2000க்குப் பிறகு தமிழ் சிறுகதைகளின் போக்கு!

Published on

பூமியில் மனித வரலாறும், இருப்பும் ஒருபோதும் தீராத கதைகளினால் ததும்புகின்றன. நவீன வாழ்க்கையைச் சிறுகதையின் மூலம் விசாரிப்பது, முன்னெப்போதையும்விட இன்று  காத்திரமாக நடைபெறுகிறது. தமிழ்ச் சிறுகதை வடிவம், கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் அறிமுகமானாலும் காலந்தோறும் உள்ளடக்கத்திலும், வடிவத்திலும் மாற்றங்களை  எதிர்கொண்டுள்ளது. உலகமயமாக்கல் காரணமாகத் தமிழர் வாழ்க்கையில் நுகர்பொருள் பண்பாடு விளைவித்துள்ள பாதிப்புகள், அடையாள இழப்பு அரசியலுக்கு வழி வகுத்துள்ளன. புனைவுத் தன்மையுடன் மொழியின் அதிகபட்ச சாத்தியங்களுடன் சொல்லப்படும் புதிய வகைப்பட்ட புனைகதைகள், தொடர்ச்சியறு நிலையில் வாசகனை வெவ்வேறு உலகினுக்கு இட்டுச் செல்கின்றன. பின் நவீனத்துவம், மாந்திரிக யதார்த்தம் ஏற்படுத்திய பாதிப்புகள் காரணமாகக் கதைசொல்லிகள், புதிய மொழியில் கவனம் செலுத்துகின்றனர். அதேவேளையில் யதார்த்தக் கதை

சொல்லிகள் தேர்ந்தெடுக்கிற கனமான விஷயம், வித்தியாசமான விவரிப்பில் முக்கியத்துவம் பெறுகிறது. இருபத்தொன்றாம் நூற்றாண்டில் வெளியாகியுள்ள

சிறுகதைகளின் போக்குகள் குறித்து அறிமுகநிலையில் எனது பார்வை  இக்கட்டுரையில் விரிந்துள்ளது. இது, ஒருவகையில் பருந்துப் பார்வை.  இளம் வாசகர்களுக்குப் புதிய கதையாடல்களை அறிமுகப்படுத்தும் வகையில் எனது முயற்சி அமைந்துள்ளது என்று சொல்ல முடியும். தேடினால் கண்டடைவீர்கள்.   

இன்றைய புனைகதை எது என்ற கேள்வி முக்கியமானது. தமிழ் மொழி பயன்பாட்டுக்குரியதா? என்று சந்தேகப்படுகிற இளைய தலைமுறையினர், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் திளைத்துக் கொண்டிருக்கின்றனர். அதிலும் கையில் ஸ்மார்ட் போனுடன் 24 மணிநேரமும் மின்னணு உலகில் மிதக்கிறவர்கள், புனைகதையை வாசிப்பது, மிகவும் குறைவு. என்றாலும், பின் காலனியச் சூழலில் நெருக்கடிக்குள்ளான வாழ்க்கை குறித்துப் புனைகதைகள்மூலம் சூழலை விசாரிக்க முயலுவது தொடர்கிறது. விளிம்புநிலையினரின் வாழ்க்கையைப் புனைவாக்குவதன் மூலம் மையத்தில் வலுவாக உறைந்திருக்கும் அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்கும் செயல்பாடு நடைபெறுகிறது. பால் சமத்துவமின்மை, சாதிய ஒடுக்குமுறையுடன் மதஅடிப்படைவாத அமைப்புகளின் ஆதிக்கம் இன்று மேலோங்கிக் கொண்டிருக்கிறது. இந்துத்துவாவை முன்னிறுத்தும் காவிகள், பாசிசத்தை அமல்படுத்திடத் துடிக்கின்றனர். இன்னொருபுறம் கிறிஸ்தவ, இஸ்லாமிய மதஅடிப்படைவாதிகளும் உடல்களை மதத்தின் பெயரால் அடக்கியொடுக்குவது வலுவடைந்துள்ளது.  மனிதர்களிடையே செல்வாக்குப் பெற்றிருக்கும் வன்மம், வன்முறை, குரோதம், அற்பத்தனம், பொறாமை, கருமித்தனம், பொறுக்கித்தனம் போன்றவற்றைக் கதையாக்கும் போக்கு, இன்று முக்கியத்துவம் பெற்றுள்ளது. அன்றாட வாழ்வில் கசப்பும் துயரமும் பொங்கி வழிந்தாலும், மேன்மை குறித்து அக்கறை கொள்கிற கதைசொல்லிகள், சூழலின்மீது எதிர்வினையாற்றுகின்றனர். சுருங்கக்கூறின், 

சிறுகதை இலக்கிய வடிவத்தில் கவனத்துடன்  ஈடுபட்டுள்ள இளம் எழுத்தாளர்களின் படைப்புகள், சமகாலத்தின் குரல்களாக விளங்குகின்றன.

சிறுகதை மொழியானது கவிதைக்கு நெருக்கமாகச் செறிந்த நிலையில், மனதின் விகாசங்களைப் பதிவாக்குவது முக்கியமானது. குற்றவுணர்வுடன் வாழப் பழகியவர்களாக மனிதர்கள் மாறிக்கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் எதுவும் நடப்பதற்கான சாத்தியப்பாடுகள் உள்ளன.   

தொலைக்காட்சிச் செய்தி சேனலில் ஒளிபரப்பாகும் சாலை விபத்தில் கொத்தாக இறந்தவர்களின் கோரமான சடலங்களைப் பார்த்தவாறு, இரவு உணவை ருசித்துச் சாப்பிடுவது இயல்பாகியுள்ளது. இத்தகைய சூழலில்  கோணங்கி உருவாக்கிய பித்துமொழியின் வழியே பயணிக்கத் தொடங்கிய  கதைசொல்லிகள் உருவாக்கிய கதைகள், மனவெளியில் மிதக்கின்றன. அவநம்பிக்கையான மனநிலையுடன், முடிவெடுக்கவியலாத சூழலில் குற்றவுணர்வையும், மனதின் புதிர்வழிப் பாதையையும் பதிவாக்குவது நவீனப் புனைவாக்கத்தில் வெளிப்பட்டுள்ளது. புனைவாக்கத்தில் மொழியை அதிகபட்ச சாத்தியங்களுடன் பயன்படுத்தியுள்ள கதைசொல்லல், தமிழுக்குப் புதிய பிரதேசங்களை அறிமுகப்படுத்தியுள்ளது

யதார்த்தக் கதையாடல்கள், விளிம்புநிலையினரின் வாழ்க்கையில் ஏன் இப்படியெல்லாம் சம்பவங்கள் நிகழ்கின்றன என்ற கேள்வியை எழுப்புகின்றன. எளிய மனிதர்கள் என்றாலும் அவர்களுடைய மனதின் துடிப்புகள், கட்டுக்கடங்காமல் பெருகுகின்றன. காலங்காலமாகக் கட்டமைக்கப்பட்டுள்ள  குடும்ப அமைப்பின் புனிதம் என்ற எல்லையை எளிதாக அத்துமீறுகிற கணவன் மனைவிக்கிடையிலான உறவு பற்றிச் சொல்வது, அண்மைக்காலத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அன்றாட வாழ்க்கையில் நடைபெறுகிற சம்பவங்கள், எந்தவொரு படைப்பாளியாலும் கற்பனை செய்ய இயலாதவாறு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன எனக் குடும்பப் பின்புலத்திலான பெரும்பாலான கதைகள் விவரிக்கின்றன. இப்படியெல்லாம் நடக்குமா என யோசிக்க வைக்கிற விநோதங்கள் நிரம்பிய யதார்த்த வாழ்க்கையின் அசலான முகம், புனைவுகளில் பதிவாக்கியுள்ளது. அன்றாட வாழ்க்கை யதார்த்தமானது என்ற புரிதல் அற்றநிலையில் மனிதர்கள் எதிர்கொள்கிற சம்பவங்கள், கதை

சொல்லலில் முக்கிய இடம் பெறுகின்றன. இதுவரை பொதுப்புத்தியில் கட்டமைக்கப்பட்டுள்ள இறுக்கமான விதிகள், புனைவில் மீறப்பட்டுள்ளன. சூழலின் நெருக்கடிக்கு அப்பால் பெண் தனக்காகக் கட்டமைத்திடும் பெண்ணுக்கான வெளியில், ஆண் மையம் தகர்கிறது.

மரபான சிறுகதை வடிவம், கதைசொல்லல் முறையிலிருந்து விலகி, யதார்த்தம் ஏன் இவ்வளவு குரூரமாக இருக்கிறது என விசாரிப்பதும் இங்கு நடைபெறுகிறது. நவீன வாழ்க்கை உருவாக்கியிருக்கும் அன்றாட நிகழ்வுகளைக் கதையாக்குவதில் கையாளப்பட்டுள்ள செறிவான மொழி, வாசகனைக் கதையுடன் ஒன்றவிடவில்லை.        யதார்த்தமாகக் கதை சொல்வது, தமிழில் பெரு வழக்காக உள்ளது. பொருளாதாரப் பிரச்சினையை முன்வைத்து எழுதப்படுகிற கதைகள், வாசிப்பில் கண்ணீரை வரவழைக்க முயலுவது, சிறந்த கதையின் இலக்கணமாகக் கருதப்படுகிறது. இத்தகைய சூழலில் யதார்த்தமான விவரிப்பு மூலம், இருப்பின் இன்னொரு பக்கத்தை விவரிப்பதும் நடைபெறுகிறது. சூழலின் வெக்கையினால் கடுமையான நெருக்கடியில் வாழ்கிறவர்கள், இக்கட்டான கணத்தில் எப்படி மனிதமையத்துடன் எதிர்வினையாற்றுகின்றனர் என்பது யதார்த்தக் கதைகள் சித்திரிக்கும் மையமாக இருப்பது, கவனத்திற்குரியது. விடுவிப்பு இல்லாத சூழலிலும் நம்பிக்கையின் ஒளிக்கீற்றை முன்னிலைப்படுத்திப்படுத்திட யதார்த்தக் கதைகள் முயலுகின்றன.         

விளிம்பு நிலையினர் குறித்துக் கதைசொல்கிற கதைசொல்லிகளின் சிறுகதைகள் தனித்து விளங்குகின்றன. புதிரான நிலையில் எதுவும் நிகழ்வதற்கான சாத்தியப்பாடுகளுடன் அவநம்பிக்கையின் காரணமாகத் தன்னையே தொலைத்துக் கொண்டிருக்கிற மனிதர்களின்  ஒழுக்கமீறல்கள், குற்றவுணர்வுகள், தடுமாற்றங்கள் எங்கும் பரவிக் கொண்டிருக்கின்றன. எல்லாவிதமான மதிப்பீடுகளும் அர்த்தமிழக்கிற சூழலில் கிராமம், நகரம் என இரு வேறு வெளிகளில் சொல்லப்பட்டுள்ள கதைகள் வாழ்க்கையின் இடைவிடாத நெருக்கடியைப் பேசுகின்றன. விட்டேத்தியான மனநிலையுடன் வாழ்கிறவர்கள் மட்டுமின்றி, எதற்கும் துணிந்தவர்கள் பற்றிய கதைகள், வாசிப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்த வாய்ப்புண்டு. இப்படியான உலகத்தில் உனது இருப்பு என்னவாக இருக்கிறது என்ற கேள்வியை முன்னிறுத்துகிற கதைகள், ஒருநிலையில் அபத்தத்தைச் சித்திரிக்கின்றன.

கவிஞர்களுடன் ஒப்பிடும்போது, பெண் மையச் சிறுகதை எழுதுகிற பெண் படைப்பாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. பெண் என மனதாலும் உடலாலும் அறிந்திட்ட நிலையில் எழுதப்படுகிற சிறுகதைகள் ஆழமான கேள்விகளை எழுப்பும் வல்லமையுடையவை. ஆண்களின் அதிகார மையமாக விளங்கும் குடும்பத்தில் பெண்ணின் இடம் பதிலியாக்கப்பட்டு, பொறுக்காகக் கருதப்படுகிற நிலையைக் கதைகளாகியுள்ள எழுத்துகள், பெண்ணெழுத்துக்கு அடையாளமாக விளங்குகின்றன. குடும்ப அமைப்பு என்பது நடுத்தர வர்க்கத்துப் பெண்ணின் வெளியை ஒடுக்குவதுடன், அடுத்தடுத்துச் சுமைகளைச் சுமந்துகொண்டு, ஓர் உயிராகக் கருதாத சூழலை, பெரும்பாலான கதைகள் வெளிப்படுத்துகின்றன. ஆண் கட்டமைக்கிற வட்டத்திற்குள் வாழ்கிற நிர்பந்தம் காரணமாகச் சுயமாக வாழமுடியாமல் புழுங்கித் தவிக்கிற பெண்ணின் வலிகளைப் பேசுகிற கதைகள், அழுத்தமானவை.  பெண்ணுக்கெனத் தனிப்பட்ட மனம் உண்டு என அறியாமல், அவளை உடலாக மட்டும் பார்க்கிற ஆண் மையப் போக்கினால், அவள் அடைகிற துயரங்கள், அளவற்றுப் பெருகுவதைச் சிலரின் கதைகள்  பேசுகின்றன. பொதுவாகப் புனைகதைகளில் ஆணை முற்றிலும் புறக்கணிக்கும் பார்வை இல்லை. ஏன் இப்படி பெண்ணைப் புரிந்திடாமல் ஆண் அலைகிறான் என்ற கேள்வி, சில கதைகளில் வெளிப்பட்டுள்ளது.

21ஆம் நூற்றாண்டின் கதைசொல்லலில் வெளிப்படும் பொதுவான போக்குகளைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளேன். பத்தொன்பது ஆண்டுகளில் சிறுகதை வெளியீட்டில்  நடைபெற்றுள்ள வளர்ச்சிப் போக்குகளையும் மாற்றங்களையும் பற்றிய எனது கருத்துகள், குறிப்பிட்ட வரையறைக்குள் வெளிப்பட்டுள்ளன. தனிப்பட்ட நிலையில் படைப்புகளும் படைப்பாளர்களும் குறித்துப் பேசப்பட வேண்டியுள்ளது. முக்கியமான படைப்பாளுமைகள் குறிப்பிடத்தக்க அளவில் சிறுகதைகளை அடுத்த கட்டத்திற்கு முன்னெடுக்கும்வகையில் இயங்கிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் எழுதியுள்ள புனைகதைகள் குறித்து பேச்சுகளைத் தொடங்கிட வேண்டியுள்ளது. அப்பொழுதுதான் சமகாலத் தமிழ்ச் சிறுகதைகளின் காத்திரமான போக்குகள் புலப்படும்.

பொதுவாகத்  தமிழ்ச் சிறுகதைகளை அடுத்த கட்டத்திற்கு முன்னெடுத்துச் செல்லும்வகையில் இயங்கிக் கொண்டிருக்கிற இளம் படைப்பாளர்களின் புனைகதைகள், உற்சாகம் அளிக்கின்றன. அவர்கள் எழுதியுள்ள கதைகள் குறித்துப் பேச்சுகளையும் மறுபேச்சுகளையும் தொடங்கிடும்போது, அண்மைக்காலத் தமிழ்ச் சிறுகதைகளின் முழுமையான செல்நெறி புலப்படும். நீங்கள் தேடி

வாசிக்க வேண்டிய படைப்பாளர்களின் சிறுகதைகள் (2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் வெளியான தொகுப்புகள்):

துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை - பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள் - போகன் சங்கர்

ஆகாசமாடன் - கறுத்தடையான்

பிரதியின் நிர்வாணம் - லைலா எக்ஸ்

பாம்பு வால் பட்ட கதை - பாட்டாக்குளம் துர்கையாண்டி

தாழிப்பட்ட கதவுகள் - அ. கரீம்

நாம் ஏன் அந்தத் தேநீரைப் பருகவில்லை? - உமா பார்வதி

பெர்ஃப்யூம் - ரமேஷ் ரக்சன்

இறுதி இரவு - சி. சரவணகார்த்திகேயன்

கனாத்திறமுரைத்த காதைகள் - சித்ரன்

கேசம் - நரன்

இருமுனை - தூயன்

அம்புப் படுக்கை - சுனில் கிருஷ்ணன்

டொரினோ - கார்த்திக் பாலசுப்ரமணியன்

நந்தலாலா - நந்தன் ஸ்ரீதரன்

கண்ணம்மா - ஜீவ கரிகாலன்

கற்பனை கடவுள் - நாச்சியாள் சுகந்தி

லங்கூர் - லக்ஷ்மி சிவகுமார்

நீலம் பூக்கும் திருமடம் - ஜா.தீபா

பனி குல்லா - கவிதைக்காரன்  இளங்கோ

இதுவரை இல்லாதஅளவில் அன்றாட வாழ்வில் எல்லா நிலைகளிலும் நெருக்கடிகள் அதிகரித்தபோதும், மனிதமையத்துடன் செயல்படுவதற்கான தேவையைப் பெரும்பாலான சமகாலப் புனைகதைகள் கட்டமைத்துள்ளன. முந்தைய தலைமுறை எழுத்தாளர்கள்

சிறுகதையின் வடிவம், உத்தி, செய்நேர்த்தி போன்றவற்றுக்கு முக்கியத்துவம் தந்தனர். கதையில் ஒரு பாத்திரம் சற்றுக் குரலை ஓங்கிப் பேசிவிட்டால், கதையின் அழகியல் குறைவுபட்டதாகப் புலம்பி, ஒதுக்கினர். இன்று எப்படி வேண்டுமானாலும் கதை சொல்வதற்கான சாத்தியப்பாடுகள் பெருகியுள்ள நிலையில், அழகியல் அம்சத் திற்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை. சமகால எழுத்தாளர்கள் புதிய களங்களைத் தேடியவாறு பயணிக்கையில், இதுவரை படைப்பாக்கத்தில் கையாளப்படாமல், ஒதுக்கி வைத்திருந்த விஷயங்களையும் கதைகளாக்க முயலுகின்றனர். பாலியல் குறித்து மூடுண்ட மனநிலையுடைய தமிழர் வாழ்க்கையில் பெண்ணுடல் பற்றிய பிரேமைகளைத் தகர்த்துவிட்டு, புதிய பேச்சுகளைக் கதைகளின் வழியாக உருவாக்குகின்றனர். காமம், பெண்ணையும் ஆணையும் உயிரியல்ரீதியாகப் படுத்துகிற பாடுகளையும், அவை சமூகத்துடன் முரண்படுகிற/ஒத்திசைகிற நிலைகளையும் கதைகளாக்குவதில் இன்று தயக்கம் எதுவுமில்லை. பெண்ணியம், தலித்தியம், சூழலியம் என நுண்ணரசியல் எழுச்சி பெற்றுள்ள தமிழ் அரசியல் சூழல்,

சிறுகதை ஆக்கத்தில் புத்தொளி பாய்ச்சுகிறது. இனவரைவியல் தன்மைக்கு முக்கியத்துவம் தந்து எழுதப்படும் கதைகளில் மண் சார்ந்து இருப்பினைக் கேள்விக்குள்ளாவது, தொடர்ந்து இடம் பெறுகிறது. பொருளியல் ஏற்றத்தாழ்வு, வறுமை காரணமாக விளிம்புநிலையிரின் வாழ்க்கை இன்று மதிப்பீடு இழந்து வதைக்குள்ளாகியுள்ளது. இன்னொருபுறம் நகரமயமாதல் காரணமாக தொலைந்துகொண்டிருக்கும் கிராமத்து நிலவெளியில், குடும்ப உறவுகள் பெரிய அளவில் சிதலமடைகின்றன. இருப்பினில் இருந்து அந்நியமாதல் எங்கும் வேகமாகப் பரவிக்கொண்டிருக்கிறது. இருப்பதா? இறப்பதா? என்ற கேள்விகளின் வழியாகத் சுயத்தைத் தொலைத்தவர்களும் மனப்பிறழ்வாளர்களும் பெருகிடும் சூழலில், பொங்கி வழிந்திடும் கசப்பின் நெடியடிக்கும் சிறுகதைகள் எழுதப்படுவது தற்செயலானது அல்ல.

ஜனவரி, 2020.

logo
Andhimazhai
www.andhimazhai.com