வெற்றிச் சூத்திரம் 471

வெற்றிச் சூத்திரம் 471

Published on

கலைஞரின் வெற்றிச் சூத்திரம் என்பது 471 தான்!

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல் - என்கிறது வள்ளுவம்! அதாவது தனது செயலின் வலிமையும், தன் வலிமையும், பகைவனுடைய வலிமையும், இருவர்க்கும் துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து செய்ய வேண்டும் என்பதுதான் அது!

மிக நீண்ட அரசியல் அனுபவம் மட்டுமல்ல, மிகப்பெரிய தோல்வியும், மாபெரும் வெற்றியும் சேர்ந்து அவருக்கு கற்பித்த பாடம் அது. மாபெரும் வெற்றியின் போதும் 'சூழ்நிலையை'யே காரணமாகச் சொன்னார். மிகப்பெரிய தோல்வியின் போதும், 'சூழ்நிலையை'யே காரணமாக நினைத்தார். அவர் எப்போதும், தான் ஆடுவதில் மட்டும் குறியாக இருந்தவர் அல்லர். ஜெயலலிதா, தனது ஆட்டத்தில் மட்டுமே குறியாக இருப்பார். வெற்றியில் அதுவும் ஒரு பாணிதான். கலைஞர், தான் ஆடுவதோடு சேர்த்து மற்றவர் ஆட்டத்தையும் கவனிப்பதில், கவனம் பிசகாமல் இருப்பதில் குறியாக இருப்பார். இது இவரது பாணி. ஜெ. பாணி அவருக்கு சில நேரங்களில் சறுக்கலை கொடுத்துள்ளது. கலைஞரின் பாணி, அவருக்கு சறுக்கலைக் கொடுத்தாலும் படிப்பினையையும் கொடுத்திருக்கிறது.

ஜெ.தோல்விக்கு பிறகு முடங்கிவிடுவதும், கலைஞர் எத்தனை தோல்விக்கு பிறகும் & அடுத்த அரைமணி நேரத்தில் அறிவாலயம் புறப்பட்டுவிடுவதுமான மனநிலையைக் கொடுத்துவிடுகிறது.

1989 தேர்தலுக்கு பிறகு என்று எனது கட்டுரைக்கு ஒரு கோடு கொடுக்கப்பட்டுள்ளது என்பதனால் அதிலிருந்து சொல்கிறேன்!

பேரறிஞர் அண்ணாவின்  மறைவுக்குப் பிறகு மாபெரும் வெற்றியை 1971 தேர்தலில் ருசித்தவர் கலைஞர். 1977, 1980, 1984 ஆகிய தேர்தல்களில் எல்லாம் கசப்பை மட்டுமே பெற்றவர். அவருக்கு 1989 என்பது கவனமாக ஆட வேண்டிய களமாக இருந்தது. ஒரு எம்.ஜி.ஆருக்கு எதிராக மட்டுமே களமாடி வந்த கலைஞருக்கு முன்னால் நான்கு பேர் நின்றார்கள். ஜெயலலிதா, ஜானகி, சிவாஜி கணேசன், மூப்பனார்.

ஜானகி ஆட்சிக்கு கலைஞர் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று சிலர் எடுத்த முயற்சியை முளையில் கிள்ளி எறிந்தார் கலைஞர். ஒரு புதிய எதிரியை உருவாக்கக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார். எம்.ஜி.ஆரின் கட்சி பிளவுபட்டு இருந்தது என்றாலும் ராஜீவ்காந்தி என்ற ‘மிஸ்டர் கிளீன்' தமிழகத்துக்குள் வலம் வந்து கொண்டு இருந்தார். இந்த சூழலில் தான் எம்.ஜி.ஆர். படுத்தது முதல் ஜானகி ஆட்சி கலைக்கப்பட்டது வரையிலான நான்காண்டு காலத்தில் தமிழகத்தில் ஆட்சி என்பது ஒன்றே இல்லை. இந்தக் குழப்பத்தைக் கையில் எடுத்த கலைஞர், 'நிலையான ஆட்சி' என்ற முழக்கத்தை முன்னெடுத்தார். நான்கு முதலமைச்சர் வேட்பாளர்களைப் பார்த்த தமிழ்நாடு கலைஞரை மட்டுமே உறுதியானவராக அன்று தேர்ந்தெடுக்க தானே வழிகாட்டினார் கலைஞர்!

இப்படி நிறைய முதலமைச்சர் வேட்பாளர்கள் இருக்கும் போது மக்களிடம் கவனச் சிதறல் இருக்கக் கூடாது என்பதையும் அறிவுறுத்தினார் கலைஞர்.  ‘திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு மட்டும் தான் தனிப்பெரும்பான்மை கிடைக்கும் நிலை இருக்கிறது. எனவே பிரித்தாளும் சூழ்ச்சிக்கு இரையாகிவிடாதீர்கள். உங்கள் வாக்குகளை வீணாக்கி விடாதீர்கள்‘ என்றும் கலைஞரும் சூழ்ச்சியைப் புரிந்து கொள்ளச் சொல்லிக் கொடுத்தார்.

‘சொன்னதைச் செய்வோம்; செய்வதைச் சொல்வோம்' என்ற நம்பிக்கைச் சொல்லை அந்தத் தேர்தலில் இருந்துதான் கலைஞர் வழங்கினார். 14 முறை ராஜீவ் தமிழகத்துக்கு வந்து பரப்புரை செய்தார். எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அழுதார். எம்.ஜி.ஆரின் ஹீரோயின் நடித்தார். ஆனாலும் கலைஞரின் காந்தக் குரலே 89 தேர்தலில் அவருக்கு வெற்றியைக் கொடுத்தது.

1991 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி என்பது & திமுக அடைந்த தோல்வி என்பது இராஜீவ்காந்தி மரணத்தால் விளைந்தது. மே 26 தேர்தல். மே21 ராஜீவ் படுகொலை நடந்தது. தமிழீழ விடுதலைப்புலிகள் தான் ராஜீவை கொன்றார்கள், அத்தகைய புலிகளுக்கு திமுக உடந்தை என்று திசை திருப்பப்பட்டது பிரச்சாரம். அதிமுகவும் காங்கிரசும் அமைத்திருந்த தேர்தல் கூட்டணியானது ராஜீவ் அனுதாப அலையை அறுவடை செய்தது. கலைஞர் மட்டும் தான் துறைமுகம் தொகுதியில் கரை ஏறினார். இப்படி ஒரு வெற்றியைப் பெற்ற ஜெயலலிதா, ‘ராஜீவ் காந்தி மரணத்தால் ஏற்பட்ட அனுதாபத்தால் நான் வெற்றி பெறவில்லை' என்று கதையைத் திருப்பினார். தமிழகத்தின் இருண்டகால ஆட்சியை 1991-96 வரை பார்த்தோம்.

1996 தேர்தலில் கலைஞரே கலங்கரை விளக்கமாக மாறினார். 1993- ஆம் ஆண்டு வைகோ ஏற்படுத்திய பிளவு ஒரு பக்கமாக இருந்தாலும் ‘தன்னை' நம்பியே களத்தில் குதித்த கலைஞருக்கு மூப்பனாரின் தமிழ்மாநில காங்கிரஸ் அரவணைக்கத் தக்கதாக இருக்கிறது. மூப்பனாரின் பலம் அதுவரை நிரூபிக்கப் படாதது தான். ஆனாலும் அன்று அதிகப்படியான தொகுதியை அந்தக் கட்சிக்கு கொடுப்பதன் மூலமாக அதிமுகவை அண்டி நிற்கும் காங்கிரஸை இதன் மூலமாக அம்பலப்படுத்த கலைஞர் நினைத்தார். ஜெயலலிதாவின் மிக மோசமான ஆட்சியை நான் மட்டுமல்ல, காங்கிரஸ்காரர்களே எதிர்க்கிறார்கள் என்ற உத்தியைப் பயன்படுத்தினார். எதிரியின் வசம் இருந்த ஆயுதத்தைப் பறித்துப் பயன்படுத்தும் ராணுவ உத்தி இது. நோக்கி வர இருந்ததை பறித்து எறிவது இது. 1996 தேர்தலில் நின்ற இடமெல்லாம் கலைஞர் வெற்றி பெற அதுவே காரணம் ஆனது.

கலைஞரே தகுதி வாய்ந்த முதல்வர் என்று மற்றவர்களைச் சொல்ல வைத்ததன் மூலம் அடைந்த மகத்தான வெற்றி அது!

அந்த தேர்தலில் தான், டெல்லியிலும் ஒரு கால் வைக்கத் தொடங்கினார் கலைஞர். தமிழகம் வளம்பெற மத்திய ஆட்சியில் அங்கம் பெறுவது என்ற விரிந்த பார்வையோடு மத்தியில் அமைந்த தேவகவுடா, குஜ்ரால் ஆட்சிக்கு ஆதரவு தெரிவித் ததும், வாஜ்பாயை ஆதரித்ததும், மன்மோகன் சிங்கை தொடர்ந்து ஆதரித்ததுமாக மிக நீண்ட பயணத்துக்கு 1996 அடித்தளம் அமைத்தது. ஒரு மாநிலக் கட்சி மட்டுமல்ல, அகில இந்தியக் கட்சிகளின் வலிமையோடும் குணத்தோடும் மாநிலத்தில் இயங்கும் கட்சி என்ற உத்தியை உருவாக்கினார் கலைஞர்.

‘சென்னைதான்  நாட்டுக்கே தலைநகராக இருந்தது' என்றார் தேவகவுடா. ஜெயின் கமிஷன் புலிப் பயம் காட்டியபோது, பிரதமர் குஜரால் உறுதியாக இருந்தார். அது பொய்ப்புகார் என்பதை மறுத்த கலைஞர், தனது அமைச்சர்களை பதவி விலகச்சொல்ல மாட்டேன் என்பதில் அழுத்தமாக இருந்தார். அதிமுக ஆதரவுடன் வாஜ்பாய் பிரதமர் ஆனாலும், தனது நண்பர் என்பதால் ஆதரித்தார்.

ஆட்சிக்கு ஆதரவு தந்தார். வாஜ்பாய் பாஜக, அத்வானி பாஜகவாக மாறத் தொடங்கியதும் ஆதரவைத் திரும்பப் பெற்றார். அரசியல் களத்தில் தீவிரமான சோனியாவுடன் கைகோத்தார். இவை அனைத்துக் காட்சிகளும் தமிழக அரசியல் & தேர்தல் களத்தில் திமுக வலிமை பெறவும் கூடுதல் கவனம் பெறவும் காரணமாக அமைந்தது.

ஒன்று பலவீனம் அடையும் போது, இன்னொன்றை பலப்படுத்துவது கலைஞரின் பாணி. அது அவரை எப்போதும் சிகரத்தில் வைத்திருந்தது.

2001 தேர்தலில் திமுக கூட்டணியில் பாஜக இருந்ததால் பலரும் ஜெயலலிதாவை நோக்கி நகர்ந்தார்கள். அதை சமப்படுத்த 'சமுதாய' இயக்கங்களை அரவணைத்தார் கலைஞர். ஆனால் அது கை கொடுக்கவில்லை. எனவே, பாஜகவை அவிழ்த்துவிட்டார். 2004 நாடாளுமன்றத் தேர்தலில் 40 க்கு 40 பெற்றார். அதற்குக் காரணம், 'மதநல்லிணக்க வரலாறு படைப்போம், மதச்சார்பற்ற ஆட்சி அமைப்போம்' என்ற முழக்கம் தான். 2006 தேர்தலில் பிரிந்தவர்கள் சேர்ந்தார்கள். வெற்றி

கிடைத்தது.  பாட்டாளிகளின் மனம் கவரும் வகையில், 2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்ற திட்டமும் அறிவித்தார். ஏழை மக்களின் ஏக்கம் தீர்ப்பதாக இந்த அறிவிப்பு அமைந்திருந்தது.

இது ஏதோ கவர்ச்சிகரமான வாக்குறுதி அல்ல. ஏழைகளின் வாழ்க்கைக்கு குறைந்த பட்ச உத்தர வாதம் தரும் வாக்குறுதி ஆகும். கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு பல்லாயிரம் கோடி வரிச்சலுகை அறிவிக்கும் போது வாய்மூடிக் கிடக்கும் நடுநிலை விமர்சகர்கள், ஏழைகளுக்கு அரைவயிறு நிரம்புவதற்கான வாக்குறுதியை அறிவிக்கும் போது டிவிக்கு வெளியில் வந்து கனைப்பார்கள். ஆனால் இவை பொருட்படுத்தத் தக்கவை அல்ல.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னால், பட்டினிச் சாவுகள் உள்ள மாநிலங்களின் பட்டியலை மத்திய அரசு அறிவித்தது. அதில் தமிழகம் இல்லை. என்ன காரணம்? கலைஞர் அறிவித்த விலை குறைந்த அரிசி வாக்குறுதி தான் காரணம். 2006 தேர்தல் வெற்றி என்பதை ஏழை மக்கள் தீர்மானித்தார்கள்.

சமூகநீதி - சமத்துவம் - தமிழ் - இனம் என்ற உன்னதமான கொள்கையோடு சேர்த்து அனைவர்க்கும் கல்வி - உணவு - சுகாதாரம் -  குடிநீர் - ஏழைகள் நலன் என்று இன்னொரு பக்கத்தையும் சிந்தித்தவர் கலைஞர். அதனால் தான் அந்தக் காலக்கட்டத்தில் இன ரீதியாக சிலர் விமர்சித்தபோதும், அடித்தட்டு  மக்கள் அவரை அரவணைத்தார்கள்.

ஒன்று சறுக்கும் போது, இன்னொன்றைக் கைப்பற்றுவது!

ஆனால் இரண்டையும் எப்போதும் தன் கவனத்தில் வைப்பது!

'தூங்கும் போதும் கால் ஆட்டிக் கொண்டே தூங்க வேண்டும்' என்றார் கலைஞர். என்னைப் பொறுத்தவரையில் இப்போதும் அவர் கால் ஆட்டிக் கொண்டே தான் இருக்கிறார் என்று நினைக்கிறேன். ஏனென்றால் அந்த அதிர்வுகள் இப்போதும் தமிழ்நாட்டு அரசியலில் தெரிகிறது. தெரிய வேண்டும் என்பதே அவரது ஆசையாகவும் இருந்தது. அவரைப் பொறுத்தவரை வெற்றிச் சூத்திரத்தை அவரே தான் வைத்திருந்தார். தோற்கும் என்ற தேர்தலிலும் அந்த தோல்வியை முன்கூட்டியே அறிந்தவராகவும் இருந்தார். அவர் யானையாகவும் இருந்தார். மணியோசையாகவும் இருந்தார்! பாகனாகவும் இருந்தார்!

எல்லாம் சரி! அது என்ன தலைப்பில் இருக்கும் 471?

ஓ! அதுவா? அதுதான் வள்ளுவரின் 471 ஆவது குறள்!

மார்ச் 2021

logo
Andhimazhai
www.andhimazhai.com