வேலைக்குப் போகிறவர்களிடம் இருக்கும் ஒரே பிரச்னை, ஆபீஸில் வேலை பின்னி எடுக்கிறது என்ற புலம்பல்தான். குறித்த நேரத்தில் வேலையை முடிக்க முடியாமல் மன அழுத்தத்துடன் வீட்டுக்கு வருகிறவர்கள், அதே அழுத்தத்துடன் இரவு தூங்காமல் வேலையைத் தொடர்ந்து பின்னர் மறுநாள் அலுவலகம் ஓடி அதே சுழலில் சிக்கியிருப்பார்கள். ஆபீஸ் என்றால் அழுத்தம் இருக்கத்தான் செய்யும். அது இருந்தால்தான் வேலை நடக்கும் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் அப்படியெல்லாம் இல்லை என்று சொல்கிறார் Happy Hour is 9 to 5: How to Love Your Job, Love Your Life and Kick Butt at work என்ற புத்தகத்தை எழுதிய அலெக்சாண்டர் ஜெரஃப். இவர் வேலை நேரத்தில் மகிழ்ச்சியாக இருப்பது பற்றி ஆலோசனை தரும் டென்மார்க் நாட்டு நிபுணர். வேலை அழுத்தம் தொடர்பான இப்போதைய கருத்துக்கள் அனைத்தும் தப்பானவை என்கிறார்.
அழுத்தம் இருப்பது நல்லதுதான். அது உங்கள் அலுவலகத்தில் நீங்கள் முக்கியம் என்பதைக் காட்டுகிறது. உங்களை சிறப்பாக வேலை செய்ய வைக்கிறது. இப்படிப் பலர் நினைத்துக் கொண்டிருக்கலாம். தவறு. நிஜமான விஷயம்: உங்கள் வேலையில் ஏதோ பிரச்னை அல்லது நேரத்தில் வேலையை முடிக்கும் திறமை உங்களுக்கு இல்லை என்றுதான் அர்த்தம். அழுத்தத்தில் இருக்கும் போது முழுத்திறனுடன் செயல்பட முடியாது. சிறப்பாக யாருடனும் தொடர்பு கொள்ள முடியாது. இதுதான் உண்மை. எனவே அழுத்தம் இருப்பது நார்மல் என்று எண்ண வேண்டாம்.
ஓவராக வேலை பார்த்தால் அழுத்தம் ஏற்படும் என்று சொல்வார்கள். இதுவும் சும்மாதான். வேலையை எவ்வளவு நேரம் செய்தாலும் அதை ரசித்து செய்தால் அழுத்தம் ஏற்பட சான்ஸே இல்லை. அதாவது எத்தனை மணி நேரம் வேலை செய்கிறீர்கள் என்பதை விட வேலை நேரத்தில் எப்படி உணர்ந்தீர்கள் என்பதே முக்கியம் என்கிறார் இவர்.
கொஞ்சமாக வேலை செய்தால் அழுத்தத்தில் இருந்து விடுபடலாமா? இப்படி நிறைய பேர் நினைத்துக்கொள்கிறோம். வாய்ப்பே இல்லை என்கிறார் இவர். வேலையைக் குறைத்தால் அழுத்தம் தொடர்பான உடல் பிரச்சினைகள் நிற்கும். ஆனால் திரும்ப வேலை செய்ய ஆரம்பித்தால் அதே அழுத்தம் முதுகில் ஏறிக்கொள்ளும். தொழிலாளியின் தன்னம்பிக்கையும் திறனும் மேம்படுவதே அழுத்தத்தைக் குறைக்கும் வழி. வேலையில் இருந்து தப்பி ஓடுவதல்ல.
இப்போதைக்கு நான் வேலையில் பின் தங்கி இருப்பதால் அழுத்தத்தில் இருக்கிறேன். அதிகம் வேலை செய்தால் முன்னேறிச்செல்லலாம் அழுத்தம் குறையும் என்றும் சிலர் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். பிரச்சனை பின்தங்கி இருப்பதல்ல. பின் தங்கி இருப்பது பற்றி நாம் என்ன நினைத்துக்கொள்கிறோம் என்பதே. சரி என்று வேகமாக வேலை செய்து முடித்தால் மேலும் வேலையைக் கம்பெனி கொடுக்கும். ஆகவே நாம் எப்படி அவ்வேலையைச் செய்கிறோம்; என்பதே முக்கியம். முடிக்கவேண்டிய வேலையைப் பற்றி கவலைப்படுவதை விடுத்து முடித்த வேலை குறித்து பெருமை கொள்ளுங்கள்.அழுத்தம் பற்றிக் கவனம் செலுத்தாதீர்கள். மாறாக உங்களுக்கு எது அமைதியையும் சக்தியையும் தருமோ அதைப் பற்றி கவனம் வையுங்கள்.
அப்போ அழுத்தத்தில் இருந்து எப்படித் தப்பிக்கிறது?
உங்களுக்கு ஏற்படும் படபடப்பு, சோர்வு ஆகியவற்றில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சியாக உணர என்ன செய்யவேண்டுமோ அந்த மாறுதல்களைச் செய்துகொள்ளவேண்டும் என்கிறார் ஜெரஃப். ஆகவே வேலையில் மகிழ்ந்திருப்பீர்!
நவம்பர், 2012.