All are equal, but some are more equal – George Orwell in Animal Farm
மும்பை வீதிகளில் எலும்புக்கூடு போல் உருக்குலைந்து பிச்சை எடுத்துக் கொண்டிருந்த ரவீந்திர பாட்டீலை நண்பர் ஒருவர் அடையாளம் கண்டு செவ்ரி எலும்புருக்கி நோய் மருத்துவமனையில் சேர்த்து விடுகிறார். மருந்துக்கு கட்டுப்படாத நோய் முற்றிய நிலையில் 2007 அக்டோபர் 4 ஆம் தேதி அவர் இறந்து விட்டார். குடும்பத்தாலும் சமூகத்தாலும் கைவிடப்பட்டு அனாதை போல இறந்து கிடந்தார் பாட்டீல்.
மும்பை போலீஸில் கான்ஸ்டபிளாக வேலை பார்த்த ஒருவர் 29 வயதில் இப்படி இறக்க காரணம் என்ன?
மும்பை ஜூஹூ கடற்கரையில் உள்ள நட்சத்திர விடுதிக்கு வெளியே சல்மான்கானுக்காக காத்திருக்கிறார் 24 வயது கான்ஸ்டபிள் ரவீந்திர பாட்டீல். நிழலுலக தாதாக்களால் தன்னுடைய உயிருக்கு ஆபத்து என்று சல்மான்கான் கொடுத்த புகாரினால் அவரது பாதுகாப்புக்காக அனுப்பப்பட்டவர். மது போதையில் வெளிவந்த சல்மான் அதிவேகமாக காரை செலுத்தியதாகவும், வேகத்தைக் குறைக்கச் சொல்லி தான் கேட்டுக்கொண்டதாகவும் பாட்டீல் தன்னுடைய வாக்குமூலத்தில் பதிவு செய்திருக்கிறார். அன்று இரவு தான் சல்மான்கானின் கார் நடைபாதையில் படுத்திருந்தவர்கள் மீது ஏறியதில் ஒருவர் இறந்துவிட நான்கு பேர் காயமடைந்தனர்.
சல்மான் தான் காரை ஓட்டிச் சென்றார், அன்று அவர் குடிபோதையில் இருந்தார் என்பதற்கான ஒரே சாட்சியம் பாட்டீல். இறுதிவரை அவர் அதை மாற்றிச் சொல்லவில்லை, மறுக்கவுமில்லை. ஆனால் இதன் பிறகு நடந்தது அத்தனையும் விநோதங்கள்.
சல்மான் தனக்காக வாதாட நாட்டின் சிறந்த வக்கீல் ஒருவரை நியமிக்கிறார். பாட்டீலை குறுக்கு விசாரணை செய்கிறார்கள். இவர் தவிர மற்ற அத்தனை சாட்சியங்களும் தலைகீழாக மாறிவிட்டன. பாட்டீலின் நண்பர் காவல்துறையிலிருந்தும் மற்ற வெளி ஆட்களிட்மிருந்தும் கடுமையான நெருக்கடி இருந்ததாக கூறுகிறார். பாலிவுட்டின் முண்னணி கதா நாயகனைக் காப்பாற்ற எல்லா விதமான முயற்சிகளும் நடக்க வாய்ப்பு உள்ளதுதான். ஆனால் சாட்சியத்தைக் காப்பாற்ற அரசோ, காவல் துறையோ சிறு முயற்சி கூட எடுக்கவில்லை.
சாதாரண கான்ஸ்டபிளால் குறுக்கு விசாரணை என்ற பெயரில் நடக்கும் அலைகழிப்புகளையும், வெளியிலிருந்து வரும் நெருக்கடிகளையும் தாக்கு பிடிக்க முடியவில்லை. நீதிமன்றத்தில் ஆஜராவதை தவிர்க்கிறார். தன்னுடைய சகோதரனை காணவில்லை என்று பாட்டீலின் சகோதரர் போலீஸில் புகார் அளிக்கிறார். காவல் துறையும் விடுப்பு எடுக்காமல் அவர் காணாமல் போய்விடுவதாக பதிவு செய்கிறது.
தொடர்ந்து ஐந்து முறை ஆஜராகததால் பாட்டீலை கைது செய்ய உத்தரவிடுகிறது நீதிமன்றம். சம்பவம் நடந்த உடன் தாமாக முன் வந்து முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தவர் ஏன் நீதிமன்ற விசாரணைக்கு பயந்து ஓடி ஒளிகிறார் என்று யாரும் கேட்க்கவில்லை.
உண்மையில் பாட்டீல் எங்கும் தலைமறைவாகி விடவில்லை. பிரச்னைகளிலிருந்து தப்பிக்க மகாபலேஸ்வரில் சென்று தங்கி இருந்து அடிக்கடி குடும்பத்தாரை வந்து பார்த்து சென்றிருக்கிறார். கடமை தவறாத காவல் துறையும் பாட்டீலை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துகிறது. அதே சமயத்தில் மோசமான நடத்தை காரணமாக காவல் துறையிலிருந்து அவர் நீக்கப்பட்டதாக தெரிவிக்கிறது காவல்துறை. முக்கியமான வழக்கு ஒன்றில் சாட்சியமளித்தவரை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்ற காரணத்திற்காக கைது செய்து கடுமையான குற்றவாளிகளை வைத்திருக்கும் ஜெயிலில் அடைக்கிறார்கள். கொலைக்குற்றவாளிகளுடன் தன்னை அடைக்க வேண்டாமென்றும், சாட்சியங்களுக்கான செல்லுக்கு மாற்றும் படியுமான அவரின் மனுக்கள் கேட்பாரற்று குப்பையில் வீசப்பட்டது.
விடுதலையாகி வெளி வந்த பாட்டீலை காவல் துறை திரும்ப சேர்த்துக் கொள்ள மறுத்துவிட்டது. குடும்பமும் கைவிட்டது. தொலைக்காட்சி, பத்திரிகை யாரும் அவரைப் பற்றி கவலைப்படவில்லை. திரும்பவும் பாட்டீல் மீதான கவனம் முதல் பாராவில் சொன்னபடி அவர் இறந்த போதுதான் வந்தது. உண்மை
சல்மான் கானுக்கு ஐந்து ஆண்டு காலம் தண்டனை விதித்தது மும்பை செசன்ஸ் நீதிமன்றம். அதே நாளில் பெயிலில் வெளி வந்துவிட்டார் சல்மான்.
வழக்கின் ஒரே சாட்சியான ரவீந்திர பாட்டீலின் சாட்சியத்தை முழுமையான நம்பத்தகுந்த சாட்சியமாக ஏற்க்க முடியாது, ஏனென்றால் முதல் தகவல் அறிக்கைக்கும் குறுக்கு விசாரணையில் பாட்டீல் அளித்த தகவல்களுக்கும் நிறைய முரண்பாடு உள்ளது என்று சொல்லி மும்பை உயர் நீதி மன்றம் சல்மானை விடுதலை செய்து 13 ஆண்டு கால வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தது.
அப்படியானால் 29 வயதில் அடையாளம் தெரியாத அளவுக்கு உருக்குலைந்து மரணித்த ரவீந்திர பாட்டீலின் மறைவிற்கு யார் காரணம்?
ஜனவரி, 2016.