ஜெயகாந்தனின் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் நாவலில் வரும் ஹென்றி ஒரு மறக்கமுடியாத கதாபாத்திரம்.
புத்திகூர்மையும், வலிமையும், புதுமையும் விரும்பும் பெண் கதாபாத்திரங்களை அதிகம் எழுத்தில் உருவாக்கி காட்டியவர் ஜேகே, அவரது நாவல்களில் வரும் ஆண்கள் நிறைய பேசுவார்கள், அறிவுப்பூர்வமாக விவாதிப்பார்கள், அதே சமயம் குழந்தைகளைப் போல மனதளவில் அன்பிற்காகவும் உறவிற்காகவும் ஏங்கக் கூடியவர்களாகயிருப்பார்கள்.
இவர்களிலிருந்து பெரிதும் மாறுபட்டவன் ஹென்றி. தஸ்தாயெவ்ஸ்கி தனது இடியட் நாவலின் கதாநாயகன் மிஷ்கினை உருவாக்கும் போது அவன் தூய அன்பின் அடையாளமாக உருவாக்கப்பட வேண்டும் என்று விரும்பினார், உலகம் அவனது அன்பைப் புரிந்து கொள்ளாமல் அசடன் என்று அழைக்கும், அவனோ கிறிஸ்துவிற்கு நிகரான அன்புடன் நடந்து கொள்வான்,
அது போன்ற ஒரு கதாபாத்திரமே ஹென்றி, எனக்கு ஹென்றி எப்போதுமே மிஷ்கினின் சகோதரனைப் போலவே தெரிகிறான், இரண்டு கதாபாத்திரங்களுக்குள் நிறைய ஒற்றுமைகளிருக்கின்றன, நீண்ட பல வருஷங்களுக்கு பிறகு தனது மாமாவைத் தேடி ரஷ்யா வருகிறான் மிஷ்கின், அவனைப்புரிந்து கொள்ளாமல் மாமா குடும்பம் சந்தேகம் கொள்கிறது. ஹென்றியும் அப்பாவின் நினைவுகளுடன் அவரது ஊரைக்காண வருகிறான், ஊர் அவனைப்புரிந்து கொள்வதில்லை,
ஆனால் இவரும் சகமனிதர்களுடன் மிகுந்த வாஞ்சையுடன் பேசவும் பழகவும் முற்படுகிறார்கள், சின்னஞ்சிறு சந்தோஷங்களை கூட பெரிதாக கருதுகிறார்கள், மிஷ்கின் மனதில் யார் மீதும் துளி கோபமிருப்பதில்லை, அப்படி தான் ஹென்றியும்,
அவன் தனது தந்தையைப் ப்ப்பா என விளிக்கும் முறையும், அப்பாவின் அன்பினை பற்றி நெகிழ்து கூறும் விதமும், லாரியில் பயணம் செய்யும் போது அவன் நடந்து கொள்ளும் முறையும், தேவராஜனுடன் நட்பு கொள்வதும், இப்படியொரு மனிதன் நிஜஉலகில் இருக்கமாட்டானா என ஏங்க வைக்கிறது.
ஹென்றி ஏன் நமக்கு புதுமையானவனாகத் தோன்றுகிறான், காரணம் தினசரி வாழ்க்கையின் ஒழுங்கிலிருந்து, கெடுபிடிகளிலிருந்து விடுபட்டவனாக வாழ்கிறான், ஒரு அந்நியனைப் போல தோன்றும் அவன் விழிப்புற்ற மனநிலை கொண்டிருப்பதே அவனது எல்லாச் செயல்களும் வித்தியாசமாக தோன்றுவதற்கான காரணம்,
மென்னுணர்வும், திறந்த மனமும், எளிய அன்பிற்கான ஏக்கமும், கடந்தகால நினைவுகளை சந்தோஷமாக கைக்கொள்ளும் விதமும், தன்னோடு பழகுகிறவர்களை நேசத்துடன் நடத்துகிற விதமும் அவனை தனித்துக் காட்டுகிறது. ஹென்றியை எழுதும் போது ஜேகே அவனை ஐடியலிஸ்டாகவே உருவாக்க விரும்பியதாக கூறுகிறார், அதற்கு நல்லதும் கெட்டதும் எங்கும் உண்டு, நாடுவது என்னவென்பதே முக்கியம் எனக் கூறுகிறார்,
ஹென்றி எதிலும் நல்லதையே நாடுகிறான், நாவல் முழுவதிலும் ஹென்றியின் உரையாடல்கள், அவன் அழகை ரசிக்கிற விதம், அவனது மனவோட்டங்கள், நினைவுகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன,
ஏதோவொரு புள்ளியில் ஹென்றி என்னை விட உயர்ந்தவனாகவும் நான் தேவராஜனாகவுமே உணர்கிறேன், தேவராஜன் இயல்புலகில் வாழ்பவன், ஆசைகளே அவனை வழிநடத்துகின்றன, அவனே ஹென்றியை புரிந்து கொண்டவன், ஹென்றியின் வழியாக அவன் தன்னை அறிந்து கொள்ளத்துவங்குகிறான்.
நாம் தேவராஜனாகவே இருக்கிறோம், ஹென்றியாக மாற ஆசைப்படுகிறோம், ஹென்றியைப் போன்ற அபூர்வமான மனிதர்கள் இதேயுலகிற்குள் தான் எங்கோ அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களைத் தேடுங்கள், கண்டவடைவீர்கள் என்கிறார் ஜேகே.
நதியும் கடலும் மட்டும் தான் முழுமையா என்ன, தண்ணீரின் ஒவ்வொரு துளியும் முழுமையானதே என்பார் ஜெயகாந்தன். ஹென்றி அப்படியானதொரு முழுமையின் வடிவமே...
(எஸ்.ராமகிருஷ்ணன், எழுத்தாளர்)
நவம்பர், 2014.