வில்லன்கள்

வில்லன்கள்
Published on

சத்யராஜ், ரகுவரன், பிரகாஷ்ராஜ் இல்லாத  காக்கிச்சட்டை, பாட்ஷா, கில்லியை உருவகம் செய்துபாருங்கள்.

தமிழ் சினிமாவின் முக்கியமான வெற்றிப் படங்களுக்கு வில்லன்கள் அதிகப்படியான பங்களிப்பைத் தந்துள்ளனர்.ஒரு திரைக்கதையில் வில்லத்தனத்தை சரியாக பின்னிவிட்டால் வெற்றி நிச்சயம். கதாநாயகர்களின் பிம்பங்களை ஊதி பெரிதாக்க உழைப்-பவர்-களில் முதலிடம் வில்லன்களுக்கு தான்.

ஆஜானுபாகுவான உடல்வாகு, அரிவாள் மீசை, மொட்டைத் தலை அடியாள்களுக்கு நடுவே வித்தியாசமான கெட்டப்புகளுடனிருந்த சினிமா வில்லன்கள் தற்போது உருமாறி ஒருவித சைக்கோ மேனரிசத்தோடு வலம் வருகிறார்கள்.

நம் நிஜவாழ்வில் வில்லத்தனம் பண்ணுபவர்களில் பலர் இனங்காணவே முடியாதவர்களாகவே இருக்கிறார்கள்.

விரும்பிய பெண்ணிற்காக உயிர் நண்பனை கொல்லும் ‘மூன்றுமுடிச்சு’ ரஜினி, சாதி மத பற்றால் காதலை எதிர்க்கும் ‘அலைகள் ஓய்வ-தில்லை’ தியா-கராஜன், மனைவியின் அழகான தங்கையை அடையத் துடிக்கும் ‘ஆசை’ பிரகாஷ்-ராஜ், கொலையை பார்த்துவிட்ட சாட்சியான சிறுவனை கொல்லத் தரத்தும் ஊனமுற்ற ‘பூவிழி வாசலிலே’ ரகுவரன், வேலையில்லா அப்பாவி கமலை பயன்படுத்தி தன் காரியங்களை சாதித்து விட்டு துக்கிஎறியும் அரசியல்வாதியான ’சத்யா’ கிட்டி, அந்தஸ்து உயர்ந்தபின் அனுபவித்த பெண்ணை திருமணம் செய்யமறுக்கும் ‘அமைதிப்-படை’ சத்யராஜ், பெண் மோகத்தால் சந்தேகத்திற்கிடமின்றி கொலைவெறியுடன்  நடமாடும் ‘அஞ்சாதே’ பிரசன்னா, மனைவியை சந்தேகப்பட்டு பாத்டப்பில் கொல்லும் ’ஈரம்’ நந்தா, புகழ் பெற்ற தொழில் அதிபராக நடமாடிக்கொண்டு சமூகவிரோத காரியங்கள் செய்யும் ‘சிங்கம் 2 ’ரகுமான் போன்ற  வில்லன்களை நாம் அன்றாட வாழ்வில் பலமுறை எதிர்கொள்கிறோம் அவர்களைப் பற்றி அறியாமலே.

சில சாதுவான குணச்சித்திர வேடத்தில் நடிக்கும் மனிதர்கள் மிகக் கொடூரமான வில்லன்களாகவும் வந்ததுண்டு. தர்மயுத்தம் மற்றும் பல படங்களில் தேங்காய் சீனிவாசன், அபூர்வ சகோதரர்கள் படத்தில் நாகேஷூம் ஒரிஜினல்  வில்லன்களை தூக்கிசாப்பிட்டார்கள்.

மச்சான் மாப்பிள்ளைக்கு நடுவே ‘ஈகோ’வே வில்லனாக உள் புகுந்து ஆட்டும் ‘கிழக்கு சீமையிலே’ போன்ற கதைகள் நமது குடும்பங்களில் அதிகரித்து வருகிறது.

வில்லன் கதாபாத்திரங்களை மிகவும் சுவாரசியமானதாக மாற்றியதில் ரஜினிக்கும், சத்யராஜ்க்கும் பெரும் பங்கு உண்டு. இவர்களது வில்லத்தன கதாபாத்திரங்கள் எப்போதும் தோல்வியையே தழுவது ஆறுதலான விஷயம்.

வில்லன்களாக நடிப்பவர்களில் அனேகர் அக்மார்க் யோக்கியர்களாக வாழ்ந்தவர்கள்.

இனி நூறு ஆண்டுகால தமிழ் திரையுலகை வெற்றி-கரமாக நகர்த்திய, நடுங்கவைத்த உத்தம வில்லன்களின்  சுவாரசியங்கள்

அந்திமழை இளங்கோவன்

ஜூன், 2014.

logo
Andhimazhai
www.andhimazhai.com