விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் லாபம்! 

விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் லாபம்! 
Published on

இரண்டு இலட்சம் கோடியளவிற்குப் பொதுமக்கள் பணம் புழங்கும் ஒரு துறை கூட்டுறவுத்துறை. இதற்கு இலஞ்சம் வாங்காத அமைச்சரும் செயலாளரும் பதிவாளரும் நியமிக்கப்பட வேண்டும் என்பது மிகமுக்கியமாகச் செய்யவேண்டிய ஒன்று.

கூட்டுறவுச் சங்கங்களுக்கு நடைபெற்ற தேர்தல்களில் பல முறைகேடுகள் நடைபெற்றதாக பல்வேறு வழக்குகள் போடப்பட்டு அவற்றை  தீர்வு செய்ய நடுவர் மன்றங்களும் அமைக்கப்பட்டுள்ளன. முறைகேடாக நடத்தப்பட்ட தேர்தல்கள் ரத்து செய்யப்பட வேண்டும். கூட்டுறவுத் தேர்தல்களை வருங்காலத்தில் ஜனநாயக முறைப்படி எவ்வித முறைகேடுகளுக்கும் இடமின்றி நடத்த வழிவகை காண வேண்டும்.

பொதுவாக ஆளுங்கட்சியினருக்குப் பதவிகள் வழங்கும் அமைப்பாக ஆட்சியாளர்கள் கூட்டுறவைப் பார்க்கும் வழக்கம் உள்ளது. அந்த கண்ணோட்டம் மாறி சமூகப் பொருளாதார முன்னேற்றத்திற்கான சிறந்த கருவி இது என்ற உணர்வுடன் செயல்பட வேண்டும். எல்லா கூட்டுறவுச் சங்கங்களிலும் அவற்றின் செயல்பாட்டில் ஈடுபாடு கொண்ட( பால் ஊற்றுபவர் தான் பால் கூட்டுறவுத் தலைவராக வர வேண்டும்; கடன் வாங்கி ஒழுங்காக கட்டி வருபவர்களில் ஒருவர் தான் கடன் சங்கத் தலைவராக வேண்டும்) உறுப்பினர்கள் மட்டுமே தேர்தலில் பங்கு கொள்ளும் நிலையை உருவாக்கினால் விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள், பால் உற்பத்தியாளர்கள், நுகர்வோர்கள்,வீடற்றோர், பணியாளர்கள் என எல்லா தரப்பு மக்களும் பயன் பெற்று தமிழ்நாடு மிகப்பெரிய முன்னேற்றத்தை விரைந்து அடையலாம்.

ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் காய்கறி பயிரிடுவோர் கூட்டுறவுச் சங்கங்கள் உள்ளன. ஆனால் இவை செயல்படாமல் உள்ளன. இவற்றைச் செயல்பட வைத்தால் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும். அதுமட்டுமல்ல, நுகர்வோருக்கும் குறைந்த விலையில் கிடைக்கச் செய்யலாம்.

உதாரணத்துக்கு இன்றைக்கு(20/03/2021) ஒட்டன் சத்திரம் பகுதியில் விவசாயிகளிடமிருந்து தக்காளி கிலோ ஒன்றுக்கு ரூ4/ என்ற விலையில் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால் சென்னையில் இன்று கிலோ ரூ12/- முதல் ரூ 25/- வரை விற்கப்படுகிறது. கூட்டுறவுச் சங்கங்களைக் களமிறக்கினால்

விவசாயிகளிடம் ரூ 7.25/- க்கு கொள்முதல் செய்து சென்னையில் ரூ 9.25/- க்கு விற்கலாம். விவசாயிக்கு ரூ 3.25 கூடுதல் வருமானம். நுகர்வோருக்கு ரூ 2.75/- மிச்சம். ஏன் இப்படிச் செய்து பார்க்கக்கூடாது?

தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் வழியாக கடன், உரம் உள்ளிட்ட இடுபொருள்கள் விவசாயிகளுக்கு வழங்கப் படுகின்றன. விவசாயிகளின் விளை பொருட்களையும் அந்த சங்கங்களே கொள்முதல் செய்தால் என்ன? கொள்முதல் செய்தவற்றை வட்டார அளவில் இருக்கும் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களில் சேமித்துப் பதப்படுத்தி பின்னர் மாவட்டத் தலைநகரங்களில் உள்ள சிந்தாமணி, காமதேனு போன்ற கூட்டுறவு சூப்பர் மார்க்கெட்கள் வழியாக விற்கலாம். இதனால் விவசாயிகளுக்கும் நல்ல விலை கிடைக்கும்; நுகர்வோருக்கும் நியாயமான விலையில் தரமான பொருட்கள் கிடைக்கும். ஆவின் என்ற கூட்டுறவு நிறுவனம் இருப்பதால் தனியார் பால் நிறுவனங்களால் அதிக விலைக்கு விற்க முடிவதில்லை. அது போன்று விவசாய விளை பொருட்களையும் தனியாரால் அதிக விலைக்கு விற்க முடியாத நிலையை உருவாக்கலாம்.

தமிழ்நாட்டில் இருக்கும் கூட்டுறவுச் சர்க்கரை ஆலைகள் தற்போது தொழில்துறையின் கீழ் இயங்குகின்றன. இவற்றைப் பிற மாநிலங்களைப் போன்று கூட்டுறவுத்துறைக்கு மாற்றி விடலாம். ஆண்டொன்றுக்குச் சுமாராக 150 கோடி ரூபாயை அரசு இந்த ஆலைகளுக்கு கடனாக வழங்கி வருவதாகத் தெரிகிறது. இருந்தபோதிலும் இந்த ஆலைகள் தொடர்ந்து நலிவுற்றே உள்ளன. இவை கூட்டுறவுத்துறைக்கு மாற்றப்பட்டால் சர்க்கரை விற்பனை, கிடங்குகள் வாடகை, புதிய வணிகப் பணிகள் என்ற விரிவாக்கப் பணிகள் மூலம் கூடுதல் வருமானம் ஈட்டி நலிவுற்ற நிலையை நீக்கி அரசிடமிருந்து இவை கடன் பெறுவதையும் நிறுத்த முடியும்.

கிராமங்களிலும் நகரங்களிலும் இன்னும் அதிக அளவில் சுய உதவிக்குழுக்களைக் கூட்டுறவு மூலம் ஏற்படுத்தி அதிக அளவில் கடன்கள் வழங்கி வறுமைக் கோட்டுக்கு கீழ் யாருமில்லை என்ற நிலையை உருவாக்கலாம்.

அரசு ஊழியர்களுக்கும், பொதுத்துறை மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கென்றே பணியாளர் கூட்டுறவுச் சிக்கனம் மற்றும் கடன் சங்கங்கள் 1700 என்ற எண்ணிக்கையில் உள்ளன. தற்போது இவற்றில் தனிநபர் கடன்களும் சிறிய அளவில் கல்விக்கடனும் அதிகபட்சமாக 15 இலட்சம் ரூபாய் வரை வழங்கப்பட்டு வருகிறது. இவற்றின் மூலம் இவர்களுக்கு வீடு கட்டும் கடனும் ஒரு கோடி ரூபாய் வரை வழங்கலாம். இதனால் இவர்கள் எளிதாகக் கடன் பெறும் வாய்ப்பும் 100% திருப்பிச் செலுத்தும் நிலையும் உருவாகும். அரசு ஊழியர்களுக்குத் தற்போது அரசே அதிகபட்சமாக 40 இலட்ச ரூபாய் வரை வீடு கட்டக் கடன் வழங்குகிறது. அதற்குப் பதிலாக ஒரு கோடி ரூபாய் வரை அரசு ஊழியர் கூட்டுறவுச் சங்கங்கள் வழியாக வழங்கினால் அரசுக்குத் தேவையற்ற வேலைப்பளு குறைவதோடு ஊழியர்களுக்கும் கூடுதல் தொகை கிடைக்கும்.

ஒவ்வொரு முறையும் கடன் தள்ளுபடி என்பதை அரசுகள் வழக்கமாக வைத்துள்ளன. இது மிகத் தவறான அணுகுமுறை. கூட்டுறவுச் சங்கங்களில் கடன் வாங்குபவர்களுக்கு மட்டுமே இதன் பயன் கிட்டுகிறது. இதற்குப் பதிலாக விவசாயிகளுக்கு ஆண்டு தோறும் ஏற்படும் இழப்பை ஈடுகட்டி ஊக்கத் தொகை வழங்குமளவிற்கு கூட்டுறவுச் சங்கங்களைச் செயல்படுத்த வைக்கலாம். தற்போது 12000 கோடி ரூபாயை அரசு தள்ளுபடி செய்துள்ளது. அதற்குப் பதிலாக  ஆண்டொன்றுக்கு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி அதை வைத்து ஆண்டு தோறும் கடன் வாங்காத விவசாயிகளுக்கும் சேர்த்து, விளைச்சல் குறைவு, வறட்சி, வெள்ளம் போன்றவற்றால் ஏற்படும் இழப்புகளுக்கு ஈடும் ஊக்கத்தொகையும் வழங்கலாம். இதனால் பலர் விவசாயம் செய்ய முன் வருவதோடு வேளாண் உற்பத்தியும் பெருகும். கூட்டுறவுச் சங்கங்களின் நிர்வாகக் குழுவை வைத்தே எளிமையான முறையில் இழப்பீடு வழங்கும் வழிவகைகளை ஏற்படுத்தலாம்.

வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்களிலும் விற்பனைச் சங்கங்களிலும் கிடங்கு வசதிகள் ஏராளமாக உள்ளன. இந்த கிடங்குகளை முழுமையாகப் பயன்படுத்தி அறுவடை முடிந்து நல்ல விலை கிடைக்கும் வரை வேளாண் விளைபொருட்களைச் சேமித்து வைக்கலாம். தேவைப்படின் இந்தத் தானியங்களுக்கு ஈட்டுக் கடன் பெற்றுக் கொள்ளலாம். இதை விரிவாக எடுத்துச் சொல்லி கிராமங்களில் முழு வீச்சாகச் செயல்படுத்தினால் மூன்றே ஆண்டுகளில் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாகும். அம்பானியும் அதானியும் இங்கு எட்டிக்கூட பார்க்க மாட்டார்கள். ( கட்டுரையாளர்,  ஓய்வுபெற்ற கூட்டுறவுத் துறை கூடுதல் பதிவாளர்)

 ஏப்ரல், 2021

logo
Andhimazhai
www.andhimazhai.com