வாடகை வீடு சிறப்பிதழ்

Published on

Come in my heart and pay no rent
- Samuel Lover

எதைப்பற்றிய சிறப்பிதழ்? என்பது மாதம் ஒரு முறை நாங்கள் சந்திக்கும் பெரிய சவால். இந்த மாதம், சிறப்பிதழ் பற்றிய விவாதக் கூட்டம் மேற்கு தொடர்ச்சி மலையின் மடியிலுள்ள ஒரு விடுதியில் நடந்தது. ஆளுக்கு ஒரு ஐடியா சொல்லிக்கொண்டு வந்தோம்.

என்னுடைய முறை வரும்போது வாடகை வீடுகளால் ஏற்படும் அனுபவங்கள் பற்றிய சிறப்பிதழ் செய்யலாமா என்று கேட்க ஒரு நிமிட மௌனம். பின்னர் நான் சொந்த அனுபவத்திலிருந்து சில கதைகள் சொல்ல விவாதம் சூடுபிடித்தது. ஆனாலும் அசோகனுக்கு முழு திருப்தி வரவில்லை, சந்தேகத்தோடே சென்னைக்கு ரயில் ஏறியவருக்கு இப்போது பரமதிருப்தி.

ஒருவர் தனது மனைவியின் வற்புறுத்தலால் வாடகைக்கு குடியிருந்த வீட்டிற்கு அருகிலிருந்த ஒரு வீட்டை வாங்கினார். வாங்கிய வீட்டில் ஒரு பகுதியில் குடியிருந்த பெண்மணி காலிசெய்வதற்கு ஆயிரத்து இருநூறு ரூபாய் கேட்டார். இந்த தகவலை இருதரப்புக்கும் நடுவில் இருந்தவர்கள் வாங்கியவரிடம் சொல்லாமல் நீதிமன்றத்திற்கு போனால் ஆறு மாதத்தில் காலி செய்யலாம் என்று ஆலோசனை சொன்னார்கள். இது சரியென்று பட்டதால் தலையாட்டினார் வீடு வாங்கியவர். நீதிமன்றத்தில் அந்த பெண்மணி நான் குடியிருப்பது வாடகை வீடல்ல சொந்த வீடென்று ஒரு போலி பத்திரத்தை தாக்கல் செய்ய சூடுபிடித்தது வழக்கு. பல்வேறு நீதிமன்ற வளாகங்களில் பயணித்து வெற்றிபெற்று கோர்ட்டிலிருந்து ஆமீனா வந்து காலியான அந்த வீட்டைக் கைப்பற்றித் தந்தபோது (2017) 37 வருடங்களும் சில மாதங்களும் ஆகியிருந்தது. ஒரு நல்ல நாவலுக்கான உண்மைக் கதை இது. மேற்கூறிய கதையின் நாயகன் அடிக்கடி கூறும் பஞ்ச் டயலாக்: ‘‘இந்த வீட்டை காலிசெய்ய செலவழித்த பணத்தில் பத்து வீடு வாங்கியிருக்கலாம்''.

மேல்நாட்டில் சொந்த வீடில்லாதவர்களில் பெரும்பான்மையினர் ஏன் திருமணம் செய்கிறார்கள் தெரியுமா? மொககோமா மொகோனோவானா (Mokokoma Mokhonoana)  என்ற எழுத்தாளர் சொல்லும் காரணம் ‘‘ காதலின் காரணமாக 12 சதவீதம் பேர் திருமணம் செய்துகொள்கிறார்கள். மீதி 88% பேர் வீட்டின் வாடகையின் பாதிக்குத்தான் தான் பொறுப்பு என்பதற்காக கல்யாணம் செய்துகொள்கிறார்கள்.''

வீட்டு சொந்தக்காரருக்கும் வாடகைக்கு குடியிருப்போருக்கான உறவு பங்காளிச் சண்டை போன்றது. வீட்டு சொந்தக்காரர் சற்று தள்ளியோ, வெளியூரிலோ / வெளிநாட்டிலோ இருந்தால் உறவு சுமூகமாக இருக்கும். ஒவ்வொரு மனிதனின் குணமும்  அவன் சார்ந்த சமூகத்தின் அடிப்படையில் இருக்கும் என்ற மடமையின் விளைவுதான் வீட்டுச் சொந்தக்காரர்களின் விசித்திர செயல்பாடுகளுக்கான முக்கிய காரணம்.

வாடகைக்கு குடியிருப்பவர்கள் தான் பாக்கியவான்கள்; ஏனென்றால் பிடிக்கவில்லையென்றால் வீட்டை மாற்றிக்கொண்டே இருக்கலாம். வரும் பக்கங்களில் உள்ள கதைகள் உங்களுக்கு தெரிந்த ஒரு சம்பவத்தை நினைவுபடுத்தினால் இந்த சிறப்பிதழ் வெற்றி. நினைவிற்கு வந்த சம்பவத்தை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்பட்டால் சன்மானம் உண்டு.

என்றும் உங்கள் ,

அந்திமழை இளங்கோவன்

மே, 2018 அந்திமழை இதழ்

logo
Andhimazhai
www.andhimazhai.com