அரசியல், வியாபாரம், எழுத்தாளர்கள் மற்றும் சில துறைகளை சார்ந்தவர்கள் வயதானாலும் தன் நாற்காலியை கெட்டியாக பிடித்துக்கொண்டு இடத்தை விட்டுக் கொடுக்க மறுப்பார்கள். வயதிற்கும், அனுபவத்திற்கும் மரியாதை தராத துறைகளில் விளையாட்டும் சினிமாவும் முக்கியமானது.
ஆஸ்திரிய நாட்டில் வியன்னா நகரில் 1956 - இல் பிறந்த அவரது குடும்பத்தில் பலர் நாடக நடிகர்கள். மேடை நாடகத்தை தவிர சிலர் மௌனப் படங்களிலும் நடித்து உள்ளனர். சிறுவயது முதல்
ஓபராவில் ஆர்வம் கொண்ட அவர் பட்டதாரியான பின் நடிப்புக் கலையை முறைப்படி சேர்ந்து படித்தார். பின் மேடை நாடக நடிகராகவும் தொலைக்காட்சி தொடர்களில்
சிறு கதாபாத்திரங்களில் நடித்து குடும்பத்தை நடத்தி வந்தவருக்கு 2007 முதல் திரைப்பட வாய்ப்பு கிடைத் தது. படம் 2009 இல் வெளியானது. முதல் படத்தில் அவரது நடிப்பு பெரிதாக பேசப்பட்டதுடன் ஆஸ்கார் விருது மற்றும் பல விருதுகளை பெற்றுத் தந்தது. நடிகரின் பெயர் கிரிஸ்டோபர் வால்ட்ஸ். படம் Inglorious bastards. 50 வயதிற்கு மேல் திரை வாழ்வை ஆரம்பித்த கிறிஸ்டோபர் வால்ட்ஸ் Django unchained படத்திற்காக இரண்டாவது முறை ஆஸ்கர் விருது பெற்றார்.
தமிழகத்தில் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி மற்றும் கமல் ஆகியோர் ஐம்பதை கடந்த பின்னும் ரேஸில் உயிர்ப்புடன் இருந்த/ இருப்பதன் பின்புலம் சுவாரசியத்தை அளிக்கிறது. சிவாஜி ஐம்பதுக்குப் பின் 96 படங்களில் நடித்திருந்தாலும் பாத்திரங்களுக்கும் வயதாகி இருந்தது.
1978இல் 16 நேரடி தமிழ்ப் படங்களில் நடித்த ரஜினிகாந்த், கடந்த 19 ஆண்டுகளில் 11 படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.
வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் இன்னும் உன்னை விட்டுப் போகல..
இல்ல அங்கிள் உங்களுக்கு வயசாயிடுச்சின்னு...
ம்...வயசாச்சி...நீங்க உள்ள உட்கார்ந்து பாருங்க..என் வயசு என்னன்னு...
- படையப்பா (1999)
லிங்கா படம் சரியா போகாததற்கு ஒரு காரணம், எனக்கு இப்ப 65 வயசு... 45 வயசு கேரக்டர் பண்ணலாம், 40 வயசு கேரக்டர் கூட பண்ணலாம். ஆனா, 30&35 வயசு கேரக்டர்ல, என்னோட பொண்ணுங்க கூட பிரண்டா வளர்ந்த சோனாக்ஷி சின்கா, சத்ருகன் சின்கா பொண்ண ஹீரோயினா போட்டு டூயட் பாடுனா எப்பிடி இருக்கும், இனிமே இது நல்லாயிருக்காது.. இத்தோட நிறுத்திக்கலாம்..
- காலா ஆடியோ ரிலீஸில் ரஜினி
கபாலிடா... 25 வருஷத்துக்கு முன்னாடி எப்படி போனானோ அப்டியே திரும்பி வந்துட்டான்னு
சொல்லு.. - கபாலி(2016)
ஸ்ரீமன் : சார், இது உங்க பொண்ணா?... ஒரு பொண்ணுக்கு அப்பாவா சொல்லுங்க, நாளைக்கே உங்க பொண்ணு இப்படி வயசான ஒருத்தர
விரும்பினா நீங்க என்ன சொல்லுவீங்க?
&தர்பார் (2020)
இப்படித்தான் ரஜினி தனக்கு வயதாவதை வெளிப்படுத்துகிறார். ஆனால் 50 வயதுக்குப் பின் 45 படங்களில் நடித்த எம்ஜிஆர் தனது திரைப்படங்களில் எப்போதும் இளமையாகவே தன்னை காண்பித்துக் கொள்வார். 57 வயதில் எம்ஜிஆர் உரிமைக்குரல் படத்தில் 30 வயது இளைஞனாகவே காதல் புரிவார். அதே வயதில் ரஜினி ,'சிவாஜி' படத்தில் ஸ்ரேயாவை துரத்தித் துரத்திக் காதலித்தார். தமிழகம் ஏற்றுக்கொண்டது.
வருகிற பக்கங்களில் சில உச்சநாயகர்கள் தங்களது 50 வயதிற்கு மேல் ஏற்கும் பாத்திரங்கள் மற்றும் அதை ரசிகர்கள் எதிர்கொள்ளும் விதத்தை விரிவாக பார்க்கலாம்.
என்றும் உங்கள்
அந்திமழை இளங்கோவன்
மார்ச், 2020.