ஒரே நேரத்தில் ஹிந்தியிலும் தமிழிலும் வெளியாகி வணிகரீதியான வெற்றியுடன் சினிமா நோக்கர்களின் தீவிர கவனத்தையும் பெற்றிருக்கிறது. உலகளவில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு மொழி யின் உளவியல், சமூகவியல் உள்ளிட்ட இதர அழுத்தங்களை ஓர் இந்தியப் பெண்ணின் வாழ்க்கை வழியே பேசுகிறது இப்படம்.
‘சீனி கம்’, ‘பா’ போன்ற தென்னிந்தியாவிலும் அறியப்பட்ட படங்களின் வாயி-லாக ஹிந்தித் திரைப்பட உலகில் தனக்கான இடத்தை நிறுவியவர் இயக்குநர் பால்கி. அடிப்படையில் தமிழர். இசைஞானி இளையராஜாவின் ஆழ்ந்த ரசிகர். பாலிவுட்டிலும் இன்னபிற இடங்களிலும் அவர் புகழ் பரப்பும் தீவிரத் தொண்டர். இவரது மனைவி கௌரி ஷிண்டே இயக்கிய முதல் படம்தான் “இங்கிலிஷ் விங்கிலிஷ்.”
ஆங்கிலம் பேசத் தெரியாத ஒரு குடும்பத் தலைவியை, கணவரும் பிள்ளைகளும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் எள்ளி நகையாடி ஏளனம் புரிகிறார்கள். நாளெல்லாம் அவர்களுக்காகப் பாடுபடும் தலைவி, ஆங்கிலம் அறியாததால் படாதபாடு படுகிறாள். மனதுடைந்து குறுகிப் போகிறாள். குடும்ப உறவின் அழைப்புக்கிணங்க நியூயார்க் சென்று சில காலம் தங்க நேரிடுகிறது. அங்கே ஒரு மொழிப் பள்ளியில் குறுகியகாலப் படிப்பாக அடிப்படை ஆங்கிலம் கற்று, புரிந்துகொள்ளவும் பதில் பேசவும் தயாராகிறாள். இவளுக்கு எப்படி இது சாத்தியமாயிற்று என்ற மலைப்புடன் உறவு அடங்கி ஒடுங்குகிறது. இடையே, நியூயார்க் வாழ்க்கையில் அவளுக்கு இதமளிக்கும் ஓர் ஆண் உறவையும் சிதறலின்றிக் கடந்து இந்தியப் பெண்ணாக அவள் எப்படி நிலைகொள்கிறாள் என்பைதையும் சேர்த்துச் சொல்கிறார் இயக்குநர்.
குடும்பத் தலைவி - ஸ்ரீதேவி. கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். தேர்ந்த மறுபிரவேசம். அற்புதமாகச் செய்திருக்கிறார்.
ஒருசில நிமிடங்கள் தலைகாட்டும் பாத்திரம் ‘தல’ அஜீத்துக்கு. பரிச்சயமான முகம். திரையரங்கில் விசில் சத்தம் கேட்கிறது. அவரது நடிப்புக்கா அல்லது விரைவில் விடைபெற்றதற்கா... தெரியவில்லை! அவர் உள்பட நடித்தவர்கள் அனைவரையும் பாத்திரமறிந்து கச்சிதமாகப் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர் கௌரி. பெரிதாக உறுத்தலோ / துருத்தலோ இல்லை. சிக்கலான ஒரு பிரச்சினை-யின் திரை மொழியாக்கத்தை நன்கு வசப்-படுத்தி-யிருக்கிறார்.
உலகிலுள்ள எண்ணற்ற இதர மொழி-களைப் போல, ஆங்கிலமும் மனிதர்-களுக்-கிடையிலான ஒரு தொடர்பு மொழி என்பதாக அல்லாமல், அது அறிவின் அடையாளம் என்று வலுவாக நிறுவப்பட்ட சமூகத்தில் நாம் வாழ்கிறோம். ஆங்கிலம் அறிந்தவன் அறிவாளி. வசதியாக வாழப் பிறந்தவன். மற்றவர்களை ஆளப் பிறந்தவன் என்றெல்லாம் சகட்டுமேனிக்கு விதைத்திருக்கிறார்கள். அப்படி அல்ல என்று வரலாறு தொடர்ச்சியாக நிரூபித்து வந்த போதும், சாதியப் பாகுபாடுகள் மிகுந்த இந்தியச் சமூகம் இன்னும் தெளிந்த பாடில்லை. தெளிய விட்டபாடில்லை.
இந்தத் திரைப்படத்தின் நாயகி, முன்வரிசை சமூகத்தின் குடும்பத் தலைவி-யாக உணர்த்தப்படுகிறாள். அவளுக்கே இந்த அவலம் என்றால், மற்றவர்கள் அதாவது அடுத்தடுத்த அடுக்குகளில் உள்ளவர்களின் நிலை எப்படி இருக்கும்? குடும்பத் தலைவிகள் மட்டுமல்ல, சிறுவர், இளையோர், பெரி-யோர் என எல்லோரும் இப்படியான மொழிசார் மன உளைச்சலில் அன்றாடம் தத்தளிக்கிறார்கள்; இயன்றவர்கள் போராடிக் கடக்கிறார்கள். புதிதாக பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ சேரும் கிராமத்து மாணவனை நகரத்து நுனிநாக்கு ஆங்கிலச் சிதறல்கள் குதறி எடுப்பதை நம்மைச் சுற்றிலும் பார்க்கிறோம். தாய்மொழி தெரியவில்லை என்பதைச் சற்றும் குற்ற உணர்ச்சி இன்றி பெருமையுடன் சொல்கிறது இளைய தலைமுறை, பெற்றோர்களின் முன்னிலையில். அதே தலைமுறை, சக மனிதர்கள் அன்னிய மொழியான ஆங்கிலத்தில் பேசத் தடுமாறினால், அவமானப்படுத்துகிறது. இப்படியாக நாம் வாழும் சமூகத்தின் பல்முனைக் காட்சிகளை நமது மறுபார்வைக்கு துவைத்துப் பிழிந்து காயப்போடுகிறார் இயக்குநர் கௌரி. குறிப்பாக, ஆங்கில வழிக் கல்வி பயிலும் வளரிளம் பருவத்தினரின் தடித்த திமிரை இயல்பாக உரித்துக் காட்டுகிறார்.மேல்தட்டு குடும்ப உளவியல் முற்போக்கு எண்ணம் கொண்டது என்று பரவலாகக் கருதப்பட்டாலும், அங்கேயும் ஆணாதிக்கத்தின் ரூபம் உண்டு என்பதை கதையோட்டத் தடத்திலிருந்து விலகாமல் மிகையின்றி, நுட்பமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். இன்றைய சமூக நாடியின் துல்லியம் சார்ந்து காட்சிகளை நகர்த்துகிறார்.
கணவர் மற்றும் குழந்தைகளின் நலனுக்-காக தன்னார்வ எழுச்சியுடன் தன்னை ஒப்படைத்துக் கொள்பவளே இந்தியக் குடும்பத் தலைவி. அவளது தனித் திறனின் வெளிப்பாடுகூட குடும்ப நலனை ஒட்டியும் உரசியுமே இருக்க வேண்டும் என்பதான சமூகக் கட்டுமானங்களின் யதார்த்தப் பின்னணியை, பெண்ணியக் கொதி-நிலையில் தருகிறேனென்று களம் புரண்டு, வேண்டுமென்றே சிதைக்-காமல், சொல்ல வந்ததை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார் கௌரி.
இன்றைய வாழ்வோடு நுணுக்கமாகக் கலந்திருக்கும் மொழி வழி மேலாதிக்-கத்தை, ஒரு குடும்பத் தலைவியின் உணர்வெழுச்சி வாயிலாக தீவிர விசாரணைக்குள்ளாக்கி, பார்வை-யாளர்களிடம் இறுகியிருக்கும் மொழிசார் கருத்துருவாக்கத்தை உடைத்தெறிகிறார். ஆங்கிலத்தில் “பிளந்து” கட்டுபவர்கள் யாரேனும் படம் பார்த்தால், திரையரங்கிலிருந்து வெளியேறும் போது ஜல்லிகளாக வெளிவரக்கூடும்.
மொழி அரசியலில் முன்னும் பின்னும் முரணான தெறிப்புகளைக் கண்ட, காணும் தமிழகத்தின் தனிக்கவனத்துக்கு உரியது இந்தத் திரைப்படம்.
தமிழ்க் கலாசாரம், மொழியுணர்வு சார்ந்து அடிக்கடி உரக்கப் பேசி தனி அடையாளத்தைத் தக்க வைக்க முனை--யும் ‘ஒளி ஓவியர்’ மற்றும் இயக்கு-நர் தங்கர் பச்சானின் படம் “அம்மாவின் கைப்பேசி.” சமீபத்தில் ஒரு தமிழ் நாளிதழில் வெளியான இந்தப் பட விளம்பரத்தில் Soul Stirring songs – That refused to be blown away by the wind என்று ஆங்கிலத்தில் வாசகம். இந்தப் படத்தின் இசையமைப்பாளர் ரோகித் குல்கர்னி என்ற வட இந்தியர். அவரைக் களிப்புக்குள்ளாக்க இந்த ஆங்கில வாசகத்தை விளம்பரத்தில் வெளி-யிட்டிருக்கிறாரா? பல்லாண்டு கால ஆராய்ச்சியின் விளைவாக, தமிழில் யாருக்கும் இசைஞானம் இல்லை என்ற தனது அண்மைய “கண்டுபிடிப்பை” உலகுக்கு அறி-விக்க ஆங்கிலத்தை நாடினாரா? புரிய-வில்லை.
ஆவேச அறைகூவல்களையும் அதிரடி-களையும் விடுத்து, “இங்கிலிஷ் விங்கிலிஷ்” போன்ற முன்மாதிரியான படங்களைத் தந்து தமிழுக்கும் தமிழகத்துக்கும் பெருமை சேர்க்க முயற்சிக்கலாம் தங்கர் பச்சான். அவர் மட்டுமல்ல, உலக சினிமா, பிரபஞ்ச சினிமா, நிலா சினிமா, செவ்வாய் சினிமா என்றெல்லாம் பேசும் கோலிவுட் கொக்கரக்கோக்களும் இம்மாதிரியான சுதேசி தரப் படங்களைத் தர விழையட்டும்.
நவம்பர், 2012.