வெவ்வேறு திசைகளில்!

வெவ்வேறு திசைகளில்!
Published on

மனைவியின் பிரிவுக்குப் பிறகு அவள் புடவையை  தலைக்கு வைத்து படுத்திருக்கும் காதலுள்ள கணவனை போல...

நினைவுகளோடு நான் நித்திரை கொள்கிறேன்...

திரை உலகில் நான் அதிகம் செலவிட்டது உன்னிடம் தான்...

மனதில் மிச்சமில்லாமல் பேசி சிரித்தது உன்னோடு தான்...

பெண்கள் தவிர என் கனவில் வரும் ஒரே ஆண் நீ தான்...

ஈரமான ரோஜாவை எழுதிவிட்டு

ஆழியாறு அணையின் மீது நடந்துகொண்டிருந்தோம்...

திடீரென நீ என்னை துரத்தினாய்...நான் ஓடினேன்...

நீ துரத்திக் கொண்டே இருந்தாய்...நான் ஓடிக் கொண்டே இருந்தேன்...

மழை வந்தது நின்றுவிட்டேன்...

என்னை நீ பிடித்துவிட்டாய்...

அப்போது நாம் சேர்ந்துவிட்டோம்...

ஏனென்றால் இருவரும் ஒரே திசையில் ஓடிக் கொண்டிருந்தோம்.

இப்போது முடியுமா...

இருவரும் வெவ்வேறு திசையில் அல்லவா ஓடிக் கொண்டிருக்கிறோம்...

1986ஆம் ஆண்டின் ஒரு பொன்மாலைப் பொழுதில், ‘இனிமே அந்த நபர் நான் சாகுற வரைக்கும் என் மூஞ்சியிலயே முழிக்கக்கூடாதுன்னு சொல்லு' என்று இளையராஜா சொல்லி அனுப்பிய நிலையில், அவர் வார்த்தைகளிலேயே சொல்வதானால், தனது கண்ணீரை பேனாவில் நிரப்பி வைரமுத்து எழுதிய கவிதை.

இவர்கள் எதற்காகப் பிரிந்தார்கள் என்பது குறித்து அந்த நாள் முதல் இந்த நாள் வரை ஆயிரக்கணக்கான கட்டுக்கதைகள் உண்டு. அதிலும் இன்றைய யூடியூபர்ஸ் கட்டிவிடுகிற கதைகள் இருக்கின்றனவே…அந்தோ பரிதாபம்.

நடந்தது இதுதான்.

பிரபல வார இதழின் மூத்த நிருபர் அவர். மதுரை தமிழ்நாடு ஹோட்டலில் நட்பு நிமித்தமாக வைரமுத்துவை சந்திக்கிறார். அவர்களது உரையாடல் இளையராஜா திசைக்குத் திரும்பும்போது, இயக்குநர் பாரதிராஜா மூலமாக அறிமுகமாகியிருந்ததால், நிருபர் ‘நம்ம ஆளு‘ என்று நினைத்துக் கொண்டு, ராஜா குறித்து வைரம் கடுமையான சொற்களில் ஒரு கமெண்ட் அடிக்கிறார். ஆனால் நிருபர்  கொதிக்கிறார்.  இதை ராஜாவுக்கு நெருக்கமான மதுரை கம்யூனிஸ்ட் இயக்க தலைவர் ஒருவரிடம் அவர் சொல்ல, அது தந்தி போல் ராஜாவுக்குப் போய்ச் சேருகிறது. நிருபர் அத்தோடு நிறுத்திக்கொள்ளவில்லை. அவரது வார இதழில் ராஜாவும் வைரமுத்துவும் ஒரு புல்வெளீயில் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றை இரண்டாகக் கிழித்து கவர் ஸ்டோரியாகவும் வெளியிட,முடிந்தது சோலி.

இது தெரியாமல் ‘புதுப்புது ராகங்கள்' பாடல்களில் ராஜா திருத்தம் சொன் னதால் வைரம் கோபித்துக்கொண்டார். கடலோரக்கவிதைகள் படத்தில் ரெகார்டிங்குக்கு வரச்சொல்லிவிட்டு ராஜாவே பாட்டெழுதிக்கொண்டார். தாய்க்கு ஒரு தாலாட்டு படத்தில் ‘பழைய பாடல் போலே புதிய பாடல் இல்லை' என்று எழுதியதால் ராஜா கோபித்துக்கொண்டார்...என்று தொடங்கி எக்கச்சக்க சப்பைக்கட்டுக் கதைகள்.

ஆனால் குற்றம் நடந்தது என்ன எனப் பார்த்தால் மேலே சொல்லப்பட்ட சம்பவம்தான்.

‘மீண்டும் வைரமுத்துவுடன் இணைய வாய்ப்புள்ளதா?' என்று தயங்கித் தயங்கிக் கேட்கப்படும்போதெல்லாம், ‘எனக்கு அடுத்த ஜென்மம் என்ற ஒன்றில் நம்பிக்கையில்லை. அப்படி ஒன்று இருந்தால் அதிலும் கூட அதற்கான சாத்தியம் இல்லை' என்பதாகவே ராஜாவின் பதில் எப்போதும் இருந்திருக்கிறது.

இங்கே ஒரு விசயத்தை நன்கு கவனிக்க வேண்டும். வைரமுத்து குறித்து கேட்கப்படும், கேள்விப்படும் விசயங்கள் குறித்து பதில் சொல்கையில் ராஜா எப்போதும் அவர் பெயரைக் கூட உச்சரிப்பதில்லை.  அவர் மனதில் ‘86ல் எரியூட்டப்பட்ட நெருப்பு இன்றும் கனன்று கொண்டேதான் இருக்கிறது.

ஆனால் நெருப்பைப் பற்றவைத்தவரோ இத்தனை ஆண்டுகளாகப் புகைந்துகொண்டேதான் இருக்கிறார். முரண்பாடு ஏற்பட்ட துவக்க காலத்தில், கட்டுரையின் ஆரம்பத்தில் இடம் பெற்றதுபோல் சில கவிதை தூதுகள் அனுப்பி, அது பலிக்கவில்லை, இனியும் பலிக்காது என்று தெரிந்தவுடன், விதம் விதமாய் எதிர்த் தரப்பில் சேர்கிறார்.

ஆனால் ராஜா என்கிற ராட்சசன் 80 வயதிலும் ‘வழி நெடுக காட்டுமல்லி' வாசத்தை இசைத்து, எழுதி, பாடியபடி என் பயணங்கள் முடிவதில்லை என்று உணர்த்திக்கொண்டே இருக்கிறார்.

கட்டிப்பிடித்துக்கொண்டிருப்பவர்கள் அடுத்து எந்த நிமிடத்தில் கட்டி உருள்வார்கள் என்று கணிக்க முடியாதது தமிழ் சினிமா. எம்.எஸ்.வியை பாலசந்தர் பிரிந்தது, விஜயகாந்த் தனது உயிர் நண்பரான இப்ராஹிம் ராவுத்தரைப் பிரிந்தது, அஜீத் தனது ஆஸ்தான தயாரிப்பாளரான நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தியைப் பிரிந்தது, விஜய் தன்னைக் கருவாக்கி, உருவாக்கி, இன்று உச்ச நட்சத்திரமாய் ஜொலிக்கச் செய்த தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரனைப் பிரிந்தது என்று பல நூற்றுக்கணக்கான பிரிவுகளைப் பார்த்திருந்தாலும் ஒரு காவியப் பிரிவு என்பது ராஜா-வைரமுத்து பிரிவுதான்.

பெரும் திறமை வாய்ந்தவர்கள் பிரிவது கலைத்துறைக்கும் ரசிகர்களுக்கும் இழப்புதானே?

 ஏப்ரல், 2023 அந்திமழை இதழ்

logo
Andhimazhai
www.andhimazhai.com