விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பம்

ஓவியம்
ஓவியம்ஜீவா
Published on

அது ஓர் அற்புதமான அர்ரியர்ஸ் காலம். புகுமுக வகுப்பில் சயின்ஸ் குரூப்பில் சேர்த்துவிட்டு மகனை எப்படியாவது டாக்டர் ஆக்கிவிட வேண்டும் என்பது  அப்பாவின் ஆசை.

அடித்தேன் அதற்கு ஆப்பு. கழகத்தின் பாணியில் சொல்ல வேண்டுமானால் பி.யு.சி.யில் வெற்றி வாய்ப்பை இழந்தேன் என்று சொல்லலாம். அதாவது புகுமுக வகுப்பு ரிசல்ட் புட்டுகிச்சு. ஒருவழியாக அடித்துப் பிடித்து திரும்ப பரீட்சை எழுதி பாஸ் ஆகிய பின்,  சரி அதுதான் தொலையட்டும் ஆடிட்டர் ஆகவாவது ஆக்கிவிட வேண்டும் என்று பெரும் சிபாரிசோடு பி.காம்.இல் சேர்த்தியபோது அந்தக் கனவுக்கும் வைத்தேன் மெகா ஆப்பு. நொறுங்கிப் போனார் மனிதர்.

கவிதை... துணுக்கு எனக் கிறுக்கிக் கொண்டிருந்தவனுக்கு பத்திரிகை நடத்த வேண்டும் என்கிற கிறுக்கு பிடித்தாட்ட ‘‘இது ஓர் இளைஞர் இதழ்'' என்கிற சப் டைட்டிலோடு ‘‘நீ'' என்கிற மாதம் இருமுறை இதழை ஆர்ப்பாட்டமாய் ஆரம்பிக்கிறேன். விலை ஐம்பது பைசா. அதை செந்திலின் ச்சட்டாக் ஸ்கூட்டரில் வைத்துக் கொண்டு கோவை நகரின் கல்லூரிகள்தோறும் அலப்பரையாய் சுற்றி வருவேன். என்னமோ இந்த ஆயிரம் பிரதிகளில் தமிழகத்தையே தலைகீழாய் புரட்டிப் போடப் போகிறோம் என்கிற நினைப்பு வேறு. அர்ரியர்ஸ் ஒருபக்கம் பத்திரிகை மறுபக்கம்.

பத்திரிகைன்னா சும்மாவா? எவ்வளவு கடினமான வேலை அது... தலையங்கம்... சினிமா விமர்சனம்... தொடங்கி எல்லாமே டி.ராஜேந்தர் பாணிதான். அதாவது கேள்வி பதில் பகுதிக்கு நானே கேள்வியையும் கேட்டு நானே பதிலையும் எழுதுவது தொடங்கி வாசகர் கடிதத்தையும் நானே டுபாக்கூராய் சேர்த்து எழுத வேண்டிய ‘சிரமமான' வேலை.

சரி படிப்புலதான் கோட்டை விட்டுட்டான் ஒருவேளை பத்திரிகையாளனாகவாவது தேறிவிடுவான் போலிருக்கு என்று அப்பா ஆறுதலடைந்த வேளையில்தான் அந்த பயாப்ஸி ரிசல்ட் வருகிறது. அப்பாவுக்கு கேன்சர். உள்ளம் உறுதி குலையாமல் இருந்தாலும் கொடுத்த கீமோ தெரப்பி மனிதரின் உடலை உருக்கிக் கொண்டே வந்தது. மிகச் சரியாக பத்தே மாதங்களில் மூன்றே மூன்று பறவைகள் மட்டுமே வசித்து வந்த அந்தக் கூட்டிலிருந்து மூத்த பறவை மட்டும் தன்னை விடுவித்துக் கொள்கிறது. இருபத்தி இரண்டு வயதில் தகப்பனைத் தொலைத்து திக்குத் தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தேன் நான்.

அப்பா விடைபெற்ற மூன்று மாதங்களில் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இருந்து வேலையில் வந்து சேரச் சொல்லி பணி நியமன ஆணை ஒன்று வந்து வாசலில் நிற்கிறது. ஆமாம் வாரிசு வேலை. அப்பாவின் கல்விக்கும் திறனுக்கும் பல்கலையின் முதல் மூத்த கணக்கதிகாரி. நானோ கிளார்க்.

அப்புறம் நான் வாங்கி ப்ரேம் போட்டு மாட்டி வைத்திருக்கிற அரியர்சுக்கெல்லாம் துணைவேந்தர் பதவியா கொடுப்பார்கள்? அதுவும் சண்முகசுந்தரம் என்று அப்பா பெயரைச் சொன்னாலே மொத்த பல்கலைக்கழக ஊழியர்களும் அளப்பரிய நேசத் தோடும் கனிவோடும் அவரது மனித நேயம் குறித்து சிலாகிப்பார்கள். ஆனாலும் எனக்கு அங்கு பணியில் சேர விருப்பமேயில்லை.  பத்திரிகையாளன் ஆகி இந்த உலகத்தையே என் நெம்புகோலால் புரட்ட வேண்டும் என்கிற எனது கனவில் மண்... இல்லையில்லை... பெரிய பாறாங்கல்லே விழுந்தது.

கிளர்க்காகச் சேர்ந்தாயிற்று சரி. ஒரு அலுவலகம் என்றால் எப்படி இருக்கனும்... எப்படி நடக்கனும்.. என்று எதுவுமே தெரியாது. பணியில் சேர்ந்த முதல் நாள் யார் யாரோ வருகிறார்கள்...‘‘நம்ம சண்முகசுந்தரம் Son தான்...'' என்று அவரது நினைவுகளை அசைபோட்டபடி பெருமூச் சோடு திரும்புகிறார்கள். பல்கலையின் பதிவாளரே நேரில் வந்து ‘‘சண்முகசுந்தரம் பையன் தானே... அப்பா எல்லாருக்கும் உதவியா இருப்பாருப்பா... நீ அந்தப் பேரை எடுக்கனும்'' என்று சொல்லி விட்டுப் போகிறார்.

நானும் அவர் பெயரை பல்கலையின் வரலாற்றிலிருந்தே எடுத்துவிட முடிந்தவரை முயற்சி செய்கிறேன். ஊகூம்... அப்பாவின் பில்டிங் ரொம்ப ஸ்ட்ராங்.

அங்குள்ள சட்டதிட்டங்கள் எதுவும் புரிவதில்லை எனக்கு. அதுவும் கல்லூரியில் சஸ்பெண்ட்... ஸ்ட்ரைக்... பஸ் மறியல்... என்று சுற்றிக்கொண்டிருந்தவனை ‘‘ ஃபைல் பாரு'' என்று விட்டால்...? வருகைப் பதிவேட்டில் கையெழுத்துப் போட்ட முக்கால் மணிநேரத்தில் அருகிலிருந்த லாலிரோடு டீக்கடையில் இருப்பேன்.

லீவு போட வேண்டும் என்றால் முன் கூட்டியே பர்மிஷன் வாங்க வேண்டும் என்பார் துறைத் தலைவர். திடீர் பேதி வந்தால் எப்படி முன் கூட்டியே பர்மிஷன் வாங்குவது என்று யோசிப்பேன் நான். அங்கு சேரும்வரை டாக்டர்ன்னா ஊசிபோடும் டாக்டரை மட்டும்தான் தெரியும்... ஆனால் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் வாங்கும் டாக்டர்களை சுத்தமாகத் தெரியவே தெரியாது. யாரைப் பெயர்

சொல்லிக் குறிப்பிடும்போதும் முன்னதாக டாக்டர் என்று சொல்லிவிட்டே குறிப்பிட வேண்டும்.

வருகின்ற கடிதங்களை ரெஜிஸ்டரில் பதிவு செய்துவிட்டு நம்பர் போட்டு சம்பந்தப்பட்ட துறைகள்... அதன் தலைவர்கள்... அதன் பேராசிரியர்களுக்கு அனுப்பி வைக்கவேண்டும். எந்தக் கடிதம் யார் யாருக்கு என்பதை அறிந்து சம்பந்தப்பட்டவரிடம் உதவியாளர் கொண்டுபோய் கொடுப்பதற்காக அதை மடித்து மேல் மூலையில் Entomology...Pathology... S.S.R.... Dr.S.J என்றெல்லாம் எழுதி அனுப்புவது என் வேலை.

ஒரு முறை ஒரு பேராசிரியருக்கு தபாலை மடித்து அனுப்பும்போது Dr.S.K.R என்பதற்கு பதிலாக வெறும் S.K.R என்று எழுதி அனுப்பித் தொலைக்க... கட்டி ஏறிவிட்டார் மனுசன்.

‘‘நீயெல்லாம் எனக்கு சமமா..?''

‘‘டாக்டர்ன்னு போடாம வெறும் பேரை எழுதி அனுப்பற... Are you equal to me?'' என்று அவர் கத்திய கத்தலில் மொத்த டிபார்ட்மெண்ட்டே ஆடிப் போய் நிற்கிறது.

கல்லூரி காலத்தில் பிரின்சிபாலைக் கேரோ செய்தது... எகானாமிக்ஸ் புரபசர் பால்ராஜை அண்டர்வேரோடு நிற்க வைத்தது எல்லாம் நினைவுக்கு வர... ‘‘நோ டென்சன்... மை டியர் சன்... இப்ப நீ காலேஜ் ஸ்டூடண்ட் இல்ல... இங்க கிளர்க்... அதுவும் மிஸ்டர் சண்முக சுந்தரத்தோட சன்....'' என்கிற அசரீரி கேட்க... ஹாஸ்டல் ஆபீசில் போய் விழுகிறேன்.

அதுதான் அப்பா இளநிலை கணக்கதிகாரியாக பணியாற்றிய இடம். அங்கிருந்தவர்கள் எல்லாம் வயதில் சிறியவர்கள் என்றாலும் அப்பாவுக்கு மிக நெருக்கமான நண்பர்கள். அதில் வில்வமும் ஒருவர். ‘‘எனக்கு இந்த வேலையே பிடிக்கல... நான் போறேன்...'' என்று குமுறுவேன். ‘‘வேலையத்

தொலைச்சுக்காதே... பல்லக் கடிச்சுட்டு இரு... நாங்கெல்லாம் இங்க புடிச்சா இருக்கோம்?'' என்று  அவரும் மற்றவர்களும் என்னை ஆறுதல்படுத்துவார்கள்.

மூன்றாம் இதழோடு நடத்தி வந்த ‘‘நீ'' பத்திரிகைக்கு மூடு விழா நடத்தி விட்டு வேலைக்குச் சேர்ந்த நான்காவது மாதம்தான் பூவுலகின் நண்பர்கள் அமைப்பை நிறுவிய என் குருநாதர் நெடுஞ்செழியனைச் சந்திக்கிறேன். அந்தச் சந்திப்புதான் வெறும் அலுவலகப் புலம்பலிலேயே மூழ்கி... பஞ்சப்படிக்கும் பயணப்படிக்குமாய் அலைபாயும் வாழ்வில் சிக்காமல் என்னை வார்த்தெடுத்தது. எனது இரண்டாவது தகப்பனாய் வந்து வாய்த்த நெடுஞ்செழியனால்தான் சுற்றுச் சூழல்... மனித உரிமை... என பல்வேறு பிரச்சனைகளை நோக்கி எனது பார்வை விசாலமாயிற்று.

கல்லூரி காலங்களிலேயே அனைத்துக் கல்லூரி மாணவர்களையும் திரட்டி ஈழத்தின் விடுதலைக்காக ஒரிரு போராட்டங்களில் ஈடுபட்டிருந்தாலும் போராளிகளை அறிமுகம் செய்து வைத்தவர் தோழர் நெடுஞ்செழியன்தான். இது என்னை அலுவலக ஒப்பாரிகளில் இருந்து என்னை விடுவித்து

சுற்றுச் சூழல் கண்காட்சி... மனித உரிமைக்கான கையெழுத்து இயக்கம் என பல்வேறு பணிகளில் ஈடுபட வைத்தது. இதன் ஒரே Side Effect என்னவென்றால் இவைகளுக்காக அடிக்கடி லீவு போட வேண்டும் அவ்வளவுதான்.

ஹார்ட் அட்டாக் வந்தால்கூட முப்பது நாளுக்கு முன்னமே முன் அனுமதி வாங்கிவிட்டுத்தான் வரவேண்டும் என்கிற நியதிகள் கொண்ட அலுவலகச் சூழலில் இதை எப்படி சகித்துக் கொள்வார்கள்?

முதல் மூன்று மாதத்திலேயெ 12 நாள் தற்செயல் விடுப்பை எடுத்து முடித்து...

அடுத்த ஆறு மாதத்தில் அந்த வருடத்துக்கான மருத்துவ விடுப்பை காலி செய்து...

கடைசி மூன்று மாதம் சம்பளமில்லா விடுப்பில் பயணப்பட்டால் யார்தான் பொறுத்துக் கொள்வார்கள்? ஆனால் அத்தனையையும் சகித்துக் கொண்டார்கள். எனக்காக அல்ல. அப்பாவினது நற்பெயருக்காக.

ஆனாலும் கூடங்குளம் அணுமின்நிலையப் பிரச்சனை... அம்னெஸ்டி இண்டர்நேஷனல் வேலைகள்... சொந்த புத்தக வெளியீடு... ஈழ ஆதரவுப் பணிகள்... என லீவு போட்டு சுற்றிக் கொண்டிருக்கும் என்னை எப்படியாவது ‘‘திருத்தி'' விட வேண்டும் என்கிற நோக்கத்தில் பெரியகுளத்திற்கு மாற்றுகிறார் அப்பாவின் நெருங்கிய நண்பரும் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தருமான டாக்டர் ஜெயராஜ். ஆனாலும் அவர் மீது ஒரு துளி வருத்தம் கூட என்னுள் எழவில்லை. ஏனென்றால் அவருக்கும் எனக்குமான டெலிபதி அப்படி.

அலுவலகத்திற்கு ஒருவர் டீ ஷர்ட் போட்டுக் கொண்டு வந்துவிட்டார் என்பதற்காக ‘‘வேறு சட்டை போட்டு விட்டு வா'' என்று வீட்டுக்கே திருப்பி அனுப்பிய டெரர் பார்ட்டி அவர். ஆனால் நானோ மிகப் பெரிய ஜிப்பாவில் ‘‘அணு ஆயுதம் வேண்டாம்... அண்ட அமைதி வேண்டும்'' என்று ஆயில் பெயிண்ட்டில் எழுதி மாட்டிக் கொண்டு போவேன். ஓரக்கண் பார்வையில் ரசித்து விட்டு நகர்ந்து விடுவார். அலுவலகத்திலேயே ‘How Long...?'' என்று ஈழம் போஸ்டரைத் தொங்க விட்டிருப்பேன். கண்டு கொள்ள மாட்டார். நான் அழகுக்காக எதையும் அணிபவனல்ல என்பதை அவர் உணர்ந்து இருந்ததால்தான்  எனக்கு மட்டும் இந்த சிறப்புரிமை.

ஆனாலும் பெரியகுளத்திற்கு மாற்றலாகி போய் பணியில் சேர்ந்த சில மாதங்களிலேயே வழக்கம் போல் லீவைப் போட அதற்கு அங்கிருந்த ஆராய்ச்சி கல்லூரி முதல்வர் மெமோ கொடுக்க...

மெமோவுக்கு பதில் கொடுக்க...

பதிலுக்கு பதில் மெமோ கொடுக்க....

பதில் மெமோவுக்கு திருப்பியும் பதில் கொடுக்க...

விசாரணை...

சம்பளம் கட்... இங்கிரிமெண்ட் கட்... என ரணகளமாகிறது பெரியகுளம் அலுவலகம். போதாக்குறைக்கு அங்குள்ள மஸ்தூர்களுக்கு மருத்துவ செலவை மீளப் பெறுவது எப்படி? என்கிற சமாச்சாரத்தையும் சொல்லித் தர.. அதுவரையிலும் அச்செலவுகளை மீளப் பெறாதிருந்த அக் கடைநிலை ஊழியர்கள் பெறத் துவங்குகிறார்கள்.

குழப்பத்தின் உச்சகட்டத்தில் அப்பாவின் நண்பரான பல்கலைக்கழகத்தின் பதிவாளரே என்னை நேரில் அழைத்து ‘‘ஏம்ப்பா... உன்னை பெரியகுளத்திற்கு மாற்றியது உனக்கான தண்டனையா...? இல்ல அங்கிருக்கிற டீனுக்கான தண்டனையான்னே புரியலயே..? அதுசரி லாங்லீவுல சிலோனுக்குத்தானே போயிருந்தே..?'' என்று சிரித்தபடி கேட்டுவிட்டு மறுபடியும் கோவைக்கே டிரான்ஸ்பர் ஆர்டரைப் போடுகிறார்.  மீண்டும் எனது கோவை புகு காதை ஆரம்பமாகிறது.

ஆனால் இம்முறை நான் வேறு மனிதனாக மாறியிருந்தேன். காரணம் இம்முறை நான் பணிமாற்றப்பட்ட கணக்காயர் அலுவலகம். அங்கிருந்தோருக்கு தெரிந்திருந்த ஒரே மொழி : அன்புதான். அதிகாரமல்ல. அதுதான் என்னை மாற்றியது.

அங்கும் அப்பாவை நேசித்த பாக்கியராஜ்... புண்ணியராஜ் போன்ற உயர் அதிகாரிகள் அரவணைத்துக் கொண்டார்கள் என்னை. அதுவரை அலுவலகப் பணி என்றால் என்னவோ ஏதோவென்று மிரண்டு போய் வெறும் டெஸ்பாட்ச் வேலையை மட்டுமே பார்த்து வந்த நான் அதில் என்னதான் இருக்கிறது பார்த்துவிடலாம் என்று கூர்ந்து கவனிக்கத் துவங்க சகலமும் புரிபடுகிறது.

அதற்குத் துணை நின்றவர்கள் அங்கிருந்த கோபாலகிருஷ்ணன்... சின்னச்சாமி... வி.எஸ்.ஏ. போன்ற அண்ணன்களும், மனோன்மணி... பொன்னாத்தாள்...

சரஸ்வதி... கீதா.... வசந்தா போன்ற அக்காக்களும்தான். எல்லோருக்கும் செல்லப்பிள்ளை நான் தான்.

‘‘நாயைக் கூப்பிடற நேரம் நாமே வழிச்சுப் போட்டுறலாம்'' என்கிற ரீதியாக என்னைப் பார்த்த நிலை மாறி ‘‘அவன் செஞ்சா சரியாத்தான்யா இருக்கும்...'' என்று பில்லைப் பார்க்காமலேயே நான் எழுதிக் கொடுக்கும் காசோலைகளில் கையெழுத்துப் போடும் அளவுக்கு சூழல் மாறியிருந்தது. தமிழகத்தின் பிரபல வார இதழ்களில் எனது பல்வேறு தொடர்கள் வெளிவந்து கொண்டிருந்த வேளை அது.

அப்போதுதான் எதிர்பாராது வந்தது அடுத்த அதிர்ச்சி : அதுதான் மொத்த தமிழகத்தையுமே குலுக்கிய தர்மபுரியில் மூன்று மாணவிகள் எரிக்கப்பட்ட துயர நிகழ்ச்சி.

இதைக் கண்டித்து எழுந்த வேளாண் பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டம் ஒரு நாள்... இரு நாள்... என்று தொடங்கி வாரங்களைத் தாண்டிக் கொண்டிருந்தது.

தமிழகத்தின் பிரதான பத்திரிகைகளில் எனது கட்டுரைகள் வந்து கொண்டிருந்ததால் பல்கலைக் கழகத்தில் யார் போராடினாலும் என்னிடம் அவர்கள் தரப்பு நியாயத்தைச் சொல்வது வழக்கம். அது மஸ்தூர்கள் போராட்டமாக இருந்தாலும் சரி... பேராசிரியர்கள் போராட்டமாக இருந்தாலும் சரி.

ஆனால் இதை சரியாக புரிந்து கொள்ளாத போலீசின் உளவுப் பிரிவு மாணவர்கள் போராட்டத்துக்கே நான் தான் பின்னணி என்று முதல்வர் அலுவலகத்துக்குத் தகவல் அனுப்ப...

அன்று மாலையே ‘‘இதற்குப் பின்னணியில் யார் இருந்து கொண்டு தூண்டி விடுகிறார்கள் என்று எனக்குத் தெரியும்'' என்று பேட்டியளிக்கிறார் முதல்வர் கலைஞர். இத்தனைக்கும் மாணவர்கள் வைத்த கோரிக்கை என்பது ஷங்கர் சினிமா பாணியில் ‘‘முதலமைச்சர் போராட்டம் நடக்கும் இடத்துக்கே வரவேண்டும்'' என்பது போன்ற கோரிக்கை.

என்னை மையப்படுத்தி உளவுப்பிரிவு மேற்கொண்ட நடவடிக் கைகளைக் கண்ணுற்ற, போலீஸ் பீட் பார்த்துக் கொண்டிருந்த நாளிதழின் நிருபர் ஒருவர் கொந்தளித்துப் போய் கமிஷனரிடமே நேரில் சென்று ‘‘நீங்கள் விசாரணையை முடுக்கி விட்டிருக்கும் பாமரன் பின்னிருந்து தூண்டி விடும் ஆளல்ல.

தேவைப்பட்டால் முன் நிற்கக் கூடியவர்... உங்கள் புலனாய்வு தவறான திசையில் சென்று கொண்டிருக்கிறது...'' என்று வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். அதன் விளைவாக என்னைக் கண்காணிப்பதோடு நில்லாமல் மற்ற திசைகளிலும் புலனாய்வுத் துறை தன் பார்வையைப் பதிக்கிறது.

அப்போதுதான் மாணவர் விடுதியின் தொலைபேசி உரையாடல்களில் இருந்து இதற்குப் பின்னணியில் யார் யார் இருந்தார்கள் என்கிற தகவல்கள் தெரிய வருகிறது. ஆனாலும் அதற்கு முன்பாக எழுந்த உயர் அதிகார மட்டத்தின் கோபமான சீற்றத்துக்கு அடிபணியத்தானே வேண்டும் பல்கலைக் கழக நிர்வாகம்?.

அழைப்பு வருகிறது எனக்கு துணைவேந்தர் கண்ணையனிடம் இருந்து...

வணக்கம் கூறியபடி நான் உள்ளே நுழைய அவரும் வணக்கம்கூறி புன்னகைத்தபடி அமரச் சொல்கிறார். அமர்ந்த பிறகுதான் உரைக்கிறது...

நான் பல்கலைக் கழகத்தின் கடைக்கோடி ஊழியன்... அவரோ துணை வேந்தர் என்பது. திரும்பிப் பார்க்கிறேன்... என்னோடு வந்த எங்கள் சங்கத்தின் தலைவர் நின்று கொண்டிருக்கிறார். சுதாரித்துக் கொண்டு எழ எத்தனிக்க ‘‘வேணாம்... உட்காருங்க எழிற்கோ... நானும் உங்களப் போல தமிழ் உணர்வு உள்ளவன்தான்... என்ன செய்ய... மேலிருந்து நெருக்குதல்...'' என்கிறார் துணை வேந்தர் கண்ணையன்.

‘‘சார்... தங்களோட சக மாணவிகள் இறந்ததுக்காக தன்னெழுச்சியா மாணவர்கள் போராடுறாங்க... யார் தூண்டி விடாட்டியும் இது நடக்கும். அப்புறம் நம்ம பல்கலைக்கழகத்துல சயிண்டிஸ்டுக போராடுனாலும் சரி... மாணவர்கள் போராடுனாலும் சரி... அவங்க வாசிக்கிற பிரபலமான பத்திரிகைகள்ல எல்லாம் எழுதற ஒரு எழுத்தாளன்ங்குற வகையில என்னைப் பார்த்து அவங்க கோரிக்கையோட நியாயங்களப் பகிர்ந்துப்பாங்க... அவ்வளவுதான்...'' என்று நான் சொல்லி முடிப்பதற்குள் கைகளைப்  பற்றிக் கொள்கிறார் துணைவேந்தர்... ‘‘என் நிலைமையப் புரிஞ்சுக்கோங்க... ஒரு சின்ன டிரான்ஸ்பர்தான்... பக்கத்துல இருக்குற மேட்டுப்பாளையத்துக்கு... நான் போடறேன் நானே கூப்பிட்டுக்கறேன்...''

அதற்கு மேல் விவாதித்துக் கொண்டிருந்தால் மாணவர்கள் ஏதோ கொலைக் குற்றம் செய்துவிட்ட மாதிரியும்... அதனால் அதற்கும் எனக்கும் சம்பந்தமில்லையென்று கழண்டு கொள்வது மாதிரியும் இருக்கும் என அந்தக் கணத்தில் தோன்றுகிறது....

 ‘‘ஓகே சார் நீங்க சொல்ற மாதிரியே மேட்டுப்பாளையத்துல போய் ஜாயின் பண்ணிக்கறேன் சார்...'' என்கிறேன்.

எழுந்து என் கைகளைக் குலுக்குகிறார் துணைவேந்தர். எதார்த்த உலகில் ஒரு ஜூனியர் அசிஸ்டெண்ட்டை... அதுவாகப்பட்டது ஒரு கிளார்க்கை ஒரு பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் ஒரு டிரான்ஸ்பருக்காக நேரில் அழைத்து விஷயங்களை விளக்கி ஏற்றுக் கொள்ளச் சொல்வது என்பதெல்லாம் சாத்தியமா என்றால் சாத்தியமில்லைதான். ஆனால் அதை சாத்தியப்படுத்தியது அவருக்குள்ளிருந்த தமிழுணர்வும் பெருந்தன்மையும்தான். ஓரளவுக்கு எனது எழுத்தும்.

பயணமானேன் மேட்டுப்பாளையத்திற்கு. மகனை தினமும் பள்ளியில் கொண்டுபோய் விட்டுவிட்டு வருவது வழக்கம். அதிகாலைச் சூரியனை வாழ்க்கையிலேயே கண்டிராத நான் தினமும் ஆறு மணிக்கெல்லாம் மேட்டுப்பாளையத்துக்குப் பயணமாக... மகன் நகர பேருந்தில் பள்ளிக்குப் போக கற்றுக் கொள்கிறான்.

மேட்டுப்பாளைய அலுவலக சூழலே ரம்மியமாக இருந்தது.... பறவைகளின் கீதங்களும்... இயற்கைச் சூழல்களும் என்னை மெய்மறக்க வைக்கின்றன. மெய்யை மட்டுமல்ல கோவைக்கு மீண்டும் டிரான்ஸ்பர் கேட்க வேண்டும் என்கிற நினைவையும்தான்.

ஆனால் எட்டே மாதத்தில் வருகிறது மீண்டும் கோவைக்கான மாறுதல் ஆணை. அதுவும் நான் கேட்காமலேயே. மனதில்

சிகரமென உயர்ந்து நின்றார் அந்த துணைவேந்தர்.

மேட்டுப்பாளையத்தில் இருந்து டிரான்ஸ்பர் ஆகி வந்து சேர்ந்த பொறியியல் கல்லூரி அதீத ஜனநாயகபூர்வமானது. அங்கு யாரும் யாரையும் ‘‘டாக்டர்'' என்று அழைக்கத் தேவையில்லை. ஒவ்வொருவரும் பெயர் சொல்லியே அழைத்துக் கொண்டார்கள்.

பல்கலைக்கழகத்தைப் பொறுத்தவரை பணி அடிப்படையில் கண்ணுக்குப் புலப்படாத ஒரு வர்ணாசிரம வேறுபாடு உண்டு. ஆனால் ஏறக்குறைய அவ்வேறுபாடுகளைப் புறந்தள்ளி இயங்கிக் கொண்டிருந்தது வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் கல்லூரி.

போன புதிதில் எனக்கும் அங்குள்ள பேராசிரியருக்கும் இதே லீவு விஷயத்தில் உரசல் எழ ஆபத்தாந்தவனாய் வந்து குதித்தான் என் நேசிப்பிற்குரிய கல்லூரித் தோழன் கிருஷ்ணகுமார். என் வாழ்வின் வளர்ச்சியில் ஒவ்வொரு படியிலும் அக்கறை கொள்பவன் அவன். அப்பேராசிரியர் அவனுக்கு நெருங்கிய நண்பர்.

அவனே அவருக்குப் போனைப் போட்டு...‘‘புரபசர்... அவனவன் பஞ்சப்படி... பயணப்படின்னு அலைஞ்சுகிட்டு இருக்குறப்போ சமூகத்தைப் பத்தி சிந்திக்கிற இவனமாதிரி ஓராள் ரெண்டாளாவது இருக்கட்டும் விடுங்க... அவன் லீவைத்தானே அவன் எடுக்குறான் விடுங்க...''என்று கிருஷ்ணகுமார் எடுத்துச் சொல்ல மிகவும் நேசபூர்வமான சக்தியாக மாறிப்போகிறார் அப்பேராசிரியர்.

போதாக்குறைக்கு என்னை அழைத்து ‘‘ஏங்க எழில்கோ... இந்த அரைச்சம்பளத்துடன் கூடிய ஈட்டிய விடுப்பு (U E L on PA...) உங்குளுக்கு இன்னும் மிச்சம் இருக்கே போடலியா...?'' என்று ஐடியா வேறு கொடுப்பார். அப்புறம் என்ன போட்டுத் தள்ள வேண்டீதுதான் என்று விடுப்பு விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யத் தொடங்குவேன் நான்.

நான் போடாத ஒரே விடுப்பு பெரியம்மைக்காக இருந்த விடுப்பு மட்டும்தான். போட்டிருந்தால்... பெரியம்மையை முற்றாக ஒழித்து விட்டோம் என்ற அரசின் அறிவிப்புக்கு எதிரானது என்று சொல்லி என்னை உள்ளே தூக்கிப் போட்டிருப்பார்கள்.

அங்கு பணியாற்றிய வேளையில் உறுதுணையாக நின்றவர்கள் பேராசிரியர் மணியன்... ரத்தினம்... புஷ்பராஜ்... பீடி செல்வம்... பூவேந்தன்... போன்ற பேராசிரியர்களும்.. அதிகாரிகளும்...  தொழிலாள தோழர்களும்தான். எனக்கு அதிகாரியாக இருந்த தேன்மொழி அக்கா மட்டும் இல்லையென்றால் குமுதத்தில் ''படித்ததும் கிழித்ததும்'' தொடரே வந்திருக்காது.

‘‘இன்னைக்கு புதன் கிழமைதானே... இன்கம்டேக்ஸ் ஆபீஸுக்கு உடனே ஃபைல் எடுத்துட்டு கிளம்பு...'' என்று ஜாடை காட்டுவார். தொடர் எழுதக் கிளம்பிவிடுவேன் நான்.

2009 மார்ச்சில் இல் ஈழத் தோழர்களது அழைப்பின் பேரில் லண்டன் பயணம். அதற்கு பாஸ்போர்ட் எடுக்க அனுமதி... பயணத்திற்கான பல்கலைக் கழக அனுமதி... என சகலத்துக்கும் துணைவேந்தர் தொடங்கி கடைநிலை ஊழியர் வரைக்கும் மின்னலெனத் துணை நின்றார்கள்

அதே 2009 மே...

தமிழினத்தின் தலையில் இடிவிழுந்தது. இந்த இனம் தோன்றிய காலத்தில் இருந்து அன்று வரை இறங்காத பேரிடி... சந்திக்காத பெருந்துயர்... கற்பனையில்கூட சிந்தித்திராத பேரவலம் ஈழத்தில் அரங்கேற வாழும்போதே மனதால் செத்துப் போனோம்.

இனமே அழித்தொழிக்கப்படும் போது வேலையாவது... மயிராவது என்ற எண்ணம் எழ... பல்கலைக் கழகத்தை விட்டு வெளியேற முடிவு செய்கிறேன் நான். ஆனாலும்... ‘‘இப்போது அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம்... இன்னும் கொஞ்ச நாள் போங்கள்...'' என்று கவலையும் கனிவும் கொண்டு கேட்டுக் கொள்கிறார்கள் கூடுதல் பதிவாளராய் இருந்த செந்தமிழ்ச்செல்வன் போன்ற மனித நேயர்கள்.

எதையும் தடுக்கக் கையாலாகாத...  சோற்றால் அடித்த பிண்டமாய் ஓராண்டு அலுவலகம் போய்வந்து கொண்டிருந்தேன். ஒரு

கட்டத்தில்  மனம் ஒப்பாமல் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பிக்கிறேன்.

‘‘உங்களையெல்லாம் நாங்க கைக்குள்ள வெச்சு பயன்படுத்தீருக்கனும்... மிஸ் பண்ணுறோம்... உங்க ரிட்டையர்மெண்ட்டுக்கு இன்னும் பத்து வருசம் இருக்கு... போறேங்கறீங்க... ஆனாலும் உங்க விருப்பத்துக்கு குறுக்கால நிற்க விரும்பல'' என்று கொஞ்சம் வருத்தத்தோடும் கரிசனத்தோடும் கையெழுத்திட்டு அனுப்புகிறார் துறைத்தலைவர் ஜேசுதாஸ்.

விருப்ப ஓய்வு பெற்றதற்கான தொகையை வங்கியில் போட்டு விட்டதாக தகவல் சொன்னார்கள். பொதுவாக அது ஓய்வு பெற்று வரும் பணமோ... அல்லது விருப்ப ஓய்வு பெற்று வரும் பணமோ... எதுவாகிலும் இரண்டு பைகளாவது எடுத்து வருவார்கள். பணத்தினை வங்கியில் இருந்து கொண்டு செல்ல...

ஆனால் இங்கு பணமாக்க வேண்டிய லீவையெல்லாம் துடைத்தெடுத்துவிட்டு வங்கிக்குப் போனால்...?

அதிலும்... டூ வீலர் வண்டி லோன் வாங்கியதற்குப் பிடித்தது... பர்சனல் லோன் வாங்கியதற்குப் பிடித்தது... என சகல பிடித்தமும் போக வந்த பணத்தை வாங்கி ஆளுக்கு ஒரு ஜோப்பில் சொருகியபடி டீக்கடையில் ஒதுங்குகிறோம் நானும் தோழன் தங்க முருகனும்.

லீவே போடாமல் சின்சியராக வேலைக்குப் போயிருந்தால் வரவேண்டிய லட்சங்கள் இன்னும் கூடியிருக்கும்தான்... ஆனால் அதற்கு பதிலாக இந்த உலகம் முழுக்க நான் சம்பாதித்த உங்களைப் போன்ற உள்ளங்கள் என்பது அதைக்காட்டிலும் லட்சோப லட்சங்கள் என்கிற பேறு என்னைத் தவிர வேறெவருக்குக் கிடைத்திருக்கும்?

செப்டெம்பர், 2020.

logo
Andhimazhai
www.andhimazhai.com