ஸ்தாபன காங்கிரஸ்: வழிகாட்டிய கரங்கள்!

ஸ்தாபன காங்கிரஸ்: வழிகாட்டிய கரங்கள்!
Published on

ஒரு கட்சியின் சக்தி வாய்ந்த தலைவர், சுயநலம் பாராமல் இன்னொருவரை வழிமொழிந்து ஆதரவு திரட்டி பிரதமர் பதவியில் அமரச் செய்கிறார். ஆட்சித்தலைமை கைக்கு வந்தபின் அவர், தன்னைப் பிரதமர் ஆக்கியவரை மதிக்காமல் முடிவுகள் எடுக்கிறார். எப்படி இருக்கும்?

காமராஜருக்கு நேர்ந்த அனுபவத்தை சுருக்கமாகச் சொன்னால் இப்படித்தான் சொல்லமுடியும்.

நேருவின் மறைவுக்குப் பின்னால் சாஸ்திரியை பிரதமராக்குவதில் அப்போது அகில இந்திய காங்கிரசின் தலைவராக இருந்த காமராஜர் முக்கியப்பங்கு வகித்தார். 1963-இல் நேரு நோயுற்று இருக்கும்போதே,அவருக்குப் பின்னால் யார் பிரதமர் ஆகவேண்டும் என்று தீர்மானிக்க திருப்பதியில் காங்கிரஸ் கட்சியின் முக்கியத்தலைவர்களான காமராஜர், அதுல்ய கோஷ், சஞ்சீவரெட்டி,  நிஜலிங்கப்பா உள்ளிட்டோர் கூடிப் பேசினார்கள். யார் பிரதமராக வேண்டும் என்பதை விட யார் ஆகக்கூடாது என்றே அதில் பேசப்பட்டது. அப்போது முக்கிய தலைவராக இருந்த மொரார்ஜி தேசாய் மட்டும் வரக்கூடாது என தீர்மானிக்கப்பட்டது. இந்த சக்திவாய்ந்த தலைவர்களும் இவர்களுடன் கரம்கோத்த மூத்த தலைவர்களும் சிண்டிகேட் என அழைக்கப்பட்டனர். பின்னர் நேருவின் ஆதரவுடன் காமராஜர் காங்கிரஸ் தலைவராக ஆனார். 1964-இல் நேரு இறந்தபின்னர், மொரார்ஜி பிரதமர் ஆக விரும்பியபோது  இவர்கள் சார்பில் லால்பகதூர் சாஸ்திரி முன்னிலைப்படுத்தப்பட்டு பிரதமர் ஆக்கப்பட்டார்.

ஆனாலும் சாஸ்திரி பிரதமராக செயல்பட்டபோதும்கூட சில சமயங்களில் கட்சித்தலைமையை முக்கிய முடிவுகளின்போது கலந்தாலோசிக்கவில்லை என்ற குறையை காமராஜர் வெளிப்படுத்தி இருக்கிறார். தாஷ்கண்ட் பேச்சுவார்த்தைக்காக சென்ற  சாஸ்திரி அங்கே மரணமடைந்துவிட்டார். இந்த நிலையில் மீண்டும் மொரார்ஜி பிரதமர் ஆக விரும்ப,அவருக்குத் தண்ணி காட்டி, நேரு குடும்ப வாரிசான இந்திரா காந்தியை 1966-இல் பிரதமர் ஆக்கினார் காமராஜர்.

அவர் பிரதமர் ஆன பின்னர் கட்சிக்கும் ஆட்சிக்கும் இடையே உரசல் வலுவடைந்தது. இந்திய நாணயத்தின் மதிப்புக் குறைக்கும் நடவடிக்கையை காங்கிரஸ் தலைமை ஆதரிக்கவில்லை. இந்த மோதலின் உச்சகட்டம் அப்போது வந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் நிகழ்ந்தது. 1969-இல் குடியரசுத் தலைவர் தேர்தலில் சிண்டிகேட் உறுப்பினர்கள் தங்களில் ஒருவரான சஞ்சீவரெட்டியை வேட்பாளராக நிறுத்தவிரும்பினர். பெங்களூருவில் நடந்த காங்கிரஸ் செயற்குழுவில் அதிகாரபூர்வ வேட்பாளராக சஞ்சீவரெட்டி அறிவிக்கப்பட்டார்.  இந்நிலையில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்ட விவி கிரிக்கு தன் ஆதரவைத் தெரிவித்தார் பிரதமர் இந்திரா. அதுமட்டுமல்லாமல் தன் ஆதரவாளர்கள் வாக்குகளைப் பெற்று அவரை வெற்றிபெறவும் வைத்தார். திமுகவும் விவி கிரிக்கே வாக்களித்தது.

இதைத் தொடர்ந்து காங்கிரஸ் இரண்டாகப் பிரிந்தது. காமராஜர், நிஜலிங்கப்பா போன்றோர் தலைமையில் மூத்த தலைவர்கள் இந்திராவுக்கு எதிராகப் பிரிந்தனர். இந்த பிரிவு காங்கிரஸ் (ஓ) அதாவது ஸ்தாபன காங்கிரஸ் என அழைக்கப்பட்டது. இந்திரா ஆதரவாளர்கள் பிரிவு காங்கிரஸ்(ஐ) அல்லது காங்கிரஸ் (ஆர்) என அழைக்கப்பட்டது.

ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ் (ஓ), காங்கிரஸ் (ஐ) என இரண்டு கட்சிகள் இருந்தன. தென்னிந்தியாவில் கேரளத்தில் சங்கரநாராயணன், ஆந்திரத்தில் சஞ்சீவ ரெட்டி, கர்நாடகத்தில் நிஜலிங்கப்பா போன்றவர்கள் தலைமையில் காங்கிரஸ்( ஓ) வலுவாக இருந்தது. தமிழ்நாட்டில் காமராஜர் தலைமையில் காங்கிரஸ் வலுவாக இருந்தது என சொல்லவே வேண்டாம். காங்கிரஸ் (ஐ) கட்சியில் பக்தவத்சலம், சி.சுப்ரமணியன் ஓவி அழகேசன், ராமையா,  போன்றவர்கள் இருந்தார்கள். தொண்டர்கள் பலம் காமராஜர் பக்கமே இருந்தது. ஆளும் திமுகவுக்கு வலுவான எதிர்க்கட்சியாக ஸ்தாபனகாங்கிரஸ்தான் செயல்பட்டது. திமுகவுக்கு எதிராக தொடர்ந்து கூட்டங்கள் நடத்தப்பட்டன.

தமிழகம் தழுவிய அளவில் பல மாணவர் பிரச்னைகள் எழுந்தபோது நான் கல்லூரி மாணவனாக ஸ்தாபன காங்கிரஸ்  சார்பாக பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டேன். ‘கோவில்பட்டி தம்பி' என்றுதான் காமராஜர் என்னை அழைப்பார்.

இந்த சமயத்தில் விவசாய சங்கப் போராட்டமும் நடந்தது. எங்கள் ஊரிலேயே துப்பாக்கிச்சூடு நடந்து 4 பேர் இறந்தனர். இந்த போராட்டத்துக்கும் ஸ்தாபன காங்கிரஸ் ஆதரவு இருந்தது. பழ.நெடுமாறன் மதுரை மாவட்டத்தலைவராகவும் கட்சி மாநிலப்பொதுச்செயலாளராகவும்  இருந்தார். அவரை விவசா யிகள் போராட்டத்துக்கு ஆதரவு திரட்ட காமராஜர் பணித்தார். ‘விவசாயிகளை ஒடுக்கினால் நானே சிறைக்கு செல்வேன்‘ என்று அவர் அறிவித்தார். அச்சமயம் பாளையங்கோட்டை

சிறையில் நான் அடைபட்டிருந்தேன். எங்களைப் பார்க்க சிறைக்கு அவர் வந்திருந்தார். அவரிடம் உடன் சிறையில் இருந்த எழுத்தாளர் கி.ரா. அவர்களை அறிமுகப்படுத்தியதும் எனக்கு பெருமையான நிகழ்வு.

நவசக்தி, அலைஓசை, செய்தி, குறிஞ்சி, ஜெயபேரிகை, ஜவஹரிஸ்ட் உள்ளிட்ட பத்துப் பத்திரிகைகள் ஸ்தாபன காங்கிரஸுக்கு ஆதரவாக செயல்பட்ட காலம் அது. 1967-இல் திமுகவிடம் ஆட்சியை இழந்திருந்தாலும் 1971 தேர்தலின் போது எப்படியும் காமராஜர் தலையிலான ஸ்தாபன காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துவிடும் என்றுதான் நம்பப்பட்டது. மதுரையில் திமுக கழக தலைவர் ஒருவர் நெடுமாறனை அனாமதேயம் என்று விமர்சித்திருந்தார். அச்சமயம் தேர்தல் பிரச்சாரத்துக்காக மதுரைக்கு வந்த காமராஜர், ‘ நெடுமாறனை முகவரி அற்றவர் என்று சொன்னவர்கள் குறித்துவைத்துக்கொள்ளவும். நெடுமாறன் அடுத்து அமைய இருக்கும் ஸ்தாபன காங்கிரஸ் ஆட்சியில் காவல்துறையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் உள்துறைக்கு அமைச்சராகப் போகிறவர்‘ என்று அறிவித்துச் சென்றார்.

காமராஜருடன் ராஜாஜியின் சுதந்திரா கட்சி, தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி, குடியரசுக் கட்சி, கோவை மாவட்ட விவசாயிகள் சங்கம் ஆகியவை கூட்டணியில் இருந்தன.

ரா. கிருஷ்ணசாமி நாயுடு, பொன்னப்பநாடார், பிஜி கருத்திருமன், பா.ராமசந்திரன், ராஜாராம் நாயுடு, பழ நெடுமாறன், கருப்பையா மூப்பனார், துளசி அய்யா வாண்டையார், குமரிஅனந்தன், திண்டிவனம் ராமமூர்த்தி, சிவாஜிகணேசன், எம்.பி.சுப்ரமணியன், செல்லப்பாண்டியன், என்.எஸ்.வி.சித்தன், பூவராகவன், வினாயகமூர்த்தி, மணிவர்மா, எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்,  ஜீ கே தாஸ், திண்டுக்கல் அழகிரிசாமி, பழனி லட்சுமிபதிராஜ், எஸ்கேடி ராமசந்திரன், பட்டுக்கோட்டை சாமிநாதன், சீர்காழி எத்திராஜ், கரு.தமிழழகன், வேலூர் தண்டாயுதபாணி, கலிவரதன், திருச்சி சாமிக்கண்ணு, பூவை ராமானுஜம், பீட்டர் அல்போன்ஸ், எம்கேடி. சுப்ரமணியன், திருப்பூர் வின்செண்ட், பழ.கருப்பையா, கரியமாணிக்கம் அம்பலம், முத்துக்கருப்பன் அம்பலம், திருமங்கலம் ஹக்கீம், திருச்சி வேலுச்சாமி, நாமக்கல் சித்திக், விவி சுவாமிநாதன், உள்ளிட்ட பலர் ஸ்தாபன காங்கிரஸில்தான் இருந்தார்கள். பல பெயர்கள் உடனே சொல்ல நினைவுக்கு வரவில்லை.நா.பார்த்தசாரதி, ஜெயகாந்தன், சின்ன அண்ணாமலை, கண்ணதாசன், சோ போன்றவர்களுடன் நடிகை பத்மினி, சௌகார் ஜானகி ஆகியோரும் தேர்தல் பிரசாரங்களில் கலந்துகொண்டனர். நாடாளுமன்றத்தை தன் பேச்சால் கலங்க வைத்த, மத்திய நிதித்துறை ராஜாங்க அமைச்சராக இருந்த தாரகேஸ்வரி  சின்ஹா அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வந்து ஸ்தாபன காங்கிரஸ் சார்பாகப் பேசுவார்.

ஈவிகே சம்பத், எம்பி சுப்ரமணியம், கண்ணதாசன், வாழப்பாடி ராமமூர்த்தி, போன்ற சிலர் காமராஜர் இருக்கும்போதே ஸ்தாபன காங்கிரஸில் இருந்து காங்கிரஸ் (ஆர்) கட்சிக்குப் போய்விட்டனர்.

ஸ்தாபன காங்கிரஸ் வென்று ஆட்சியமைக்கும் என்று பலரும் எண்ணினர். அப்போதைய அதிகாரிகள் பலரும் வாக்குச்சீட்டு எண்ணப்படும் அன்று காமராஜரை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்ததாக சொல்லப்பட்டது. ஆனால் கலைஞர் தலைமையிலான திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது.

ஆனாலும் ஸ்தாபன காங்கிரஸ் 21 இடங்களில் வெற்றி பெற்று 39 சதவீத வாக்குகளைப் பெற்று வலுவான அமைப்பாகத்தான் இருந்தது.  இருப்பினும் நாடு முழுக்க இந்திராவின் வறுமை ஒழிப்புத் திட்டம், மன்னர்மானிய ஒழிப்பு, வங்கிகள் தேசிய மயமாக்கல் போன்ற பல திட்டங்களால் காங்கிரஸ் (ஆர்) கட்சிக்கு ஆதரவு நிலவியது. 1971-இல் இந்தியா வங்கப் போரில் வென்றதும் ஆதரவைப் பெருக்கியது.

இந்நிலையில் திமுகவில் இருந்து 1972-இல் எம்ஜிஆர் பிரிந்து அதிமுக ஆரம்பித்தார். திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில்(1973) ஆச்சர் யகரமான வெற்றியை அதிமுக பெற்றது. இந்த தேர்தலில் இரண்டாமிடத்தைப் பிடித்தது ஸ்தாபன காங்கிரஸ் சார்பாகப் போட்டியிட்ட என்.எஸ்.வி சித்தன். மூன்றாம் இடம் திமுகவின் பொன்.முத்துராமலிங்கம்.  காங்கிரஸ் (ஐ) வேட்பாளர் சீமைச்சாமி பெற்றது சுமார் 11,000 வாக்குகளே.

ஆனால் திமுகவுக்கு எதிரான வாக்குகளை புதிதாக முளைத்த அதிமுகவே அறுவடை செய்வதை உணர்ந்த காங்கிரஸ் கட்சியினர், காங்கிரசின் இரு அணியினரும் ஒன்றாக வேண்டும் எனப் பேசத்தொடங்கினர். இந்திராவும் காமராஜர் மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தார்.

1973-இல் டெல்லியில் இருமுறை இந்திரா&- காமராஜர் சந்திப்பு நடைபெற்றது.

இரு அணிகளும் இணையவிருந்த சமயத்தில் காமராஜர் உடல்நலம் குன்றியது. இந்திரா, எமர்ஜென்சி அறிவித்தார். பெரும்பாலான எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். பெரும் வருத்தம் அடைந்த காமராஜர், ஸ்தாபன காங்கிரஸை இந்த காலகட்டத்தில் காங்கிரஸ் (ஐ) உடன் இணைக்க விரும்பவில்லை.

‘நாடுமுழுக்க தலைவர்கள் கைதாகி உள்ளனர். இது நாட்டுக்கு நல்லது அல்ல' என்று கூறினார் காமராஜர். எமர்ஜென்சி அவரை மனரீதியாகப் பெரிதும் பாதித்தது.

இருப்பினும் இந்திரா, இரு பிரிவுகளும் இணையவேண்டும் என மீண்டும் தொடர்புகொண்டபோது விருப்பம் தெரிவித்த காமராஜர், அரசியல் தலைவர்கள் விடுதலை, எமர்ஜென்சி விலக்கம் ஆகிய நிபந்தனைகளை முன்வைத்திருந்தார். 1975 அக்டோபர் 2, அன்று காமராஜர் மறைந்தார். இறுதிச்சடங்குகளை முதல்வராக இருந்த கலைஞர் கொட்டும் மழையில் முன்னின்று ஏற்பாடு செய்ய, பிரதமர் இந்திரா காந்தி நேரில் வந்து அஞ்சலி செய்தார்.

இதைத் தொடர்ந்து பிற தலைவர்களின் முயற்சியால் ஸ்தாபன காங்கிரஸின் தமிழகப் பிரிவு, ஆளும் காங்கிரஸுடன் 1976 பிப்ரவரி மாதம், மெரினா கடற்கரையில் நடந்த பெரும் விழாவில் இணைந்தது. கண்ணதாசன் அவர்களின் அருகே அந்த கூட்டத்தில் நானும் இருந்தேன். தமிழக காங்கிரஸின் தலைவராக பழ. நெடுமாறன் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் யாரும் எதிர்பாராமல் ஜிகே மூப்பனார் பெயரை இந்திரா அறிவித்தார்.

எமெர்ஜென்சியைக் கொண்டுவந்த இந்திராவுடன் இணைவதா என்று எதிர்ப்புத் தெரிவித்து, அப்போது காங்கிரஸ் (ஓ) தமிழ்நாட்டுத் தலைவராக இருந்த பா.ராமச்சந்திரன், குமரி அனந்தன், தண்டாயுதபாணி, கலிவரதன் போன்றவர்கள், காங்கிரஸ் (ஓ)வைத் தொடர்ந்து நடத்துவோம் என்றார்கள். ஆனால் பின்னாளில் இவர்கள் ஜனதா கட்சியில் ஐக்கியமாயினர்.

ஸ்தாபன காங்கிரஸ் தமிழக அளவில் தொடர்ந்து நடத்தப்படாமல் போனதற்கு பின் வரும் காரணங்களைக்கூறலாம். திமுகவில் இருந்து எம்ஜிஆர் பிரிந்தபின் அவரது வளர்ச்சி காங்கிரஸின்  வளர்ச்சிக்கு தடையாக இருந்தது, காமராஜர் மரணத்துக்குப் பின் அவரது ஆதரவாளர்கள் இந்திரா பின்னால்  சென்றது, அகில இந்திய அளவில் இந்திரா காந்தியின் செல்வாக்கு உயர்ந்தது ஆகியவற்றைச்  சொல்லலாம்.   எமர்ஜென்சிக்குப் பிறகு ஜனதா கட்சி என்ற பெயரில் இந்திராவை எதிர்த்த தலைவர்கள் ஓரணியில் கூட வேண்டிய தேவை ஏற்பட்டதாலும் ஸ்தாபன காங்கிரஸின் இருப்பு வெற்றிடத்தை எதிர்கொண்டு, கரைந்துவிட்டது.

செப்டம்பர், 2022

logo
Andhimazhai
www.andhimazhai.com