தமிழ்ப் படங்களில் எதிர்மறையான பாத்திரங்கள் ஏற்று நடித்தவர்களில் எம்.ஆர். ராதா எனக்குப் பிடித்தமானவர். மதுரைப் பக்கம் அவர் நாடகம் நடத்த வரும்போதெல்லாம் எந்த நாடகமும் முழுசாக நடந்துமுடிந்தது இல்லை என்று எனக்குச் சொல்லியிருக்கிறார்கள். என் தாத்தா சோலை மலையும் எம்.ஆர்.ராதாவும் நெருக்கமானவர்கள். பல படங்களில் எம்.ஆர்.ராதா பேசிய வசனங்களை அவர் கேட்டுக் கொண்டதன் பேரில் தனது பெயர் வராவிட்டாலும் கூட என் தாத்தா அவருக்காக செழுமைப் படுத்திக் கொடுத்திருக்கிறார். அவர் பேசும் வசனங்கள் பலமுறை என் தாத்தா பேசுவதுபோல் இருந்தததை உணர்ந்திருக்கிறேன். அவரது நாடகங்கள் பலவற்றையும் பார்த்து அவர் பேசும் டைமிங் மற்றும் துணிச்சலான நடிப்பையும், நாடகத் துக்குச் சம்பந்தமில்லாத வசனங்கள், காட்சிகள் வைத்திருப்பதையும் பார்த்து வியந்திருக்கிறேன்.
தன்னுடைய புகழ்பெற்ற நாடகமான ரத்தக்கண்ணீர்(1954) திரைப்படமாக வந்து அப்படம் பெருவெற்றியைப்பெற்ற பின்னால் எம்.ஆர்.ராதாவுக்கு என்றே பாத்திரங்களை திரையுலகில் உருவாக்க ஆரம்பித்தார்கள். எம்.ஜி.ஆர். சிவாஜி போன்ற பெரும் ஹீரோ நடிகர்களுடன் அவர் நடித்தாலும் பல நேரங்களில் அவர் அந்த நடிகர்களையே தூக்கி சாப்பிட்டுவிடுவார்.
பாகப்பிரிவினை படம் வந்து பெரிய வெற்றியைப் பெற்ற பின்னர் பாவமன்னிப்பு வந்தது. இரண்டிலும் எம்.ஆர்.ராதா பட்டையைக் கிளப்பி இருப்பார். அப்போது நடந்த சம்பவம் ஒன்றை என் தாத்தா கூறியிருக்கிறார். இந்தியில் பாகப்பிரிவினையை எடுப்பதற்காக திட்டமிட்டு படத்தை இந்தி நடிகர் சுனில்தத், பிரான், நர்கீஸ் போன்ற நடிகர்கள் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. படம் பார்த்தபின்னர் அருகிலேயே எம்.ஆர்.ராதா நடித்த பாவமன்னிப்பு படப்பிடிப்பு நடந்ததை அறிந்து அவரைப் பார்க்க வந்திருக்கிறார்கள். ராதாவிடம் உங்கள் நடிப்பு மிக அருமை என்று பாராட்டி இருக்கிறார்கள். சுனில்தத்தும் நர்கீஸும் அம்மா மகனாக நடித்த மதர் இந்தியா படம் பெருவெற்றி பெற்றிருந்தது. அவர்கள் இருவரும் காதலித்து மணம் செய்துகொண்டனர். தன்னைப் பாராட்டிய அந்த நடிகர்களிடம் ராதா “நான் மதர் இந்தியா பார்த்தேன். ரொம்ப பிரமாதமாக இருந்தது.” என்றவர் அடுத்து தன் வழக்கமான கிண்டலுக்கு வந்து, “ நாங்க தமிழ்ப்படத்தில் எங்கள் கூட அக்கா, தங்கச்சியாக நடிப்பவர்களைத் திருமணம் செய்துகொள்வோம். நீங்க அம்மாவா நடிக்கிறவங்க ளையே கட்டிக்கிறீங்களேப்பா.. நீங்க ரொம்ப பார்வர்டுய்யா!” என்றாராம். எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்திருக்கிறார்கள்.
விடுதலைக்குப் பின்னர் ஐம்பதுகளில் வந்த படங்களில் மிக முக்கியமான படங்களில் பாகப்பிரிவினையும் பாவமன்னிப்பும் முக்கியமானவை. அவ்விரண்டிலும் வில்லன் ரோல் ராதா செய்தார்.
பாகப்பிரிவினை படத்தின் கதை என்பது எங்கள் குடும்பத்தின் பழைய சம்பவம் மற்றும் பிரேம்சந்த் எழுதிய கதை ஒன்றையும் சேர்த்துத்தான் உருவாக்கியதாக அதன் வசனகர்த்தாவான என் தாத்தா சோலைமலை சொல்லியிருக்கிறார்.
அதில் சிங்கப்பூரான் என்ற ராதாவின் பாத்திரம் முழுக்க கற்பனையில் உருவாக்கப்பட்டது. அப்படம் முக்கால் வாசி எடுக்கப்பட்ட பின்னர் கதாநாயகனாக நடித்த சிவாஜி கணேசன் அவர்களே,‘இதில் நான் ஹீரோவா, ராதா அண்ணன் ஹீரோவா?’ என்று கேட்டதாகவும் அதன் பின்னர் ராதாவின் பாத்திர நீளம் கொஞ்சம் குறைக்கப்பட்டதாகவும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.
பாவமன்னிப்பு படத்தில் ஆளவந்தார் என்கிற வேஷம் ராதாவுக்கு. “என்ன சோலைமலை, நான் தி.க.காரன். எனக்குப் போய் பட்டையும் கொட்டையும் போட்டிருக்கிற வேஷத்தைக் கொடுத்திட்டீங்களே?” என்று அவர் அலுத்துக்கொண்டதாக தாத்தா சொல்லி யிருக்கிறார். அப்படத்தில் எஸ்.வி சுப்பைய்யாவை வாய்யா ஜேம்ஸு என்று அழைப்பது மிகப்பெரிய அளவில் புகழ்பெற்றிருந்தது.
எம்ஜிஆருடன் அவர் நடித்த தர்மம் தலைக்காக்கும் முதல், பெற்றால்தான் பிள்ளையா வரையிலான பல படங்களில் ராதாவின் நடிப்பைக் கண்டு ரசித்திருக்கிறேன். கறுப்பு வெள்ளைப் படகாலகட்டத்தில் எம்ஜிஆரும் ராதாவும் பாண்ட் சட்டை அணிந்து இன் பண்ணி, தலையில் தொப்பியுடன் மேற்கத்திய பாணி உடையணிந்து தோன்றும் காட்சிகள்தான் எனக்கு மனதில் சட்டென்று சித்திரமாய் நினைவுக்கு வருகின்றன.
பலே பாண்டியா, குமுதம் ஆகிய இரண்டு படங்களும் அவரது நடிப்புக்காக எனக்கு எப்போது ஞாபகம் வருபவை. எந்த வேலையும் செய்யாமல் குடும்பத்தைக் கலைப்பவராக, உதவாக்கரையாக, மோசமான வழியில் சம்பாதிப்பவராக, பல்வேறு குடும்ப சமூகக் கதைகளில் தமிழ்சமூகத்தின் அக்காலகட்டத்தின் மோசமான பாத்திரங்களைச்சித்தரித்துக் காட்டியிருக்கிறார். அவருடைய பலமே வசன உச்சரிப்புத்தான்.
பழனி படத்தில் சிவாஜி, ராதா, எஸ்.எஸ்.ஆர். பாலையா ஆகியோர் சேர்ந்துவரும் காட்சி ஒன்று வரும். இவர் அதில் கணக்கு பிள்ளையாக வருவார். முழுக்க கள்ளக் கணக்குத்தான் எழுதுவார். நிலத்தை விற்றபிறகு அதில் புதையல் இருந்துவிடும். அதை மறைப்பதற்காக பண்ணையார் பாலையாவும் கணக்குப்பிள்ளை ராதாவும் படாத பாடுபடுவார்கள்.
எந்த பாத்திரமாக இருந்தாலும் சரி அதன் மூலமாக சமூக சீர்திருத்தக் கருத்துகளை இயல்பான நடிப்புடன் எடுத்து வைக்கவும், ராதா தவறியதே இல்லை.
ஜூன், 2014.