வாலட் இல்லாத உலகு: வாழ்க வாழ்க வாலட்டுகள்

வாலட் இல்லாத உலகு:
வாழ்க வாழ்க வாலட்டுகள்
Published on

மணி ஆர்டர் என்று ஒருவிஷயம் இருப்பதே இந்தத் தலைமுறைக்குத் தெரியாது. ஆமா அதெல்லாம் இன்னும் இருக்கிறதா...

அது ஒரு காலம், எங்கோ சிற்றூரில் இருந்து சென்னையில் பிழைப்புக்கு வந்த ஒரு பையன் கஷ்டப்பட்டு வியர்வை சிந்தி வேலை பார்த்து சிறுக சிறுக சேர்த்துவைத்து ஆயிரம் ரூபாயை ஊரில் இருக்கிற பெற்றோர்க்கு அனுப்புவான். அஞ்சல் துறை உதவியோடு ஊரில் இருக்கிற பெற்றோர் அதை வாங்கிக்கொள்வார்கள்.

இப்படி நாலு வரியில் ஒரு பாராகிராபில் அந்த வேலை நடந்துவிடாது. காரணம் அந்தக்காலத்து ட்ரான்ஸாக்‌ஷன்கள் அவ்வகை. காசு சம்பாதிப்பதை விட அதைப் பகிர்வது அத்தனை கடினமாக இருந்தது. சம்பாதித்த காசை போஸ்ட் ஆபீஸுக்கு எடுத்துச்செல்ல வேண்டும். போகிற வழியில் அதை யாரும் திருடிவிடவோ அல்லது நீங்கள் தவறவிடவோ நேரிடலாம். கவனம் கவனம்... களவாணிப்பயலுக ஊரு. போஸ்ட் ஆபீஸில் பார்ம் வைத்திருப்பார்கள். அதை க்யூவில் நின்று வாங்க வேண்டும். போஸ்ட் ஆபீஸ் ஆபீசர் காபிக்கு போயிருந்தால் இன்னும் கால்மணிநேரம் கடுக்க கடுக்க கடுப்பாக நிற்க வேண்டும். கையில் மொபைல் இருந்தால் பேஸ்புக் பார்க்கலாம், ஆனால் அதெல்லாம் இல்லாத ஒரு கற்காலம். போஸ்ட் ஆபீஸிற்கு யாராவது அழகிய யுவதிகள் வந்தால் பார்க்கலாம்.

ஒருவழியாக பார்ம் வாங்கி அதை எழுதலாம் என நினைத்தால் பாக்கெட்டில் பேனா இருக்காது. பேனா கடன் வாங்கக் காத்திருக்க வேண்டும். என்னமோ உலக வங்கிக்குக் கடன் கொடுப்பவர் மாதிரி ஒற்றை ரெனால்ட்ஸ் பேனாவுக்கு சீனைப்போடுவார்கள் சில சீமான்கள். அந்த பேனாவால் பார்மை எழுதி கொண்டு போய் நீட்டினால் அதில் எதாவது பிழை கண்டுபிடித்து சொல்லுவார் ஆபீசர். ரொம்ப ஸ்ட்ரிக்ட்.

மீண்டும் புதிய பார்ம் புதிய கடன் பேனா... என ஒருவழியாக பணத்தை கட்டிவிட்டால். அந்தப்பணம் அடுத்த சில தினங்களுக்கு பிறகு ஒரு போஸ்ட்மேனால் பல கி.மீ. தூரம் சைக்கிள் மிதிக்கப்பட்டு வேகாத வெயிலில் வியர்க்க வியர்க்க அவர் அலைந்து திரிந்து சிற்றூரில் இருக்கிற நம்ம வீட்டு அட்ரஸை கண்டுபிடித்துக் கொண்டு போய் சேர்ப்பார். பாவப்பட்ட அந்த ஜீவனுக்கு காபியோ டீயோ கொடுக்கலாம். சில ஜீவன்கள் அதில் கமிஷனாக ஒரு தொகையை எடுத்துக்கொள்வதும் உண்டு!

இப்போதெல்லாம் பணப்பரிவர்த்தனை இவ்வளவு சுவாரஸ்யமாக இத்தனை ஆட்களுக்கு இடையே பயணிப்பதில்லை. நாலு முறை போனை அமுக்கினால் நாப்பதாவது நொடியில் அடுத்தவருக்கு பணம் போய்விடுகிறது. டிஜிட்டல் இந்தியாவுக்கு வணக்கம். கூகுள்பே, போன்பே, பேடிஎம், மொபிகுயிக், யோனோ முதலான அத்தனை இணைய வாலட்டுக்களுக்கும் நமஸ்காரம்.

காஞ்சனா ஒன் டூ த்ரிக்கு பிறகு இந்த கோகுல்பேய்கள்தான் இன்று இந்தியாவையே பிடித்து ஆட்டுகின்றன. அதனால்தான் மார்க்சக்கர்பெர்க் கூட வாட்ஸ்அப்பில் காசு அனுப்ப வசதி பண்ணி கொடுக்கிறார். இதுதான் எதிர்காலம். அச்சடித்த நோட்டு இனி அவசியப்படாமலே கூட போகும்.

பத்தாண்டுகளுக்கு முன்பு மொபைலிலேயே இப்படி காசுகட்டலாம் அனுப்பலாம் பெறலாம் என்று சொல்லி இருந்தால் யாருமே நம்பி இருக்கமாட்டார்கள். சயின்ஸ் பிக்‌ஷன் போலத்தான் இருந்திருக்கும். 2017 வாக்கில் நான் லண்டன் சென்று இருந்த போது, அங்கிருக்கிற பேருந்துகளில் செல்போன் மூலமாகவே டிக்கட்டுக்கு பணம் கட்டுகிற முறையை முதன்முதலாக கண்டேன். பேருந்தில் இருந்து இறங்கும்போது உங்கள் மொபைல் போனை பேருந்தின் கதவுக்கு அருகில் இருக்கிற ஒரு சென்சாரில் காட்டினால் போதும்... சொய்ய்ய்ங் காசு எடுத்துக்கொள்வார்கள் அவ்வளவுதான். என்னங்கடா இது ஜெய் ஜக்கம்மா ட்ரிக்ஸா இருக்கு என்றுதான் முதலில் தோன்றியது. ஏன்ங்க ரொம்ப டேஞ்சர் ஆச்சே, உங்க போன்ல இருந்து யாராச்சும் காசை திருடிட மாட்டாங்களா என்கிற அச்சம்தான் முதலில் வந்தது. நம்முடைய முன்னோர்கள் பல லட்சம் வருடங்களுக்கு முன்பு நெருப்பை உருவாக்க கண்டுபிடித்த போது கூட பயந்துதான் போயிருப்பார்கள் இல்லையா.. அந்த பிறவிக்குணம் போகுமா...

நான் மட்டுமல்ல எல்லோருமே 2017இல் கூகுள் பே அறிமுகமானபோது பயந்தார்கள். டெபிட் கார்டையே உபயோகிக்க தயங்குகிறவர்களுக்கு இந்த மொபைல் வழி பரிவர்த்தனை பீதியைத்தான் ஊட்டியது. ஆனால் இன்று இந்தியாவிலேயே செல்போன் மூலமாகவே நீங்கள் யாருக்கும் காசு குடுக்கலாம் வாங்கிக்கொள்ளலாம் என்பது நார்மலைஸ் ஆகிவிட்டது.

நண்பர் ஒருவர் நன்றாக திறம்பட முழுநேரமும் குடிக்கக்கூடியவர். வேலை வெட்டிக்கு போவதில்லை. முழுநேரமும் குடிப்பழக்கம்தான். முன்பெல்லாம் காசு கேட்பதாக இருந்தால் நேராக கிளம்பி அலுவலகத்துக்கோ வீட்டுக்கோ வந்துவிடுவார். வரும்போதே எதாவது ஒரு காரணத்தோடுதான் வருவார். ‘அதி வழில வண்டி பஞ்சர் கைல சேஞ்ச் இல்ல ஒரு டூ ஹன்ட்ரட் கிடைக்குமா?' என்பதாக இருக்கும். இன்னொரு சந்தர்ப்பத்தில் அவருடைய பைக் ப்ரேக்டவுன் ஆகும் இன்னொரு சந்தர்ப்பத்தில் அவருடைய பர்ஸ் தொலைந்து போயிருக்கும், இன்னொரு சந்தர்ப்பத்தில் அவசரமாக ஆட்டோவை கட் பண்ண வேண்டி இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் மனுஷன் அப்டேட் ஆகிவிட்டார். போன் அடிப்பார், ‘ப்பா... அதி தாம்பரம் பக்கத்துல பெட்ரோல் போட்டேன் இங்கே கார்ட் வொர்க் ஆகல நீ கூகுள் பேல ஒரு 500 போடேன்,' என்று அது வேற மாதிரி மாறிவிட்டது. அவருக்கு இப்போதெல்லாம் அலைச்சல் குறைந்துவிட்டது. தினமும் முப்பது பேரை தேடித்தேடி காசு கேட்பதைவிட இப்படி போனில் அழைத்து கூகுள்பேயில் ட்ரான்ஸாக்‌ஷனை முடித்துக்கொள்வது எவ்வளவு ஈஸி பாருங்க!

இவருக்கு மட்டுமல்ல, இப்படி அழைந்து திரிந்து காசு கலெக்ட் பண்ணுகிற எல்லோருக்கும் இந்த வாலட்டுகள் பெரிய வாழ்க்கையைத் தந்திருக்கின்றன. பிச்சைக் காரர்கள் கூகுள்பேயில் காசு வாங்குகிற ஜோக்குகள் கூட பழைய ஜோக்காக உணரத்தொடங்கிவிட்டோம்.

க்யூஆர் கோட் என்பது என்ன அது எதுக்கு என்றெல்லாம் கேட்டால் யாருக்குமே தெரியாது. ஆனால் இன்று பண பரிவர்த்தனைக்கு க்யூஆர் கோட் இல்லாத கடையே இல்லை. இளநீர் கடை தொடங்கி எலக்ட்ரானிக் கடைவரை எல்லா இடத்திலும் அந்த நீலநிற அட்டை ஒட்டிக்கொண்டிருக்கிறது. முன்பெல்லாம் கூகுள்பேயா என்று முகம் சுழித்த சமூகம் இப்போதெல்லாம் என்னது கூகுள் பே இல்லையா என்று அதிர்ச்சியாகி முகம்சுழிக்கிறது. கூகுள் பேயோ பேடிஎம்மோ இல்லாட்டி அந்தக்கடைக்கு ஒரு மரியாதையே இல்லை.

இந்த கூகுள் பேயை நம் யுகத்துக்கான புரட்சி என்றும் சொல்லலாம். காரணம் அது சில்லரை தட்டுப்பாட்டை குறைச்சிருக்கு. சேஞ்ச் இல்லாட்டி கூகுள் பே பண்ணிட்டு போய்ட்டே இருக்கலாம். நேரம் நிறைய மிச்சமாகுது. கையில் காசில்லாமல் வருகிற ஆள்கூட மொபைல் இல்லாமல் வெளியே வருவதில்லை. இது வியாபாரிகளுக்கு பெரிய வசதி. சின்னகடை பெரியகடை என எல்லோருமே இந்த பேய்களை ஏற்றுக்கொள்ள தொடங்கிவிட்டார்கள்.

பணத்தை பத்திரமாக வைத்திருக்க வேண்டுமே என்கிற கவலை இல்லை. எப்போதும் காசு வைத்திருக்க தேவையில்லை. இப்படியாக இந்த வாலட்டுகளால் இத்தனை நன்மைகள் இருக்கே... பரவால்லையே என்று தோன்றலாம். உலகத்துல ஓசில ஒரு விஷயம் கிடைக்குதுன்னா அதுல பல சூதுவாதுகள் இருக்கதானே செய்யும்?

இப்போது வரை இந்த வாலட்டுகள் பெரிதாக நம்மிடமிருந்து கமிஷன் பெறுவதில்லை. வியாபாரிகளிடமிருந்தும் கூட மிக அதிகமாக காசு பெறுவதில்லை. எனவே நாமும் நாலாவண்ணமும் விருப்பம்போல இந்த சேவையை உற்சாகமாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். கிட்டத்தட்ட பேஸ்புக் ட்விட்டர் வாட்ஸ்அப் போல கூகுள் பேய்க்கும் நாம் அடிமைதான். ஷேர்ஆட்டோவில் 20ரூபாய் கொடுக்கவும் கூட கூகுள் பே பண்ண ஆரம்பித்துவிட்டோமே... அப்படி இருக்க நாளைக்கே நாம் அனுப்புகிற பெறுகிற ஒவ்வொரு ரூபாய்க்கும் இருபது பைசா கமிஷன் என்று அறிவிக்கலாம்.

செர்ஜி ப்ரின்னும் லாரிபேஜும் என்ன லூசா? ஓசிலயே நமக்கு சேவை வழங்கிக்கொண்டிருக்க, சீக்கிரமே நம்மிடமிருந்து கமிஷன் அடிக்க ஆரம்பிக்க நேரிடும். ஆனால் அப்போது நாம் மொத்தமாக வாலட்டுகளோடு வாழப்பழகி இருப்போம்.

ஏப்ரல், 2022

logo
Andhimazhai
www.andhimazhai.com