விஸ்வநாதன் ராமமூர்த்தி – நெஞ்சம் மறப்பதில்லை

விஸ்வநாதன் ராமமூர்த்தி – நெஞ்சம் மறப்பதில்லை
Published on

இசையமைப்பாளர் சி.ஆர்.சுப்பராமனின் பாசறையில் பட்டைதீட்டப்பட்டு திரை வானில் ஒளிவீசும் வைரக் கற்களாகக் கிடைத்தவர்கள்தான் மெல்லிசை மன்னர்கள் என்று இன்றும் அழியாப்புகழுடன் கோலோச்சிக்கொண்டிருக்கும் இரட்டையர்களான திரு. எம்.எஸ். விஸ்வநாதன் - (அமரர்) டி. கே. ராமமூர்த்தி.

இருவரில் இளையவர் விஸ்வநாதன்.  வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர் டி. கே. ராமமூர்த்தி. இவர்களில் டி.கே. ராமமூர்த்தி அவர்கள் இசைப் பாரம்பரியத்தில் வந்தவர். மலைக்கோட்டை கோவிந்தசாமிப் பிள்ளை என்ற புகழ் பெற்ற வயலின் ஜாம்பவானின் மகன் கிருஷ்ணசாமிப்பிள்ளை அவர்களின் மகன் தான் மலைக்கோட்டை கிருஷ்ணசாமி ராமமூர்த்தி என்ற டி. கே. ராமமூர்த்தி.

கேரளத்தில்  பாலக்காடு மாவட்டத்தில் எடப்புள்ளி என்ற சிறு கிராமத்தில் சுப்பிரமணியம் - நாராயணிக் குட்டி அம்மாள் என்ற தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர்தான் எம்.எஸ். விஸ்வநாதன்.  நான்கு வயதிலேயே தந்தையைப் பறிகொடுத்தவர்.  வறுமையின் பிடியில் இருந்து விடுபடமுடியாமல் தத்தளித்த பின்னணி. சினிமாவில் நடிக்கவேண்டும் என்ற ஆசையோடு திரை உலகில் புகுந்த விஸ்வநாதனை திரை உலகம் அப்படி  ஒன்றும் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கவில்லை.ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனத்தில் விட்டு விலகாமல் அங்கு ஆபீஸ் பாயாக - டீ கொண்டுவந்து கொடுக்கும் பணியாளாக வேலைக்கு சேர்ந்தான் சிறுவன் விஸ்வநாதன்.    இசை அமைப்பாளர் எஸ். எம். சுப்பையா நாயுடு அவர்களுடைய அன்பும் ஆதரவும் அவனுக்கு கிடைத்தது.  

ஒருமுறை “அபிமன்யு” படத்துக்காக ‘புது வசந்தமாமே வாழ்விலே‘ என்ற தீம்  சாங்குக்கு மெட்டமைக்கும் பணியில் தனது குழுவினருடன் ஈடுபட்டிருந்தார் எஸ்.எம். சுப்பையா நாயுடு.  ஆனால் எதிர்பார்த்தபடி மெட்டு அமையவில்லை.

உணவு இடைவேளைக்கு சென்று விட்டு திரும்பும் போது தனது ஹார்மோனியத்தில் இருந்து யாரோ ‘புது வசந்தமாமே வாழ்விலே’ பாடலை அருமையான மெட்டோடு பாடிக்கொண்டிருப்பதை கேட்டு பரபரப்போடு அறைக்குள் வந்த சுப்பையா நாயுடு பிரமித்துப்போனார்.  காரணம் அது ஆபீஸ் பையன் விஸ்வநாதன்!அவரை உதவியாளராக அன்று முதல் நியமித்துக்கொண்டார் சுப்பையா நாயுடு.

ஜூபிடர் நிறுவனம் கோவையில் மூடுவிழா செய்த போது தவித்துப்போன விஸ்வநாதனை சென்னைக்கு சி. ஆர். சுப்பராமனின் பாசறைக்கு அனுப்பி வைத்தார் சுப்பையா நாயுடு. இதுதான் இவர்களின் சுருக்கமான முன்கதை.

சுப்பராமன் திடீரென மரணமடைய அவர், பாதியில் விட்டுச் சென்ற படங்களை முடித்துக் கொடுக்கும் பொறுப்புகள் ராமமூர்த்தி- விஸ்வநாதன் ஆகிய இருவரிடமும்வந்து சேர்ந்தன.

கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் தயாரித்த‘பணம்’ தான் இரட்டையர்கள் இணைந்து இசை அமைத்த முதல்படம். படத்தின் டைட்டிலில் முதல் முதலாக விஸ்வநாதன்- ராமமூர்த்தி என்று கார்டு போடவைத்தவர் கலைவாணரே.

1952 முதல் 1965 வரை இரட்டையர்கள் இசை அமைப்பில் வெளிவந்த பாடல்கள் காலத்தைக் கடந்து இன்றும் நிலைத்து நிற்கின்றன. எல்லாப் பாடலுக்கும் ஒரு ராகம் கண்டிப்பாக இருக்குமல்லவா?  அதன் அடிப்படையான ஜீவன் கெட்டுவிடாமல் அதே சமயம் சற்று மாறுதலாக மேற்கத்திய இசைக் கலப்புடன் - முழுக்க முழுக்க க்ளாசிக்கலாக இல்லாமல் சற்று

நீர்க்க லைட் க்ளாசிக்கலாக மெல்லிசையாகக் கொடுக்க ஆரம்பித்த இவர்களின் பாணி அமோக வரவேற்பைப் பெற்றது. ‘மெல்லிசை மன்னர்கள்’ என்ற பட்டம் கவியரசு கண்ணதாசன் அவர்களால் வழங்கப்பட்டது.

‘விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே’ ​- (புதையல் - சி.எஸ். ஜெயராமன் - பி. சுசீலா), ‘தென்றல் உறங்கியபோதும் திங்கள் உறங்கியபோதும்’- (பெற்றமகனை விற்ற அன்னை - ஏ.எம். ராஜா - பி. சுசீலா), ‘காணவந்த காட்சி என்ன வெள்ளிநிலவே’ - (பாக்கியலட்சுமி - பி.சுசீலா), ‘மயக்கமா கலக்கமா’ ​ - (சுமைதாங்கி - பி.பி. ஸ்ரீனிவாஸ்), ‘என் வாழ்வில் புதுப்பாதை கண்டேன்’ (தங்கப் பதுமை - பி.சுசீலா)- இவை இவர்கள் இசையில் மலர்ந்த தேன்துளிகளில் சில.

அறுபதுகள் முழுக்க முழுக்க இவர்கள் வசமே வந்தது.  தமிழ் திரை இசையின் பொற்காலப் பாடல்கள் இவர்கள் காலத்தைச் சேர்ந்ததாக அமைந்தது.  ஆனால் - யார் கண்பட்டதோ?

1965-இல் இருவரும் தனித்தனியாகப் பிரிந்து தங்கள் பயணத்தைத் தொடர்ந்தார்கள். 

ஆனால் அந்தப் பிரிவிலும் இருவரும் கண்ணியம் காத்தனர்.   ஒருவரைஒருவர் குற்றம் சொல்வதோ, ஒருவர் மற்றவர் மீது புழுதி வாரித் தூற்றவோ - இருவருமே செய்யவில்லை.

பிரிந்த பிறகு விஸ்வநாதன் இசையில் வெளிவந்த முதல் படம் ‘மக்கள் திலகம்‘ எம்.ஜி. ஆர் நடிப்பில் வெளிவந்த ‘கலங்கரை விளக்கம்’.

தொடர்ந்து அன்பே வா, பறக்கும் பாவை..... என்று எம்.எஸ்.வி.யின் பயணம் வெற்றிப்பாதையில் தொடர ஆரம்பித்தது.

இவரது இசையில் வெளிவந்த உயர்ந்த மனிதன் படத்தில் இடம் பெற்ற ‘பால் போலவே வான் மீதிலே’ - என்று துவங்கும் பாடல் அதனைப் பாடிய பி.சுசீலாவுக்கு தேசிய விருதை வாங்கிக்கொடுத்தது.

இதே போல ‘சவாலே சமாளி’ படத்தில் இடம்பெற்ற ‘சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு‘ - பாடலும் பி.சுசீலாவை மீண்டும் தேசிய விருதைப் பெறவைத்தது.

‘ராமன் என்பது கங்கை நதி’ - என்ற கண்ணதாசனின் பாடலுக்கு எம்.எஸ்.விஸ்வநாதன் அமைத்த இசையும் பாடிய டி.எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், பி. பி. ஸ்ரீனிவாஸ் ஆகிய மூவரின் குரலும் தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஒரு பாடலாக தேசிய விருதைப் பெற்றது.  இடம்பெற்ற படம் ‘குழந்தைக்காக’.  பாடல் வரிகளா, வரிகளுக்கு பொருந்தும் இசையா, பாடியவர்கள் பாடிய விதமா மூன்றிலும் எது சிறந்தது என்று பட்டிமன்றமே வைக்கலாம்.

திருமண விழாக்களா?  ஒரு ‘பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலி’ - பாடல் இல்லாமல் நடைபெறவே பெறாது (படம் - நெஞ்சிருக்கும் வரை). ‘நாம் ஒருவரை ஒருவர் சிந்திப்போம் என காதல் தேவதை சொன்னாள்’ - என்ற குமரிக்கோட்டம் படத்தில் இடம்பெற்ற டி.எம்.எஸ். - எல்.ஆர். ஈஸ்வரி பாடிய பாடலின் ஆரம்பமே கேட்பவரை விஸ்வநாதன் வசப்படுத்திவிடும். டி.கே. ராமமூர்த்தி அவர்கள் தனித்து இசை அமைத்த படங்களின் பாடல்களும் அனைத்துதரப்பு மக்களையும் சென்றடையத் தவறவில்லை. ‘நெஞ்சே நீ போ சேதியைச் சொல்ல’(படம் : தேன்மழை - பி.சுசீலா). ‘வசந்த காலம் வருமோ‘ - (மறக்க முடியுமா - பி.சுசீலா - கே.ஜே. யேசுதாஸ் - இந்தப் பாடல் முழுக்க வெறும் ஹம்மிங்கிலேயே மனசை அள்ளிவிடுவார் யேசுதாஸ். )

‘அம்மனோ சாமியோ’- என்ற ‘நான்’ படத்தில் இடம்பெற்ற சீர்காழி கோவிந்தராஜன் - எல்.ஆர். ஈஸ்வரி பாடிய ஜனரஞ்சகப் பாடலை பெரியவர் ராமமூர்த்தி அவர்கள் அமைத்திருக்கும் விதம் அலாதி.

‘காதலன் வந்தான் கண்வழி சென்றான்’ (மூன்றெழுத்து) - பாடியவர் பி. சுசீலா - எஸ்.சி. பொன்னுசாமி.   இந்தப் பாடல் ஒரு அருமையான மெலடி.

‘சங்கமம்‘ படத்துக்கு இசை அமைக்கும் போது ராமமூர்த்தி ஒரு புதுமையைச் செய்தார்.  அந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களையும் சிந்துபைரவி ராகத்திலேயே அமைத்தார் அவர். ‘தன்னந்தனியாக நான் வந்தபோது’ (டி.எம்.எஸ். - பி. சுசீலா),‘ஒருபாட்டுக்கு பலராகம்’ (டி.எம்.எஸ். - எல்.ஆர். ஈஸ்வரி), ‘கண்ணனிடம் கேட்டிருந்தேன் பிள்ளை ஒன்று வேண்டும்‘ (பி.சுசீலா).இன்றும் இரட்டையர்கள் சேர்ந்தும் தனித்தும் இசை அமைத்த பாடல்களைக்  கேட்கும் நெஞ்சங்கள் அவற்றை மறப்பதே இல்லை.

(பி.ஜி.எஸ்.மணியன் ஓர் திரையிசை ஆய்வாளர்)

ஜனவரி, 2015.

logo
Andhimazhai
www.andhimazhai.com