ஒரு பொருளின் ஆயுள் அதை நுகர்வதுடன் முடிந்துவிடுகிறது. எழுத்தின் ஆயுள் நுகர்விலிருந்து தொடங்குகிறது. யாரும் வாசிக்க வேண்டாம் என்று அற்புதமான எழுத்துக் களைத் தங்களுக்குள் ரகசியமாக வைத்திருந்தவர்கள் உண்டு.
எமிலி டிக்கன்சன் வாழும் வரை அவருடைய கவிதைகளைப் பிரசுரிக்க அனுமதிக்கவில்லை. காஃப்கா சில நூல்களை பதிப்பிக்க வேண்டாம் என கோரிக்கை வைத்தவர். அதை மீறிப் பதிப்பித்தபோது அவை இறவாக் காவியங்களாக மலர்ந்தன.
எழுதத் தொடங்குமுன் எனக்கு வாசக முகங்கள் மானசீகமாக மனத்தில் விரியும். நான் யாரைச் சென்று சேர வேண்டும் என்பதைக் குறித்து வைத்து எழுதுபவன். கண்டங்கள் தாண்டி அவை சிறகு முளைத்துப் பறந்து சென்று சிரஞ்சீவியாய் வாழும் என்ற கற்பனையில் எழுதவில்லை. கண்ணுக்குத் தெரிந்த சில மாற்றங்களை வாசிப்பவர்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்றுகூட நான் விரும்பவில்லை. என்னுடைய அனுபவங்கள் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்கிற குறைந்தபட்ச எதிர்பார்ப்பு கலையை கலையாகவே நுகரும் எழுத்தாளர்களுக்கும் இருப்பதைப்போல தேவை குறித்து எழுதும் எனக்கும் சிறிது உண்டு. முழு நேர எழுத்தாளராகவும், தீவிரமான எழுத்துப் பணியை மேற்கொள்பவராகவும் இல்லாத எனக்கு வாசகர்கள் பேசச் செல்கிற இடங்களில் தென்படுகிற நண்பர்கள். அவர்கள் வாசித்தவற்றிலிருந்து சிலவற்றை மேற்கோள் காட்டும்போது ஏற்படும் திருப்தியை வேறெந்த வகையிலும் பெற்றுவிட முடியாது. தொலைக்காட்சிகளில் மாணவர்களுக்காக ‘கல்லூரிக் காலங்கள்' என்கிற அரைமணி நேர நிகழ்ச்சியை 500 நாட்கள் தொடர்ச்சியாக நடத்தும் வாய்ப்பு கிடைத்தது. அதைக் காணும் நேயர்கள் சந்தேகங்களை மின்னஞ்சலில் அனுப்பலாம் என்கிற வசதியும் செய்யப்பட்டது. தினமும் அந்த மின்னஞ்சலில் குறைந்தது ஐந்து வினாக்களாவது வந்து சேரும். ஆயிரக்கணக்கில் மின்னஞ்சல்கள் குவிந்தன. வாரம் ஒரு முறை அவை அனைத்திற்கும் பதிலஞ்சல் அனுப்பினேன்.
ஒரு கல்லூரி மாணவி அனுப்பியிருந்த மின்னஞ்சலில் என் நிகழ்ச்சியைக் கேட்ட பிறகு அவருடைய தந்தை மது அருந்துவதை நிறுத்திவிட்டதாக எழுதியிருந்தார். இன்னொரு மாணவர் என் நிகழ்ச்சியை அவருடைய தாயார் தொடர்ந்து கேட்பார் என்றும், அவர் திடீரென இறந்துபோய் விட்டார் என்றும் எழுதியிருந்தார். அவரை வரச் சொல்லி சந்தித்து ஆறுதல் கூறினேன். இப்போது அவருடைய சகோதரிக்கும் புற்றுநோய் எனவும், அதற்கு எங்கு மருத்துவம் பார்க்கலாம் எனவும் தகவல் அனுப்பியிருக்கிறார். அவருடைய மனநிலையைப் பற்றி எண்ணி மிகவும் வருந்தினேன். நம் எழுத்துகளில் ததும்பி நிற்கும் சோகத்தைவிட வாசகர்களின் சோகம் துயர் அளிக்கக்கூடியது. எழுதியதோடு என் பணி முடிந்துவிட்டது என இருக்க முடிவதில்லை. அரசுப் பணியில் இருப்பதால் அவர்களை சந்திப்பதும், முடிந்த உதவியைச் செய்வதும் ஒருவிதக் கடமை.
இன்னொரு மாணவர் திண்டுக்கல்லிலிருந்து என்னைத் தேடி வந்தார். நிகழ்ச்சியின் காரணமாக புகை பிடிப்பதை நிறுத்தி விட்டதாகவும், அதுவரை வைத்திருந்த தேர்வாகாத தாள்களை எழுதி தேர்ச்சி பெற்று விட்டதாகவும் தெரிவித்தார். நமக்குத் தெரிந்த சில நற்பயன்கள் இவை என்பதை அறிந்த அதே நேரத்தில் என் பொறுப்புணர்வு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டிருப்பதையும் உணர்ந்தேன். அதனால் ஒவ்வொரு முறை பேசத் தொடங்கும்போதும் சின்ன நடுக்கம் சேர்ந்துகொள்கிறது.
சென்னையில் மைலாப்பூரில் உள்ள ஓர் அரங்கத்தில் சில அமைப்புகள் என்னுடைய நூல்களை மாதம் ஒன்றாக ஆண்டு முழுவதும் விமர்சனத்துக்கு உட்படுத்துவது என்று முடிவு செய்தன. மாதந்தோறும் இரண்டாம் வியாழக்கிழமையில் நடந்த அந்த நிகழ்ச்சிக்கு ஒரு வாசகர் கோவையிலிருந்து வந்து செல்வார். அவரிடம் ‘நீங்கள் இவ்வளவு சிரமப்பட்டு வருகிற அளவு இது ஒன்றும் பெரிய நிகழ்ச்சி இல்லை' என்று பலமுறை நான் கூறியிருக்கிறேன். அவர் நல்லபடியாக திரும்ப வேண்டும் என்று மனம் பதைபதைக்கும்.
ராமாராவ் என்கிற வாசகர். வயது எண்பது இருக்கும். கூட்டுறவுத் துறையில் பணியாற்றியவர். என்னுடைய அத்தனை வெளியீடுகளையும் படித்து முடித்து விடுவார். இத்தனைக்கும் தாய்மொழி தமிழல்ல. ஒரு நாள் அலுவலகத்திற்கே இனிப்புடன் வந்து விட்டார். அவருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை சொற்களால் சொல்வது கடினம். இப்போதுகூட எந்த இதழில் கட்டுரை வந்தாலும் அதுபற்றிய கருத்துகளை கடிதமாக எழுதி அனுப்பிவிடுவார். அவற்றில் கடுமையான விமர்சனங்களும் இருக்கும். அவற்றிற்கு பதில் எழுத அவகாசம் இல்லாவிட்டாலும் அதை அவர் பொருட்படுத்துவதில்லை.
வாசகர்கள் வித்தியாசமானவர்கள். யாருக்கு எது பிடிக்கும் என்று சொல்ல முடியாது. ஒரு வாசகர் அப்போதுதான் ஒரு நூலை சிலாகித்துப் பேசியிருப்பார். அடுத்த நிமிடமே அங்கு வருகிற இன்னொருவர் ‘உங்கள் நூல்களில் அது மட்டும்தான் சுமார்' என்று சொல்வார். சிறுகதைகளும் அப்படித்தான். நமக்குப் பிடித்த கதை பலருக்குப் பிடிக்காமல் போகலாம்.
அண்மையில் சிறுகதை ஒன்றை வார இதழில் எழுதியிருந்தேன். ஒருவர் தொலைபேசியில் என்னை மிகவும் கடிந்து கொண்டார். ‘உங்கள் கதையின் நாயகன் இப்படி இருக்கலாமா!' என அங்கலாய்த்தார். நான் மேன்மையான பாத்திரங்களை மட்டும்தான் படைக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்போடு இருக்கிற வாசகர்களும் இருக்கிறார்கள்.
அரசாங்கப் பணியிலிருப்பதால் நடத்தை விதிகளின் காரணமாக நாம் அனுபவப்பட்ட அனைத்தையும் எழுத முடிவதில்லை. அந்த நடத்தை விதிகளைவிட அதிகக் கடுமையான விதிகளை வாசகர்கள் நம் மீது திணிப்பதுண்டு.
மசூரியில் குடிமைப் பணிப் பயிற்சியை முடித்து வந்ததும் எனக்குத் தோன்றிய முதல் சிந்தனையே ‘எப்படியாவது தமிழ்நாட்டில் நிறைய இளைஞர்களை குடிமைப் பணித் தேர்வுக்கு தயார்படுத்த வேண்டும்' என்பதுதான். அதற்காகப் புத்தகங்கள் எழுதினேன். நிறைய மாணவர்கள் ஆலோசனை கேட்டு வருவார்கள். அந்நூல்களை வாசித் தவர்கள் சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக்கொள்ள வந்தவண்ணம் இருப்பார்கள். அவர்களுக்கு பல மாதிரித் தேர்வுகளையும் நடத்தியிருக்கிறேன். சில மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் செல்லும்போது உயர்ந்த பணிகளில் அவர்களை பார்க்கும்போது எழுத்தாளனாக இல்லாவிட்டாலும் மூத்த சகோதரனாக என் நெஞ்சம் நெகிழ்வது உண்டு. அவர்களுடைய வெற்றி ‘இளைஞர்களை நோக்கியே என் பணி இருக்க வேண்டும்' என்ற முடிவை எடுக்கத் தூண்டியது.
விதவிதமான வாசகர்கள் உண்டு. அவர்களுடைய அன்புக்கு நான் என்ன கைம்மாறு செய்ய முடியும் எனப் பல நேரங்களில் கையைப் பிசைவது உண்டு. அதே நேரத்தில் ‘உங்கள் புத்தகங்கள் என்றால் எனக்கு உயிர்' என முன்னுரை கொடுத்துவிட்டு சிபாரிசு கேட்டு வருகிற சில்லறைத்தனங்களும் உண்டு. பணியில் இருக்கிற காரணத்தால் யாருக்கும் கதவை அடைக்க முடியாது. எழுத்து பெற்றுத் தந்திருக்கிற பல நற்பயன்களோடு சில அசௌகரியங்களும் சில மலர்களின் அருகிலிருக்கும் முட்களைப்போல இருப்பதுண்டு.
எழுதுபவர்கள் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். எழுத்துக்கென்று எந்த அளவுகோலும் இல்லை. ‘நீங்கள் எழுதுவது கதையே இல்லை' என்றும், ‘உங்கள் எழுத்துகள் சுய முன்னேற்ற வகையைச் சார்ந்தவை மட்டுமே' என்றும் சொல்பவர்கள் உண்டு. சிலர் வாசித்துப் பார்க்காமலேயே முடிவை முன்மொழிவதுண்டு. அப்போதெல்லாம் பாராட்டுகளை எப்படி எந்தவிதத் தயக்கமுமின்றி அணுகுகிறோமோ, அதைப்போலவே விமர்சனங்களையும் அணுக வேண்டும் என்பதே இத்தனை ஆண்டுகள் எழுதுவதால் கிடைத்த முதிர்ச்சி.
எதிர்வினைகள் இல்லாமல் இருப்பதும் நம் எழுத்து தட்டையாகத் தோன்றுகிறதுபோல என எண்ணச் செய்வதே இன்றைய வாசகர்கள் நமக்கு உணர்த்தும் செய்தி. எழுத்தாளர் என்பதைவிட பேச்சாளர் என்ற முறையில் என்னை நெருங்கிய நேயர்களே அதிகம். வாசகர்கள் நல்ல எழுத்துக்காகக் காத்திருப்பதைப்போலவே எழுதுபவர்களும் நல்ல வாசகருக்காகக் காத்திருக்கிறார்கள்.
ஜனவரி, 2018.