“வேகமாக செய்வதை விட தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது அவசியம்!”

நேர்காணல் : வி. மோகன்
மருத்துவர் வி. மோகன்
மருத்துவர் வி. மோகன்
Published on

தமிழகத்தின் குறிப்பிடத்தக்க நீரிழிவு நோய் மருத்துவர்களுள் ஒருவர் வி.மோகன். மோகன் டயபட்டீஸ் மருத்துவமனையின் தலைமை இயக்குநரான இவர், அந்திமழையின் நீரிழிவு நோய் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார். வாழ்க்கை முறை மாற்றத்தை வலியுறுத்தும் மோகன் ஒவ்வொருவரும் உடற்பயிற்சி செய்யவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார்.

அனைவரும் நீரிழிவு நோய்க்கான பரிசோதனை செய்து கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தை விளக்க முடியுமா?

நீரிழிவு நோய் என்பது மற்ற நோய்கள் மாதிரி அல்ல. இது இருப்பவர்களுக்கு பெரும்பாலும் அறிகுறிகளே இருக்காது. அதாவது ஐம்பது சதவீதம் பேருக்கு ஒரு அறிகுறியும் இருக்காது. ஆகையால் முப்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் வீட்டில் அப்பாவிற்கோ அம்மாவிற்கோ அல்லது கூடபிறந்தவற்களுக்கோ நீரிழிவு நோய் இருந்தால், உடல்பருமன் அதிகமாக இருந்தால், டென்ஷன் அல்லது ஸ்ட்ரெஸ் இருந்தால், உடற்பயிற்சி செய்யாதவர்கள் எல்லோரும் ஆண்டுக்கு ஒரு முறை நீரிழிவு நோய் இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்வது நல்லது.

இந்தியாவில் அதிகமானோர் நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் (Prediabetes) - ஆக இருக்கிறார்கள் என்கிறார்களே. இதற்கு என்ன அர்த்தம்?

Prediabetes என்று சொல்வது நம் நாடுகளில் மட்டும் அல்ல, எல்லா நாடுகளிலும் உள்ளது. எத்தனை பேருக்கு நீரிழிவு நோய் இருக்கிறதோ அதற்குச் சமமான எண்ணிக்கையிலான மக்களுக்கு Prediabetes இருப்பதாக ஆராய்ச்சி மூலமாக கண்டுபிடித்திருக்கிறோம். இந்தியாவில் 77 மில்லியன் மக்களுக்கு நீரிழிவு நோய் இருப்பதாக சமீபத்தில் கண்டுபிடித்திருக்கிறோம். அதே அளவு மக்களுக்கு Prediabetes இருக்கும், Prediabetes என்பது நீரிழிவு நோயின் முந்தைய நிலை. Prediabetes நிலையைக் கண்டுபிடித்து விட்டால் அதை ரிவர்ஸ் செய்து நார்மல் நிலைக்கு கொண்டு வர முடியும். அது தான் Prediabetes நிலையின் முக்கியத்துவம். அதுமட்டுமன்றி Prediabetes இருப்பவர்களுக்கும் இதய நோய், ஸ்ரோட்க் வருவதற்கான ரிஸ்க் உள்ளது. ஆகையினால் ஆண்டுக்கு ஒரு முறை ரத்த பரிசோதனை செய்தால் நீரிழிவு நோயைக் கண்டுபிடிக்கலாம்; அப்படி இல்லாதவர்களுக்கு prediabetes stage கண்டுபிடிக்கலாம்.

அப்படி அவர்கள்   இந்த நீரிழிவுக்கு முந்தைய  நிலையில் இருந்தால் அடுத்த கட்டமாக நீரிழிவு நோய் ஏற்படாமல் தடுப்பது எப்படி?.

ஒருவருக்கு prediabetes stage நிலையை கண்டுபிடித்துவிட்டால், தினமும் அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் நடக்க வேண்டும். அரிசி சாதம்,கோதுமை போன்ற தானிய வகைகளை குறைத்து விட்டு. காய்கறிகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும். பழ வகைகளை
சாப்பிடலாம், புரத சத்து உள்ள ஆகாரத்தை அதிகமாக உபயோகிக்க வேண்டும்.

அசைவ உணவுகளை சாப்பிடுபவர்கள் மீன் அல்லது கோழியை சாப்பிடலாம். சைவ உணவுகளை சாப்பிடுபவர்கள் கடலை, பயறு, சுண்டல், கொண்டைக்கடலை, பாசிப்பயறு, சோயா, ராஜ்மா போன்ற பருப்பு வகைகள் உபயோகித்தால், அதில் புரத சத்தும், நார்ச்சத்தும் அதிகமாக இருக்கும். மாவு சத்து உள்ள உணவுகளை சாப்பாட்டில் குறைக்க வேண்டும்.

 மரபு வழியாக/ தாய் தந்தையருக்கு இருந்தால் மகனுக்கும்/மகளுக்கும் சர்க்கரை நோய் வரும் என்று கூறப்படுகிறது. இதை தடுக்க முடியுமா?

அப்பாவிற்கோ, அம்மாவிற்கோ நீரிழிவு நோய் இருந்தால் குழந்தைகளுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. இதில் யாராவது ஒருவருக்கு மட்டும் இருந்தால் 50 சதவீதம் நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளது, 50 சதவீதம் என்றால், நான்கு குழந்தைகள் இருந்தால், அவர்களில் இருவருக்கு வர வாய்ப்பு உள்ளது. இருவருக்கும் இருந்தால் 90 அல்லது 100 சதவீதம் நீரிழிவு நோய் வர வாய்ப்பு உள்ளது. தாத்தா - பாட்டிக்கும், பெற்றோருக்கும் நீரிழிவு நோய் இருந்தால், இளம் வயதிலேயே நீரிழிவு நோய் வருவதற்காக வாய்ப்பு அதிகம் உள்ளது, 20 வயதிலேயே வரக்கூடிய வாய்ப்பு உள்ளது. வீட்டில் அதிகபேருக்கு நீரிழிவு நோய் இருப்பவர்கள் 20 வயது முதலேயே நீரிழிவு நோய் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அப்படி பரிசோதனை செய்யும் போது prediabetes stage அல்லது highrisk stage கண்டுபிடித்தால் நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம். உடல் பருமன் அதிகம் இருப்பவர்கள் 5 சதவீதம் உடல் எடையை குறைத்து விட்டால், நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம். யோகா, பிரணயாம பயிற்சி மிகவும் அவசியம். ஸ்ட்ரெஸ், மன அழுத்தம், டென்ஷனை குறைத்து விட்டால் நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம்.

உங்கள் காணொலி ஒன்றில் கிராமப்புரங்களில்தான் அதிகம்பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப் படுகின்றனர் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். ஆனால் மருத்துவர்கள் நகரத்தில்தான் வேலை செய்கிறார்கள் என்றும் கூறியிருந்தீர்கள். இதற்கு தீர்வுதான் என்ன?

ஆம், இது உண்மை தான். இந்தியாவில் 70 சதவீத மக்கள் கிராமத்தில் வாழ்கிறார்கள், ஆனால் 75 சதவீத மருத்துவர்கள் நகரத்தில் வாழ்கிறார்கள். இதற்கு ஒரு வழியும் கிடையாது. Telemedicine மூலமாக மருத்துவர்கள் நகரத்தில் இருந்து கிராமத்தில் வாழ்பவர்களுக்கு ஆலோசனை கூறலாம். மேலும்  மருத்துவ முகாம்கள் நடத்துவதன் மூலம் அவ்வப்போது கிராமத்தில் சேவை செய்யலாம்.
சத்ய சாய் சேவா நிறுவனம், மொபைல் ஆஸ்பிட்டல் புராஜெக்ட் மூலம் 12 கிராமங்களைத் தத்தெடுத்து அன்றாடம் சென்று சிகிச்சை அளித்து வருகிறார்கள். இம்மாதிரி  திட்டங்கள் செய்து வந்தால், கிராமத்தில் இருப்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

ஜெர்சி பசு/ கலப்பின பசுவின் பால் குடிப்பதால்தான் நீரிழிவு நோய் வருவதாக பேசப்படுகிறதே! அது பற்றி உங்கள் கருத்து:

இதைப்பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் அறிவியல் ஆராய்ச்சிப்படி இந்த உண்மையை நிரூபிக்க முடியவில்லை. மேலும் இதைப்பற்றி ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

நன்கு தீட்டப்பட்ட (Polished rice)  அரிசி உட்கொள்வதால்தான் நீரிழிவு நோய் வருகிறது. கைக்குத்தல் அரிசி சாப்பிட்டால் நல்லது என்றும் கூறப்படுகிறது. எதைத்தான் சாப்பிட வேண்டும்? சரியான டயட் பரிந்துரைக்கமுடியுமா?

'Polished white rice' அதாவது தீட்டப்பட்ட அரிசி அதிகமாக உட்கொண்டால் ரத்தத்தில் குளுகோஸின் அளவு அதிகமாக ஏறுகிறது, அதே சமயம் நமது உடலில் உள்ள கணையம் மிக சிரமத்ததுடன் வேலை செய்து, இன்சுலின் அதிகமாக
சுரக்கப்படுகிறது. சில நாட்களுக்கு பிறகு இன்சுலினின் அளவு குறைய ஆரம்பிக்கும், அப்படி தான் நீரிழிவு நோய் ஏற்படுகிறது. என்னுடைய ஆராய்ச்சி கட்டுரைகளில் "Brown Rice' அதாவது கைக்குத்தல் அரிசி உபயோகிப்பவர்களுக்கு குளுகோஸின் அளவு குறைவாக இருக்கும் என்று நிரூபித்து உள்ளோம். அடுத்தபடியாக நீண்ட நாள் ஆராய்ச்சியின் விளைவாக 'Dr. Mohan's High fibre white rice' என்று கண்டுபிடித்து அதில் பல ஆராய்ச்சிகள் செய்து, அதில் வெற்றி அடைந்துள்ளோம், ஆதலால் அவை இப்போது பல கடைகளிலும், சூப்பர் மார்கெட்டுகளிலும் விற்கப்படுகிறது. அதிக நார்ச்சத்து உடைய இந்த அரிசியில்  glycemic index அளவு குறைவாக இருக்கிறது. அதாவது கைக்குத்தல் அரிசி மாதிரியே இருக்கிறது, ஆகையினால் brown rice அல்லது High fibre white rice
சாப்பிட்டால் குளுகோஸின் அளவு ஏறாமல் பார்த்து கொள்ளலாம். இன்னொரு வழி என்னவென்றால், சாதத்தின் அளவை குறைத்து விட்டு, காய்கறிகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.

டயபடிக் நியூரோபதி பாதிப்பு ஏன் வருகிறது?  இந்த பாதிப்பிலிருந்து விடுபட மருந்துகள் இருக்கிறதா?

டயபடிக் நியூரோபதி பல அறிகுறிகளோடு வரலாம். ஒன்று காலில் உணர்ச்சி குறைந்து காணப்படும். இரண்டு, கால் எரிச்சல், குத்தல், வலி, எரிகின்ற தன்மை, இவையெல்லாம் டயபடிக் நியூரோபதியின் அறிகுறிகள். இவை எல்லாவற்றிக்கும் தக்க மருந்துகள் உள்ளன.

Sugar Free இனிப்புகள் சாப்பிடலாமா?

கண்டிப்பாக சாப்பிடலாம். அளவு முக்கியம். காபி, தேனீரில் Sugar free சேர்த்து கொள்வதில் தப்பில்லை.

நீரிழிவு நோய் கண்டறியப்பட்டாலும் மக்கள் தொடர்ந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்வது இல்லை. இது பற்றி உங்கள் கருத்து?

இது மிகவும் தவறு, நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கு பெரும்பாலும் ஆயுட்காலம் முழுவதும்  மருந்து தேவைப்படும். ஒரு சிலருக்கு மட்டுமே நீரிழிவு நோயை அகற்றி மருந்து இல்லாத  நிலைமைக்கு வரமுடியும்.

நீரிழிவு நோய் வந்தால் முதலில் பாதிக்கப்படும் உறுப்புகள் எவை?    இந்த நோய் வந்தவர்களின் ஆயுட்காலம் குறையுமா? சர்க்கரை நோயுடன் நீண்ட நாள் வாழ்வது சாத்தியமா?

நீரிழிவு நோய்க்காக எடுக்கும் மருந்தினால் பக்க விளைவுகள் வரும் என்பது எல்லோருக்கும் ஒரு கவலை. நாங்கள் 50 - 60 வருஷமாக நீரிழிவு நோய்
சிகிச்சை செய்த அனுபவத்தில் பக்க விளைவுகள் இல்லை என்று உறுதியாக சொல்ல முடியும். நீரிழிவு நோயின் சிக்கல்களை தவிர்க்க வேண்டுமென்றால், ஆண்டுக்கு 3 அல்லது 4 முறையாவது நீரிழிவு நோய் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்ய வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை எல்லா உறுப்புகளுக்கான, அதாவது கண்கள்,
 சிறுநீரகம், இருதயம், நரம்பு, கால் பாதம்
பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இம்மாதிரி பரிசோதனை செய்து கொள்பவர்கள் நீரிழிவு நோயின் பாதிப்புகள் இல்லாமல் 50 அல்லது 60 வருஷம் வாழ்வதை எங்கள் மருத்துவமனையில் பார்த்திருக்கிறோம். சமீபத்தில்  90 வயதிற்கு மேற்பட்ட 325 நீரிழிவு நோயாளிகளை பற்றிய ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளோம். அதில் ஒருவர் தனது 100வது பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடினார். இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், நீரிழிவு என்பது வியாதி அல்ல அது உடலில் ஏற்படும் ஒரு
 சின்ன குறையே. இந்நோயை கட்டுப்பாட்டில் வைத்து விட்டால், நீண்டகாலம் ஆரோக்கியத்துடன் வாழலாம்.

மன அழுத்தம் / ஸ்ட்ரெஸ்ஸுக்கும் நீரிழிவு நோய்க்கும் தொடர்பு உண்டா?

கண்டிப்பாக உண்டு. மன அழுத்தம் அல்லது ஸ்ட்ரெஸ் அதிகமாக இருந்தால், நீரிழிவு நோய் வரும் என்பதை நாங்கள் நிரூபித்து உள்ளோம். அதே சமயத்தில் அந்த மன அழுத்தத்தை பிராணயாமா, ஸ்ட்ரெஸ் ரிலாக்சேஷன் போன்ற பயிற்சிகளின் மூலம் குறைத்தால், நீரிழிவு நோயை ரிவர்ஸ் செய்ய முடியும். 

ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் நடைப்பயிற்சி மேற்கொள்வது சர்க்கரை நோயாளிகளுக்குச் சிறந்தது?

 எல்லோருக்கும் ஒரே நேரத்தை வரையறுக்க முடியாது. 30 வயது நீரிழிவு நோயாளியும், 80 வயது நீரிழிவு நோயாளியும் ஒரே மாதிரி நடைப்பயிற்சி மேற்க்கொள்ள முடியாது. உங்களால் நடக்க முடிந்த அளவு நீங்கள் நடந்தால் போதும். குறைந்தபட்சம் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்தால் நல்லது. உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள் 40 அல்லது 50 நிமிடங்கள்  நடக்க வேண்டும். உங்களால் முடிந்த அளவுக்கு வேகத்துடன் செய்யலாம். மெதுவாக வேகத்தை உயர்த்தி கொள்ளலாம். ஆனால் வேகமாக செய்வதை விட தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது அவசியம். சிலர்  இரு வாரங்கள் அல்லது ஒரு மாதம், உடற்பயிற்சி செய்துவிட்டு விட்டுவிடுகிறார்கள். தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.

டிசம்பர், 2019.

logo
Andhimazhai
www.andhimazhai.com