வீர வெஜிடேரியனிசம்

Published on

எம்பெருமான் ஆதியிலே பூமியையும் பாதியிலே என்னையும் உருண்டையாகப் படைத்தான். பூமிக்கு எதையும் தாங்கும் இதயம் உண்டு. ஆனால் நமக்கு சதையும் வதையும் மட்டும்தான் என்பதால் சங்கடங்கள் நிறைய இருந்தன. இந்த எடைச் சனியனைக் கொஞ்சம் குறைத்துப் பார்த்தால் என்ன என்று அநேகமாக என்னுடைய இருபத்தி ஐந்தாவது வயதிலிருந்தே அவ்வப்போது நினைத்துக்கொள்வேன். ஆனால் எங்கே முடிகிறது?

நமக்கு உயரம் நாலடி என்றால் நாக்கு நாலரை அடி. இட்லிக்குக் கூட நாலு விதமாகத் தொட்டுக்கொண்டு சாப்பிட்டால்தான் உள்ளே இறங்கும். ஒரு முழுச் சாப்பாடு என்றால் அதில் நானாவித அம்சங்களும் எப்போதும் நிறைந்திருக்க வேண்டும். அள்ளித் தின்ற பஜ்ஜி பக்கோடா வகையறாக்களுக்கும் சொல்லிச் சொல்லி உள்ளே தள்ளிய ஐஸ் க்ரீம் ரகங்களுக்கும் கணக்கு வழக்கே இல்லை. சவுக்கார்பேட்டை சேட்டுக்கடை ஒன்றில் இரவு ஒன்பது மணிக்குமேல்  பாவ்பாஜி, மலாய் பால் பிரமாதமாக இருக்கும் என்று யாரோ சொன்னார்களென்று குரோம்பேட்டையில் இருந்து ஏழு மணிக்கு பஸ் பிடித்து பாரிமுனைக்குச் சென்று இறங்கி சவுக்கார்பேட்டை சேட்டுக் கடையை விசாரித்துக்கொண்டு பத்தே முக்காலுக்குப் போய் நின்று தின்றுவிட்டு, திரும்பி வர பஸ் கிடைக்காமல் மறுநாள் காலை வீடு திரும்பிய மகாத்மா அல்லது மகாபாவியாக ஒரு காலத்தில் இருந்திருக்கிறேன்.

அதெல்லாம் இருபது வயது சரித்திரம். பிறகும் ஒன்றும் பெரிதாக மாறிவிடவில்லை. சவுக்கார்பேட்டைக்குத்தான் போகவில்லையே தவிர சாப்பாட்டு விஷயத்தில் எந்தக் குறையும் எப்போதும் வைத்ததில்லை. பறித்த காய்கறிகளைவிட பொரித்த பட்சணங்களில் என் பொழுதைக் கழித்தேன். வாழைக்காய் அல்லது உருளைக்கிழங்கைப் பார்த்தால், அது காய் வகை, கிழங்கு வகை என்றே தோன்றாது. பஜ்ஜி வகை என்றுதான் புத்தி சொல்லும். எங்காவது மாவு அரைபடும் சத்தம் கேட்டால், இட்லி தோசைக்கு  அரைக்கிறார்கள் என்றுதான் சாதாரண மனிதர்களுக்குத் தோன்றும். எனக்கோ, யாரோ வடைக்கு அரைக்கிறார்கள் என்று அஞ்ஞான திருஷ்டி சொல்லும். அப்பளத்தைச் சுட்டு சாப்பிடலாம், ஒரு தப்புமில்லை என்று எத்தனையோ பேர், எத்தனையோ காலமாகச் சொல்லிவிட்டார்கள். கேட்பேனா? வாணலியில் புத்தம்புது எண்ணெய் ஊற்றி, பளிச்சென்று பொறித்தெடுத்தால்தான் எனக்கு அப்பளம், அப்பளமாகும். குழம்பு சாதம், ரசம் சாதம், தயிர் சாதம் என்று அனைத்துச் சாதங்களுக்கும் தலா இரண்டு அப்பளங்களை நொறுக்கிப் போட்டுச் சாப்பிட்டால்தான் சாப்பாடு இறங்கும்.

இதுதான் பிரச்னை என்றில்லை. இன்னும் ஏராளம் உண்டு. மோர் பிடிக்காது. தயிர் பிடிக்கும். பால் பிடிக்காது. அதன்மீது படரும் ஏடு பிடிக்கும். வெண்ணெய் பிடிக்கும். நெய் அதைவிடப் பிடிக்கும். ஐஸ்க்ரீம், ரசமலாய், பால்கோவா, அல்வா, அப்பம், அதிரசம் - கணக்கு வழக்கே கிடையாது. குலோப் ஜாமூன் பிடிக்கும், ஜாங்கிரி பிடிக்கும், ஜிலேபி பிடிக்கும். மாதம் ஓரிரு தினங்கள் மதிய உணவு சமயத்தில் கிருஷ்ணா ஸ்வீட்ஸுக்குச் சென்று கால் கிலோ மைசூர்பா வாங்கித் தின்றுவிட்டு வந்த உணவுத் தீவிரவாதியாக இருந்தவன் நான்.

நல்லவேளை சர்க்கரை நோய் வரவில்லை. ஆனால் உடலானது பணம்போல் வீங்கிக்கொண்டே போகத் தொடங்கியது. படித்த காலத்தில் பாடங்களில் ஒருபோதும் நான் வாங்காத எழுபது, எண்பது, தொண்ணூறு, நூறு வகையறா மதிப்பெண்களெல்லாம் எடை விஷயத்தில் அநாயாசமாக வந்து சேரத் தொடங்கியது. உடல் உழைப்பு என்பது அறவே கிடையாது. பத்தடி தூரத்தில் உள்ள கடைக்குப் போகவேண்டுமென்றாலும் கூசாமல் வண்டி எடுக்கிற ஜாதி. சோம்பேறித்தனத்துக்கு ஒரு அளவே கிடையாது. யாராவது கேட்டால், சிந்தனையாளர்களும் அறிவுஜீவிகளும் எல்லா ஊரிலும் எல்லா காலக்கட்டங்களிலும் இப்படித்தான் இருந்திருக்கிறார்கள் என்று எடுத்துக்காட்ட நாலு ஒப்புக்குச் சப்பாணி உதாரணங்களை எப்போதும் கைவசம் வைத்திருப்பேன்.

நான் இப்படித்தான்; இறுதிவரை இப்படித்தான் என்றுதான் கடந்த ஜூலை மாதம் வரை நினைத்துக்கொண்டிருந்தேன். இருபது வருடங்களாக மிகவும் மௌனமாக இவ்விஷயத்தில் என்னோடு துவந்த யுத்தம் செய்துகொண்டிருந்த என் மனைவி எதிர்பாராத ஒரு நாளில் ஃபேஸ்புக்கில் எனக்கு ஒரு பக்கத்தைச் சுட்டிக்காட்டினார். என் வாழ்வின் மகத்தான ஒரு பெரும் மாறுதல் நிகழ்ந்த தருணம் அது. அவர் சுட்டிக்காட்டியது, ஆரோக்கியம் நல்வாழ்வு குழுமப் பக்கம்.

உணவைப் பற்றி எனக்குக் கொஞ்சம் தெரியும். நான் சொல்லுவது சாப்பிடுவதைப் பற்றியல்ல. உணவின் அறிவியல். உணவின் வரலாறு. எந்த உணவு உடலுக்குள் சென்றால் என்ன வினை நிகழும் என்கிற விஷயம். பல வருடங்களுக்கு முன்னர் குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிகையில் உணவின் வரலாறு என்றொரு தொடர் எழுதியபோது இதற்காக நிறையப் படித்தேன். இயல்பாகவே அது எனக்குப் பிடித்த சப்ஜெக்ட் என்பதால் ஆரோக்கியம் நல்வாழ்வு குழுமத்தின் போஸ்ட்களை சுவாரசியமாகப் படிக்கத் தொடங்கினேன்.

மேலோட்டமான வாசிப்பில் என் கவனத்தை முதலில் ஈர்த்த அம்சம், இந்த ஆதி மனிதன் உணவு முறையில் சில மாறுதல்கள் செய்து சுத்த சைவ, சுத்த வைஷ்ணவ விசுவாசிகளும் இதனைப் பின்பற்ற முடியும் என்கிற நம்பிக்கையூட்டல். அதே சமயம், பேலியோவாகவே இருந்தாலும் மரக்கறி உணவு மட்டுமே உண்பவர்களுக்கு எடை இழப்பு மெதுவாகவே நடக்கும் என்கிற தகவல். அதுவும் பெண்களென்றால் சுத்தம். கீதையிலே எம்பெருமான் சொல்வது போல கடமையைச் சரியாகச் செய்துவிட்டு பலனை நினைக்காமல் படுத்துத் தூங்கடி பாரதபுத்ரி என்று பாட்டாகவே படித்தார்கள்.

இதுதான். இந்த அம்சம்தான் என்னை இதனுள் நுழைந்து பார்க்கத் தூண்டியது. காய்கறிகளால் முடியாததா? பால் பொருள்களால் முடியாததா? பேலியோவின் ஆதி புருஷனான பகவான் கிருஷ்ண பரமாத்மா வெண்ணெய், பால், தயிர், பனீர், சீஸ் மட்டுமே சாப்பிட்டு எத்தனை கிளாமராக என்.டி. ராமாராவ் போலவே இருந்திருக்கிறார்? ஒரு ஓவியத்திலாவது சிற்பத்திலாவது குண்டான கிருஷ்ணரைப் பார்த்திருக்கிறோமா? அவனால் முடியுமென்றால் இவனாலும் முடியும் என்று ஆரம்பித்ததுதான் இது.

நாற்பத்தைந்து நாள்களுக்கு முன்னர் நான் பேலியோ தொடங்குவதற்கு முதல் நாள் 110 கிலோ எடையில் இருந்தேன். என் ஸ்கூட்டரைவிட என் கனம் அதிகமாக இருந்தது. ஏறி நின்றால் எடை மெஷின் நடுங்கியது. நாலைந்து வினாடிகள் திகைத்து, மிரண்டு தறிகெட்டு ஓடி நின்று ஓர் எண்ணைக் காட்டும். அது சதவீதங்களை மென்று விழுங்கி மேலேறி நிற்கும். ஆனால் இந்த நாற்பத்தைந்து நாள்களில் என்னால் பதிமூன்று கிலோ எடை குறைக்க முடிந்திருக்கிறது என்பது நானே எதிர்பாராதது.

உணவு முறை மாற்றம் ஒன்றைத் தவிர இதற்காக நான் வேறெந்த சிறப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இயல்பில் நான் முட்டைகூடத் தொடாதவன். கல்லூரி நாள்களில் மதிப்பெண்களில் மட்டுமே அது எனக்குப் பரிச்சயம். இந்தளவு வீர வெஜிடேரியனிசம் எடைக்குறைப்புக்கு உதவாது என்று நண்பர்கள் சிலர் சொன்னார்கள். அதற்காக என்னை மாற்றிக்கொள்ள நான் எப்போதுமே தயாரில்லை.

படிப்பேன். நியாண்டர் செல்வன் எழுதும் பேகன் சமையல் குறிப்புகள், செந்தழல் ரவியின் சிவப்பு மாமிச சிலாகிப்புகள், அணில் கறி உண்ணலாமா, ஆட்டுக்காலில் அல்வா சமைக்கலாமா போன்ற பொது அறிவு வினா விடைகள் ஒன்று விடாமல் வாசித்துத் தீர்ப்பேன். ஆனால் நான் உண்ணுவது முட்டைக்கோசும் பெங்களூர் கத்திரிக்காயும் வெண்டைக்காய் சுரைக்காய் காலி ஃப்ளவர் வகையறாக்களைத்தான்.

சோறு பழகிய வாய்க்கு இதெல்லாம் ரொம்ப நாள் தாங்காது என்றார்கள். அப்படியா? எனக்கு அப்படித் தோன்றவில்லை. குழுவில் பரிந்துரைக்கும் காலிஃப்ளவர் சாதத்தை ஒருநாள்கூட நான் முயற்சி செய்து பார்க்கவில்லை. எனக்கு அது தேவைப்படவும் இல்லை.

இந்த டயட்டை ஆரம்பித்த சில நாள்களில் என் அம்மா, இது எத்தனை நாளைக்கு என்று கேட்டார். எனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. இனி இதுதான் வாழ்க்கை என்று சொன்னால் அவரால் ஜீரணிக்க முடியாது என்று எனக்குத் தெரியும். நான் பதில் சொல்லவில்லை. ஆனால் எண்ணி ஒரு மாதத்தில் எனக்கு இருந்த ரத்தக் கொதிப்புப் பிரச்னை சீரானதையும் என் நடவடிக்கை மாற்றங்களையும் பார்த்தபோது அவரது கவலை சற்றுக் குறைந்ததைக் கண்டேன். இதெல்லாம் பெரிய ரிஸ்க், உடனடி ஹார்ட் அட்டாக் என்று அச்சுறுத்திய நண்பர்கள், முன்னைக்காட்டிலும் இன்று நான் புத்துணர்ச்சியுடன் செயல்படுவதைக் கண்டு வியக்க ஆரம்பித்திருக்கிறார்கள். பத்தடி நடப்பதற்குள் நிறைமாத கர்ப்பிணிபோல் இடுப்பில் கைவைத்துவிடுகிற வழக்கம் உள்ளவன் நான். இன்று சர்வ சாதாரணமாக என்னால் நான்கு கிலோமீட்டர் வரை நடக்க முடிகிறது. இது அடுத்த மாதத்துக்குள் பத்து கிலோ மீட்டராகும். ஆறு மாதங்களில் இருபதாகலாம். அன்றைக்கு நானும் ஓர் ஆண் இலியானாவாகியிருப்பேன்!

 என் இப்போதைய பேலியோ இரவு உணவு மறுநாள் மதியம் ஒரு மணி வரை தாங்குகிறது. செல்வன், சவடன் போன்றவர்கள் இதைத்தான் மறுநாள் இரவு வரை நீட்டித்து, ஒரு நாளைக்கு ஒருவேளை உணவு என்று மாற்றிக்-கொண்டிருக்கிறார்கள். எத்தனை வேளை சாப்பிடுகிறோம் என்பது பொருட்டே அல்ல. எப்படி சாப்பிடுகிறோம் என்பதில் அடங்கியிருக்கிறது சூட்சுமம். உண்ணாதிருக்கும் நேரங்களில் நமது உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்பு எரிக்கப்பட்டு சக்தியாக மாற்றப்படுகிறது என்கிறது அறிவியல். முள்ளை முள்ளால் எடுக்கிற, நெருப்பை நெருப்பால் அணைக்கிற இந்த பேலியோ என்கிற விஞ்ஞானபூர்வமான உணவு முறை நமது ஆரோக்கியத்துக்காகவும் நல்வாழ்வுக்காகவும் மட்டுமே உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது புரிந்துவிட்டால் போதும். இந்த மனத்தடைகளைக் கடப்பது மிகவும் எளிது.

அசைவமோ சைவமோ - கொடுக்கப்படுகிற டயட்டை மட்டும் துல்லியமாகக் கடைப்பிடித்தால் ரிசல்ட் சரியாக இருக்கும். பாதாம் சாப்பிடலாம், நெய் சாப்பிடலாம், பாதாம் அல்வா சாப்பிட்டால் என்ன என்று ஆரம்பித்தால் முடிந்தது கதை. அதே போலத்தான் கோழி சாப்பிடலாம், முட்டை சாப்பிடலாம் பிரியாணி கூடாதா என்று அவ்வப்போது தொட்டுப் பார்த்தாலும் ஆட்டம் க்ளோஸ்.

வெறும் நூறு நாள்களுக்கு இதில் முழுத் தீவிரமாக, சற்றும் ஏமாற்றாமல் இருந்து பார்த்துவிடுவதில் என்ன கஷ்டம்? நூற்றி ஒன்றாவது நாளில் இருந்து இதுவே நமது வாழ்க்கை முறையாகிவிட்டிருக்கும்! அட, உயிரே போனாலும் பரவாயில்லை என்று இறங்கி அடிக்க ஆரம்பித்தால் கண்டிப்பாக உயிர் போகாது என்பதுதான் மனித வாழ்வின் ஆகப்பெரிய சூட்சுமம் என்பது உங்களுக்கா தெரியாது?

*************************************

சாம்பார்

ஊருக்கு ஊர் சாம்பார் ஒவ்வொரு தினுசாக இருக்கும். சாம்பாரின் பேரில் விருப்பமும் உண்டு; தினமும் சோற்றில் கலந்து அடிப்பதால் வெறுப்பும் உண்டு. எனவேதான் சிலருக்கு சாம்பார் என்று பட்டப்பெயர் வைத்து அழைக்கிறார்களோ? பருப்பு சாம்பார், இடி சாம்பார், இட்லி சாம்பார், வெங்காய சாம்பார் என்று சாம்பாரில் பல சாதிகள் உண்டு! இன்று சாம்பார்ப் பொடியின் ஆசிர்வாதத்தால் எல்லா சாம்பாரும் ஒரேமாதிரியாக ஆகிக் கொண்டிருக்கிறது.

காராசேவு

காரசேவின் மொறுமொறு தன்மைக்கு ஒரு முறை சாப்பிட்டுவிட்டால் யாரும் அடிமை ஆகிவிடுவார்கள். தமிழகத்தில் கிடைக்கும் சேவுகளில் சிறந்தது சாத்தூரில் கிடைக்கும் காரசேவு.  கடலை மாவில்(அல்லது பட்டாணிப்பருப்பு மாவு) செய்யப்படும் இந்த வஸ்துவுக்கு அங்கு கிடைக்கும் மிளகாய் காரணமா, தண்ணீர் காரணமா, கைமணம் காரணமா என்று விவாதமே  நடத்தலாம். ஒரு மாதம் வரை கெட்டுப்போகாமல் இருக்கும் சாத்தூர் காரசேவு ருசிக்கவேண்டிய பண்டம்.

பருப்புக் குழம்பு

பருப்பை வேகவைத்து செய்யப்படும் குழம்பு. புளியோ சாம்பார்ப்பொடியோ சேர்க்காமல் செய்யப்படுவதால் பருப்புக் குழம்பு என்று அழைக்கப்படுகிறது.  பருப்பு, வெங்காயம், பூண்டு, தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றுடன்  தண்ணீர் சேர்த்து வேக வைக்கவேண்டும். வெந்தவுடன் கொஞ்சம் சீரகம் சேர்த்து தாளித்து இறக்கினால் பட்டையைக் கிளப்பும் பருப்புக்குழம்பு தயாராகிவிடுகிறது!

தீயல்

நாஞ்சில்நாட்டுகாரர்களுக்கு தேங்காய் அதிகம் கிடைத்தாலும் கிடைத்தது, தேங்காயை பொன்னிறமாக வறுத்துப்போட்டு தீயல் என்ற குழம்பைச் செய்து நாவூறச் செய்கிறார்கள். எண்ணெச்சட்டியில் துருவிய தேங்காயை வறுத்து அதனுடன் வெங்காயம் போன்றவற்றையும் வறுத்து அரைத்து செய்த மசாலாவுடன் வற்றல்கள் அல்லது காய்கறிகளைச் சேர்த்து குமுறு குமுறென்று குமுறி செய்யப்படும் குழம்பே தீயல். இதை வத்தக்குழம்பு வகையில் சேர்ப்பவர்கள் ருசி அறியாதவர்கள். தீயலால் மயங்காத நாவும் ஒரு நாவோ?

அக்டோபர், 2016.

logo
Andhimazhai
www.andhimazhai.com