வேலை பார்த்துக்கொண்டே படியுங்கள்

வேலை பார்த்துக்கொண்டே படியுங்கள்
Published on

ப்ளஸ் 2வுக்கு அப்புறம் என்ன படிக்கிறது?

தமிழ்நாட்டில் ஏறக்குறைய 99 சதவீத மாணவர்களுக்கு பொறியியல், மருத்துவம் படிக்கத்தான் ஆசை. இவர்கள் ஆசைப்படுகிறார்களோ என்னவோ பெற்றோர்களுக்கு அதுதான் ஆசை. ஆனால் மாணவர்களுக்கு நிஜமாகவே அதைப் படிக்க ஆர்வம் இருக்கிறதா? அவர்களுக்கு பெற்றோர் விரும்பும் படிப்பை படித்து முடிக்கும் திறன் இருக்கிறதா? அவங்க ஆளுமைத் திறனுக்கு ஏற்ற படிப்பாக அது இருக்கிறதா இல்லையா? அதாவது சின்னவயதில் உங்க ஊரில் ஒரு கிரிக்கெட் டீம் இருந்தால் அதற்கு நீங்கள் கேப்டனாக இருந்திருக்கலாம். இல்லை அப்படி இல்லாமல் இருந்திருக்கலாம். உங்கள் தலைமைப்பண்பு அல்லது அது இல்லாமல் ஓரத்தில் ஒதுங்கி இருக்கும் அடக்கமான பண்பு. இதற்கு ஏற்ப உங்கள் படிப்பு இருந்தால் நன்றாக இருக்கும் இல்லையா? வணிகவியல் படிப்பதா? அறிவியல் படிப்பதா? ஹ்யூமானிட்டீஸ் படிப்பதா என்றெல்லாம் ப்ளஸ் டூ முடித்தவுடன் மாணவர்களுக்குத் தோன்றும். இதெல்லாம் கண்டுபிடிக்க முடிந்தால் நன்றாக இருக்கும். அதற்கு ஆன்லைனில் சில டெஸ்ட்கள் நடத்தி முடிவைச்

சொல்லக் கூடிய இணையதளங்கள் உள்ளன. mapmytalent.in என்ற தளத்துக்குப் போனால் உங்களுக்கு எது பொருத்தமாக இருக்கும் என்று ஆராய்ந்து சொல் கிறார்கள்.

என்ன படிக்கலாம் என்று உங்களுக்கு நல்ல ஐடியா தருவதற்கு afterplus2.com, askjpgandhi.com போன்ற தளங்கள் உதவியாக இருக்கின்றன.

பணம் இல்லையே என்பதற்காக படிப்பைக் கைவிட வேண்டியதில்லை.  வேலை பார்த்துக்கொண்டே படிக்க எவ்வளவோ வழிமுறைகள் இருக்கின்றன. அமெரிக்காவில் கார் கழுவி அதில் வரும் வருமானத்தில் பாதியை தேவாலயத்துக்குக் கொடுத்துவிட்டு மீதியில் படிப்பவர்கள் இருக்கிறார்கள். தினமும் இரண்டுமணி நேரம் முதல் நான்கு மணிநேரம் வரை உழைக்கத் தயாராக இருந்தால் ஆன்லைனில் அதற்கான தளங்களும் உள்ளன. feverr.com போய்ப்பாருங்கள். 5 டாலருக்கு எவ்வளவோ வேலைகளைச் செய்து தரத்தயார் என்று இளைஞர்கள் வரிசை கட்டி நிற்கிறார்கள். அவற்றில் ஒருவராக உங்களுக்குத்தெரிந்த வேலையுடன் நீங்கள் பதிவு செய்யலாம்(அஞ்சு டாலர் கொடுங்கள். உங்கள் தத்துவ யோசனைகளை பொறுமையாகக் கேட்கிறேன் என்றுகூட ஒருத்தர் பதிஞ்சு வெச்சுருக்காப்ல!). freelancer.com,babajob.com, twenty19.com போன்ற இணைய தளங்களையும் பரிந்துரை  செய்கிறேன். டெலிகாலிங், ஆன்லைன் மார்க்கெட்டிங் என்று எவ்வளவோ. கணினியில் செய்கிற வேலைகள் மட்டுமல்ல. உங்கள் பகுதியில் உள்ள மெக்கானிக் ஷாப்பில் கூட சேர்ந்து கொள்ளலாம். தொழிலுக்குத் தொழிலும் ஆச்சு. காசுக்கு காசும் ஆச்சு. படிப்பு முடித்து வேலைக்குப் போனால் உங்களுக்கு இருக்கும் தொழில் அனுபவத்தால் உங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும். என்னைக் கேட்டால் வேலை செய்துகொண்டே படிப்பதுதான் மிகவும் சிறப்பானது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள்!(என்ன ஒரு அருமையான பழமொழி! இதை விட்டுவிட்டு எதையும் யோசிக்க முடியவில்லையே!)

உலகின் எந்த மூலைக்கும் போய் படிக்கத் தயாராக இருங்கள். தனியாக வீட்டைவிட்டு வெளியேறும்போதுதான் உங்கள் ஆளுமைத் திறன் வெளிப்படும். அது மெருகேறிப் பளபளக்கவும் செய்யும்.

கல்லூரிக்குப் போனபின்னால் ஆசிரியர்கள் சொல்வதுடன் மட்டும் நிற்கவேண்டாம். உங்களுக்கு ஒரு ஆசிரியர் போதாது. 100 ஆசிரியர்கள் வேண்டும். நூலகத்தில் படியுங்கள். ஆன்லைனில் உங்கள்பாடம் தொடர்பாக இருக்கும் வீடியோ பதிவுகளைப் பாருங்கள்.

MOOC (massive open online courseware) என்ற ஒரு திட்டம் உள்ளது. உலகளாவிய அளவில்  பல கல்விநிறுவனங்கள் தங்கள் வகுப்பறைகளில் பாடப்பிரிவுகளுக்கு ஆசிரியர்கள் எடுக்கும் லெக்சர்களை எல்லாம் வீடியோ பதிவு செய்து ஆன்லைனில் இலவசமாகத் தருகின்றன. என் கல்லூரியில் பாடம் நன்றாக இல்லை என்று நீங்கள் இனி புலம்பவேண்டியதில்லை. www.nptel.ac.in இணைய தளத்துக்குப் போங்கள். அங்கே ஐ.ஐ.டி போன்ற புகழ்பெற்ற  உயர்தரமான கல்விநிறுவனங்களின் பேராசிரியர்களின் வகுப்புகள் வீடியோ பதிவுகளாக உள்ளன. எந்த பாடத்தில் எந்த லெக்சரைக் கேட்கவேண்டுமோ தேடி நீங்கள் நேரடியாகப் பார்த்து தெளிவுபெறலாம். ஹார்வார்டு (http://www.extension.harvard.edu/open&learning&initiative) போன்ற வெளிநாட்டு  கல்விநிறுவனங்களிலும் ஓபன்கோர்ஸ் லெக்சர்கள் உள்ளன. ஆன்லைனில் இலவசமாக அந்த லெக்சர்களைப் பார்த்து கேட்டு இலவசமாக படித்துக்கொள்ளலாம். அதற்கான சான்றிதழ்களும் உண்டு. பைசா செலவில்லாமல் பட்டம் பெற, பாடம் படிக்க ஆன்லைன் ஒரு வரம்.

சார் நான் புதிதாக எதாவது படிக்க விரும்புகிறேன் அப்பதான் அதற்கு வேலை வாய்ப்பு இருக்கும் என்று மாணவர்கள் சொல்லக் கேட்டுள்ளேன். எல்லாவற்றுக்கும் வாய்ப்புகள் உண்டு. நீங்கள் எப்படி அதைப் படிக்கிறீர்கள்? என்னவிதமாக அதை அணுகுகிறீர்கள் என்பதைப் பொருத்தது அது. அகல உழுவதை விட ஆழ உழவேண்டும்! அதாவது எல்லாவற்றிலும் கவனம் செலுத்துவதைவிட ஆழமாக ஒரு பிரிவில் நன்றாகப் படித்துவைத்துக்கொள்வது நல்லது. அதை கவனத்துடன் தேர்வு செய்துகொள்ளவேண்டும்.

வெளிநாட்டு மொழி படிப்பதில் கவனம் செலுத்துங்கள். ஜப்பானிய, ஜெர்மன் மொழிகள் பயில்வது புதிய வேலைவாய்ப்பு ஜன்னல்களைத் திறக்கும். பிடெக் ஏவியானிக்ஸ், பி.டெக் பிசிகல் சையன்ஸ், பி.ஏ. பாரின் லேங்வேஜ் போன்றவை புதிய அரிய படிப்புகள் படிக்கவிரும்புபவர்கள் கவனிக்கவேண்டியவை.

நிதி, பொருளாதாரம்- இது இரண்டு தொடர்பான விஷயங்களில் எப்போதும் கவனம் செலுத்துங்கள். நம்மவர்கள் கோட்டைவிடும் இடமே இதுதான். பொறியியலோ, மருத்துவமோ எது வேண்டுமானாலும் படித்துக் கொள்ளுங்கள். ஆனால் மேற்சொன்ன இரண்டு விஷயங்கள் தொடர்பாக உங்கள் அறிவை மேம்படுத்திக் கொண்டே இருக்கவேண்டும் என்பதை மறக்காதீர்கள்.

நம்மிடம் நிறைய தவறான மதிப்பீடுகள் உள்ளன. ப்ளஸ் 2 பள்ளிக்கூடம் போய் படிக்காவிட்டால் அதற்கு மதிப்பில்லை; ஆன்லைனில் ஏதாவது பட்டம் படித்தால் அதற்கு மதிப்பில்லை. குறிப்பிட்ட காலேஜ்ல படிச்சாத் தான் கேம்பஸ் இண்டர்வியூவில் தேர்வாகமுடியும் என்றெல்லாம். அதெல்லாம் ஒண்ணுமே இல்லை.

 நீங்கள் திறமையானவராக இருந்து நம்பிக்கையும் இருந்துவிட்டால் எங்கு வேண்டுமானாலும் மின்னலாம். ஆனால் இதற்கெல்லாம் பெற்றோர்களும் மனசு வைக்கவேண்டும். எங்கள் நிறுவனத்தில் பள்ளிப்படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு வேலைக்குச் சேர்ந்து அப்படியே படித்த, அனுபவம் பெற்ற சில இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பற்றிய சில தகவல்களை அடுத்த பக்கங்களில் அந்திமழை செய்தியாளரே தருகிறார். வாசித்துப் பாருங்கள்.

ஒரே ஒரு விஷயம் கடைசியாக. நீங்கள் எதுவேண்டுமானாலும் படியுங்கள். ஆனால் கொஞ்சம் ஆராய்ச்சி நோக்கம் இருக்கட்டும். அன்றாடப் பிரச்னைகளைத் தீர்க்க சின்னதாய் ஒரு ஐடியா உருவாக்குங்கள். அதுவே போதும்!

ஏப்ரல், 2014.

logo
Andhimazhai
www.andhimazhai.com