65 வயதிலும் தொழில் தொடங்கலாம்!

65 வயதிலும் தொழில் தொடங்கலாம்!
Published on

வெற்றிகரமான தொழிலதிபர் 65 வயதில் என்ன செய்வார்?  சாய்வு நாற்காலியில் அமர்ந்து பழைய நினைவுகளை அசைபோடலாம். ஆனால் கேப்டன் சி.பி.கிருஷ்ண நாயர் தன்னுடைய 65 வயதில் லீலா குரூப் எனப்படும் ஹோட்டல் தொழிலை தொடங்கி 2010 ஆம் ஆண்டு ‘ நூற்றாண்டின் சிறந்த ஹோட்டல் நிர்வாகி’ என்ற விருதை பெற்றிருக்கிறார். இன்று 90 வயதில் இன்றைய இளைஞர்களை விட  சுறுசுறுப்பாகவே இருக்கிறார்.

கேரளாவிலுள்ள கண்ணூரில் 1922 ல் வறுமையான குடும்பத்தில்  ஒன்பது குழந்தைகளில் ஒருவராகப் பிறந்த இவர் மகாராஜா அளித்த உதவித் தொகையால் படித்துவிட்டு ராணுவத்தில் சேர்ந்தார். இந்திய ராணுவத்திலிருந்து 1952 ல் விருப்ப ஓய்வில் வெளிவந்த இவர், மும்பையிலுள்ள மாமனாரின் கைத்தறி நெசவு தொழிலில் மனைவி சொல்படி இறங்கி வெற்றி பெற்றார். ஆனால் 65 வயதில் வளர்ந்த நாடுகளிலுள்ளது போன்ற  பைவ் ஸ்டார் ஹோட்டல்களை இந்தியாவில் உருவாக்க வேண்டும் என்று இவர் சொன்னபோது சிபிகேயை அறிந்தவர்கள் கூட இது வேண்டாத வேலை என்றார்கள். ஆனால் இன்று லீலா குரூப்புக்கு இந்தியாவெங்கும் பல கிளைகள்.

கல்லூரி படிப்பு முடித்து ராணுவத்தில் சேர நீண்ட ரயில் பயணம் மேற்கொண்டபோது சாப்பிடுவதற்கு கூட பணமில்லாமல் பசியோடு இருந்தவரை பார்த்து கருணாகரன் என்பவர் பெஷாவரில் இறங்கும் வரை சாப்பாடு வாங்கி கொடுத்து, அதன் பிறகான பயணத்திற்கு 10 ரூபாய் பணமும் கொடுத்துள்ளார். நெகிழ்ந்துபோன சிபிகே முதல்மாத சம்பளத்தில் அவருக்கான பணத்தை அனுப்பும் எண்ணத்துடன் விலாசத்தை கேட்டபோது,‘எனக்கு பணத்தை திருப்பி அனுப்ப வேண்டாம்,இதேபோல் நீங்கள் சந்திக்கும் எவருக்காவது பணம் தேவைப்படும்போது உதவிடுங்கள்’ என்று சொன்னாராம். இன்று சிபிகேயின் துணி நிறுவனத்தில் 20,00 பேரும்,லீலா குரூப்பில் 5000 பேரும் வேலை செய்கிறார்கள்!

வெற்றிக்கு குறுக்கு வழி ஏதுமில்லை!

ஐஐடி கான்பூரில் எம்.பி.ஏ படித்த ரஞ்சன் சோப்ரா பிலிப்ஸ் போன்ற பெரிய நிறுவனத்திலும்,ராபா கேண்டல் என்ற வளரும் நிறுவனத்திலும் சில காலம் வேலை பார்த்துவிட்டு எதுவும் திருப்தியில்லாமல் சிலகாலம் ஐரோப்பிய நாடுகளில் சுற்றித் திரிந்திருக்கிறார்.பெரிய நிறுவனங்களில் வேலை செய்யும்பொது நம்முடைய வேலை கடலில் கரைத்த பெருங்காயம் போல காணாமல் போய்விடுகிறது,சிறிய நிறுவனங்களில் எல்லாமே அதிகார மையத்தை சுற்றியே நடக்கிறது’ என்னும் சோப்ரா இரண்டுக்கும் இடையில் பணியாளர்களுக்கு அவர்களுக்கான மரியாதையும், திறமையை வெளிப்படுத்த களமாகவும் நிறுவனம் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டதுதான் டீம் கம்யூட்டர்ஸ்.வருடத்திற்கு சுமார் 300 கோடி வியாபாரம் செய்யும் டீம் தற்பொது 1000 பணியாளர்களையும் 600 வாடிக் கையாளர்களை உள் நாட்டிலும் வெளி நாட்டிலும் வைத்துள்ளது.

இன்றைக்கு டீமின் வெற்றியாக சோப்ரா குறிப்பிடுவது,‘எட்ட முடிய அளவுக்கான இலக்கை தீர்மானித்து, அதை அடைவதற்கான சரியான திட்டமிடல்களை செய்தோம். இன்று வேலை செய்யும்  பெரும்பாலோனோர் இதன் தொடக் கத்திலிருந்து என்னுடன் இருக்கிறார்கள். பொருளாதார மந்த நிலையில் என்னுடைய சம்பளத்தை பாதியாக குறைத்துக்கொண்டேனே தவிர பணியாளர்களிடம் கை வைக்கவில்லை’ என்கிறார்.

புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு இவர் சொல்லும் யோசனை முக்கியமானது. ‘கவனமாக சரியான ஆட்களை தேர்ந்தெடுங்கள்.வெற்றிக்கு குறுக்கு வழி எதுவும் கிடையாது.திட்டமிட்டு இலக்கை நோக்கி ஒவ்வொரு அடியாக முன்னேறுங்கள்,வெற்றி நிச்சயம்’.

பணமொழி:

ஒரு  வெற்றிகரமான மனிதன் என்பவன் காலை தூங்கி எழுவதிலிருந்து இரவு படுக்கைக்கு போகும் இடைப்பட்ட நேரத்தில் தனக்கு என்ன பிடிக்குமோ அதை செய்பவன்.

- பாப் டிலான்

மே, 2013.

logo
Andhimazhai
www.andhimazhai.com