வேலையை விட்டு தூக்கு!

பாபி திமோதி
பாபி திமோதி
Published on

பாபி திமோதி சென்னையில் ஒரு முக்கியமான நிறுவனத்தில் மனிதவளத்துறை மேலாளராக இருக்கிறார். இதுவரை 12 நிறுவனங்களில் வேலை பார்த்த அனுபவம் கொண்டவர். அவரிடம் பதவி உயர்வுகளை அளிப்பது பற்றிய மனிதவளத்துறை அனுபவங்களை கேட்டோம். இவரது சொந்த வாழ்க்கையில் பல ரகசியங்கள் ஒளிந்திருப்பதைக் கண்டு ஆச்சரியமானோம்.

''பத்தாம்வகுப்பு படித்துமுடித்தவுடன் வீட்டை விட்டு பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறியவன் நான். 1981 - ல் தினமும் ஐந்துரூபாய் சம்பளத்தில் ஓரிடத்தில் வேலை பார்த்தேன். பிறகு ஒரு பேனர் ஓவியரிடம் தினம் 30 ரூபாய் சம்பளம். அந்த காலத்தில் அது பெரிதாக இருந்தது. ஒருநாள் சாலையில் பேனர் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது அவ்வழியே சென்ற என் ஆங்கில ஆசிரியர் கண்ணில் பட்டுவிட்டேன். அவர் என்னைப் பார்த்துவிடக்கூடாது என்பதற்காக மறுபுறம் திரும்பிக்கொண்டேன். ஆனால் அவர் என்னைக் கடந்துபோனாலும் மீண்டும் திரும்பிவந்தார். 'பாபி என்னடா இது?' என்றார்.

வகுப்பில் என் விடைத்தாள்களை மட்டும் திருத்தாமல் கொடுப்பார் அவர். கேட்டால் ஆங்கிலத்துக்கெல்லாம் 100 மார்க் போடமுடியாதுப்பா என்று சிரிப்பார். அவ்வளவு நன்றாக ஆங்கிலத் தேர்வுகளை நான் எழுதி இருப்பேன். என்னை சாலையில் பார்த்தது அவருக்கு அதிர்ச்சி அளித்திருந்தது. படிப்பை மட்டும் விட்டுவிடாதே என்றார். அவர் உதவியுடன் தனியாக ப்ளஸ்டூ எழுதி பாஸானேன். அதே போல் பிகாம் சேர்த்துவிட்டார். அதையும் தடுமாறி முடித்தேன். இடையிடையே சின்ன சின்ன
வேலைகள். எல்லாம் நிழலான வேலைகள்தான். ஒரு அரசியல்வாதியிடமும் வேலைபார்த்தேன். ஆனால் படிப்பை மட்டும் விடவில்லை. எம்.ஏ. சமூக அறிவியல், எம்.ஏ. தொழிலாளர் கல்வி ஆகியவற்றையும் இடையில் படித்துமுடித்துவிட்டேன். வேலைக்கு அவ்வப்போது விண்ணப்பித்துக்கொண்டிருந்தேன். வாணியம்பாடியில் உள்ள தோல் தொழிற்
சாலை ஒன்றில் இருந்து அழைப்பு வந்தது. நமக்கும் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் போனேன். அங்கே வடநாட்டுக்காரர் ஒருவர்தான் மேலாளர். என்னை அமரச்சொல்லி அங்குமிங்கும் அரைமணி நேரம் போய்க்கொண்டிருந்துவிட்டு கடைசியாக உன்னைப்பற்றி சொல்லு என்றார்.

'என்னைப் பத்தி என்ன சொல்லுவது? உண்மையைச் சொன்னால் வேலை கொடுக்கமாட்டார்கள்..' எனவே நான் அமைதியாக இருந்தேன்.

'சொல்லுப்பா' என்றார்.

'சொன்னால் வேலை தரமாட்டீர்கள்'

'பரவாயில்லை சொல்லு, தெரிந்தால்தான் வேலை தரமுடியும்' என்றார்.

என் நிழலான பின்னணியைச் சொன்னேன். கேட்டவர், 'உனக்கு தகுதியான ஒரு வேலை இருக்கிறது. அதுதான் பர்சனல் டிபார்ட்மெண்ட். உன்னைப்போல் ஒரு ஆளைத்தான் தேடிக்கொண்டிருந்தேன்' என்றதும் என்னால் நம்பவே முடியவில்லை!

'போ, வேலைக்கு ஆர்டர் அனுப்புகிறேன்' என்றார். மூன்று மாதம் ஆகியும் வரவில்லை. திரும்பப்போனேன். வாசலில் காவலரிடம் கேட்டேன். அதிர்ச்சி காத்திருந்தது! என்னை நேர்காணல் செய்தவர், வேலையைத் துறந்துவிட்டாராம்!

வாழ்க்கையே வெறுத்துவிட்டது! காவலரிடம் அவரது முகவரியை வாங்கித் தருமாறு கேட்டேன். முடியாது என்று துரத்திவிட்டார். நான் அங்கேயே ஒரு மரத்தடியில் நின்றுவிட்டேன். மாலை சைக்கிளில் ஏறி காவலர் வீட்டுக்குப் போய்விட்டார். இரவு முழுக்க அங்கே சாலையோரம் படுத்துவிட்டேன். காலையில் வந்தவர் என்னைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே உள்ளே போய் அவரது முகவரியை வாங்கி வந்து கொடுத்தார். சென்னை அண்ணாநகர் முகவரி அது. தேடி வந்தேன். அவர் வீட்டில் இல்லை. மாலை வருவார் என்றார்கள். வீட்டருகே இரவு வரை காத்திருந்தேன். ஒரு கார் வளைந்து என்னைத் தாண்டி சென்றது; நின்றது. கண்ணாடியை இறக்கிய அவர், 'பாபி' என்றார். மூன்று மாதம் கழித்து என்னை ஞாபகம் வைத்திருந்தார். வேலை எப்படிப்போகிறது? என்றார்! ஆர்டரே வரவில்லையே என்றேன். யோசித்தவர், சரி விடு, இப்போது நான் இருக்கும் நிறுவனத்துக்கு வா, அங்கு இன்னாரைப் பார் என்றார்.

அது ஒரு ஷூ தயாரிக்கும் நிறுவனம். அங்கிருந்த மேலாளர் விவரத்தை கேட்டுவிட்டு அடுத்த நாள் வரச் சொன்னார். இப்படியே அவரை நான் பல முறை சென்று பார்த்துக் கொண்டிருந்தேன். அம்பத்தூரில் இருந்து கிண்டிக்கு நடந்தே
செல்வேன். ஒருமுறை அல்ல இருமுறை அல்ல. 24 முறை! கடைசியாகப் போனபோது, வேலைக்கு ஆர்டர் கொடுத்துவிட்டார்கள்! என் வேலை பயணம் தொடங்கியது!

ஒரு சில மாதங்கள் கழிந்தபிறகு அவர் வந்திருந்தார். மீண்டும் அவரிடம் போய் நின்றேன். பாபி, இங்கேயே இன்னும் இருக்கிறாய் என்றார். இன்னேரம் பல நிறுவனங்கள் மாறி இருக்கவேண்டும். அப்போதுதான் சம்பளம் ஏறும் என்றார். அதுமுக்கியமான ஆலோசனை! அதைப் பின்பற்றினேன். இப்போது பன்னிரண்டாவது நிறுவனத்தில் வேலை செய்கிறேன். இது அருமையான நிறுவனம். இங்கேயே பத்தாண்டு பணிபுரிந்துவிட்டேன். இங்கேயே ஓய்வு பெற்றுவிடுவேன்.

பதவி உயர்வு என்று கேட்டால்  என்னைப் போல் மனித வளத்துறை நபர்கள் ஒரு சில விஷயங்களை முக்கியமாக கவனிப்போம். வேலையில் ஒருவர் திருப்தியுடன் இருக்கிறாரா? காலையில் வேலைக்கு வந்தவர் மாலை வரை அதே உற்சாகத்துடன் பணி புரிகிறவரா? அடுத்த கட்டத்துக்குப் பதவி உயர்வு பெறும்போது அதற்குத் தேவையான திறன்களை வளர்த்துக் கொண்டுள்ளாரா? அவற்றை செயல்பாட்டின்மூலம் நிரூபித்துள்ளாரா? வேலையைப் பகிர்ந்துகொடுக்கத் தெரிகிறதா? இது மிக முக்கியம். எல்லா வேலையையும் நாமே செய்ய முடியாது. நான் பணி புரிந்த நிறுவனமொன்றில் தலைமை அதிகாரியுடன் மேலாளர்கள் நான் எல்லோரும் குழுவாக நிறுவனத்தைப் பார்வை இட்டுக்கொண்டிருந்தோம். ஓரிடத்தில் தண்ணீர் கொட்டி இருந்தது. அதற்குப் பொறுப்பான சீனியர் மேலாளர் ஓடிப்போய் தானே அதைத் துடைத்தார். தலைமை அதிகாரி என்னை நோக்கித் திரும்பி சொன்னார்: ஸேக் ஹிம்! காரணம் என்னவென்றுசொல்லாமலே புரிந்திருக்கும்!

ஒரே தகுதியுடன் பலர் இருக்கும்போது மேலே
சொன்ன விஷயங்களின் அடிப்படையில்தான் ஒருவரை பதவி உயர்வுக்காக தெரிவு செய்வார்கள்.

இப்போது நான் பணிபுரியும் நிறுவனத்தில் வட இந்தியாவில் பொதுமேலாளராகப் பணிபுரிகிறவருக்கு வயது 67! இன்னும் அவரை விடாமல் இழுத்துப்பிடித்து வைத்திருக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் அவரது செயல்பாட்டுத்திறன்!

நான் பணிபுரிந்த தோல் நிறுவனம் ஒன்றில் சாதாரண உதவியாளராக உள்ளே நுழைந்த ஒரு இளைஞர் ஐந்தே ஆண்டுகளில் உற்பத்திப் பிரிவு மேலாளர் ஆக பதவி உயர்வு பெற்றார்! இப்போது அவர் வேறொரு நிறுவனத்தில் நல்ல பதவியில் இருக்கிறார். எங்கள் மேலதிகாரி, ஒரு கூட்டத்தில் அவரைக் காட்டிச் சொன்னார்! ''நான் நன்றாக வருவார் என்று எதிர்பார்த்தேன். அதே மாதிரி ஐந்தே ஆண்டில் சின்ன உதவியாளர்  பதவியிலிருந்து வளர்ந்து ப்ரொடக்‌ஷன் மேனேஜர் ஆனவர் இவர்!'' அவர் சொல்லித்தான் எங்களில் பலருக்கு இந்த விஷயம் தெரியும்!

பதவி உயர்வு பற்றிப் பேசும்போது பதவி போவது பற்றியும் பேசவேண்டும் இல்லையா? சென்னையில் ஒரு முக்கியமான நிறுவனத்தில் எனக்குக் கொடுக்கப்பட்ட வேலை இங்கு பணிபுரியும் 124 பேரையும் வேலையை விட்டுத் தூக்கவேண்டும். ஐந்து ஆண்டுகளில் இது முடியவேண்டும்.

தொழில்சங்கத்துக்கும் நிறுவன உரிமை யாளருக்குமான ஈகோ மோதல். தங்கள் வியர்வையில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு மகனை வெளிநாட்டில் அதிபர் படிக்கவைக்கிறார் என்று தொழிலாளர்கள் பிட் நோட்டீஸ் அடித்தார்கள். அதிபருக்குக் கோபம்! நிறுவனத்தையே மூடவேண்டும் என்று முடிவு செய்துவிட்டார். சட்டம் அளித்திருக்கும் வழிகள் படி அனைவரையும் வேலையை விட்டு அனுப்பினோம். மூன்றரை ஆண்டுகளில் இதை முடித்துவிட்டோம். ஆனாலும் நான் மனச்சாட்சி கேட்காமல் வேலையை விட்டுவிட்டேன். அதற்குத் தூண்டுதலாக அமைந்தது அந்த தொழிலாளர் சங்க தலைவரை வேலையை விட்டு அனுப்பிய விதமே! ஆறுமாதத்துக்கும் மேலாக சம்பளம் இல்லாமல் குடும்பத்துடன் சிரமப்பட்டார் அந்த தலைவர்! தாக்குப் பிடிக்க முடியாமல் வேலையை விட்டு ராஜினாமா செய்ய முடிவு செய்தார்! தொழிலாளர் போராட்டத்தில் இது முக்கியமானது. யாருக்கும் தெரியாமல் நள்ளிரவில் அவர் ராஜினாமா கடிதம் கொடுக்க, அவரது கணக்கு முடிக்கப்பட்டது! அவருக்கு சற்று கூடுதலாக நிதி கொடுப்பதாகச் சொல்லப்பட்டிருந்தது! முதலாளியிடம் போய்க் கேட்டேன்! முடியவே முடியாது என மறுத்துவிட்டார்! எனக்கு சங்கடமாகி வேலையை விட்டுவிட்டேன்!

இன்றைக்கு பொறியியல் படித்துவிட்டு வேலைக்கு அலையும்  இளைஞர்களிடம் நான் பேசுவதுண்டு. திறமையானவர்களைக் கண்டுபிடிப்பது சிரமமாக இருக்கிறது. கல்லூரிகளில் மாணவர்களிடையே பேசும்போது நான் சொந்தவாழ்வில் இருந்து ஒரு நிகழ்வைச் சுட்டிக்காட்டுவேன். எம்.ஏ.
சோஷியாலஜி படித்தபின் நான் ஒரு லாரியில் கிளீனராக வேலைக்குச் சேர்ந்தேன். எட்டாவதுதான் படித்துள்ளேன் என்று பொய்
சொல்லி! ஒரு நாள் சலூன் கடையில் நான் ஆங்கிலப் பேப்பரைப் படிப்பதை லாரி ஓனர் பார்த்துவிட்டார்! உண்மையைக் கேட்டபோது நான்சொல்லிவிட்டேன்! ஏன் கிளீனராக இருக்கிறாய், ஓட்டுநராக மாறு என்று சொல்லி எனக்கு பதவி உயர்வு.
சென்னைக்கும் திருச்சிக்கும் பால் லாரி ஓட்டி இருக்கிறேன்! வேலையே கிடைக்கவில்லை என்று புலம்புவதற்குப் பதில் தொழில்நிறுவனங்களில் பத்தாவதுதான் படித்துள்ளேன் என்று பொய்
சொல்லி சி.எல். ஆக வேலைக்குப் போ!  உனக்கு கல்லூரிகளில் சொல்லித்தராததை அங்கே தெரிந்துகொள்! அங்கிருந்துகொண்டு வேலைக்கு விண்ணப்பங்கள் போடு! உனக்கு கொஞ்சம் திறமையும் ஆர்வமும் இருக்கிறது என்று தெரிந்தாலே மீட்கும் கரங்கள் நீளும்!'' ஆர்வமுடன்
சொல்லிக்கொண்டே போகிறார் பாபி.

ஜூலை, 2019.

logo
Andhimazhai
www.andhimazhai.com