4 குழந்தைகளுடன் எல்லை தாண்டிய காதல்: பிரதமர் வரை போன பஞ்சாயத்து!

4 குழந்தைகளுடன் எல்லை தாண்டிய காதல்: பிரதமர் வரை போன பஞ்சாயத்து!
Published on

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 30 வயது பெண் சீமா ஹைதர் என்பவருக்கும் குலம் ஹைதர் என்பவருக்கும் திருமணமாகி 4 குழந்தைகள் பிறந்தன. பெண்ணின் கணவர் குலாம் சவுதி அரேபியாவில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், 2019ஆம் ஆண்டு சீமாவுக்கும் இந்தியாவைச் சேர்ந்த சச்சின் மீனா என்ற இளைஞருக்கும் பப்ஜி விளையாட்டு மூலம் அறிமுகமாகியுள்ளது.

இந்த விளையாட்டு மூலம் இருவருக்கும் காதல் ஏற்பட்ட நிலையில், தான் பாகிஸ்தானை விட்டு வெளியேறி இந்தியா வந்து காதலன் சச்சினுடன் வாழ அதிரடி முடிவெடுத்தார் சீமா. அதன்படி, கடந்த மே மாதம் நேபாளம் வழியாக இந்தியா வந்த சீமா கிரேட்டர் நொய்டா பகுதியில் வசிக்கும் சச்சினுடன் சேர்ந்து வாழத் தொடங்கினார். தன்னுடன் தனது 4 குழந்தைகளையும் இவர் அழைத்து வந்துள்ளார்.

இவர்கள் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் வந்தது போலீசாரின் கவனத்திற்கு வந்தது. இதைத் தொடர்ந்து சீமா, சச்சின், சச்சினின் தந்தை நேத்ரபால் சிங் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் இவர்களுக்கு பெயில் வழங்கப்பட்டது.

இந்த சம்பவங்கள் ஊடகங்களில் வெளியான நிலையில், சீமா ஹைதரின் கணவர் குலாம் வீடியோ பதிவு மூலம் பிரதமர் மோடி அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். சவுதி அரேபியாவில் இருக்கும் அவர் தனது பதிவில் எனது மனைவி மற்றும் குழந்தைகள் 4 பேரையும் பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என மோடி அரசை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்து சீமா, “பாகிஸ்தானுக்கு என்னை திருப்பி அனுப்பினால் அங்கு கழுத்தை அறுத்து கொலை செய்து விடுவார்கள். என்னால் அங்கு செல்ல முடியாது. சச்சின் எனக்கு மரியாதை தருகிறார். குழந்தைகளை அன்புடன் நடத்துகிறார். பணம் இருந்தாலும் மதிப்பு தராத நபருடன் எப்படி சேர்ந்து வாழ்வது" என்கிறார். மேலும் பாகிஸ்தானில் உள்ள தனது நிலத்தை ரூ.12 லட்சத்திற்கு விற்று இந்தியா வந்ததாக சீமா கூறியுள்ளார்.

யாருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பது தொடர்புடைய அந்தப் பெண்ணின் விருப்பம். இங்கே எல்லை கடந்துவந்ததுதான் பெரும் சிக்கலே என சமூக ஊடகங்களில் கருத்துகளை பலர் பரிமாறி வருகின்றனர். இந்த பஞ்சாயத்து எப்படி அடுத்த கட்டத்தை எட்டுகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

logo
Andhimazhai
www.andhimazhai.com