கனவுகள் எதுவும் இல்லையென்றால் உங்களை நீங்கள் முன்னோக்கி செலுத்த முடியாது. உங்களின் இலக்கு என்ன என்பதை உங்களால் தீர்மானிக்கவும் முடியாது. - எம்.எஸ்.தோனி
பெங்களூரு சின்னசாமி விளையாட்டு மைதானம். பந்து அடிப்பதற்கு தயாராக கிரிஸ் கெய்ல் நிற்கிறார். மைதானம் முழுவதும் Six.. Six… Six… என்ற குரல்கள் உச்சஸ்தாயியில். Gayle Storm என்று வாசகம் பொறித்த பேனர்கள் பல இடங்களில் தூக்கிப் பிடிக்கப் பட்டுள்ளது.
ரசிகர்களின் ஆரவாரம் பேட்ஸ்மேன் கெயிலை உற்சாகப்படுத்த அவர் சிக்ஸ் அடிக்க முயற்சிக்கிறார். பந்து நார்த் ஸ்டேண்ட் பக்கம் பறந்துசிக்ஸாகிறது. ரசிகர்களின் உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது.
விளையாட்டு முடிந்த பின் கெயிலுக்கு கிடைத்த ஒரு தகவலால் உற்சாகம் வடிந்து சோகமாகிறார். கெயில் அடித்த பந்து ஸ்டாண்டில் நின்றிருந்த 11 வயது சிறுமியின் மூக்கை உடைத்து விட்டது. சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
உடனே தான் தங்கியிருந்த ஐந்து நட்சத்திர விடுதிக்கு செல்லாமல் சிறுமி அனுமதிக்கப்பட்டு இருந்த மருத்துவமனைக்கு செல்கிறார் கெயில். சிறுமியை கண்டவுடன் கெயில் கண்ணில் நீர்.
‘என்னை மன்னித்து விடு' என்கிறார் சிறுமியிடம்.
திரும்பிப் பார்த்த சிறுமியின் முகத்தில் வலியை மீறி பிரம்மாண்ட புன்னகை. ‘நீங்கள் ஏன் வருத்தப்படுகிறீர்கள்? வருத்தப்படாதீர்கள். தொடர்ந்து சிக்ஸ் அடியுங்கள்'- சிறுமி.
உண்மையாகவா?
ஆமாம்…Keep hitting sixes…
அழாத சிறுமியின் கண்களை பார்த்து பிரமித்து, அவளுடன் பேசிக் கொண்டிருந்தார் கெயில். விடைபெறும்போது கையெழுத்திட்ட டிஷர்ட்டை பரிசாகக் கொடுத்தார். கெயில், மறுமுறை பெங்களூரில் விளையாடும்போது அந்த சிறுமியை தனது விருந்தினராக அழைத்து உயர்நிலை இருக்கையில் அமர வைத்திருந்தார்.
கெயில் அடித்த பந்து சிறுமியை பதம் பார்த்ததும் அவர் மருத்துவமனைக்கு சென்றதும் ஊடகங்கள் மூலம் ரசிகர்களுக்குத் தெரிந்திருந்தது. பேட்ஸ்மேனாக களமிறங்கிய கெயிலை வரவேற்றது 'Please hit me Chris' என்ற கோஷமும் அதே வாசகத்தை தாங்கிய பதாகைகளும்.
ஜமைக்காவில் 1979 இல் பிறந்த கிரிஸ் கெயிலின் வாழ்வு ‘சிக்ஸ் மெஷின்' என்ற புத்தகத்தில் விரிந்து கிடக்கிறது, ஒரு திரைப்படமாக உருவாவதற்கான தகுதிகளுடன்.
வெள்ளித் திரையில் மலர்ந்த விளையாட்டு வீரர்களின் கதைகள் ஒரு உற்சாக டானிக் எனலாம். கொரோனாவில் சோர்ந்து போயிருக்கும் மனங்கள் சிறப்பு பக்கங்களில் உள்ள கட்டுரைகளை வாசித்தும், அவற்றைப் பார்த்தும் உற்சாகம் பெறலாம்.
The difference between successful person and others is not a lack of strength, not a lack of Knowledge but rather a lack of will என்ற வின்ஸ் லம்போர்டியின் வார்த்தைகள் எனக்கு பிடித்தமானவை. வெற்றி பெற விரும்பும் யாவருக்கும் வரும் பக்கங்கள் பிடிக்கும்.
என்றும் உங்கள்
அந்திமழை இளங்கோவன்
ஜூன், 2020 அந்திமழை இதழ்