கர்நாடகம் உட்பட்ட மற்ற மாநிலங்கள் தனியாக உருவாக்கப்பட்ட இன்றைய நாளை அந்தந்த மாநிலங்களில் கோலாகலமாகக் கொண்டாடிவருகிறார்கள். குறிப்பாக, கர்நாடகத்தில் அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
தமிழ்நாட்டிலும் மாநிலம் உருவான நாளை தமிழ்நாடு நாள் எனக் கொண்டாட தமிழின அமைப்புகள் நீண்ட காலமாக வலியுறுத்திவருகின்றன. அதைத் தொடர்ந்து கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 2019 ஜூலை மாதம் சட்டப்பேரவையில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதற்கான அறிவிப்பையும் வெளியிட்டார். அதன்படி, இரு ஆண்டுகள் தமிழ்நாடு நாள் கடைப்பிடிக்கப்பட்டது.
ஆனால், அடுத்துவந்த மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசாங்கம் அதை மாற்றிவிட்டு, தமிழ்நாடு எனப் பெயர் சூட்டப்பட்ட ஜூலை 18ஆம் நாளை தமிழ்நாடு என அறிவித்தது.
இதற்கு தி.மு.க.வை ஆதரிக்கும் பெரியாரிய அமைப்புகள் உட்பட பல்வேறு தமிழின அமைப்புகள் அதிருப்தியும் எதிர்ப்பும் தெரிவித்தன.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாநிலம் முழுவதும் தமிழ்நாடு நாள் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
மறைந்த ஆனைமுத்து அவர்கள் தோற்றுவித்த மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி சார்பில் பல ஊர்களில் அவ்வமைப்பினர் தமிழ்நாடு நாளைக் கொண்டாடினர்.
கடந்த 2020 ஆண்டு சென்னையில் மேடவாக்கத்தில் அமைந்துள்ள தமிழறிஞர் பெருஞ்சித்திரனார் நினைவிடமான தமிழ்க் களத்தில் தமிழ்நாட்டுக்கான கொடியை ஏற்றுவதற்கு அவரின் மகனும் தமிழக மக்கள் முன்னணியின் தலைவருமான பொழிலன் முயன்றார். அப்போது காவல்துறையால் தடுக்கப்பட்டார். அதற்காக அவர் மீது வழக்கும் பதியப்பட்டது.
இந்த ஆண்டில், முன்னரே, தமிழ்நாடு அரசுக்கு அவர் கோரிக்கை விடுத்து மனு அளித்தார். அவரும் இடம்பெற்றுள்ள பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில், தமிழ்நாடு அரசே தமிழ்நாட்டு நாளைக் கொண்டாட வேண்டும்; தமிழ்நாட்டுக்கென தனிக் கொடியை உருவாக்க வேண்டும் என்பன உட்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசிடம் மனு அளித்தது.
கொடியை ஏற்றுவதாக எந்தத் திட்டமும் இல்லாதநிலையில், திடீரென காவல்துறையினர் தமிழ்க் களம் முன்பாகக் குவிந்துள்ளதாக பொழிலன் நேற்று ஊடகத் தகவல் வெளியிட்டிருந்தார். தடையை மீறி தமிழ்நாட்டுக் கொடியை ஏற்றுவதற்கு அவர் முயன்றால், கைதுசெய்வது முதலிய நடவடிக்கைகளுக்காக அங்கு அவர்கள் குவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு தமிழ்த் தேசிய அமைப்புகள் பலவும் கண்டனமும் அதிருப்தியும் தெரிவித்துள்ளன. அரசமைப்புச் சட்டப்படி ஒப்புக்கொள்ளப்பட்ட மாநிலத்துக்கென தனிக் கொடியை உருவாக்கி ஆண்டுதோறும் கர்நாடகத்தில் அங்குள்ள அரசே கொண்டாடிவருகிறது; ஆனால், தமிழ்நாட்டில் கொண்டாடிவிடுவார்களோ என அரசு தடை விதிக்கிறது என்று தமிழ்த் தேசிய அமைப்புகள் விசனப்படுகின்றன.