ஹவுஸ்புல் போர்டு

ஹவுஸ்புல் போர்டு
Published on

எனது தந்தை திரு.வேலாயுதம் திரையரங்குகளுக்கு பேனர், கட் அவுட்கள் செய்து கொடுக்கும் தொழிலை செய்து வந்த ஓவியர்.

அவரது நிறுவனமான சினி ஆர்ட்ஸ் தொடங்கப்பட்டது 1954இல் கோவை ராயல் தியேட்டரில்தான்.

முதன் முதலாக தூக்கு தூக்கி என்ற திரைப்படத்திற்கு அந்த தியேட்டரில் வைப்பதற்காக வரைந்தார். தனியாக ஒரு ஓவியக்கூடம் தொடங்குவது வரை ராயல் தியேட்டர் அதிபர்கள், தங்கள் திரையரங்கில் ஒரு பகுதியை, திரைக்குப் பின்பக்கம் ஒதுக்கித் தந்தார்கள். அப்போதைய திரைப்பட விநியோக உரிமை ஏரியா என்பது கோவை நீலகிரி ஏரியா என்பார்கள். பின்னர் கோவை மாவட்டம் ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களாகப் பிரிந்தபோதும் ஏரியா அதேதான். கோவை, பொள்ளாச்சி, உடுமலை, ஊட்டி, ஈரோடு, திருப்பூர் போன்றவை ஏ சென்டர்களாகவும், கோபி, மேட்டுப்பாளையம், கொடுமுடி, தாராபுரம் போன்ற ஊர்கள் பி சென்டர்களாகவும் திகழ்ந்தன. இது போக சி சென்டர்கள். இத்தனை ஊர்களில் இருந்த தியேட்டர்களும் அதன் பேனர் அளவுகளும் எங்களுக்கு அத்துப்படி.

திரையரங்க முன்னோடியான சாமிக்கண்ணு வின்சென்ட் கோவையில் 1914இல் கட்டிய வெரைட்டி ஹால் தியேட்டர், இன்று டிலைட் என்று பெயர் மாறி, 100 ஆண்டுகளைக் கடந்து இன்றும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்பது பெருமைக்குரிய விஷயம். அதன் நூற்றாண்டு விழாவை கோவை திரைப்பட அபிமானிகள் அனைவரும் இணைந்து கவிஞர் புவியரசு தலைமையில் கொண்டாடினோம்.

டிலைட் தியேட்டரை 60களுக்குப் பிறகு ராம்சொரூப் என்ற வட இந்தியர் நடத்தி வந்தார். ஆராதனா, யாதோன் கி பாராத், என்டர் தி டிராகன், ஷோலே என்று வெற்றிப்படங்கள் திரையிட்டு வந்த தியேட்டர். தமிழ்ப் படங்களும் போடுவார்கள். ஒவ்வொரு பட ரிலீசுக்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன் அடுத்த ரிலீஸ் பேனர் வரைய ஆலோசனை சொல்வதற்காக என் தந்தைக்கு அழைப்பு வரும். சில நேரங்களில் அவர் அவசரப் பணியில் இருந்தால், என்னை போகச்சொல்வார். ஓரிரு நிமிடங்களில் நான் அங்கு சென்று விடுவேன். எங்கள் வீடு, ஸ்டுடியோ, இந்த தியேட்டர் எல்லாம் மிக அருகில்.

ராம்சொரூப், தியேட்டரில் தன் அறையில் தரையில் ஒரு மெத்தை விரித்து, திண்டுகள் சகிதம் படுத்துக்கொண்டோ, சாய்ந்துகொண்டோ இருப்பார். வரப்போகும் திரைப்படம் குறித்த போட்டோ கார்டுகளையும், ஸ்டில்களையும் தருவார். எந்த நடிகரை பெரிதாக வரையவேண்டும். யாரை சிறிதாக வரையவேண்டும் என்று உத்தரவுகள் பிறப்பிப்பார். நான் உடனே அதை மறுப்பேன். அந்த படத்தின் கதை என்ன, யாருக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்றும் சொல்வேன். ஒல்லியாக, கருப்பாக ஒரு பொடியன் நமக்கே ஆலோசனை சொல்கிறானே என்று ஆரம்பத்தில் கடுப்பானவர் பின்னர் என் மீது மாறா அன்பு கொண்டவராகிவிட்டார். என் தந்தை இனிமேல் வரக்கூடாது, நான்தான் வரவேண்டும் என்று உத்தரவும் இட்டு, என்னுடன் படங்களை பற்றி அரட்டை அடிப்பார். நான் இந்தி மாணவன், இந்தி திரைப்பட அபிமானி என்பதால், பெரிய வண்ண பாட்டுப்புத்தகங்களை எனக்குத் தருவார். உச்சகட்டமாக என் தந்தையை ஒரு நாள் அழைத்து, ‘இவன் பி.ஏ. முடிக்கட்டும். பம்பாய்க்கு ராஜ்கபூர் கிட்டே அனுப்பப்போறேன்' என்று ஒரு குண்டைப்போட்டார். என்னைப்பற்றி ஏதேதோ கனவுகள் கண்டுகொண்டிருந்தவர் பதறிப்போய் எம்.ஏ. படிக்க சென்னைக்கு அனுப்பிவிட்டார்.

ராயல் தியேட்டர் அதிபர்கள் நான்கு சகோதரர்கள். பெரியவர் சுந்தரவேல்தான் தியேட்டரின் முகமாகத் திகழ்ந்தார். சிவாஜி, எம்ஜிஆர் திரைப்படங்கள் மாறி மாறி வரும். எப்போதும் திருவிழாக்கோலம்தான். மக்கள் வரிசையில் நிற்பதற்காகவே நீண்ட கூரையிட்ட வராந்தா இருக்கும். கோவையில் சைக்கிள்களுக்கு தனியாக டிக்கட் தரும் வழக்கம் இருந்தது. பெரிய படங்களுக்கு ஒவ்வொரு காட்சிக்கும் கிலோ மீட்டர் கணக்கில் சைக்கிள்கள் வரிசையாக நிற்கும். எம்ஜிஆர் சிவாஜி படங்களுக்கு கட்டுக்கடங்காத கூட்டம் ரகளையில் ஈடுபடும்போது போலீஸ்காரர்களுடன், பெரியவரும் ஒரு வாழைமட்டையை கையில் எடுத்துக்கொண்டு விளாசுவார். தியேட்டர் ஸ்க்ரீனுக்கு இருபுறமும் என் தந்தையார் வரைந்த நேரு, சுபாஷ் கட் அவுட்கள் நின்றுகொண்டிருக்கும். ராயல் தியேட்டருக்கு வரைவதென்றால் என் தந்தைக்கும் சரி அவர் காலத்துக்குப் பின் எனக்கும் மிகப் பிடிக்கும். அதன் முகப்பு அப்படி! சிவந்த மண் திரைப்படத்திற்கு ஒரு பிரம்மாண்டமான ஹெலிகாப்டரையும் , ராஜராஜ சோழன் படத்திற்கு நந்தி சகிதம் பெரியகோவிலையும் ஒரு செட் போட்டு வைத்திருந்தார். நான் வரைந்த முதல் பேனரும் ராயல் தியேட்டருக்குத்தான். யாரோ ஒரு முகம் தெரியாத நடிகர் வாயில்  சிகரெட்டுடன் நிற்கும் ஸ்டில் எனக்கு மிகவும் பிடித்துப்போனது. ஆசைப்பட்டு என் தந்தையிடம் உத்தரவு வாங்கி அதை அவர் முன்னிலையில் வரைந்தேன். அவருக்கும் பெருமிதம். என் கல்லூரி காலத்தில் வந்த அந்த திரைப்படம் ‘மூன்று முடிச்சு'. அந்த நடிகர் பின்னர் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டார்!!

ராயல் தியேட்டருக்கு என் தந்தை மறைவுக்குப் பின் நான் வரைந்த பேனர்களில் பெயர் பெற்றவை, உதிரிப்பூக்கள், காளி, ஜானி, வறுமையின் நிறம் சிவப்பு, நண்டு, தேவர் மகன்....!

சென்ட்ரல் தியேட்டருக்கு அப்போது படம் பார்க்க வருவது போல ஒரு கூட்டம் கேன்டீனுக்கும் வரும். படம் பார்க்க வராதவர்களுக்கும் கான்டீன் வர அனுமதி உண்டு. கீரைவடையும் காபியும் அங்கு மிக பிரசித்தம். அந்த கேன்டீன் அதிபர் பின்னர் ஒரு ஹோட்டல் தொடங்கி உலகப்புகழ் பெற்றுவிட்டார். அன்னபூர்ணா கௌரிஷங்கர் குழுமம்தான் அது. சென்ட்ரல் தியேட்டரில் ஒரு ஓவியரை வேலைக்கு அமர்த்தி , ஒவ்வொரு வாரமும் ஓடிக்கொண்டிருக்கும் ஆங்கிலப்படத்திற்கு அங்குள்ள சுவரில் தமிழில் கதைச்சுருக்கம் எழுதி வைப்பார் நாயக்கர். புது டெக்னிகல் விஷயங்களில் மணி நாயக்கருக்கு அதீத ஆர்வம். 70 எம்எம் தியேட்டரான சென்ட்ரலில் ஒளி ஒலி அமைப்பில் டால்பி போன்ற எந்த விஷயங்கள் அறிமுகப்படுத்தினாலும், அதற்கு திரைப்படம் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து விசேஷ காட்சியும் நடத்துவார். சில திரைப்படங்களின் பெட்டி வந்திருந்தால் எனக்கு அழைப்பு வரும் . அத்தனை பெரிய தியேட்டரில் மூன்றே பேர் அமர்ந்து பிரிவியூ பார்ப்போம். நான் என்ன சொல்கிறேன் என்பதையும் கவனத்தில் கொள்வார். சென்ட்ரல் தியேட்டருக்கு ஆங்கிலப்படங்களுக்கு வரைவது என்றால் எனக்கு இன்னும் ஆர்வம். அனகோண்டா போன்ற படங்களுக்கு ராட்சச பாம்புக்கு கூட கட் அவுட் வைத்தோம்.!

நான் சொன்ன தியேட்டர்களில் பல இன்று இயங்குவதில்லை. பல இடிக்கப்பட்டன. வேறு கட்டடங்கள் அங்கு எழுந்து நிற்கின்றன. சில இன்னும் காலி மனைகளாக....

கட்டுக்கடங்காத கூட்டங்களும், புக்கிங் ஆபீசுக்கு வெளியே காத்துக்கிடந்த விஐபிக்களும், அலுமினிய பெட்டியுடன் டிக்கட் கவுன்டரை நோக்கி ராஜநடை போட்ட புக்கிங் கிளர்க்குகளும், ஹவுஸ்புல் போர்டும், கட் அவுட்டுக்கு மாலை போட சாரத்தின் மீது ஏறி விழுந்து செத்த ரசிகப்பெருமக்களும் என்று நினைவுகள் வடுக்களாக மாறி, படர்ந்துகிடக்கின்றன.

மே, 2022

logo
Andhimazhai
www.andhimazhai.com