காமெடி.

திரில்லர்கள்

ஸ்க்விட் கேம் விளையாட்டில் வெற்றி பெறுபவர்களுக்கு நினைக்க முடியாத அளவுக்கு பணம் கிடைக்கும் எனில் அந்த பணத்திற்காக மனிதன் எவ்வளவு கொடூரமாக மாறுகிறான் என்பதை சொல்லும் தொடர். ஒரு இடத்தில் நூற்றுக்கணக்கான மக்களை அடைத்து வைத்து அவர்கள் ஆசையைத் தூண்டி விட்டு பணத்திற்காக அவர்கள் செய்யும் செயல்கள் திகிலடைய செய்கின்றன. இதில் வயதானவர்கள் முதல் இளைஞர்கள் அனைவரும் பணத்திற்காக ஒடுகிறார்கள். கருணையே காண முடியாத அளவுக்கு மனிதர்கள் மிருகமாக மாறுவார்கள். இத்தொடர் விறுவிறுப்புக்கு குறைவில்லாத, துரோகம், வெறி, ரத்தம் மட்டுமே நிறைந்தது. இப்போது இதன் அடுத்த பாகம் வெளி வந்துள்ளது.

வின்சென்சோ

இத்தாலியின் பெரும் மாஃபியாவின் ஆலோசகரான நாயகன், தங்கத்தை மீட்டு எடுக்க தென்கொரியா வரும் போது நடக்கும் நிகழ்வுகள் தான் கதை. ஒரு குடியிருப்பு கட்டடத்தில் பலவித மக்கள் வாழ்கிறார்கள், அவர்களை அங்கிருந்து வெளியேற்றி அந்தத் தங்கத்தை எப்படி எடுப்பது என நாயகன் திணறுவான். அந்த கட்டடத்தில் வாழ்பவர்கள் காமெடியன்களாக இருந்தால், வெளியே இருப்பவர்கள், கொடூர வில்லன்களாக இருப்பார்கள். அதேநேரம் துரோகங்களும் இருக்கும், சில எதிர்பாரா திருப்பங்களால் தொடர் மேலும் சுவாரசியமாக செல்லும். இத்தொடரில் நாயகன் மட்டும் அழகாக இல்லாமல், அதற்கு சரிசமமாக எதிர் நாயகனும் அழகாகவும், அறிவாகவும் இருப்பது தொடரை த்ரில்லாக கொண்டு செல்லும். நகைச்சுவை, காதல், ஆக்சன், செண்டிமெண்டுக்கள் என அனைத்தும் கவனமாக கட்டமைக்கப்பட்டிருக்கும்.

தி பெண்ட் ஹவுஸ்

வெறுப்பை மட்டுமே இந்தத் தொடரில் காணலாம் ஒவ்வொருவருக்கும் ஒரு வெறுப்பு உள்ளது. அதனால் தாங்களே பாதிப்படைகிறார்கள், நிம்மதியில்லாமல் இருக்கிறார்கள். வெறுப்பின் உச்சத்தில் வெடி குண்டை வீசுவது, கத்தியால் குத்துவது என்று இல்லாமல், வார்த்தைகளாலும், குரூர திட்டங்களாலும் எதிரியை தாக்குகிறார்கள். 3 சீசனாக வந்த இத்தொடர் முழுவதுமே பழிவாங்குதல் பற்றி மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். இத்தொடரைப் பார்க்கும் போது நமக்கே வெறியாகும், அடுத்து என்ன நடக்கும் என்ற விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.

அனைத்து வெப்சீரிசையும் இங்கே நாம் விவரிக்க முடியாது. ஆதலால் நான் ரசித்த மேலும் சில சீரீஸ்களை இங்கே பட்டியல் இடுகிறேன். உங்கள் விருப்பப்படி பார்த்து ரசித்துக்கொள்ளுங்கள். கொஞ்சநாள் கழித்து கொரிய மொழியிலேயே பேச ஆரம்பித்தீர்கள் என்றால் கம்பெனி பொறுப்பல்ல:

Crash landing on you, It's okay to be not okay, Inheritors, Hometown cha cha, Forbidden marriage, Bussiness proposal, Something in the rain, A love so beautiful, Dr.Romantic, Alchemy of the soul, My love from the star, The legend of the blue sea, Strong girl Bong-soon, Abyss, Tale of the nine tailed, Healer,The king: eternal monarch, The Lies within, Suspicious partner, Flower of evil, Stranger 2, Ghost Doctor.

logo
Andhimazhai
www.andhimazhai.com