வலதுசாரி இயக்கங்களின் புன்னகை

வலதுசாரி இயக்கங்களின் புன்னகை
Published on

பொதுவாக ஆர்.எஸ்.எஸ் எனப்படுகிற ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கம் சுதந்தரபோராட்ட காலத்தில் இருந்தே இந்தியாவில் இந்து மதக்கொள்கைகளை வலியுறுத்தும் அமைப்பாக இருந்துவந்தாலும், அதன் செல்வாக்கு தென்னிந்தியாவில் குறைவாகவே இருந்தது. இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ்சின் அரசியல் முகமாகச் செயல்படும் பாஜக, தன் நிர்வாகத்துக்காக ஆர்.எஸ்.எஸ் தலைவர்களிடம் நேரடியாகவே ஆலோசனை செய்கிறது.  இன்று பாஜகவில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் அனைவருமே ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் உறுப்பினர்களாக இருந்து பயிற்சி எடுத்தவர்கள். அந்த இயக்கத்தால் பாஜகவுக்குப் பணிபுரிய அனுப்பி வைக்கப்பட்டவர்கள்.

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ்சின் ஆரம்ப கட்டத்தில்  காலூன்றுவது மிக மெதுவாக நடந்தது.

சாவர்க்கரின் இந்துமகா சபாவும் தமிழ்நாட்டில் அறியப்பட்டிருந்தது.  திராவிட இயக்கம் பெற்ற வளர்ச்சியாலும் இந்து மத எதிர்ப்பினாலும்  வலதுசாரி அமைப்புகளால் சிறகுகளை  நினைத்த மாதிரி விரிக்கமுடியவில்லை. இருந்தாலும் கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறையைக் கைப்பற்றிய இயக்கத்திலும் பல்வேறு கல்வி நிறுவனங்களை நிறுவியதிலும் அந்த இயக்கம் ஈடுபட்டது.

தமிழகத்தில் இந்த அமைப்பின் வரலாற்றை அதன் முக்கியமான தலைவர்களின் இடப்பெயர்வுகளைக் கொண்டு பார்ப்போம். ஆர்.எஸ்.எஸின் ஆரம்பகட்ட உறுப்பினர்களில் ஒருவராகச் செயல்பட்டவர் ராமகோபாலன். அவரை விட வயதில் மூத்தவர் சூரிய நாராயணராவ். இவர் கர்நாடகாவில் செயல்பட்டு வந்தவர் பின் தமிழகத்தில் பணியாற்ற அனுப்பப்பட்டார். கிட்டத் தட்ட எழுபது ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸில் பணியாற்றி வரும் இவர் அதன் தலைமையகத்தில் வசிக்கிறார். மேலும் குறிப்பிடவேண்டிய தலைவர்கள் வேதாந்தம், ஆர்.வி.எஸ். மணியன். இவர்களுக்கு அடுத்த நிலையில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களாக சேர்ந்து வளர்ந்து இன்று பொதுவாழ்வில் அனைவருக்கும் அறிமுகமானவர்களாக ஜொலிப்பவர்கள் இல.கணேசன், சண்முகநாதன்.

அகில இந்திய அளவில் ஜனதா கட்சி ஆட்சி அமைத்தபோது ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களைக் கொண்ட ஜனசங்கம் அதில் பங்குபெற்றது. வாஜ்பாயி, அத்வானி ஆகியோர் அமைச்சர்கள் ஆயினர். இவர்கள் ஆர்.எஸ்.எஸ்ஸிலும் உறுப்பினர்களாக இருந்தது அந்த அரசுக்கு நெருக்கடி வர காரணங்களில் ஒன்றாக அமைந்தது. இதை அடுத்துதான் ஆர்.எஸ்.எஸ் ஆசியுடன் 1983- பாஜக என்ற அரசியல் கட்சி உருவானது.

இதற்கிடையில் தமிழ்நாட்டில் திமுக ஆட்சி மாறி, நாத்திகத்தில் வெளிப்படையாகவே நம்பிக்கை இல்லாதவரான எம்.ஜி.ஆர் ஆட்சி அமைந்தது . 1982-ல் நடந்த மீனாட்சி புரம் மதமாற்றங்கள் அகில இந்திய கவனத்தை இந்து அமைப்புகள் இங்கே குவிக்க உதவியாக இருந்தன. அந்த கிராமத்தைச் சேர்ந்த தலித்துகள், இஸ்லாமிய மதத்தைத் தழுவினர். இது சர்வதேச அளவிலான இஸ்லாமிய மதமாற்ற சதி என்று இந்து அமைப்புகள் குற்றம் சாட்டினர். இந்துகோவில்களில் சமபந்தி விருந்துகள் நடத்தப்பட்டு தலித்கள் கவனிக்கப்பட்டனர். மண்டைக்காடு கலவரத்திற்கு பின்  இந்து முன்னணி  உருவானது. அது தமிழக அடையாளங்களைக் கொண்டதாக இருந்தது.

ஆர்.எஸ்.எஸ் பிரமுகரான ராமகோபாலன் இதன் நிறுவனர். ஆர்.எஸ்.எஸ். அரசியல் களப்பணிக்காக இந்துமுன்னணியை உருவாக்கியது. இந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச -என்ற கோஷங்களுடன் இது உருவானது. தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்திக் கொண்டாட்டங்கள், ஊர்வலங்கள் மூலம் தன்னை நிலைப்படுத்த முயற்சி செய்தது. இதனுடன் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்களுடனான மோதல்கள்  உருவானது. இதில் படுகொலைகள் நடந்தன. ராமகோபாலன் கொலைவெறித் தாக்குதலைச் சந்தித்தார். வழக்கறிஞர் ராஜகோபாலன் வெட்டிக்கொலைச் செய்யப்பட்டார். இதுபோல் பலர் கொல்லப்பட்டனர். இந்து அமைப்பினர் கொல்லப்படுவது இன்றும் தொடர்கதையாகவே இருக்கிறது.

விஸ்வ இந்து பரிஷத் என்ற அமைப்பு 1964-ல் சுவாமி சின்மயானந்தா, ஆர்.எஸ்.எஸ் தலைவர் குரு கோல்வாக்கர் ஆகியோரால் உருவாக்கப்பட்டு, வட இந்தியாவில் வளர்ந்தது. அதை தமிழகத்தில் வளர்த்தெடுக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டவர்கள் ஆர்.எஸ்.எஸ்சிலிருந்து இதற்குப் பணிக்கப்பட்ட வேதாந்தமும், ஆர்.வி.எஸ் மணியனும். வேதாந்தம் சிறந்த நிர்வாகி. மணியன் சிறந்த பேச்சாளர். சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு  விஸ்வ இந்து பரிஷத், அகில இந்திய விஸ்வ இந்து பரிஷத்துடன் முரண்பட்டு தனியாகச் செயல்படுகிறது. தமிழகப் பிரிவும் தலைமை அலுவலகமும் இப்போது மூத்த தலைவரான வேதாந்தம் கட்டுப்பாட்டில் வந்துவிட்டன. அகில இந்திய விஎச்பி தனியாகச் செயல்படுகிறது.

ஆர்.எஸ்.எஸ். எப்போதும் நேரடியாக களச்செயல்பாட்டுக்கு வருவதில்லை. அரசியல் சமூக, போராட்ட களத்துக்கு ஆட்களை பயிற்சி அளித்து அனுப்புகிறது. அப்படித்தான் அதன் மாநில துணை அமைப்பாளர் இல.கணேசன் தமிழக பாஜகவுக்கு அனுப்பப்பட்டார். சண்முகநாதனும் பாஜகவுக்கு வந்து சேர்ந்தார். பல்லாண்டுகளாக தமிழக பாஜகவின் புகழ்பெற்ற முகமாக இல.கணேசன் திகழ்கிறார். சண்முகநாதன் தமிழக பாஜக அலுவலகத்தில் இருந்து டெல்லியில் பாஜக நாடாளுமன்ற அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கே கட்சியின் தலைமையகத்திலேயே தங்கியிருந்தார். பல அகில இந்திய தலைவர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. மோடியின் நெருக்கமான தொடர்பால் சண்முகநாதன் இன்று மேகாலயா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்!

ராமகோபாலன் ஜெ.வின் தீவிர ஆதரவாளராக இருந்த  நிலையில் 1993ல் இந்துமுன்னணியில் செயல்பட்டு வந்தவர்கள் விலகி இந்து மக்கள் கட்சியைத் தொடங்கினர். அந்த கட்சியும் ஸ்ரீதரன் பிரிவாகவும் அர்ஜுன் சம்பத் பிரிவாகவும் செயல்படுகிறது. விஸ்வ இந்து பரிஷத்தின் இளைஞர் அமைப்பான பஜ்ரங் தளமும் ஆர்.எஸ்.எஸின் மாணவர் அமைப்பான ஏபிவிபியும்கூட இங்கு செயல்பட்டுவருகின்றன. அனுமன் சேனா என்ற அமைப்பும் உள்ளது. இந்து மாணவர் அமைப்பு என்ற பெயரில் மதுரையில் சின்மயா சோமசுந்தரம் என்ற விஎச்பி தலைவர் தொடங்கிய அமைப்பும் மாணவர்கள் பங்கேற்புடன் செயல்பட்டுவருகிறது. இது அல்லாமல் சிவசேனா கட்சியும் பல்வேறு பிரிவுகளாக அங்கங்கே செயல்பட்டுவருகின்றது.

வெகுஜன மக்கள் ஆதரவை இந்து என்ற குடையின் கீழ் வலதுசாரி அமைப்புகள் பெறமுடியாமல் இருக்கலாம். ஆனால் 70களின் கடைசியில் இருந்து அவற்றின் ஆதரவாளர்களும் அந்த அமைப்புகளும் ஏராளமான தனியார் இந்து கல்வி நிறுவனங்களை நிறுவின. இதில் பல பள்ளிகள் மக்கள் விரும்பி நாடும் கல்வித் தரம் உள்ளவையாகவும் இருக்கின்றன. ஆர்.எஸ்.எஸ்-சின் வித்யாபாரதி அமைப்பு தமிழ்நாட்டில் மட்டும் 189 பள்ளிகளை நடத்துகிறது.  கல்விக்கு முக்கிய பங்களிப்பாக இவை உள்ளன. அதே சமயம் வலதுசாரி இயக்கங்களுக்கான இயங்குதளங்களாகவும் இவை உள்ளன.

“விநாயகர் சதுர்த்திகள் விமர்சையாக தமிழகத்தில் கொண்டாடப்படுகின்றன. உண்மைதான். இதுவும் கூட திராவிட இயக்கம் வலுவாக இருக்கும் தமிழகத்தில் வெற்றிதான். ஆனால் இது வெறும் பண்டிகைக் கொண்டாட்டம் மட்டும்தான். நிஜமான இந்து எழுச்சி உருவாகவில்லை. எதாவது பிரச்னை என்றால் நாளைக்கு மீண்டும் இந்து இயக்க உறுப்பினர்கள்தான் போகவேண்டியுள்ளது. போனால் இந்து தீவிரவாதி என்று சொல்லியும் விடுகிறார்கள்” என்கிறார் வி.எச்.பி. அமைப்பைச் சேர்ந்த ஒருவர்.

சுமார் 40,000 பேர் வரை தீவிரமான நேரடி உறுப்பினர்களைக் கொண்ட இயக்கமாக சங்பரிவார் அமைப்புகள் இயங்குகின்றன. ஆண்டுதோறும் சுமார் 4000 பேர் வரை பயிற்சி அளித்து ஆர்.எஸ்.எஸ். களப்பணிக்காக அனுப்புவதாகச் சொல்கிறார்கள்.

இன்று திராவிட அரசியல்கட்சிகள் மெல்ல மெல்ல மென்மையான இந்துத்துவப் போக்கைக் கடைபிடிக்கும் நிலை உள்ளது. இருபது ஆண்டுகளுக்கு முன் உள்ள தீவிர இந்து எதிர்ப்புச் செயல்பாடுகள் திமுகவிடமே இல்லை. பாஜகவுடன் மாறி மாறி கூட்டணி வைத்தவையாகவே அவை இருக்கின்றன. மடங்கள், ஆதீனங்கள் இவற்றின் ஆதரவுடன் வளர்ந்துவரும் இந்து வலதுசாரி இயக்கங்கள் இந்த மாறுதல்களைக் கண்டு புன்னகை செய்வதாகவே தோன்றுகிறது.

அக்டோபர், 2015.

logo
Andhimazhai
www.andhimazhai.com