வாசகனின் தோழமை!

வேலூர் எஸ் லிங்கம், லட்சியவாசகர்
வேலூர் எஸ் லிங்கம், லட்சியவாசகர்
Published on

எழுத்தாளர்களுக்கும் வாசகர் களுக்குமான உறவு என்பது விசித்திரமானது. தனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளரை வாழ்நாளில் ஒருமுறை கூடச் சந்திக்காதவர்கள் நிறைய இருக்கிறார்கள். புத்தகங்களே போதும் எழுத்தாளரை நேரில் பார்க்கவிருப்பமில்லை என நினைப்பவர்கள் அவர்கள். 

ஆனால் ஒரு சிலர் புத்தகம் படித்து முடித்தவுடன் எழுத்தாளருக்குக் கடிதம் எழுதுவார்கள். தொலைபேசியில் பேசி பாராட்டுகளைத் தெரிவிப்பார்கள். சில நேரம் வீடுதேடி வந்து அன்பை பகிர்ந்து போவார்கள். ஒரு சிலர் வாசகர்களாக அறிமுகமாகி எழுத்தாளரின் குடும்ப உறுப்பினர் போலாகிவிடுவார்கள். இந்த நான்கு தளத்திலும் எனக்கு வாசகர்கள் இருக்கிறார்கள். பல்வேறு தேசங்களிலும் ஊர்களிலும் வசிக்கிறார்கள். அதிலும் குறிப்பாகப் பெண்கள் ஏராளம் என்னை விரும்பி வாசிக்கிறார்கள். மின்னஞ்சல் அனுப்புகிறார்கள். என் எழுத்தை வாசிக்கத் துவங்கி என் மனைவியோடு நெருக்கமாகி பின் தோழிகளாகி விடுகிறார்கள். 

வாசகன் என்ற சொல்லுக்குள் நானும் அடக்கம். நான் வேறு சில எழுத்தாளர்களுக்கு வாசகன். என் இலக்கிய வாழ்க்கையை ஒரு வாசகனாகத்தான் துவங்கினேன். தேடித்தேடி படித்த புத்தகங்களும் வாழ்க்கை அனுபவமுமே என்னை எழுத்தாளராக உருவாக்கியது. 

கல்லூரி நாட்களில் நான் படித்த எழுத்தாளர்கள் அத்தனை பேரையும் வீடு தேடிப் போய்ப் பார்த்து பேசித் திரும்பியிருக்கிறேன். தமிழகத்தின் முக்கிய எழுத்தாளர்கள் அத்தனை பேரையும் நானும் கோணங்கியும் சந்தித்திருக்கிறோம். ஒரு வாசகனாக இருப்பது இன்றைக்கும் எனது பெருமை. 

என் எழுத்துகள் அச்சில் வெளியான பிறகு என்னைத் தேடிவந்து சந்திக்கும் இளைஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள் அதிகமானார்கள். அதிலும் குறிப்பாக உப பாண்டவத்திற்குப் பிறகு நிறைய வாசகர்கள் வீடு தேடி வரத்துவங்கினார்கள். அது போலவே வாசகர்களை வீடு தேடி போய்ச் சந்திக்கும் எழுத்தாளனாகவே நானுமிருக்கிறேன். வாசகர்களுடன் எனக்குள்ள உறவு என்பது தோழமை. எல்லா வாசகர்களையும் எனது நண்பர்கள் என்றே கருதுகிறேன். அந்தக் காலங்களில் வாசகர் என்றால் விசிறி என்று குறிப்பிடுவார்கள். அதை நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன். வாசகன் எழுத்தாளனின் முக்கியத்துவம் உணர்ந்தவன். அது போலவே எழுத்தாளனும் வாசகனின் ரசனையும் ஈடுபாட்டினையும் உணர்ந்தவன். அந்த உறவு மேலானது. 

வாசகர்களின் வீடுகளில் தங்கியிருக்கிறேன். பிறந்த நாளை எப்போதும் வாசகர்களுடனே கொண்டாடுகிறேன். வாசகர்களில் சிலர் அவர்கள் வீட்டு விசேசம் எல்லாவற்றிற்கும் என்னைத் தவறாமல் அழைத்துவிடுகிறார்கள். என்மீது மட்டுமின்றி என் பிள்ளைகள் மீதும் அன்பு செலுத்துகிறார்கள். எந்த நாட்டிற்குப் போனாலும் யாரோ ஒருவாசகர் என்னைத் தேடி வந்து உபசரித்து, கூடவே உடனிருந்து வழிகாட்டுகிறார். பொதுவெளியில், அலுவலகங்களில், பேருந்தில், விமானத்தில் என எங்கே சந்தித்தாலும் அன்போடு உரையாடுகிறார்கள். புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். எழுத்தாளனுக்கு அதுவே ஊட்ட சக்தி. 

சில நாட்களுக்கு முன்பு ஒரு பெண் காலையிலே எனது அலுவலகத்தில் வந்து காத்திருப்பதாகப் பக்கத்து வீட்டிலிருந்து போனில் சொன்னார்கள். யார் எனக்கேட்டேன். வெளியூர் என்று மட்டுமே பதில் சொன்னார்கள். 

என் அலுவலகம் சாலிகிராமத்திலுள்ளது. அது எழுதுவதற்கான எனது இடம். அங்கே சென்ற போது வாசலில் ஒரு அறுபது வயதைக் கடந்த பெண் நின்று கொண்டிருந்தார். கையில் ஒரு பை. அது நிறையப் பழங்கள். என்னைப் பார்த்தவுடன் சிரித்தபடியே உங்க வாசகி என்றார். உள்ளே அழைத்து உட்கார சொன்னேன். பழங்களை என்னிடம் தந்துவிட்டு உங்க எழுத்துகளைப் பத்து வருஷமா படிச்சிட்டு இருக்கேன். பிள்ளைகள் அமெரிக்காவில் வசிக்கிறார்கள். ஆகவே அவர்களுடன் வசிக்கிறேன். சென்னைக்கு வந்த போது உங்களைப் பார்க்கலாம் என்று தோணியது அதனால் முகவரி விசாரித்து வந்தேன் என்றார். 

அரைமணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம். கிளம்பும் போது சொன்னார். உங்களை ஆசிர்வாதம் செய்ய வேண்டும் என்பதற்காகத் தான் வந்தேன். எனக்கு உங்கள் அம்மா வயதிருக்கும். நான் மனம் நிறைய வாழ்த்துகிறேன். எல்லா வளமும் நலமும் பெற்று சுகத்தோடு வாழுங்கள் என்று வாழ்த்தினார். அவரது வாழ்த்தொலி கேட்டு நான் நெகிழ்ந்து போய்விட்டேன். அவரைக் கைகூப்பி வணங்கினேன். அவர் நன்றி எனக்கூறி கிளம்பிப் போய்விட்டார். 

என்னை ஆசிர்வாதம் செய்வதற்காக ஒருவர் இரண்டுமணி காத்திருந்திருக்கிறார் என்பது வியப்பாக இருந்தது. உண்மையில் அது தான் வாசிப்பு தரும் நேசம். 

இது போலவே ஒருமுறை கும்பகோணத்தில் ஓவியக் கல்லூரியில் உரையாற்றிவிட்டு பேருந்து நிலையத்திற்கு ஆட்டோவில் திரும்பினேன். அந்த ஆட்டோ ஒட்டுனர் நகரின் முக்கியச் சாலை ஒன்றில் ஆட்டோவை நிறுத்திவிட்டு இறங்கி போனார். எங்கே போகிறார் எனக்கேட்கவில்லை. ஆனால் நெருக்கடியான சாலை. போக்குவரத்து நெரிசல் ஆகிவிட்டது. அந்த ஒட்டுனர் சாலையில் பதற்றமாக ஒடிவந்து ஆட்டோவை எடுத்தார். எங்கே போய்விட்டீர்கள் எனக்கோபமாகக் கேட்டேன். 

அவர் சிரித்தபடியே சொன்னார்: உங்க புத்தகம் ஒண்ணு வாங்கிட்டு வந்தேன். கையெழுத்து வாங்கி வச்சிக்கிட என்றார்.

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நீங்கள் புத்தகம் படிப்பீர்களா எனக்கேட்டேன். தனது இருக்கையை மேலே தூக்கி காட்டினார். அதன் 

 அடியில் எனது புத்தகங்கள் பத்துக்கும் மேலிருந்தன. 

நான் உங்க வாசகன். மாதம் எப்படியும் ஒரு புத்தகம் வாங்கிருவேன் என்றார். அவருக்குக் கிடைக்கிற வருமானத்தில் புத்தகங்களுக்குச் செலவழிப்பது கஷ்டமானது. ஆனாலும் முந்நூறு நானூறு விலை கொடுத்துப் புத்தகம் வாங்கியிருக்கிறார். அவரது கைகளைப் பற்றிக் கொண்டேன். அவர் கண்கலங்கியபடியே சொன்னார் 

நீங்க எப்போ கும்பகோணம் வந்தாலும் என்னைக் கூப்பிடுங்க சார். நம்ம ஆட்டோ ஃப்ரீ. 

அன்றைக்கு என்னைப் பேருந்து நிலையத்தில் விட்டுவிட்டு காசு வாங்க மறுத்துவிட்டார். அந்த வாசகர் காட்டிய அன்பென்பது மறக்கமுடியாதது. 

இன்னொரு வாசகர் ராணுவத்தில் பணியாற்றுகிறார். கார்கில் பகுதியில் அவருக்கு வேலை. தனிமையில் பனிகொட்டும் உயரத்தில் வாழ்க்கை. அடிக்கடி அலைபேசியில் பேசுவார். உங்களது துணையெழுத்தும் கதாவிலாசமும் தேசாந்திரியும் தான் துணை. இந்தப் புத்தகம் கூட இருப்பது நூறு மனிதர்கள் கூட இருப்பது போலத் தோன்றுகிறது. என் கஷ்டங்களைக் கடந்து செல்ல உதவியதற்கு நன்றி என்று தழுதழுத்த குரலில் சொல்வார். 

ஒருமுறை ராணுவத்திலிருந்து ஊர் திரும்பிய போது வீட்டிற்குச் செல்லாமல் நேரே என்னைப் பார்க்க வந்து காஷ்மீர் சால்வை ஒன்றை அணிவித்தார். எழுத்து ஒரு மனிதனின் தனிமைக்குத் துணையாக இருக்கும் என்பதற்குச் சாட்சியாக இருந்தது அந்தச் சம்பவம். 

அபினயா என்றொரு வாசகி. அவர் பார்வையற்றவர். ஆனால் புத்தகம் படிப்பதில் ஆர்வம் அதிகம். நண்பர்களைத் தனக்காகப் படித்துக் காட்டச் சொல்வார். கம்ப்யூட்டர் உதவியோடு எனது இணையதளத்தை வாசித்து வருபவர். எனது உரைகளை இணையத்தில் விரும்பிக் கேட்பவர். என்னுடைய எழுத்தே அவருக்கு நம்பிக்கையை உருவாக்கியது; தைரியத்தைத் தந்தது என்பார். தொலைபேசியில் அவரோடு பேசும்போது அவர் அடையும் பரபரப்பும் சந்தோஷமும் நிகரற்றது. பார்வையற்ற அந்தச் சகோதரியின் அன்புக்கு என்ன ஈடு செய்துவிட முடியும் சொல்லுங்கள்? 

சில நாட்களுக்கு முன்பு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தேன். ஒரு குடும்பம் என்னை அடையாளம் கண்டுகொண்டது. அத்தனை பேரும் வாசகர்கள். அதில் ஒரு இளம்பெண் என் புத்தகங்கள் அத்தனையும் வாசித்திருக்கிறார். அவருக்கு என்னை நேரில் பார்த்ததும் கைகள் நடுங்க ஆரம்பித்துவிட்டது. அவருடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டேன். அவரால் கண்ணீரை நிறுத்தமுடியவில்லை. அந்தக் குடும்பத்துடன் எனது ரயில் வரும்வரை பேசிக் கொண்டிருந்தேன். திடீரென அந்தப் பெண் எங்க கூடச் சாப்பிடுவீங்களா சார் எனக்கேட்டார். சரியென்று சொன்னேன். அவர்கள் வீட்டிலிருந்து கொண்டுவந்திருந்த இட்லியில் இரண்டினை ஒரு தட்டில் வைத்து நீட்டினார். அனைவரும் ஒன்றாகச் சாப்பிட்டோம். அவர்கள் அடைந்த சந்தோஷத்திற்கு அளவேயில்லை. வாசகர்களால் அளிக்கப்படும் அந்த இரண்டு இட்லி நோபல் விருதையும் விடவும் முக்கியமானது. வாசகனின் அன்பே எழுத்தாளனை தொடர்ந்து எழுத வைக்கிறது. வாழ்க்கையின் மீது நம்பிக்கை கொள்ள வைக்கிறது. 

எத்தனையோ வாசகர்கள் இருந்தாலும் சிலரே லட்சியவாசகர்களாகக் கருதப்படுகிறார்கள். அதில் ஒருவர் வேலூர் லிங்கம். தஸ்தாயெவ்ஸ்கியைத் தீவிரமாக வாசிப்பவர்கள் பலர் இருக்ககூடும். ஆனால் வேலூர் லிங்கம் அளவிற்குத் தஸ்தாயெவ்ஸ்கியை ஒருவர் நேசிக்க முடியுமா என்பது சந்தேகமே. 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தீவிர இலக்கியவாசிப்பில் ஈடுபட்டு வரும் இவர் தற்போது ஒய்வு பெற்று வேலூரில் வசிக்கிறார். இலக்கியவிழாக்களைத் தேடித்தேடி கலந்து கொள்ளக்கூடியவர். 

அவரது வீட்டிற்குச் சமீபத்தில் சென்றிருந்தேன். வீட்டின் முகப்பில், ஹாலில், அறைகளில். மாடியில் என எங்கும் புத்தகங்கள். நூலகத்தில் கூட இவ்வளவு சிறந்த புத்தகங்கள் இருக்குமா என வியப்பாக இருந்தது. தமிழிலும் ஆங்கிலத்திலும் ஏராளமாக வாங்கி வாசித்திருக்கிறார். பாரதியும் சேகுவேராவும் அவரது ஆதர்சங்கள். கர்நாடகாவின் கோலாரில் வளர்ந்த லிங்கம் விவசாயத்துறையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். 

தஸ்தாயெவ்ஸ்கியை தனது கடவுளாகக் கருதக்கூடியவர் லிங்கம். அவரது வீட்டில் ஒரு மேஜையில் தஸ்தாயெவ்ஸ்கியின் புகைப்படம் உள்ளது. அருகில் அவரது மனைவி அன்னாவின் புகைப்படம். அதன் அடியில் தஸ்தாயெவ்ஸ்கியின் புத்தகங்கள். பேவர் மொழியாக்கத்தில் சமீபத்தில் வெளியான தஸ்தாயெவ்ஸ்கி நாவல்கள் வரை அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு நாளும் காலையில் தஸ்தாயெவ்ஸ்கிக்கு ரோஜாப்பூக்களைப் போட்டு வணங்குகிறார் லிங்கம். தனது பயணத்தில் எப்போதும் தஸ்தாயெவ்ஸ்கியின் புத்தகங்களைத் துணைக்கு வைத்திருக்கிறார். தஸ்தாயெவ்ஸ்கியின் நாவல்கள் ஒவ்வொன்றையும் நாற்பது ஐம்பது முறை வாசித்துள்ளதாகக் கூறுகிறார்.

தஸ்தாயெவ்ஸ்கியைப் பற்றிப் பேசுவது, அவரைப்படிப்பது, விவாதிப்பது இதுவே தனது வாழ்வை அர்த்தமுள்ளதாக்குவதாகக் கூறுகிறார். செகாவ், டால்ஸ்டாய், கார்க்கி, துர்கனேவ் என ரஷ்ய இலக்கியங்களை நேசிக்கக் கூடியவர் லிங்கம். அவர்களில் தஸ்தாயெவ்ஸ்கியே அவரது கடவுள். குறிப்பாகக் கரமசோவ் சகோதரர்கள் நாவலைப் பற்றி லிங்கம் பேசுவதைக் கேட்டுக் கொண்டேயிருக்கலாம். கடவுள் நம்பிக்கை குறித்தும். மனித மனதின் நுண்மைகளைப் பற்றியும் தஸ்தாயெவ்ஸ்கியை போல ஒருவர் எழுதியதேயில்லை என வியந்து வியந்து கூறுகிறார். 

ஒரு எழுத்தாளனை எவ்வாறு ஆழ்ந்து வாசிக்கவும் ஆராதிக்கவும் வேண்டும் என்பதற்கு லிங்கனின் வாசிப்பே முன்னுதாரணம். ரஷ்ய இலக்கியங்களை நேசிக்கின்றவன் என்ற முறையில் லிங்கனை வியந்து பார்க்கிறேன். இவ்வளவு படித்தும் ஒரு வரி கூட எதையும் எழுதியதில்லை. தான் புத்தகங்களை நேசிப்பவன். இலக்கிய வாசகன், அதுவே போதுமானது எனக் கூறுகிறார் லிங்கம். இவரைப் போன்றவர்களே இலக்கியம் தொடர்ந்து இயங்க காரணமாக இருக்கிறார்கள். அவ்வகையில் வேலூர் லிங்கம் அவர்களை லட்சிய வாசகராகவே கருதுகிறேன். 

வாசகன் புத்தகத்தின் வழியே எழுத்தாளனை மட்டுமில்லை தன்னையும் பார்த்துக் கொள்கிறான். தன்னை அடையாளம் காட்டியதற்காக எழுத் தாளனுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறான். அன்பை எப்படி வெளிப்படுத்த முடியுமோ அப்படி வெளிப்படுத்துகிறான். 

ஹே வாசக! உனக்குத்தான் எத்தனை எழுத்தாளர்கள் என்றொரு வரியை நகுலன் எழுதியிருக்கிறார். அது தான் உண்மை. 

ஜனவரி, 2018.

logo
Andhimazhai
www.andhimazhai.com