ஒரு தம்பதியினர் தங்கள் இரண்டு மகன்களுக்கும் அதீத செல்லம் கொடுத்து வளர்க்கிறார்கள். பெரியவனுக்கு பத்து வயது ஆகும்போது மென்மையாக வளரும் இவர்கள் வாழ்வின் கஷ்ட நஷ்டங்களைத் தாங்க முடியுமா என்ற கேள்வி தம்பதியினரின் மனதில். தொடர் யோசனை மற்றும் விவாதத்திற்குப் பின் அவர்களை டேக்வொண்டோ (Taekwondo- ITF) என்ற கொரியன் தற்காப்புக்கலை பயிற்சி மையத்தில் சேர்த்து விடுகிறார்கள்.
சில வருடங்கள் பயிற்சிக்குப் பின் பெரியவன் சில வெற்றிகளை ருசிக்கிறான். தொடர்ந்து நான்கு வருடங்களுக்கு மேல் இரண்டாமவனுக்கு முக்கிய போட்டிகளில் வெற்றி கை நழுவிக்போகிறது. நாலரை வயதில் பயிற்சியை ஆரம்பித்தவனுக்கு ஒன்பது வயதாகிவிட்டது. படிப்பில் தொடர்ந்து முதல் மூன்று இடங்களுக்குள் வெற்றிபெறும் தன்னால் ஏன் டேக்வொண்டோவில் பிரகாசிக்க முடியவில்லை என்ற சிந்தனை அந்த பிஞ்சு மனமெங்கும் நிரம்பி வழிந்தது. வகுப்பில் போட்டியாளர்கள் அனைவரும் கிட்டதட்ட ஒரே வயதுடையவர்கள். எல்லாருக்கும் ஒரே விதமாகத் தான் பாடமெடுப்பார்கள். வேண்டுமானால் சிலர் தனியாகச் சிறப்புப்பயிற்சி (டியூஷன்) எடுத்துக்கொள்ளலாம்.
ஆனால் டேக்வொண்டோவில் அப்போது 18 வயதிற்குக் கீழ் 18 - 39 வயதுவரை மற்றும் 40 - க்கும் மேல் என்ற அளவில் தங்கள் எடை மற்றும் பெல்ட் அடிப்படையில் பிரிவுகள் பிரிக்கப்பட்டிருக்கும். ஒரே எடையில் கூடுதல் வயதுடையவர்களோடு சண்டையிட வேண்டும். ஒவ்வொரு முறை வெற்றியைத் தவறவிடும்போதும் பல்வேறு காரணங்களால் நியாயப்படுத்திக்கொள்ளும் அந்தச் சிறுவன் அமைதியானான். அடுத்து வாய்ப்பு கைநழுவிப்போன போட்டிகளுக்கு பின் தனது அண்ணன் மற்றும் பயிற்சியாளரிடம் நான் என்னென்ன தப்பு செய்தேன் என்று கேட்க ஆரம்பித்தான். பின் பயிற்சியின் நேரத்தை கூட்டியதுடன் மனதை வெற்றிக்குத் தயார்ப்படுத்தினான்.
சுமார் அறுபத்திரண்டு மாதங்களுக்கு பின் தேசிய அளவிலான தங்கப் பதக்கத்தை வென்றான், அப்போது அவனது வயது பத்து. போட்டிகளில் தொடர் பின்னடைவுகளைச் சந்தித்த அந்தச் சிறுவன் தடைகளைத் தகர்த்து வெற்றிபெற்ற அனுபவத்தை வகுப்பறையில் பெறுவதற்கான வாய்ப்பு மிக குறைவு.
அவனது அப்பா அடிக்கடி Every artist was first an amateur என்ற ரால்ப் வால்டோ ( Ralph waldo Emerson) - வின் வார்த்தைகளைக் கூறுவதுண்டு.
இன்றைய இளம் தலைமுறையினரில் பலர் தோல்வியைத் தாங்கும் திராணியில்லாதவர்களாக இருப்பதற்கு, ''பிள்ளைகள் கஷ்டப்பட்டுவிடக் கூடாது,'' என்று நினைக்கும் பெற்றோர்கள் ஒரு முக்கியக் காரணம்.
ஊடகங்களில் சந்திக்க நேரிடும் தற்கொலை கதைகளின் காரணகர்த்தாவாக தோல்வியை எதிர்கொள்ள முடியாத மனங்கள் தென்படுகின்றன.
அடுக்கடுக்கான தோல்விகளைக் கடந்து வெற்றி வாகை சூடியவர்களின் வாழ்வு விட்டுச்
சென்றுள்ள தடங்களை பின் தொடர்ந்தால் தென்படும் சூத்திரங்கள்...
1. வெற்றி வாய்ப்பை இழக்கும்போது மனம் ஒருவித விரக்தியில் ஊசலாடும். இப்படி ஆகிவிட்டதே... சமூகத்தை எப்படி எதிர்கொள்வது? ஏளனமாகப் பார்ப்பார்களே என்ற சூன்ய எண்ணங்களால் மனதை நிரப்பாமல் ஒரு துடைப்பத்தால் வெளியேற்றிவிட்டு நம்முடன் நாம் சமாதானமாக வேண்டும்.
2. தோல்விக்கு யாரைக் காரணம் சொல்லலாம் என்று யோசிப்பவர் வெற்றியின் பாதையைக் கண்டடைவது சிரமம். தோல்வியடையும் நபர் தனக்குத் தானே பொய் சொல்லவே கூடாது.
3. தோல்வியைப் பொறுமையாகப் பிரித்து மேய்ந்தால் எங்கே தவறினோம்? எங்கே இடறினோம்? மேம்படுவதற்கான வாய்ப்புகள் எங்குள்ளது? வெற்றிபெற்ற எதிரணியின் சூட்சுமங்கள் என பல கோணங்கள் கண்முன் விரியும். அனேகமான நேரங்களில் இன்னும் அதிகப்படியான உழைப்பை முன்வைத்திருந்தால் (அ) இன்னென்ன தப்புகளை செய்யாமலிருந்திருந்தால் வெற்றிபெற்றிருக்கலாம் என்பது தோல்வியின் ஆய்வு சொல்லும் செய்தியாக இருக்கலாம். நாம் நம்மிடம் உண்மையாக இருப்பது அவசியம்.
4. சிகாகோவில் உள்ள உயர்நிலை பள்ளியில் தேர்வில் பெயிலாகும் மாணவர்களை 'Fail' என்று சொல்வதில்லை. 'நாட் யெட்' (Not Yet )என்று மதிப்பெண் அட்டையில் குறிப்பிடுகிறார்கள். தோல்வியுற்றான் என்று குறிப்பிடுவதைவிட இன்னும் வெற்றிபெறவில்லை என்று நாமும் நம் மாணவர்களை அழைக்கலாம்.
5. 'ஒரே விஷயத்தை திரும்பத் திரும்பச் செய்துவிட்டு முடிவை மட்டும் வெவ்வேறாக எதிர்பார்ப்பது கிறுக்குத்தனமானது' என்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் வார்த்தைகளுக்குள் வெற்றி மறைந்துள்ளது. ஆகவே முடிவை விட ஒரு விஷயத்தை எப்படிச் செய்கிறோம் என்பதில் கவனம் வையுங்கள்.
மிகமோசமான தோல்வியை தழுவிய பின் உற்சாகமாக செயல்பட்டு விஸ்வரூபமெடுத்த மனிதர்களின் சாதனைக் கதைகள் பல நம் நாட்டில் உண்டு. அதில் சில இந்த இதழில் இடம் பெற்றுள்ளன. இந்த நிகழ்வுகள் எல்லா தலைமுறையினரும் படிக்க வேண்டிய ஒன்று.
இந்த சிறப்பிதழ் ஒரு உற்சாக டானிக்!
என்றும் உங்கள்,
அந்திமழை இளங்கோவன்.
செப்டெம்பர், 2019 அந்திமழை இதழ்