வில்லப்பா

வில்லப்பா
Published on

பி.எஸ்.வீரப்பா

.. ஹா.. என்கிற அட்டகாசமான சிரிப்பு, திரையில் தோன்றுகையில் கொடூரமான வில்லத்தனம், கணீரென்ற ஒரு குரல்... பி.எஸ்.வீரப்பாவை மறக்க இயலுமா? தமிழ் சினிமாவின் கருப்பு வெள்ளைக் காலகட்டத்தில் ராஜா-ராணி கதைகள் என்றாலே பி.எஸ்.வீரப்பாதான் வில்லன். அவருடைய அட்டகாசமான வில்லன் சிரிப்பு எதிரொலிக்காத திரை அரங்குகளே இல்லை.

1914-ல் காங்கேயம் அருகே உள்ள சிவன்மலையில் சின்னப்ப முதலியார், பாப்பம்மாள் தம்பதியரின் மகனாகப் பிறந்தவர் வீரப்பா. குடும்பம் ஏழ்மை நிலையில் இருந்ததால் பொள்ளாச்சிக்கு இடம்பெயர்ந்து வணிகத்தில் ஈடுபட்டது. ஓரளவு வளர்ச்சியையும் அடைந்தது. வீரப்பாவுக்கு சின்னவயதிலேயே நடிப்பு மோகம் உருவாகிவிட்டது. பெரிய சாகசவீரனாக படங்களில் நடிக்க ஆசை. 1930-ல் அவருக்கு வீரலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்துவைத்தார்கள். குடும்ப வியாபாரத்தைப் பார்த்துவந்தாலும் நடிப்பின் மீதான ஆசை போகவில்லை. 1938-ல் நண்பர்களுடன் இணைந்து ஸ்ரீதேவிகான சபா என்ற நாடகக் குழுவைத் தொடங்கினார். உமா மகேசன் என்ற நாடகத்தையும் அரங்கேற்றினார்கள்.

திரை உலகில் அவருக்கு வாய்ப்பு அவ்வளவு எளிதாகக் கிடைக்கவில்லை. பெரும்போராட்டம்தான். அவர் தான் நடித்த முதல் படமாக அசந்தாஸ் கிளாசிக்கல்ஸ் தயாரிப்பான மணிமேகலையைத்தான் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். அதில் கதாநாயகனின் தோழன் சொக்கன் என்ற பாத்திரம் அவர் ஏற்றார்.

பின்னர் இயக்குநர் ரகுநாத் இயக்கிய சீதா ஜனனம் (1941) படத்தில் இந்திரனாக வேடம் ஏற்றார். அதற்கு அடுத்து இரண்டாண்டுகள் எந்தப் படமும் இல்லை. அடுத்து ரகுநாத் மீண்டும் உதயணன் படத்தில் வாய்ப்பளித்தார். இயக்குநர் ராஜா சந்திரசேகர் ஸ்ரீமுருகன் படத்தில் நடிக்க வைத்தார்.

இந்த படங்களில் வீரப்பாவின் தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ற பாத்திரங்கள் இல்லையென்பதால் சோபிக்க முடியவில்லை. ஆனால் 1948-ல் அவருக்கு தியாகராஜ பாகவதரின் ராஜமுக்தி படத்தில் சேனாதிபதி வீரசிம்மன் என்ற பாத்திரம் கிடைத்தது. அது அவருக்கு புகழை ஈட்டித் தந்தது.

மருதநாட்டு இளவரசி, இதயகீதம் போன்ற படங்கள் வெளிவந்து வீரப்பா வில்லப்பாவாக பெரும் பேர் பெற்றார். ஜெனோவா, நாம், சொர்க்கவாசல் போன்ற படங்களும் அவர் நடித்தவற்றில் குறிப்பிடத்தக்கவை.

காவேரி, உலகம் பலவிதம், மன்னாதிமன்னன், நாடோடி மன்னன், அலிபாபாவும் நாற்பது திருடர்களும், பூலோக ரம்பை, சக்கரவர்த்தித் திருமகள், மகாதேவி, நிலாவுக்கு நிறைஞ்ச மனசு, பானைபிடித்தவள் பாக்கியசாலி, பிள்ளைக் கனியமுது என அவரது பெரும் பட்டியல்.

சபாஷ் சரியான போட்டி என வைஜயந்தி மாலாவுக்கும் பத்மினிக்கும் நடக்கும் போட்டி நடனத்தை அவர் வஞ்சிக் கோட்டை வாலிபனில் சாய்ந்து அமர்ந்து ரசிக்க ஆரம்பிக்கும் காட்சி தமிழ் சினிமாவின் மிகப்பெரிய காவிய தருணங்களில் ஒன்றாக நிலைத்திருக்கிறது.

வீரப்பா எம்.ஜி.ஆருடன் நெருங்கிப் பழகியவர். அவர் தனக்கு வாள் சண்டை போட முதலில் பயிற்சி அளித்தவர் எம்.ஜிஆர்தான் என்று குறிப்பிட்டுள்ளார். ஸ்டண்ட் சோமு அதற்கு அடுத்ததாக வாள் பயிற்சி அளித்தாராம்.

பல படங்களைத் தயாரித்த மேகலா பிக்சர்ஸ் முதலில் மு.கருணாநிதி, காசிலிங்கம், எம்ஜிஆர் மற்றும் பி.எஸ்.வீரப்பா ஆகியோர் இணைந்து உருவானதுதான்.

பி.எஸ்.வி பிக்சர்ஸ் என்ற பெயரிலும் மகன் ஹரிகரன் பெயரிலும் வீரப்பா படங்களும் தயாரித்துள்ளார். வீரக்கனல், ஆனந்த ஜோதி போன்ற படங்கள் குறிப்பிடத் தக்கவை.

வில்லனாகவே நடித்து ரசிகர்களை பெருமளவுக்கு திரையில் அச்சுறுத்தி வந்தாலும் வீரப்பா பெரும் பண்பாளர். எந்த சர்ச்சைக்கும் போகாதவர்.

அவரது புகழ்பெற்ற வில்லன் சிரிப்பு ராஜமுக்தியில் அறிமுகமாகி, வஞ்சிக் கோட்டை வாலிபனில் உச்சகட்ட புகழை அடைந்தது. அவரது சிரிப்பை வைத்தே பலர் அடையாளம் காணப்பட்டார்கள். அவர் சிரிப்பதற்காக ரசிகர்கள் காத்திருந்தார்கள்.

‘மணந்தால் மகாதேவி இல்லையென்றால் மரணதேவி’ போன்ற புகழ் பெற்ற வசனங்களை அவர் அழுத்தந்திருத்தமாகப் பேசுகையில் அரங்குகளே அதிரும். வீரக்கனல் படத்தில் வில்லன் அரசனாக நடிப்பவர் பின்னர் உண்மை தெரிந்து நல்லவராக நடிப்பார்.

இவர் முற்றிலும் மாறுபட்டு முழுக்க முழுக்க குணச்சித்திர வேடத்தில் நடித்த ஒரு படமும் உண்டு.

உச்சிக் குடுமி வைத்து மூக்கில் புல்லாக்கு அணிந்து தியாகமே உருவாக அப்பாவி கண்ணாயிரமாக நடித்த ஒரு படம் அது. பெயர் இருமனம் கலந்தால் திருமணம்.

ஜூன், 2014.

logo
Andhimazhai
www.andhimazhai.com