காட்சிகள் மூலம் கதை சொல்லுவது ஒரு வகை. கதாபாத்திரங்களின் வழியாய் கதைச் சதுரங்கத்தை நகர்த்துவது மற்றொரு வகை. இந்த இரண்டு வகையும் கைவரப் பெற்றவர் கலைஞர். புதுமைப்பித்தனின் கந்தசாமிப் பிள்ளையைப் போல, ஜெயகாந்தனின் சாரங்கனைப் போல, இலக்கியத்திலும் அரசியலிலும் காலப் பெருந்தச்சனாய் கலைஞர் படைத்த பாத்திரங்கள், சந்தித்த பாத்திரங்கள், உயிர்ப்பித்த பாத்திரங்கள் எத்தனையோ! பராசக்தியில், இருபதுகளின் இளைஞனாய் இருந்து அவர் படைத்த குணசேகரன் பாத்திரம்தான் நடிகர் திலகமாய் நம்முன் விரிந்தது. அவர் பேனாமுனையில் பிறந்த ஒவ்வொரு பாத்திரமும் உயிர்ப்புள்ள பாத்திரங்கள். நம் மனசாட்சியைப் பிடித்து உலுக்கிய பாத்திரங்கள். கடவுளைக் கேள்வி கேட்ட பாத்திரங்கள். அதில் மனசைக் கவர்ந்த பாத்திரம் அவருடைய வரலாற்று நாவலான தென்பாண்டிச் சிங்கத்தின் நாயகன் வாளுக்குவேலி. யார் இந்த வாளுக்குவேலி?
பரங்கியர்களுக்கு எதிராக பகை முரசு கொட்டிய பாளையக்காரர்.
பாகனேரி நாட்டின் தலைவர்.
மறவர் குல மாணிக்கம்.
கிழக்கிந்தி கம்பெனிக்கு எதிராக
சினந்தெழுந்த சின்ன மருது, பெரிய மருது சகோதரர்களின் சகா. கைவளரி வீசுவதி கைதேர்ந்தவர்.
எப்படி இருப்பான் இந்த வாளுக்குவேலி?
கலைஞரின் வார்த்தைகளிலேயே பாருங்கள்.
‘நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வை, உதடுகளுக்கு மேலே உறை விட்டெழுந்த வாள் இரண்டை பதித்தது போல மீசை. கம்பீரத்தைக் காட்டும் விழிகள். அவற்றில் கருணையின் சாயலையும் அன்பின் பொலிவையும் கூடக் காணமுடியும்.நீண்டு உயர்ந்து வளைந்த மகுடத்தலைப்பாகை. நெடிய காதுகளில் தங்க வளையங்கள். விரிந்த மார்பகத்தில் விலைஉயர்ந்த பதக்க மணிச்சரங்கள். இரும்புத் தூண் அனைய கால்களிலும் எஃகுக் குண்டனைய புஜங்களிலும் காப்புகள். இத்தனைச் சிறப்புகளையும் சிலைவடிவிலே ‘கத்தப்பட்டு’ எனும் கிராமத்தில் இன்றைக்கும் காட்சி தருகிற தென்பாண்டிச் சிங்கமாம் வாளுக்குவேலியிடத்தே காணலாம்’.
வாளுக்குவேலி வீரம் சொல்லுகின்ற வார்த்தைகளால் அமைந்த பெயர். பாகனேரி நாட்டுக்குத் தலைவர். பாகனேர் என்பது ஒரு நாடா? இப்படிக் கேட்டிடத் தோன்றும். பல ஊர்கள் சேர்ந்தது அன்று ஒரு நாடாக விளங்கியது. அந்த ஊரின் தலைவர் அம்பலக்காரர் என்று அழைக்கப்பட்டனர். அப்படி வாழ்ந்த போர்க்குணம் மிக்க அம்பலக்காரனின் கதைதான் தென்பாண்டிச் சிங்கம்.
எண்பதுகளில் குங்குமம் இதழில் இந்தக் கதை தொடராக வந்தபோது மிகுந்த பரபரப்போடு பேசப்பட்டது. பின் இந்தக் கதையை கலைஞர் நடிகர் திலகம் சிவாஜிக்காக துள்ளி வருகுது வேல் என்ற திரைக்கதையாக வடித்தார்கள். பல காரணங்களால் துவங்கப்பட்ட அந்த திரைப்பட முயற்சி நின்று போனது. ஒரு இடைவெளிக்குப் பிறகு நான் அந்தக் கதையை
சென்னைத் தொலைக்காட்சிக்காக 26 வாரத் தொடராக தயாரித்து இயக்கினேன். இந்தத் தொடரினைப் பார்த்த எழுத்தாளர் அசோகமித்ரன், மொகலே ஆசம் படத்திற்குஇணையாக இருப்பதாகவும், எண்பதுகளின் தமிழ்த்தேசிய அரசியலை பேசுவதாக கா.சிவத்தம்பியும் விமர்சனம் எழுதியிருந்தனர். முதல் முறையாக சின்னத்திரையில் இந்தத் தொடருக்குத்தான் இசைஞானி இளையராஜா இசையமைத்தார். அப்போது அவர்,‘ஒரு கதாபாத்திரம் எப்படி உருவாக்கப்படவேண்டும் என்பதற்கு உதாரணமாக வாளுக்குவேலியின் கதாப்பாத்திரத்தை கலைஞர் உருவாக்கியிருக்கிறார். எவ்வளவு அற்புதமான தமிழ். எவ்வளவு அழகிய வரிகள். எத்தனைக் கற்பனைத் திறன். இதனை ஏன் எல்லோரும் பேசமாட்டேன் என்கிறார்கள். இவரின் ஆற்றலை பகிரங்கமாக ஏன் கொண்டாட மறுக்கிறார்கள்? அரசியல்தானே காரணம்’ என்றார். இதைப்போல ஒருமுறை என்னிடம் பேசிக்கொண்டிருந்த எழுத்தாளர் சா.கந்தசாமி ‘கலைஞர் எழுத்து, மொழியின் அலங்காரம்’ என்று அதற்கு இலக்கிய அந்தஸ்தைத் தரமறுப்பவர்கள் அதே காரியத்தில் ஈடுபடும் லா.ச.ரா.வை மட்டும் கொண்டாடலாமா?’ என்றார்.
காலத்தின் மார்பில் அழிக்க முடியாத ஒரு மறவனின் பெயராய் வாளுக்குவேலியின் பெயரை எழுதிய கலைஞரின் பெயரும் அவ்வண்ணமே நின்று நிலைக்கும். ஸ்டான்லி குப்ரிக்கின் Eyes Wide Shut படத்தை நாவலாக எழுதிய இரவல் எழுத்தாளர்கள் வேண்டுமானால் மறுக்கலாம் இவரை.
(இளையபாரதி கவிஞர், திரைப்பட இயக்குநர்)
நவம்பர், 2014.