இது நாவல்களின் காலம். மற்ற இலக்கிய வகைமைகளைக் காட்டிலும் நாவல்கள் பிரபலமாகவும் பெரும் வாசகப் பரப்பையும் கொண்டிருப்பதற்கு முக்கியக் காரணம் நல்ல நாவல்கள் ஒரு வாசகனுக்கு அவன் அறிந்திராத புதிய வாழ்வை தரிசனமாகத் தரக்கூடியவையாய் இருக்கின்றன. இந்த நிகர்வாழ்வு தரும் பேரின்பத்திற்காகவே இலக்கிய வாசகன் நாவல்களின் மீது பித்து கொள்கிறான்.
தமிழ் இலக்கியச் சூழலில் நாவல்கள் உருவான இந்த நூற்றைம்பது ஆண்டு கால வரலாற்றில் ஒவ்வொரு கால கட்டத்திலும் இலக்கிய போக்கை செழுமைப்படுத்திய ஏராளமான நாவல்களைக் குறிப்பிட முடியும். சிறந்த படைப்பாளர்களையும் அவர்களது படைப்புகளையும் வாசித்து உருவாகும் புதிய தலைமுறை எழுத்தாளர்கள் தனது முன்னோடிகளின் படைப்புகளிலிருந்து தங்களுக்கான பாதைகளை தகவமைத்துக் கொள்கிறார்கள். எல்லா சிறந்த தொடக்கத்திற்கும் துணையாய்ப் பற்றிக்கொள்ள ஒரு முன்னோடி எழுத்தாளரின் விரல் தேவைப்படுகிறது. ஆனால் அந்த துணை தொடங்குவதற்கு மட்டுந்தான், கதையுலகம் வளர வளர எழுதுகிறவன் முன்னோடியின் நிழலிருந்து விலகி இந்த உலகைப் புதிய கண்களோடும் மனதோடும் பார்க்க வேண்டியது அவசியமாகிறது. நாவல் எழுதவேண்டுமென்கிற தூண்டுதல் உதித்தபோது எனக்கும் அப்படியான முன்னோடிகள் இருந்தார்கள் முதல் நாவலான உப்புநாய்கள் எழுதப்பட்டு பன்னிரெண்டு வருடங்களுக்குப்பின் இன்றும் பரவலாக வாசிக்கப்பட்டுக் கொண்டிருந்தாலும் எனது முக்கியமான நாவலென கானகனைச் சொல்வேன்.
ஓர் எழுத்தாளனின் சில சிறுகதைகளையும் அபுனைவுகளையும் வாசிக்கிறவர்கள் இந்த வகைமையில்தான் இவரால் இயங்கமுடியும் என்கிற வரையறைகளை எளிதாக அடைந்து விடமுடியும். அந்த முன் தீர்மானங்களை உடைத்து புதிய களங்களில் எழுதுவதுதான் புனைவெழுத் தாளனுக்கு இருக்கக்கூடிய சவால். அந்த வகையில் உப்புநாய்கள் நாவலும் அதற்கு முன்பு நான் எழுதியிருந்த இருபத்தைந்து கதைகளையும் அடிப்படையாகக் கொண்டு எனது கதையுலகம் இதற்குள்தான் இருக்குமென அனுமானங்களும் விமர்சனங்களும் எழுதப்பட்டுக்கொண்டிருந்த சூழலில்தான் கானகனை எழுதத் தொடங்கினேன். வனம், வேட்டை, பழங்குடிகளின் வாழ்க்கைப்பாடுகள் என இளம் எழுத்தாளர்கள் அதிகம் முயற்சிக்காத தளம், அந்த நாவலை எழுதத் துவங்கும்போது இருபத்தியாறு வயது. (உப்புநாய்கள் எழுதியபோது இருபத்து மூன்று வயது.)
'படைப்பாளனை விடவும் படைப்பு பெருமதியானதென்பதை உறுதியாக நம்புகிறவன் நான். மேம்பட்ட மனிதர்கள் மட்டுமே மேம்பட்ட படைப்புகளை எழுத முடியுமென நம்புவதும், மேம்பட்ட மக்கள் எழுதுவதெல்லாமே மேம்பட்ட படைப்புகளாகிவிடுமென வாதிடுவதும் அடிப்படையில் நியாயமற்றது. எழுதுகிறவன் எப்படியெல்லாம் இருக்கவேண்டுமென்பது குறித்து நிலவும் ஒழுக்கவியல் கோட்பாடுகளுக்கு அப்பாற்பட்டது ஓர் எழுத்தாளனின் தனிப்பட்ட வாழ்க்கை. கனவுகள், நம்பிக்கைகள், தோல்விகள், அருவருப்புகள், இச்சைகள் எல்லாவற்றிலிருந்தும் ஒரு எழுத்தாளன் தனக்கான கதைகளை எடுத்துக் கொள்கிறான். அந்த வகையில் கானகனுக்கு முன்புவரையிலுமான எனது படைப்புகள் எனது வாழ்வனுபவங்களின் சிதறல்களிலிருந்து நான் பெற்றுக்கொண்டதென்றால், கானகன் என் லட்சியத்தினை நோக்கியும் கனவுகளின் மீதிருந்த நம்பிக்கைகளை நோக்கியும் என்னை நானே நகர்த்திக்கொண்ட நாவல். எழுத்தாளனுக்கு லட்சியங்கள் இருக்கவேண்டுமா? என்றொரு கேள்வி எழலாம். மற்றவர்களைப் பற்றி எனக்குத் தெரியவில்லை, எனக்கு லட்சியங்களுண்டு. இந்த வாழ்க்கை குறித்தும் சமூகம் குறித்தும் அபரிமிதமான நம்பிக்கைகளும் மாற்றங்களைக் குறித்த கனவுகளும் உண்டு. அந்தக் கனவுகளுக்கான முதல் பயணம் கானகனில் துவங்கியது.
இயற்கையைப் பற்றிய அறிவு வெறும் ஆர்வத்தினால் மட்டும் கிடைக்கக் கூடியதல்ல, தேடல் அவசியம். மனிதன் பேராசைகளுக்கு எதிராக சிந்திக்க வேண்டியதும், பெரும் நுகர்வின் பின்னாலிருக்கும் பொருளாதார கணக்குகளைப் புரிந்துகொள்ள ஆழ்ந்த வாசிப்பும் தேவையாயிருந்தது. காட்டைப் பற்றியோ இயற்கையைப் பற்றியோ எழுதுவதென்பது மரம் செடி கொடிகளையும், விலங்குகளையும் மலைகளையும் பற்றி மட்டும் எழுதுவதல்ல. அது மனிதர்களையும் சார்ந்தது. அரசியல் சார்ந்தது. சிறுநகரம் ஒன்றில் பிறந்து வளர்ந்தவன் என்றாலும் எனது பெற்றோர் இருவரும் மலையடிவார கிராமங்களைச் சேர்ந்தவர்கள். எனது பால்யத்தின் சில காலம் அங்கு கழித்ததுண்டு. அரிசி உணவுகள் பெரிதும் பரிச்சயப்படாத அந்தக் கிராமங்களில் அந்தக் காலகட்டத்தில் சோளமும் கம்பும் குதிரைவாலியும் உடன் வேட்டைக் கறியுமே உணவாக இருந்தன. தந்தையின் குடும்பத்தில் வேட்டைக்காரர்கள் இருந்ததால் சிறுவயதிலேயே எனக்கும் வேட்டையின் மீது நாட்டமுண்டு. நான் வேட்டைக்குச் சென்றவனில்லை என்றாலும் காடுகளில் ஓரளவு சுற்றியவன். மேற்குத்தொடர்ச்சி மலைகளின் வெவ்வேறு பகுதிகளில் அலைந்த அனுபவம் உண்டு. ஊர் சுற்றுவதும் நமக்குப் பிடித்த விஷயங்களைத் தேடிக் கற்றுக் கொள்வதும் அதை என்றாவது ஒருநாள் படைப்பாக்கிக் கொள்ளலாமென்கிற கணக்குகளின் அடிப்படையில் செய்வதல்ல. கானகன் எழுத நேர்ந்தது உண்மையில் தற்செயலானதொரு நிகழ்வு.
அரவான் திரைப்படம் வெளியானதன் பின், இயக்குநர் வசந்தபாலன் தனது புதிய படத்தின் கதைவிவாதத்திற்கு செங்கோட்டை தாண்டி கேரள எல்லையில் உள்ள ஒரு வனப்பகுதிக்கு அழைத்துச் சென்றிருந்தார். அடவிநயினார் அணைக்கு மேலிருக்கும் வனப்பகுதியிலிருந்த அந்த சின்னஞ்சிறிய பண்ணை வீடு. அந்த வீட்டின் முதலாளியான அலி முதலாளி மாலை நேரங்களில் எங்களோடு வந்து உரையாடுவதுண்டு. அப்படி உரையாடிக் கொண்டிருந்த நாளில் தான் தங்கப்பன் என்ற வேட்டைக்காரனைப் பற்றிய செய்திகளை எங்களிடம் பகிர்ந்துகொண்டார். தங்கப்பன் எழுபதுகளில் அந்தக் காட்டுப்பகுதியில் வாழ்ந்த பிரபலமான வேட்டைக்காரன். வேட்டையும் பெண்களும் தான் தங்கப்பனின் உலகம். நாற்பது பெண்களுக்கும் மேல் அவருக்குக் காதலிகள். தங்கப்பனின் வேட்டைத் திறமைகள் குறித்து அலி முதலாளி சொல்லியிருந்த தகவல்களும் தங்கப்பனின் குணநலன்களும் என்னைப் பெரிதும் கவர்ந்தன. ஒரு சிறுகதையாக எழுதலாமென்றுதான் முதலில் யோசித்திருந்தேன். ஆனால் அந்தக் கதையுலகம் மெல்ல மெல்ல விரியத்தொடங்கியது. அந்த வனமும், அந்த வட்டாரமொழியும் எனக்கு சற்றே அந்நியமானதாய் இருந்ததால் எனக்கு நெருக்கமான தேனி மாவட்டத்திற்கு அந்தக் கதையை நகர்த்த வேண்டியதானது. தங்கப்பனின் கதை ஒரு பெரும் வனத்தோடு தொடர்புடையதென்பதால் எனக்கு அந்த வனத்தின் கதையையும் சொல்லத் தோன்றியது. அந்த வனமும் அங்கு பல நூறாண்டுகளாய் வசித்துவரும் பழங்குடிகளும் கதைக்குள் மெல்ல வரத் தொடங்கினார்கள்.
ஒரு நாவலை எழுதத் தொடங்குவதற்குமுன் அது தொடர்பாக நிறைய வாசிப்பதும், கதை நிகழும் களத்தில் அலைந்து திரிவதும் எனக்கு முக்கியமானது. இந்தக் காலகட்டத்தில் ஒவ்வொரு சிறிய விஷயங்களையும் தவறாமல் குறிப்புகளாய் எழுதுவேன், கதாபாத்திரங்கள், அவற்றின் வளர்ச்சி, முக்கிய சம்பவங்கள், அதற்கு முன்பும் பின்புமான விளைவுகளென இந்தக் குறிப்புகள் ஏராளமான பக்கங்களுக்கு நீளும். இந்தக் குறிப்புகளை இணைப்பதுதான் நாவல் எழுதுகையில் நான் செய்யக்கூடிய வேலை. அந்த வகையில் கானகனுக்காக நூறு பக்கங்கள் வரை குறிப்புகள் இருந்தன. ஆனால் நாவலை எழுதுவதற்கான அவகாசமில்லாமல் இருந்தது.
இயக்குநர் வசந்தபாலனின் காவியத்தலைவன் படம் நடந்து கொண்டிருந்த நேரம். இரவு பகலென வேலையிருந்ததால் முழுக்க வேலையில்தான் கவனமெல்லாம். அந்தச் சூழலில் பா. சிங்காரம் நாவல் போட்டி குறித்த அறிவிப்பினைக் கண்டேன். குடும்பத்தில் நேர்ந்த துர்சம்பவங்கள் காரணமாக கடும் பொருளாதார நெருக்கடி. பணம் பெரும் தேவையாய் இருந்ததால் அந்தப் போட்டியில் கலந்துகொள்ள முடிவுசெய்தேன். ஆனால் படப்பிடிப்பு நேரம். சேர்ந்தாற்போல் இரண்டு பக்கங்களை வாசிக்கவே நேரமில்லாத சூழலில் இந்த நாவலை எப்படி எழுதி முடிப்பது. படப்பிடிப்பு முடிந்து பின்னிரவில் ஒரு வாரகாலம் எழுதிய குறிப்புகளை வரிசைப்படுத்தினேன். அதிலேயே பாதிக்கும் மேல் தேவையற்றதாய் இருந்தது. இன்னொருபுறம் நீண்ட நேரம் அமர்ந்து எழுத உடல் ஒத்துழைக்க மறுத்தது. நாவலின் பிரதியை சமர்ப்பிப்பதற்கான அவகாசம் குறைந்து வந்த நிலையில் படப்பிடிப்பில் ஒரு சிறிய இடைவெளி கிடைத்தது.
நாவலை சமர்பிக்க வேண்டிய கடைசிநாளுக்கு இரண்டு நாட்கள் மிச்சமிருந்த நிலையில் ஏதோவொரு நம்பிக்கையில் என்னிடமிருந்த குறிப்புகளை விவரித்து எழுதத் துவங்கினேன். அந்த நாற்பத்தியெட்டு மணிநேரம் மறக்கவே முடியாதது. போட்டிக்கு அனுப்பிய முதல் வடிவமென்பது எழுத்துப் பிழைகளைக்கூட சரிபார்க்காத, எழுதியவற்றை மீண்டும் வாசித்துப் பார்க்காத ரத்தமும் சதையுமான பிரதி. போட்டியில் பரிசு வென்று அச்சுக்குச் செல்லும்போதுதான் அந்த நாவலை திருத்தி எழுதி ஒழுங்கு செய்தேன்.
அந்த நாவல் எனக்குக் கொண்டு வந்து சேர்த்தது ஏராளம். ஒவ்வொரு நாவலையும் எழுதும் காலத்தில் எழுத்தாளன் அந்தரங்கமாக ஒரு புதிய அனுபவத்தைக் கற்றுக்கொள்கிறான். கானகனில் நான் கற்றுக்கொண்டது எந்த நிலையிலும் என்னால் வீழாமல் எழுந்து நின்றுவிடமுடியுமென்கிற அபாரமான நம்பிக்கையை...