வேற லெவல்

வேற லெவல்
Published on

வேறு யாரையும்விட எனக்கு நெருக்கமான ஒருவன். பெரும்பாலான நேரம் தடுமாற்றத்தைக் கட்டுப்படுத்தியபடியே இருப்பான். சாதா லெவலில் இருந்து அலுத்துப் போன வேற லெவல் போதை. உள்ளே போன ஆல்-கஹாலின் அளவுக்கு பேச்சு வெளியே வந்துகொண்டே இருக்கும். வற்றாச் சொற்குவை. வெற்று உளறல்களை விஞ்சும் அளவில் சுவாரசியங்களும் இருக்கும் என்பதால், நான் அவ்வப்போது பக்கத்தில் நின்று நான்கைந்து சிகரெட்டுகள் புகைப்பதுண்டு. அப்படி யாரும் நிற்கவில்லையென்றாலும் ஆள் கவலைப்பட மாட்டான். தானேபேசிக்கொண்டிருப்பான்.

‘அது சரிண்ணே... வேறு யாரையும்விட எனக்கு நெருக்கம்‘னா...? அதுல ஏதோ குறிப்பு இருக்குற மாதிரி இருக்கே...'

‘இருந்துட்டுப்போகுது. நீ யாரை வேண்ணா நினைச்சுக்க. ஆளு முக்கியமில்லடா. விஷயம்தான் முக்கியம். குறுக்க பேசாத.' எதில் விட்டேன்? ஹாங்... நெருக்கமான ஒருவன். தொலைபேசி அழைப்பு வந்தால் ஒலிபெருக்கி போட்டுவிட்டு அலைபேசியை எதிரில் வைத்துக்கொண்டுதான் பேசுவான். முகம் பார்த்துப் பேசும் பாவனை அதில் தெரியும். ‘என்னிடம் ஒளிவு மறைவு ஏதும் இல்லை' என்கிற அறைகூவலும் இருக்கும். விளக்கம் கேட்டால் வேறு ஒன்றைச் சொல்லுவான்.

‘லேண்ட் லைன் போன் காலத்துலயே எக்ஸ்பைர் ஆன பயபுள்ளைக சில பேர் இருக்காங்க.

செல்போன காதுல வச்சுக்கிட்டுப் பேசும்போது, வலது உள்ளங்கைய வளைவா வச்சு, வார்த்தை எல்லாம் சிந்திராம போனோட மைக்குக்குள்ள அனுப்புவானுங்க. ஒரு புள்ள அப்பிடிப் பேசுறதைப் பாத்து கடுப்பாயிட்டேன். ‘ஏம்மா, சாமி படத்துக்கு ஊதுவத்தி காட்டயில, பொக வேற எங்கயும் போயிறக்கூடாதுன்னு, படச்சாமி மூக்குக்குள்ள கையால பொகையத் தள்ளிவிடுவாங்களே... அது மாதிரி பேசிக்கிட்டிருக்க. நீ சும்மாப் பேசுனாலும் அந்த மைக் எடுக்கும்மா‘ன்னு சொன்னேன். அதுக்கு வெக்கமாப் போச்சு. கை வளைவை எடுத்துருச்சு. புள்ள ஒடனே திருந்திருச்சேன்னு ஆச்சரியப்பட்டேன். திருந்துறதா... எதிர் சைடுல பேசும்போது காதுல போன வக்கிது. இது பேசும்போது, போனுக்குக் கீழ இருக்குற ஓட்டைய வாய்க்கி நேரா வச்சுப் பேசுது. அழகான புள்ளைக பேசுனா முத்து உதிரும்னு புலவனுக செய்யுள் பாடியிருக்கானுக. இது மாதிரிப் புள்ளைக பேசுனா வார்த்தைகளே கீழ உதிரும்னு புதுசா எழுதணும் போலருக்கு. திருந்தாத கேசுன்னு கடைப் பக்கம் போயிட்டேன்.'

அப்போது செல்பேசி அடித்தது. அழைத்தவரின் அடையாளத்தைப் பார்த்துவிட்டு, ஒலிபெருக்கியை உயிர்ப்பித்து அலைபேசியை எதிரே வைத்துக்கொண்டான்.

‘என்ன ப்ரதர், நேத்து நல்லபடி வீட்டுக்குப் போய்ச் சேந்தீங்களா...?'

எதிர்முனையில், ‘ஹலோ...'

‘சொல்லுங்க... எங்க இருக்கீங்க?'

‘ஹலோ...'

‘அட, எழவெடுத்தவனே, போன்ல ஹலோன்னுதான் பேச்சை ஆரம்பிக்கணும்னு சட்டமாடா போட்டுருக்காங்க? ஹலோ ஹலோ ஹல்லோ... சொல்லித் தொலை...'

‘ஏங்க, நல்லபடி போய்ச் சேந்தீங்களான்னு நான் கேக்கவேண்டிய கேள்விய நீங்க கேக்குறீங்க?'

‘வந்து சேந்ததாலத்தானே இப்ப போன் எடுத்துப் பேசுறேன்... பார்ல இருந்து வீட்டுக்கு வந்து

சேர்றது எனக்கென்ன புதுசா? நீங்கதான் நேத்து வாந்தி எடுத்தீங்க. தலை சுத்துதுன்னு சாக்கடைப் பக்கமா சாஞ்சு உக்காந்தீங்க...'

‘என்னது பார்ல இருந்து போனீங்களா? போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து உருண்டு உருண்டு போனதைப் பத்தி விசாரிக்க இல்ல கூப்ட்டேன்...?'

‘போலீஸ் ஸ்டேஷனா? என்ன சொல்றீங்க?'

‘சரியாப்போச்சு. பாருக்கு வெளிய நின்ன போலீஸ்காரன நீங்க வம்பிழுத்ததுல ஈ த்ரீ ஸ்டேஷனுக்கு இழுத்துட்டுப் போனானே... ஞாபகம் இல்லையா?'

‘நேத்துமா? என்ன நடந்துச்சு?'

‘நடந்துச்சா? நடத்துனதே நீங்கதானே...?'

‘அட, என்னாச்சுன்னு வெவரமாச்

சொல்லுங்கன்னா...'

‘ஆனா ஒண்ணுண்ணே... நீங்க என்ன பண்ணுனீங்கன்னு உங்க கிட்டயே

சொல்ல வேண்டியிருக்கே அத

நினைச்சாத்தான் வேதனையா இருக்கு...'

‘அப்ப சொல்லாதீங்க.'

‘அட இருங்கண்ணே... பாருக்கு வெளிய டூ வீலர்காரனுகளைப் பிடிக்க போலீஸ் நின்னுச்சு. அவங்ககிட்டப் போய் வம்பிழுத்தீங்க. தோள்ல கையப் போட்டு இழுத்துக்கிட்டுப் போயிட்டான். ஆனா, ஸ்டேஷன்ல வச்சு இன்ஸ்பெக்டர் மூஞ்சியில சிகரெட் பொகைய விட்டீங்க பாருங்க... செத்தோம்னு நினைச்சேன்...'

‘அடப் பாவீ... அப்பிடியும் நமக்குச் சேதாரம் இல்லாம விட்டுட்டாங்களா?'

‘அதிர்ச்சி ஆகாதீங்கண்ணே. கெதக்குங்குது. அப்பறம் யாரோ போலீஸம்மா போன் போட்டு விடச்

சொல்லவேதான் விட்டாங்க.'

‘ஆமாமா... அந்தம்மாவுக்கு தகராறு பண்ற கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் காப்பாத்துறது பார்ட் டைம் வேலையாப் போச்சு.'

‘அது சரி, தெய்வம் மாதிரி வந்து காப்பாத்துனா ஏம் பேச மாட்டீங்க? ஆனாலும் போலீஸ் மூஞ்சிலயே பொகைய விட்டீங்க பாரு...'

‘அட இதென்ன தம்பி, நாம ஒண்ணும் தப்புப் பண்ணல இல்ல. தப்புப் பண்ணுனப்பயே தப்பிச்சு வந்தமில்ல...'

‘அதென்ன கதண்ணே?'

‘எங்கெயோ போய் கலவரம் அடக்கிட்டு வந்த போலீஸ் வேன மறிச்சுப் படுத்திருப்பேன் போல. எவ்வளவோ வெரட்டிப் பாத்திருக்காங்க. நான் நகரலியாம்...'

‘ம்... அப்பறம் எப்பிடி தப்பிச்சீங்க?'

‘இதென்ன கேள்வி? நான்தான் தண்ணி அடிச்சா ப்ளாக் நிலைமைக்குப் போயிருவேனே... எனக்கென்ன தெரியும்? அந்தப் போலீஸ்காரங்களத்தான் கேக்கணும்.'

‘அதுஞ்சரித்தான். இது அந்த தீபாவளிக்கு மாட்டுன சம்பவம்தான? லைட்டா மாத்திச் சொல்றீங்களோ?'

‘ச்சீச்சீ... இது அது இல்ல. அது டைரக்டர் ராஜகந்தன் ரூம்ல தண்ணியடிச்சப்ப உள்ளது.'

‘ஒங்க சகவாசமெல்லாம் பெரிய எடமாத்தாண்ணே இருக்கு.'

‘அதுக்கென்ன செய்யிறது? எல்லாரும் என்னைய மாதிரியேவா இருப்பாங்க? ராஜகந்தனோட தீபாவளி பார்ட்டி முடிஞ்சதும் என்னால வண்டி எடுக்க முடியலைங்கிறத கவனிச்சிருப்பாப்ல போல. ரிப்போர்ட்டர் கருணைஅழகன் வண்டியில என்னை ஏத்தி அனுப்பிவிட்டாப்லயாம்.'

‘யாருக்கோ நடந்த மாதிரியே சொல்றீங்கண்ணே.'

‘தண்ணி உள்ள போச்சுன்னா நான் வேற ஆள்தான? போற வழியில தீபாவளி கலெக்‌ஷன்ல இருந்த போலீஸ் குரூப்பு கிட்ட மாட்டிட்டோம் போல. அவங்ககிட்ட வம்பு இழுத்ததுல வேனுக்குள்ள தூக்கி ஒக்கார வச்சுட்டாங்களாம்.'

‘வேனைச் சிதைக்கிற முயற்சி பண்ணிட்டாங்களோ?'

‘அப்பிடித்தான் ஆகிப்போச்சு போல. எஃப்ஐஆர் போடுற அளவுக்குப் போயிட்டாங்களாம். கருணைஅழகன்தான் ராஜகந்தனுக்கு போன் போட்டுச் சொல்லியிருக்காப்டி. ராஜகந்தன் ஒடனே பெரிய ஆபீசர்களுக்குப் பேசியிருக்காப்டியாம். சம்பவ ஸ்தலத்துல இருந்த இன்ஸ்பெக்டருக்கும் போனைப் போட்டு விடச் சொல்லியிருக்காப்டி.'

‘புசுக்குன்னு முடிஞ்சு போச்சு?'

‘நான் கதைய முடிக்கலையே... அரமணிநேரங் கழிச்சு ராஜகந்தனுக்கு கவல. இன்ஸ்பெக்டர் என்னைய விட்டாரா இல்லையான்னு தெரியல. மறுபடி போனைப் போட்ருக்காப்டி. ‘சார், அண்ணன விட்டுட்டீங்களா?‘ அதுக்கு அந்த இன்ஸ்பெக்டர், ‘ஐயா சாமி, அந்தாள என்னய விடச்

சொல்லுங்க சார்...‘னு சொன்னாராம். பாவம் அவருக்கு எவ்வளவு கஷ்டம் பாருங்க.'

‘அண்ணே, நீங்க வேற லெவல்ணே...'

‘அடச்சீ, அந்த வார்த்தயவே  சொல்லாதீங்க. எதைப் பத்தியும் ஒண்ணும் சொல்லத் தெரியாதவன் மொதல்ல ‘சான்ஸே இல்ல‘ன்னு எவனோ ஒருத்தன் சொன்னதச் சொல்ல ஆரம்பிச்சான். அப்பறம், ‘வெறித்தனம்‘னான். ‘மாஸ்‘னான். இப்ப ‘வேற லெவ‘லாம். அதைக் கேட்டாவே அவனுக பாணியில, ‘வாயில அடி வாயில அடி‘ன்னு சொல்லத் தோணுது.'

‘அட, அதுக்கில்லண்ணே... பேச ஆரம்பிச்சா இது மாதிரி கதையாக் கொட்டுறீங்களே... எல்லாத்தையும் அப்பிடியே ஃபேஸ்புக்ல போட்டுவிடலாம்னு

சொல்ல வந்தேன்...'

‘அதான... நீங்க வேற லெவல்னு ஆரம்பிக்கும்போதே ஃபேஸ்புக்கத்தான் நினைச்சேன். அங்க பூராம் பாவப்பட்டவனுகதானப்பா இருப்பானுக? தனக்கா ஒண்ணும் தெரியாது. அடுத்தவன் என்ன சொல்றானோ அதையே தானும் சொல்லணும். அடுத்தவன் என்ன செய்யிறானோ அதையே தானும் செய்யணும்னு சுத்திக்கிட்டிருப்பாங்க.'

‘ஊரே கொண்டாடிக்கிட்டிருக்குற எஃப்பிய இப்பிடிச் சொல்லிட்டீங்க. உங்களுக்கு வயசாயிடுச்சுன்னு சொல்லப்போறாங்க.'

‘இல்லாட்டி லவ் பண்ணப்போறாங்களா, நீங்க வேற... மேப்படி எஃப்பி அறிவார்ந்த சபைன்னு எழுத்தாளர் பாலகுமாரன் சொன்னாரேன்னு அந்தப் பக்கமா எட்டிப் பாத்ததுல டெய்லி நைன்ட்டி கூடுனதுதான் எஃபெக்ட்டு. அறிவார்ந்த ஆளுக பிறந்த நாள் வாழ்த்துன்னு

சொல்ல மாட்டாங்களாம். பழனிபாரதி சொன்னாரு பாருங்க, தொட்டில் நாள் வாழ்த்துகளாம். அதப் பாத்து கவிதாபாரதி, ஆராரோ வாழ்த்துகள். இன்னொருத்தரு தொட்டில் நாள் வாழ்த்துகள், லொளலொளலாயீ வாழ்த்துகள்... ஏஞ்சாமிகளா பொறந்த அன்னிக்கா தாலாட்டுப் பாடுவாக.'

‘அதுல ஒங்களுக்கு என்னண்ணே பெரச்சன?'

‘பிரச்னை இல்லாமயா பொலம்புறேன்? ‘நல்ல வேல காச்ச சரியாப்போச்சு‘, ‘சொல்லுங்க ஓரவே‘, ‘எங்க ஆத்தா செத்தப்ப வந்து ஆற்றுப்படுத்தினான்‘, ‘அவன சுட்டுக் கொள்ளனும்‘ இப்பிடித்தானப்பா எழுதுறானுக. தெரிஞ்ச தமிழும் மறந்துரும் போலருக்கு. இது பிரச்னை இல்லையா?'

‘ஒங்கள மேட்டரைப் படிச்சு எஞ்சாய் பண்ணச் சொன்னா, ப்ரூஃப் ரீடிங் பண்ணுவீங்களாக்கும்?'

‘எழுத்துப் பிழை மட்டுமில்லைங்க... இன்னொரு ஆளு தொடர்ந்து ‘இங்க க் வராது, அங்க ப் வரும், எங்கயும் த் வராது‘ன்னெல்லாம் எழுதுவாரு. பரவாயில்லையேன்னு நினைச்சா, ஒவ்வொரு போஸ்ட்லயும் கடைசியில ‘இதில் பிழை இருந்தால் சுட்டிக் காட்டவும்‘னு போடுவாரு.'

‘ஒங்க கண்ணுல மாட்டுது பாருங்க...'

‘எது, ஒரு விஷயம் நடந்துட்டா எல்லாரும் அதையேதானே எழுதுறங்க. ‘எங்க நம்மள மறந்துருவாங்களோ‘ன்னு ஒரு பரபரப்பு. நாம ஒண்ணையும் விட்டுறக்கூடாதுன்னு ஒரு டென்ஷன். இது ஒரு மன நோயாம். இதுக்கு FEMO ன்னு பேரே வச்சுட்டாங்க. Fear Of Missing.  அதனால போலியா என்னத்தையாச்சும் எழுத வேண்டியது‘‘

‘போலியா இருக்குறதுதான் மேட்டரா? எல்லாரும் அசலா இருக்கணும்ங்கிறீங்களா?'

‘சேச்சே... யாரும் அசலா இருக்க வேணாம். போலியா இருந்தாலும் இந்த லெவல்லயா இருக்குறது? அட்லீஸ்ட் வேற லெவலா இருக்கலாமே...'

டிசம்பர், 2021

logo
Andhimazhai
www.andhimazhai.com