AI தேவையில்லாத ஆணியா?

Artificial Intelligence
Published on

இரண்டாம் உலகப்போருக்கு முன்பாக நாஜி ஜெர்மனியிலிருந்து வந்து அமெரிக்காவில் அடைக்கலம் புகுந்திருந்தார் பிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டீன். அச்சமயம் ஜெர்மனி அணு ஆயுதம் தயாரிக்கும் சோதனைகளில் ஈடுபட்டிருந்தது.

ஜெர்மனியிடம் அணுஆயுதங்கள் இருந்தால் உலகுக்கே ஆபத்து என்று அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட்டுக்கு ஐன்ஸ்டீனும் இன்னொரு விஞ்ஞானியான லியோ சிலார்டும் சேர்ந்து 1939 ஆகஸ்ட்டில் கடிதம் எழுதி, அமெரிக்க மண்ணிலும் யுரேனிய அணுச் சோதனைகளுக்கு நிதியளித்து ஆதரிக்க வேண்டிக்கொண்டனர். ஐன்ஸ்டீன் அந்நாளில் நோபல் பரிசு வென்ற புகழ்பெற்ற விஞ்ஞானி. அவர் சொற்களுக்கு மதிப்பு இருந்தது. இதை அடுத்துதான் மன்ஹாட்டன் பிராஜக்ட் என்ற திட்டம் தொடங்கப்பட்டு அணு ஆயுதங்களை அமெரிக்கா தயாரித்தது. எந்தப் பேரழிவைத் தடுக்கவேண்டும் என்று ஐன்ஸ்டீன் நினைத்தாரோ அந்த அழிவை அமெரிக்காவே ஜப்பான் மீது குண்டுவீசி நிகழ்த்தியது. இரண்டு லட்சம் பேர் கொல்லப்பட்டனர். ஜெர்மானியர்கள் பாதியிலேயே தங்கள் திட்டத்தைக் கைவிட்டிருந்தனர்.

அணுகுண்டுத் தயாரிப்பில் ஐன்ஸ்டீனுக்கு நேரடி பங்கேதும் இல்லை-நிறையும் ஆற்றலும் குறித்த அவரது கோட்பாடு இதற்கு வழிவகுத்தது என்றாலும்- ஆனால் தாம் அப்படிக் கடிதம் எழுதியதற்காக ஐன்ஸ்டீன் பின்னாளில் வருத்தம் தெரிவித்தார். ‘வாழ்வில் நான் செய்த மிகப்பெரிய தவறு’ என்றார். இன்று உலகமே அணு ஆயுதங்களின் பிடியில் இருக்கிறது. அமெரிக்காவும், ரஷ்யாவும் ஏராளமான அணுஆயுதங்களை வைத்துள்ளன. நொடிப்பொழுதில் உலகே நாசமாகிவிடக்கூடும் என்ற அச்சம் அனைவர் மனதிலும் உள்ளது.

தற்போது தன்னுடைய கண்டுபிடிப்புக்கு இன்னொரு விஞ்ஞானி வருத்தம் தெரிவித்துள்ளார். அவர் இந்த ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு வென்றவர்களில் ஒருவரான ஜெப்ரி ஹிண்டன்.

ஹிண்டன் செயற்கை நுண்ணறிவு வல்லுநர். டீப் லேர்னிங் (Deep learning) என்ற கோட்பாட்டில் முன்னோடி. அவர் கூகுள் நிறுவனத்தில் ஆலோசகராகப் பணிபுரிந்தவர். தன் வேலையை 2023-இல் துறந்தார். தன்வாழ்நாள்ப் பணியை நினைத்து வருத்தப்படுவதாக அவர் கூறினார். செயற்கை நுண்ணறிவு பற்றிய கண்டுபிடிப்புகளுக்கு முக்கிய பங்களித்த அவர் இன்று அது சென்றுகொண்டிருக்கும் திசை நோக்கி அச்சம் தெரிவிக்கிறார். அதன் அபாயங்களைப் பற்றி எச்சரிக்கை செய்கிறார். ஏஐ கண்டுபிடிப்புகளை முறைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார்.

ஹிண்டன் நியூரல் நெட்வொர்க் எனப்படும் மனித மூளைகளின் செயல்பாட்டைப் போலவே கணித நிரல்களைக் கொண்டு கணினிகளை வடிவமைத்து ஏஐ தொழில்நுட்பத்தை உருவாக்குவது என்கிற கொள்கையின் முன்னோடி. அவர் இதைச் சொன்னபோது யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் மெல்ல மெல்ல இத்துறையில் ஆய்வுகள் நடந்து ஏஐயின் வளர்ச்சி நியூரல் நெட்வொர்க்குகளின் அடிப்படையில் உருவானது. இந்த கோட்பாட்டுக்காகத்தான் ஹிண்டனுக்கு இந்த ஆண்டுக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டது. ஆனால் நோபல் பரிசு பெறுவதற்கு ஓராண்டு முன்னதாகவே தன் கண்டுபிடிப்புக்காக வருத்தம் தெரிவித்துவிட்டார் ஹிண்டன்.

ஏஐ தொழில்நுட்பம் தவறான கைகளுக்குச் சென்றுவிட்டால் பேரழிவு ஏற்படும் என்பதே அவரது அச்சம். மனிதனால் தன்னுடைய மூளையில் இருக்கும் அறிவை அப்படியே சேதமின்றி பிற மனிதர்களுக்குப் புகுத்திவிட முடியாது. ஆனால் ஏஐ இயந்திரங்கள் நொடியில் தங்களுடன் இணைக்கப்பட்டிருக்கும் பிற எந்திரங்களுக்கு தங்கள் அறிவை நகலெடுத்துக் கொடுத்துவிட முடியும். ஏஐ எந்திரங்களைப் பொறுத்தவரை இன்றைய தேதிக்கு அவை மனிதர்களை கற்கும் திறனில் முன்னணியில் இருக்கின்றன என்பது பலரும் ஏற்றுக்கொள்ளும் உண்மையாகும்.

ஏஐ மீதான கவலைகளை ஹிண்டன் மட்டும் வெளிப்படுத்தவில்லை. பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி ஏற்கெனவே மற்றவர்களின் உழைப்பையும் கற்பனை வளத்தையும் திருடிப் பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டு பரவலாக இருக்கிறது. இந்த நிறுவனங்கள் தங்கள் ஏஐ-க்கு பயிற்சி அளிக்க, இணையத்தில் இருக்கும் பிற நபர்களின் படைப்புகள், படங்கள் ஆகியவற்றை எந்த உரிமமும் இன்றிப் பயன்படுத்துகின்றன. இதை எதிர்த்து உலகெங்கும் இருக்கும் கலைஞர்கள் இதற்கு எதிரான கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

இஸ்ரேல் ராணுவத்துடன் இணைந்து கூகுள் நிம்பஸ் என்ற ராணுவ ஏஐ திட்டத்தைச் செயல்படுத்துகிறது. ராணுவங்களுடன் இணைந்து செயல்படும் திட்டங்களுக்கு கூகுளைச் சேர்ந்த சுமார் 200 பேர் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதியதாக கடந்த மே மாதம் தகவல் வெளியானது.

கடந்த ஆண்டே ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில்நுட்ப நிபுணர்கள் ஏஐ தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கு வரையறை விதிக்கவேண்டும் எனவும் மிகவும் மேம்பட்ட ஏஐ கண்டுபிடிப்புகளில் ஈடுபடுவதை ஆய்வகங்கள் நிறுத்திக்கொள்ளவேண்டும் எனவும் கடிதமொன்றில் கேட்டுக்கொண்டிருந்தனர். இதில் எலான் மஸ்க்கும் ஒருவர். மனித குலத்துக்கும் சமூகத்துக்கும் இது ஆபத்தானது என்று அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

ஏஐ தொழில்நுட்பம் மனித குலத்தை ஒடுக்குவது பற்றி ஏராளமான நாவல்களும் திரைப்படங்களும் வந்துவிட்டன. சமீபத்தில் அட்லஸ் என்றொரு திரைப்படத்தில் வில்லன் ஏஐ தான். தன்னோடு சகோதரியாக வளரும் மனிதப் பெண் குழந்தையின் நியூரல் நெட்வொர்க்கை கையகப் படுத்திக்கொண்டு, உலகில் 30 லட்சம் பேரை அழித்துவிடும் வில்லன், வெளி கிரகமொன்றுக்குப் பறந்து சென்றுவிடுகிறான். இந்த ஏஐ வில்லனைத் தேடிச்சென்று அழிக்கும் கதை. டெர்மினேட்டர்கள், எந்திரன்கள் என ஏராளமாகப் பார்த்துவிட்டோம். இவை எல்லாம் அதீதக் கற்பனை என்று வைத்துக்கொண்டாலும் உடனடி பாதிப்பு ஏராளமான வேலை இழப்பு என்பதில் யாருக்கும் ஐயமிருக்க இயலாது.

”நாங்கள் எட்டு ஓவியர்கள் சேர்ந்து மூன்று மாதம் செய்த அனிமேஷன் வேலையை செயற்கை நுண்ணறிவு இப்போது ஏழு நிமிடத்தில் செய்துவிடுகிறது’ பிரபல ஓவியர் ட்ராட்ஸ்கி மருதுவின் கருத்து. இன்று கல்லூரி செல்லும் மாணவ மாணவியர் பெரும்பாலும் சாட்ஜிபிடி மூலமே தங்கள் புராஜக்ட்களை எழுதிக்கொள்கிறார்கள். வடிவமைப்புத் துறை, அனிமேஷன், எடிட்டிங் என எல்லாவற்றிலும் ஏஐ நீக்கமற வேகமாகப் பரவி வேலைகளை நொடிப்பொழுதில் செய்துவிடுகிறது. இந்தக் கட்டுரை இணையத்தில் வெளியானபின் அதையும் ஏஐ அண்ணன் படிக்கத்தான் போகிறார். படித்துவிட்டு ஏன் என்னை எதிர்த்து எழுதுகிறாய் என எமது மின்னஞ்சலுக்கு ஒரு வைரஸை அனுப்பி வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை!

அந்த ரகசிய ஏலம்!

Geoffrey hinton
ஜெப்ரி ஹிண்டன்

நியூரல் நெட்வொர்க் கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசு பெற்ற ஜெப்ரி ஹிண்டன் பற்றி அருமையான நிகழ்வொன்று உண்டு. 2012-இல் நடந்தது இது. டொரொண்டோ பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்துகொண்டிருந்தார் அவர். உடன் இரண்டு இளம் மாணவர்கள். அச்சமயத்தில் தான் ஒன்பது பக்கம் கொண்ட நியூரல் நெட்வொர்க் செயல்பாடு குறித்த ஆய்வுக்கட்டுரையை அவர்கள் வெளியிட்டனர். செயற்கை நுண்ணறிவில் மிகப்பெரிய தவளைப்பாய்ச்சலை அது உருவாக்கக்கூடியது என்று உலகின் பெரிய கணினி நிறுவனங்கள் உணர்ந்தனர். சீனாவிலுள்ள பெரிய நிறுவனமான பெய்டு அவரைத் தொடர்புகொண்டு அந்த மூவரும் தங்கள் நிறுவனத்தில் வேலைக்குச் சேருமாறு அழைத்தது. 12 மில்லியன் அமெரிக்க மில்லியன் டாலர்கள் சம்பளம்! சில ஆண்டுகள் மட்டும் வேலை பார்த்துக் கொடுத்துவிட்டுப் போய்விடலாம்! லைப் டைம் செட்டில்மெண்ட்!

ஆனால் ஹிண்டனுக்குத் தெரியும் நமது கண்டுபிடிப்பு உலகை மாற்றி அமைக்கப்போவது. ஏனெனில் மனித மூளையின் நியூரான்களைப் போல் கணினிகளை செயல்படவைக்கும் கணிதநிரல்களை உருவாக்கி, மனிதர்களைப் போலவே பூக்கள், நாய்கள், பூனைகள் போன்ற அனைத்தையும் அடையாளம் காணும் திறன்களை உருவாக்க முடியும் என நிரூபித்திருந்தார்.

தன் இரு மாணவர்களையும் கொண்டு Dnnresearch என்ற நிறுவனத்தை அவர் உருவாக்கினார். அதற்கு ஓர் இணைய தளம் மட்டும் இருந்தது. அவரைத் தொடர்புகொண்ட நிறுவனங்களில் நான்கை மட்டும் தேர்வு செய்து, ஏலத்தில் பங்குகொள்ளுமாறும் அதிக ஏலம் கேட்பவர்களுக்கு தங்கள் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை விற்பதாகவும் சொன்னார். இந்த ஏலம் மிக ரகசியமாக நடந்தது. கூகுள், மைக்ரோசாப்ட், பெய்டு, டீப்மைண்ட் ஆகிய நான்கு நிறுவனங்கள் கலந்துகொண்டன. ஒருவருக்கொருவர் யார் கலந்துகொள்கிறார்கள் எனத் தெரியாது. 44 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை ஏலம் உயர்ந்துகொண்டே போனது. கடைசியாக கூகுள் கேட்ட 44 மில்லியன் டாலர்களுக்கே ஏலத்தை முடித்துக்கொள்ள ஹிண்டன் முடிவு செய்தார். சீன நிறுவனத்துக்கு தன் தொழில்நுட்பம் போவதை அவர் விரும்பவில்லை. அமெரிக்க நிறுவனமே வைத்துக்கொள்ளட்டும் என்று அவர் தீர்மானித்தார். அதற்கான தார்மீகக் காரணங்கள் மனிதகுலத்தின் மேன்மைக்காக இந்த தொழில்நுட்பம் பயன்படட்டும் என அவர் நினைத்ததுதான். ஆனால் அது இன்று போர்த் தொழில்நுட்பங்களுக்காகப் பயன்படுத்தப்படுவதை அவர் சுத்தமாக விரும்பி இருக்கவில்லை.

உண்மையில் அந்த ரகசிய ஏலத்துக்குப் பின் தான் உலகில் மிகப்பெரிய ஐடி நிறுவனங்களுக்கு இடையில் செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்துக்கான போட்டியே தொடங்கியது. இந்த ஏலத்தில் கலந்துகொண்ட டீப் மைண்ட் நிறுவனத்தையும் கூகுள் வாங்கியது. பேஸ்புக், ஓப்பன் ஏஐ என்கிற ஸ்டார்ட் அப் நிறுவனம் ஆகியவை ஏஐ-களை உருவாக்கின. மைரோசாப்ட் ஓப்பன் ஏஐ நிறுவனத்தில் முதலீடுகள் செய்தது. இந்த போட்டியில் ஓட்டுநர் இல்லாத கார்கள், திறன் வாய்ந்த ரோபோக்கள், மருத்துவத் துறையில் தானியங்கி கருவிகள் உருவாகின. ஆனால் கண்காணிப்புக் கருவிகள், தானியங்கிப் போர்க்கருவிகள் ஆகிய எதிர்மறை விளைவுகளும் உருவாகி உள்ளன.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com