23035 பொய்கள்!

23035 பொய்கள்!

Published on

அண்டப் புளுகு ஆகாசப் புளுகு என்ற வரிசையில் புதிதாக சேர்ந்துள்ளது ட்ரம்ப் புளுகு. பதவியேற்றதிலிருந்து 11 செப்டம்பர் 2020 அன்று எடுத்த கணக்கின் படி 1331 நாட்களில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 23035 பொய்களை (Or misleading claims) அவிழ்த்து விட்டுள்ளார். சராசரியாக தினசரி 17.3 பொய்கள்.

கொரோனா பற்றி ட்ரம்ப் வண்டி வண்டியாகப் பொய்களை அவிழ்த்துவிட்டார். தடுப்பூசி தயாராவதற்கு முன்னே தயாராகிவிட்டது என்று அறிவித்தார். கொரோனா பற்றி ட்ரம்ப் கூறுவதை அமெரிக்க மக்கள் நம்புவதில்லை என்றும் விஞ்ஞானிகளும் மருத்துவர்களும் கூறுவதை மட்டும் நம்புவதாகவும் கணிப்புகள் கூறின. ட்ரம்ப் கொரோனா பற்றி மட்டும் 1200-க்கும் மேற்பட்ட பொய்களை கூறியுள்ளார்.

ட்ரம்ப் ஆட்சியில் 100-வது நாளை எட்டியவுடன் அதுவரை ட்ரம்ப் பேசிய விஷயங்கள், பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியது, டிவி மட்டும் சமூக ஊடகங்களில் வெளியிட்ட தகவல்களை தி வாஷிங்டன் போஸ்ட்  ஆராய்ந்தது. ஆய்வில் ஆட்சிக்கு வந்த முதல் 100 நாட்களில் அவர் 492 பொய்களை கூறியது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து அவரது பொய்களை ஆராயவே தனியாக பத்தி ஒன்றை தொடங்கியது. ட்ரம்பின் பொய்களை உடனுக்குடன் சுட்டிக் காட்டியது. ஆனால், அசராமல் ட்ரம்ப் தொடர்ந்து பொய்களை அள்ளி வீசினார்.

காலங்காலமாக அரசியல்வாதிகள் உண்மைகளை மிகைப்படுத்தியோ ஒன்றிரண்டு பொய்களையோ சொல்வதுண்டு. ஆனால், தற்போது உலகமெங்கும் தலைவர்கள் உரக்க பொய்களைத் தைரியமாக முழங்குகின்றனர். அதிகாரத்திற்கு பயந்து ஊடகங்கள் அதைப் போட்டு உடைப்பதில்லை.

பொய்யர் என்று நிருபணமானதற்கு பின்னும் 47.1% சதவீத வாக்களர்கள் டொனால்டு ட்ரம்பிற்கு வாக்களித்திருப்பது வருத்தமானது என்கிறார் அமெரிக்க பத்திரிக்கையாளர் ஒருவர். ஆட்சியாளர்களின் பொய்கள் மக்களில் பெரும்பான்மையானவர்களுக்கு உரைப்பதில்லை. “அமெரிக்காவின் பொருளாதாரம் வரலாறு காணாத அளவில் சிறப்பாக உள்ளது' என்ற பொய்யை மட்டும் 416 முறை ட்ரம்ப் கூறியுள்ளார்.

இவற்றை ஒரு நூலாகவே வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ளது. வாஷிங்டன் போஸ்ட் செய்ததை போன்ற சேவையை ஒவ்வொரு ஜனநாயக நாட்டிலும்  ஊடகங்கள் செய்தால் நன்றாக இருக்குமென்கிறார் ஒரு மூத்த அரசியல் செய்தியாளர். ‘எல்லோருக்கு நல்லது செய்வதாக ஒரு அரசியல்வாதி சொன்னால் அவர் பொய்சொல்வதாகக் கருதலாம். தங்கள் வளம், அதிகாரம், வாய்ப்புகளை சாமானியருடன் பகிர்ந்துகொள்ள விரும்பாத, முறைகெட்ட மேல்வர்க்கத்தின் பகுதியாகவோ அல்லது அதன் பிரதிநிதியாகவோதான் அவர் இருப்பார்,' என்கிறார் மேலை நாட்டு பத்திரிகையாளர் ஸ்டீவர்ட் ஸ்டாபோர்டு.

அமெரிக்க வெள்ளை மாளிகையில் செய்தி சேகரித்த சி.என்.என். செய்தியாளர் பிரியன்னா கெய்லர் கூறுகிறார்,‘தவறான செய்திகளைக் கூறுவதே ஒரு வைரஸ் போன்றது' என. சரிதான், அரசியல்வாதிகளின் பொய்கள் கோவிட்-19  வைரஸை விட மிகவும் ஆபத்தானதுதான். ஆனால், மக்கள் இதை எப்போது உணர்வார்கள்?

டிசம்பர், 2020.

logo
Andhimazhai
www.andhimazhai.com