வாசிப்பு இன்னும் முடிவடையவில்லை!

Published on

வாசிப்புப் பருவத்தின் ஆரம்பத்தில் படித்த ஒரு நாவல் நினைவில் இன்னும் மங்கவில்லை. டால்ஸ்டாயின் ‘புத்துயிர்' அந்த நாவல். உண்மையில் நாவலை நான் முழுவதுமாக வாசித்து முடிக்கவில்லை. அதனாலேயே நாவலின் கதை முடிவற்றுத் தொடர்கிறது.

திருடிகொலைக் குற்றம் சாட்டப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மாஸ்லோவா விசாரணைக்காக நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்படுகிறாள்.  தரித்திரக் குடும்பத்தில் பிறந்த அவள் ஒரு பிரபுக் குடும்பத்தில் பணிப்பெண் ஆகிறாள். பிரபுக் குடும்பத்துக்கு வருகை தரும் இளவரசர் டிமித்ரி இவானோவிச் நெக்லுதோவைக் காதலிக்கிறாள். அவன் மூலம் கர்ப்பம் அடைகிறாள். கைவிடப்படுகிறாள். அவனைத் தேடி நகரத்துக்கு வந்து ஏமாற்றப்பட்டதை உணர்கிறாள்.

சாப்பிள்ளையைப் பெறுகிறாள். பிழைப்புக்காக விபச்சாரி யாகிறாள். மதுவுக்கும் போதைக்கும் அடிமையாகிறாள். விபச்சார விடுதியில் நடைபெற்ற  கொலையின் பேரில் குற்றம் சாட்டப்பட்டுக் கூண்டில் நிற்கிறாள். அவளை விசாரிக்க வந்திருக்கும் நீதிமன்ற நடுவர்களில் ஒருவன் நெக்லுதோவ். அவள் இப்போது இருக்கும் நிலைக்குக் காரணம் தானே என்பதைக் குற்றவுணர்வுடன் ஒப்புக்கொள்ளும் நெக்லுதோவ் அவளை மீட்கப் பாடுபடுகிறான். கடைசியில் சைபீரியாவுக்குக் கொண்டு செல்லப்படும் மாஸ்லோவாவை மீட்க அவனும் உடன் செல்லுகிறான்.

நான் வாசித்த பிரதியில் இந்த இடத்துடன் கதை முடிந்து போயிருந்தது. தான் வஞ்சிக்கப் பட்டு நாசமாகிப் பத்தாண்டுகளுக்குப் பின்னர் தன்னைக் கைவிட்டவனைப் பற்றி மாஸ்லோவா அறிந்துகொள்வதும் இனி என்ன மிச்சம் என்ற கசப்புடன் அவனைப் பொருட்படுத்தாது இருப்பதும் தன்னுடைய பாவத்தைக் கழுவ கண்ணுக்குத் தெரியாத குற்றச் சிலுவையைச் சுமந்து நெக்லுதோவ் பின் தொடர்ந்து செல்வதுமான கதைக்குப் பின்னர் என்ன நடந்தது என்று அப்போது தெரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அந்தக் கட்டம் வரையிலான கதையே என்னை உலுக்கித் தள்ளப் போதுமானதாக இருந்தது. கால்நகம் முதல் கபாலம்வரை அக்கினி மூண்ட உணர்வைத் தந்தது. தாங்க  முடியாத கொந்தளிப்பை இன்று வரைக்கும் நிலைக்கச் செய்திருக்கிறது. புத்துயிருக்கு முன்னும் பின்னும் வாசித்த பல படைப்புகள் என்னை ஈர்த்திருக்கின்றன. புரட்டிப் போட்டிருக்கின்றன. இலக்கிய உணர்வில் மட்டுமல்ல அக அமைப்பிலும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

அவற்றையெல்லாம் முழுமையாக வாசித்தே அந்த உணர்வையும் பாதிப்பையும் அடைந்திருக்கிறேன். ஆனால் முழுக்க வாசித்திராத புத்துயிர் தந்த அனுபவம் மாறுபட்டது. ஒருவேளை அந்த நாவலை இறுதி வரிவரை வாசித்திருந்தால் அனுபவம் மாறியிருக்குமோ என்னவோ? ஆனால் வாசிக்க விரும்பவில்லை. ஏ.கே. கோபாலன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக 1962 ஆம் ஆண்டு வெளியிடப் பட்ட வாணீசரணன் தமிழாக்கம் பதினெட்டு வயதில் தந்த பேரனுபவத்தை இழக்க விரும்பவில்லை. அதன் பின்னர் தமிழிலும் (விருதை ந.ராமசாமி, ரா. கிருஷ்ணய்யா, கரிச்சான் குஞ்சு ஆகியோரின் மொழிபெயர்ப்புகள்), ஆங்கிலத் திலும் ( லூயிஸ் மாட் மொழியாக்கம்),  மலையாளத்திலுமாக (சி.கோவிந்த குறூப்)  நாவலின் மொழிபெயர்ப்புகளை வாங்கிப் பாதுகாத்துவருகிறேன். ‘நாவலை முழுமையாக வாசித்து முடி' என்று அறிவு நச்சரிக்கும். ‘வாசித்த வரை போதுமே' என்று உணர்வு  விலக்கும்.

சைபீரியாவுக்குப் போன மாஸ்லோவாவும் நெக்லுதோவும் என்ன ஆனார்கள் என்று தெரிந்து கொள்ளத் தோன்றும். அதை விடவும் அவர்கள் பாதி வழியில் நிற்கும் காட்சியே மனதுக்கு உவப்பாக இருக்கிறது. நாவலின் மூன்றாம் பாகம் எட்டாம் அத்தியாயத்துடன் என் வாசிப்பு நின்று விட்டது. அந்த அத்தியாயத்தில் மாஸ்லோவா சொல்லும் வாசகம் இன்னும் நினைவில் ஒலிக்கிறது. ‘‘இனி சொல்லுவதற்கு எனக்கு எதுவுமில்லை.'' இந்த வாசகம் ஒரு புதிராகவே மனதில் தங்கிவிட்டது. அவிழாத அந்தப் புதிர் இன்றும் சுவாரசியமா னதாகவே இருக்கிறது. வாழ்க்கையின் சில புதிர்கள் தரும் ரகசிய ஆனந்தத்தைப் போலவே இலக்கியப் படைப்பின் கண்டடையாத கதையும்  மகிழ்ச்சிகரமான மர்மமாகவே இருக்கிறது. 

ஜூலை, 2018.          

logo
Andhimazhai
www.andhimazhai.com