6000 கிளிகளுக்கு உணவிடும் தம்பதி!

the couple in chennai feeding 6000 Parrots
சுதர்சன் ஷா - வித்யா தம்பதி
Published on

‘வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்..!’ என்ற வள்ளலாரின் வரிகளை நினைவுபடுத்தும் தம்பதிகள் இவர்கள்! சென்னை சிந்தாதிரிப்பேட்டை ஐயா முதலி தெருவில் நூற்றாண்டு பழமையான கட்டடத்தில் வசித்து வருகின்றனர் சுதர்சன் ஷா - வித்யா தம்பதி. பதினைந்து ஆண்டுகளாக தினந்தோறும் கிளிகள், குருவிகள், புறாக்கள் என ஆயிரக்கணக்கான பறவைகளுக்கு உணவளித்து வருகின்றனர். இந்த பட்டியலில் இப்போது பூனைகள், ஆடுகளும் இணைந்துள்ளன.

‘மாலை 4 மணிக்கு வந்துடுங்க...’ என்று சுதர்சன் சொல்ல, நாங்கள் முன்னரே ஆஜர் ஆனோம். ’அரிசி ஊறிட்டு இருக்கு… கொஞ்ச நேரத்துல மேல போலாம்...’ என அவர் சொல்லிக்கொண்டிருந்தபோதே, பூனை ஒன்று பொத்தென்று கீழே விழுந்தது. ‘இப்படித்தான் விளையாடிட்டு இருப்பாங்க சார்…’ என சொல்லிக் கொண்டே, இரண்டு பக்கெட் அரிசியைத் தூக்கிக் கொண்டு மாடி ஏறினார். வேர்க்கடலையுடன் அவரின் மனைவி வித்யாவும் இணைந்து கொண்டார்.

கிளிகளுக்கு உணவு வைப்பதற்கு ஏற்ற வகையில் வைக்கப்பட்டிருந்த பலகைகளின் மீது அரிசி, வேர்க்கடலை இரண்டையும் சிறு குவியல் குவியலாக வைக்கத் தொடங்கினார்கள். கறுப்பாக அழுக்கேறி இருந்த மாடி கொஞ்ச நேரத்தில் பச்சை பசேல் என்று மாரிவிட்டது, கிளிகளால்!

“இந்த பசங்களைவிட எனக்கு வேறு என்ன சார் வேண்டும்...? இவங்கள எப்படி பட்டினி போட முடியும்…? எவ்ளோ பெரிய கவலையில இருந்தாலும், இவங்க மறக்கடுச்சிடுவாங்க...” என உருக்கமாக பேசத் தொடங்கிய சுதர்சன் - வித்யா தம்பதியிடம் கிளிகளுக்கு உணவளிக்கத் தொடங்கிய கதையை கேட்டோம்.

“பதினைந்து வருசத்துக்கு முன்னாடி எங்கப்பா இறந்துட்டாரு. மன கஷ்டத்துல இங்கதான் ஒக்காந்திருந்தேன். அப்போ பக்கத்து வீட்டுக்காரங்க, காகங்களுக்கு சோறு வச்சாங்க. அத பாத்தப்போ நாம ஏன் இதை தொடர்ந்து செய்யக்கூடாது நெனச்சேன். அந்த ஒரு நிகழ்வுதான் என்ன மாத்துச்சுனு சொல்லலாம்!

முதல்ல காகங்களுக்கு உணவு வச்சேன். பிறகு கிளிகள், சிட்டுக்குருவிகள், புறாக்கள், கழுகுகள், அணில்கள் எல்லாம் வந்தன. இப்போ ஆறாயிரம் கிளிகள் வருது. ஜனவரி மாதம்னா கிளிகளை எண்ணவே முடியாது. பந்தி பந்தியா உட்கார்ந்து சாப்டுவாங்க. அப்போ 60 கிலோ அரிசி, 10 கிலோ வேர்க்கடலை தேவைப்படும். சீசனுக்குக் கிடைக்கும் பழங்களும் வாங்கிப்போடுவேன். ஒருநாளைக்கு இரண்டு வேளை உணவு வைக்கிறேன்.

இத்தனை வருசத்தில் ஒரேயொரு நாள் மட்டும்தான் இவங்களுக்கு உணவு வைக்கல. பக்கத்து வீட்டுப் பையனிடம் சொல்லிட்டு போனேன். அவன் ஒழுங்கா வைக்கல. அன்னிலிருந்து, எங்காவது போவதா இருந்தால் நாற்பது கிலோமீட்டருக்குள்ளதான் போவேன். திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு கூட சரியான நேரத்துக்கு போக மாட்டேன். என் மகளோட திருமணத்துக்கே ஒருமணி நேரம் தாமதமாகத்தான் போனேன். 6 மணிக்கு போயிருக்கனும். ஆனால் 7 மணிக்கு போனேன். எங்களோட சுகதுக்கங்களை விட, இந்த பிள்ளைகள் பட்டினியோடு இருக்கக் கூடாது என்பதுதான் எங்களுக்கு முக்கியம்!

எங்களுக்கு எலக்டீரிக்கல் பிசினஸ் இருக்கு. அதோட வருமானம், வீட்டு வாடகையில் வரும் பணத்தை கொண்டுதான் இதை செய்றோம். ஆடம்பரத்தையும் எங்களோட தேவைகளையும் குறைச்சிக்கிட்டோம். இங்க உள்ளவங்க, ஆரம்பத்தில் என்னைப் பார்த்து சந்தோசப்பட்டாலும், நிறைய மீடியாக்கள் வருவதை பார்த்துவிட்டு, நான் நிறைய பணம் சம்பாதிப்பதா நினைச்சாங்க. கொஞ்ச நாளுக்கு பிறகு என்னோட கேரக்டர் தெரிஞ்சி, அவங்களும் பொருட்கள் தர ஆரம்பிச்சாங்க.

மெய்யழகன். சிங்கப்பூர் சலூன் போன்ற படங்களோட சில காட்சிகளை இங்குதான் எடுத்தாங்க. போனவாரம் இங்க ஒரு குரங்கு வந்துச்சி. கிட்ட போய் பார்க்கும்போது, அதோட கையில் குஞ்சு மாதிரி ஒன்னு இருந்துச்சி. நான் குரங்கு குட்டினு நினைச்சேன். கிட்டபோய் பார்த்தால், அது மீன்கொத்தி பறவையோட குஞ்சு. அந்த குரங்கு, இங்க வச்சிருந்த வேர்க்கடலையை மென்னு, அந்த குஞ்சு பறவைக்கு ஊட்டுச்சி. அபூர்வமான செயலிது! குரங்கிடமிருந்து நாம் கத்துக்க வேண்டிய குணம் இது!” என்கின்றனர் சுதர்சன் ஷா - வித்யா தம்பதியினர்.

Watch Video: 6000 கிளிகளுக்கு உணவிடும் தம்பதி!

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com