சச்சின்  Vs கோலி : கடவுளாக முயலும் தேவதூதன்

சச்சின் Vs கோலி : கடவுளாக முயலும் தேவதூதன்

Published on

என்னுடைய தாடியில் நாற்பது நரைமுடிகள் வந்து சேர்ந்திருப்பதுதான் ஒரே மாற்றம்!

-இந்தியாவின் டெஸ்ட்  அணி கேப்டன் ஆனபிறகு என்ன மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்ற கேள்விக்கு விராத் கோலி 2015-ல் சொன்னது.

தன்னுடைய ஐம்பதாவது டெஸ்டை விசாகப் பட்டினத்தில் விளையாடி  முதல் இன்னிங்சில் சதம், இரண்டாவது இன்னிங்சில் அரைசதம் என்று குவித்து வெற்றியையும் ருசி பார்த்திருக்கிறார் விராட் கோலி. இந்திய டெஸ்ட் அணியின் தலைவர். 28 வயதில் ரன் குவிக்கும் இயந்திரமாக இருக்கும் கோலி, இன்றைய தேதிக்கு உலகின் மிகச்சிறந்த ஆட்டக்காரர்கள் வரிசையில் இடம்பெற்றிருக்கிறார். நமது வழக்கப்படி கிரிக்கெட் கடவுளான சச்சின் டெண்டுல்கருடன் அவரை ஒப்பிட்டுப் பார்க்கும் ஒப்புமைகள் வரத் தொடங்கிவிட்டன.

கோலி இந்திய அணிக்கு ஆடவந்து எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இருபது வயதில் தேர்வானவர். இந்தியாவில் இருக்கும் கடும் போட்டியில் இந்த வயதில் தேர்வாவதற்கு  அசாத்தியமான திறமை வேண்டும். அது அந்த இளைஞரிடம் இருந்தது.

மேற்கு டெல்லியில் ஒரு சாதாரண வழக்கறிஞரான பிரேம் கோலியின் மூன்றாவது பையன் விராத். ஒன்பது வயதில் விராத் தன்னை கிரிக்கெட் பயிற்சியில் சேர்த்துவிடுமாறு அடம் பிடித்தான். காரணம் அப்போது ஷார்ஜாவில் ஆஸ்திரேலியா உடனான ஒரு நாள் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் விஸ்வரூபம் எடுத்து எல்லோரையும் கவர்ந்திருந்தார். அந்த போட்டிகளைக் கண்கொட்டாமல் பார்த்த அவன் தானும் ஒரு கிரிக்கெட் ஆட்டக்காரர் ஆவது என்று முடிவெடுத்தான். இந்தியாவில் லட்சக்கணக்கான பொடியர்கள் அந்த சமயத்தில் கிரிக்கெட் மட்டையைச் சுழற்ற ஆரம்பித்திருந்தனர் என்பது உண்மை.

ராஜ் குமார் சர்மா என்பது அந்த கிரிக்கெட் பயிற்சியாளரின் பெயர்.  அப்பாவுடன் வந்திருந்த ஒன்பது வயதுச் சிறுவனை சேர்த்துக்கொண்டார். ஒரே வாரத்திலேயே இந்த பையனிடம் திறமைஇருக்கிறது என்று அவர் தெரிந்துகொண்டார். “பந்தை பவுண்டரியிலிருந்து மிகச்சரியாக கீப்பரின் கைக்கு வீசியதிலிருந்தே அவனது திறமையை கணித்துவிட்டோம்” என்று ராஜ்குமார் சர்மா விராட் கோலியைப் பற்றி வெளிவந்திருக்கும் ஆங்கிலப்புத்தகமான Driven -ல் அதன் ஆசிரியர் விஜய் லோகாபள்ளியிடம் கூறுகிறார்.

திறமையுடன் இருந்தாலும் பல்வேறு அரசியல் சுழல் அடிக்கும் கிரிக்கெட் உலகில்  புறக்கணிப்புகளும் அதிகம்தான். 14 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியில் கோலி புறக்கணிக்கப்பட்டதும் அப்படி ஒன்று. ஆனால் அதற்கு  அடுத்தவருடம்கோலியைப் புறக்கணிக்க முடியவில்லை. அதன் பின்னர் எப்பவுமே.

“கோலி இளம் கிரிக்கெட் ஆட்டக்காரராக வளர்ந்துகொண்டிருந்தபோது நான் அவரது ஆட்டத்தைக் கண்டிருக்கிறேன். இவன் பெரிய ஆள் ஆவான் என்று அப்போது நான் நினைத்தது இல்லை என்பதே உண்மை” என்கிறார் விஜய் லோகபள்ளி.

கோலியின் ஆரம்ப நாட்களில் அவரிடம் ஆன் சைட் ஷாட் மட்டுமே சிறப்பாக இருந்தது. மற்ற ஷாட்கள் எல்லாம் பலவீனம்தான். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் அவரது திறமை வளர்ந்துகொண்டே  இருந்தது. ஸ்கொயர் டிரைவ், லேட் கட் என்று மிகச்சிறப்பான ஆயுதங்களை அவர் சேர்த்துக்கொண்டார்.

19 வயதுக்குட்பட்ட இந்திய அணியின் கேப்டனாக அவர் கோலாலம்பூர் சென்றதும் அங்கே விளையாடி  உலகக்கோப்பையை வென்றதும்தான் கோலியின் வருகையை உறுதி செய்தன. அந்த கோப்பையில் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றதும் கோலி டெல்லிக்குப் போன் செய்து தன் பயிற்சியாளர் ராஜ்குமாரை உடனே கோலாலம்பூர் வருமாறு அழைத்தார். அந்த போட்டியின்போது தன் பயிற்சியாளர் உடனிருக்க வேண்டும் என்ற உணர்வுப்பூர்வமான அழைப்பை ராஜ்குமார் அறிந்து உடனே போய்ச்சேர்ந்தார், கோப்பை வெல்லப்பட்டது.

கோலியின் விளையாட்டுக்கான அர்ப்பணிப்பு

 சின்ன வயதிலும் மிகவும் கவனிக்கப்பட்டது 2006-ல் நடந்த ரஞ்சிப்போட்டியில். கர்நாடகாவுக்கு எதிரான போட்டி. டெல்லி பின் தங்கியிருந்தது. மாலை ஆட்டநேரமுடிவில் கோலியும் பிஷ்ட் என்ற ஆட்டக்காரரும் களத்தில் இருந்தார்கள். அன்று இரவு கோலியின் தந்தை மரணம் அடைந்துவிட்டார். ஆனால் மறுநாள் காலை கோலி மைதானத்துக்கு வந்து ஆட்டத்தைத் தொடர்ந்தார். கோலி 90 ரன்களில் இருந்தபோது அவருக்கு அவுட் கொடுக்கப்பட்டது. ஆனால் பேட் பந்தில் படாமல் தவறாகக் கொடுக்கப்பட்ட அவுட். கோலி மைதானத்தைவிட்டு வெளியேறி நேராக சென்ற இடம் தந்தையின் தகன இடம்தான்!

சக ஆட்டக்காரர் பிஷ்ட் தொடர்ந்து ஆடி சதம் அடித்தார். அவருக்கு மாலை ஒரு போன் வந்தது. கோலிதான்!

‘சதத்துக்காக வாழ்த்துக்கள்!’

தந்தையின் இறுதிச்சடங்கின்போதும் மைதானத்திலும் ஒரு கண் வைத்திருந்தார் கோலி.

இதற்கு இரண்டு ஆண்டுகள் கழித்து 2008-ல் இந்திய அணிக்கு தேர்வான கோலியின் வெற்றிக்கதை எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

கோலி பற்றிய புத்தகத்தில் ஒரு சுவாரசியமான படம் இருக்கிறது. பால் வடியும் முகத்தோடு கூடிய பொடியனான கோலிக்கு உள்ளூரில் அப்போது இந்திய அணியில் இடம் பிடித்திருந்த பந்துவீச்சாளரான ஆஷிஷ் நெஹ்ரா பரிசு அளிக்கும் படம். பின்னாளில் கோலியின் தலைமையில் ஆஷிஷ் நெஹ்ரா விளையாடும் நிலை ஏற்பட்டதை யாரும் யோசித்திருக்கமுடியுமா?

2011 மும்பையில் நடந்த கிரிக்கெட் இறுதிப்போட்டி. வெற்றிப் பெற்றதும் நடந்த கொண்டாட்டங்களில் விராட் கோலியைப் பார்த்தால் தெரியும். அவர் சச்சினைத் தூக்கி தோளில் வைத்திருப்பார்.  அது ஒரு உணர்வுபூர்வமான நிகழ்வு, யாரைப் பார்த்து கிரிக்கெட்டுக்கு வந்தோமோ யாரை வழிபடுகிறோமோ அவருடன் விளையாடும் வாய்ப்பு. அவருக்காக உலகக்கோப்பையை வென்றுதரும் வாய்ப்பு!

ஆனால்  அதன் பின்னர் நான்காண்டுகள் உருண்டுவிட்டன. கடவுள் ஓய்வு பெற்றுவிட்டார். கோலி இப்போது டெஸ்ட் அணியின் கேப்டன். சச்சினின் சாதனைகளை கோலி முறியடிப்பாரா? சச்சினை விட சிறந்தவரா கோலி? கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.

ஆனால் எண்களை ஒப்பிட்டுப்பார்த்துவிடுவது எப்போதும் சுவாரசியமானதுதானே?

பதினாறு வயது பாலகனாகக் களம் இறங்கிய சச்சின் தன் ஐம்பதாவது டெஸ்ட் முடிவில் 3438 ரன்கள் குவித்திருந்தார். சராசரி 49.82. (நவம்பர் 1989- மார்ச் 1997). எட்டு ஆண்டுகள்.

விராத் கோலி ஐம்பதாவது டெஸ்டை சமீபத்தில் முடித்தபோது அவரது 3891. சராசரி 48.03.  சச்சினை விட  400 ரன்கள் அதிகம்.

ஒரு நாள் போட்டிகளில் கோலி 176 ஆட்டங்களில் ஆடி 8371 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 52.93. 

சச்சின்  ஆடிய முதல் 176 ஆட்டங்களைக் கணக்கில் எடுத்துப்பார்த்தால்  அவருடைய சராசரி நாற்பதுக்கும் குறைவாகவே இருந்துள்ளது.  அவர் 8000 ரன்களைக் கடந்ததே பாகிஸ்தானுக்கு எதிராக மான்செஸ்டரில் ஆடிய தன்னுடைய 212 ஆட்டத்தில்தான். இந்த விஷயத்தில் கோலி சச்சினை மிகவும் முந்தியிருக்கிறார். ஆனால் ஒரு விஷயம் 8000 ரன்களைக் கடந்தபோது சச்சினுக்கு வயது 26 தான். கோலியை விட இரண்டு வயது குறைவு.

சச்சினுடன் ஒப்பிடுவதா என்கிறவர்கள் சொல்லும் முக்கிய காரணம், சச்சின் விளையாடிய காலகட்டத்தில் இருந்த பவுலர்களான வாசிம் அக்ரம், கர்ட்லி அம்புரோஸ் போன்ற பந்துவீச்சாளர்கள் இப்போது இல்லை. அத்துடன் ரன் குவிப்பதை ஊக்குவிக்கும் அளவிலான ஆட்டச் சலுகைகள் உதாரணத்துக்கு ‘பவர் ப்ளே’ போன்றவை அப்போது இல்லை. எனவே கோலியையும் சச்சினையும் ஒப்பிடுவது தகாது என்கிறார்கள்.

“சச்சின் மிகவும் திறமையானவர். ஆனால் அவருக்கு ஒரு மனத்தடை உண்டு. நூறு ரன்கள் அடித்ததும் அவுட் ஆகிவிடுவார். ஆனால் கோலிக்கு அது இல்லை. லாராவின் ஒரே டெஸ்டில் 400 ரன்கள் குவித்த சாதனையை கோலிதான் முறியடிக்கப்போகிறார்” என்று புகழ்ந்து தள்ளுகிறார் கபில்தேவ்.

கோலியின் உடல் மொழியைப் பார்த்தால் அதில் தெரியும் தன்னம்பிக்கையும் அவுட் ஆகிவிடுவோமோ என்று அஞ்சாத அணுகுமுறையும் மிகவும் புதிது. அதைவிட அவரது போட்டியிடும் பண்பு முக்கியமானது. மைதானத்துக்குள் சண்டைக்கோழியைப் போல் சிலிர்க்கும் ஆட்டக்காரராக மட்டையைச் சுழற்றுவதால்தான் அவரால்  ரன்களைக் குவிக்க முடிகிறது. 26 சதங்களை ஒரு நாள் போட்டியிலும் 14 சதங்களை டெஸ்ட் போட்டியிலும் குவித்திருக்கும் இவர் மீதான் எதிர்பார்ப்புகள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. இதில்முக்கியமான அம்சம், கேப்டன் பதவி என்பது அவரது ஆட்டத்திறனைப் பாதிக்கவில்லை என்பதே.

சச்சினுக்கு கேப்டன் பதவி என்பது பெரும் சுமையாக இருந்தது. அவரது தலைமையில் ஆடிய  54 ஒரு நாள் போட்டிகளில் இந்தியா 31 -ல் தோற்றது. 17 டெஸ்ட்களுக்கு கேப்டனாக இருந்து மூன்று போட்டிகள் மட்டுமே சச்சின் வென்றிருக்கிறார். அவரது ரன் குவிக்கும் திறனும் பாதிக்கப்பட்டது.

ஆனால் சச்சின் இருபது ஆண்டுகள் தொடர்ந்து ஆடினார். பல ஆபத்தான காயங்களில் இருந்து மீண்டுவந்தார். இது எல்லாருக்கும் எப்போதும் சாத்தியமாவது இல்லை. அப்போதெல்லாம் ட்வெண்டி20 ஆட்டங்கள் இல்லை. இப்போதிருப்பதை விட குறைவாகவே ஆடினார்கள். இப்போதைய உணர்வு, உடல் ரீதியிலான அழுத்தங்களும் இல்லை.

காயங்கள் இல்லாமல் விராட் ஆடினால்  நிச்சயம் சச்சினின் சாதனைகளை முறியடிக்க முடியும். இப்போதைய அவரது ரன் குவிக்கும் திறன் அதைக் காட்டுகிறது என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள். ஆனால் இப்போதிருக்கும் ‘பார்மே’ தொடருமா? கோலியின் ஆட்ட பலவீனங்களைக் கவனித்து அவரை வீழ்த்தும் உத்திகளை சர்வதேச பந்துவீச்சாளர்கள் உருவாக்கிவிட மாட்டார்களா?

சச்சின் மைதானத்துக்குள் இறங்கிவிட்டால்  எண்பது வயது முதியவரின் பொறுமை கைவரப்பட்டு ஆடுவார். ஆனால் கோலியிடம் அது இல்லை. இவர் இந்த தலைமுறையின் ஆள். ஆனாலும் கடந்த இரு ஆண்டுகளில் அவரிடம் முதிர்ச்சியைப் பார்க்க முடிகிறது.

சச்சின் மீது இந்திய மக்களுக்கு இருந்த மதிப்புக்கு பல்வேறு காரணங்கள் உண்டு. அவர் ஒரு ஆசிர்வதிக்கப் பட்ட திறமைகள்  கொண்ட இளைஞராக அறிமுகம் ஆனார். வளர்ந்துகொண்டிருந்த இந்தியாவுக்கு ஒரு நாயகன் தேவைப்பட்ட காலம் அது. அந்த நாயகன் நடுத்தர வர்க்கத்திலிருந்து, எளிய பின்னணியில் இருந்து வரமாட்டானா என்ற எதிர்பார்ப்பு. அந்த இடத்தை சச்சின் மிகப்பொருத்தமாக நிறைவு செய்தார். மிகச்சிறந்த ஆட்டத்திறனை அளித்து ரசிகர்களின் ஏக்கத்தை நிறைவு செய்தார். கோலியின் காலம் அதை விட மாறுபட்டது.  நாயகர்களுக்குப் பஞ்சமில்லை! சச்சினுக்குக் கிடைத்த ரசிகர்களின் பேரன்பைப் போராடித்தான் பெறவேண்டும்!

இப்போதைக்கு சச்சின் கடவுள் என்றால் கோலி கடவுளாக முயற்சி செய்யும் தேவதூதன் என்று சொல்லலாமா?

டிசம்பர், 2016.

logo
Andhimazhai
www.andhimazhai.com