வெளிப்படுத்தா காதல்!

இதயம்
இதயம்
Published on

90 களின் தொடக்கம் என்பது தங்களது பள்ளிக்கல்வியை முடித்த ஏராளாமான முதல் தலைமுறை மாணவர்கள் உயர் கல்விகளுக்காக கனவுகளையும்,லட்சியங்களையும் சுமந்து கொண்டு பெரு நகரங்கள் நோக்கி விரைந்து கொண்டிருந்த காலம். இந்த காலத்தில் வெளிவந்த ஒரு முக்கியமான தமிழ் திரைப்படம் ‘இதயம்'.

இதயம் என்பது வெறும் காதலை மட்டும் பேசிய படம் என்பதை விட, எந்த வசதிகளும் இல்லாத, ஒரு எளிய பின்புலத்தில் இருந்து நகரத்திற்கு வரும் அதுவும் உயரிய மருத்துவ படிப்பு படிப்பதற்கு வரும் ஒரு கிராமத்து மாணவனின் அகம் சார்ந்த சிக்கல்களையும், அதனை சார்ந்த அவனின் புற வெளிப்பாடுகளையும் மிக துல்லியமாக பேசிய படம் என இந்த படத்தை சொல்லலாம்.

முதல் நாள் கல்லூரியில் அவன் பார்க்கும் ஒரு பெண், சொல்லமுடியாத சில மாற்றங்களை அவனுள் ஏற்படுத்தும் போதும், அவளது அருகாமையும், அவளது இருப்பும் அவனுக்குள் சில கிளர்ச்சிகளை ஏற்படுத்தும் போதும் அது ஒரு பெருங்காதலாக அவனுக்குள் சுரக்கிறது. அவன் மட்டுமே கொண்டிருக்கும் அந்த காதலின் இன்பம் அவனுக்கு மட்டுமே உரியதாகிறது. அதை அவன் அவளோடு பகிர்ந்து கொள்ள முற்படும்போதெல்லாம் அவன் கொண்ட  தாழ்வுணர்ச்சி அதை தடுக்கிறது. நிகழப்போகும் நிராகரிப்பின் மீது கொண்ட பயத்தின் விளைவாக அவன் காதலை வெளிப்படுத்தாமலே அது தரும் ஒரு வலி நிறைந்த நிம்மதியோடு அந்த கல்லூரி காலங்களை கடக்கிறான். வெளிப்படுத்தாமல் அவனுக்குள் உறைந்து நிற்கும் காதல் அவனது டைரியையும், அந்த படத்தின் ஒவ்வொரு காட்சியையும் நிரப்புகிறது.

நவம்பர், 2018.

logo
Andhimazhai
www.andhimazhai.com