வம்புகளும் ரகசியங்களும்

வம்புகளும் ரகசியங்களும்
Published on

அரசியலில் வம்புகளும் ரகசியங்களும் நிறைய உண்டு, அதற்கு வாசகர்களிடையே பரபரப்பான வரவேற்பு உண்டு என்பதை பத்திரிகைத்துறையில் நுழையும்போதே கற்றுக்கொடுத்துவிட்டார்கள்!

நிருபராக ஒரு மாலைப் பத்திரிகையில் சேர்ந்த சில நாட்களிலேயே, வேறு பத்திரிகைகளில் சீனியர்களாக இருந்த கே.வி. நாராயணன், கல்யாணம் இருவரும் நெருக்கமாகப் பழகி, பல விஷயங்களை சொல்லித் தந்தார்கள்! டிபன் சாப்பிடுவதற்குக் கூட என்னையும் அழைத்துச் சென்ற அவர்கள், தங்கள் கைவசம் இருக்கும் விறுவிறுப்பூட்டும் செய்தியை பகிர்ந்துகொள்ளவே மாட்டார்கள். இது எனக்கு வெறுப்பூட்டியது! எப்படியாவது இவர்களை மிஞ்சி எதாவது தனிச்செய்தியைச் சேகரித்துவிடவேண்டும் என்று முடிவு செய்து தலைமைச்செயலகத்தில் தீவிரமாக அலைந்தேன். அது 1962. தமிழகத்தில் புது அமைச்சர்கள் பதவியேற்ற நேரம். கிடைத் தன இரண்டு செய்திகள்!

அங்கே இருக்கும் நிருபர்களுக்கான அறைக்கு வந்தபோது, மெயில் ராமநாதன் என் முகத்தைப் பார்த்து கண்டுபிடித்துவிட்டார்! ‘என்னடா பயலே! குஷியாக இருக்கிறாய்?' என்று கேட்டவுடன் ‘இரண்டு எக்ஸ்குளூசிவ் சங்கதிகள் சிக்கின' என்றேன்.

'ரெண்டு செய்தியையும் ஆபீசுக்கு ஊதிவிட்டாயா?' என்றார். அதாவது டெலிபோனில் சொல்லிவிட்டாயா என்றார். ‘ இன்னும் இல்லை' என்றேன். ‘சொல்லாதே! இன்று ஒன்று... அதற்குப் பிறகு ரெண்டு நாள் கழித்து ஒன்று என கொடு'' என்று கூறினார்.

மெயில் ராமநாதன் பல விவரங்களை சொல்லித் தந்தவர். அரசியலில் பின்னணி ரகசிய செய்திகளைச் சேகரித்தால் முழுவதையும் முதலில் வெளியிடக் கூடாது.மறுப்பு வரும். அப்படி வந்தால் மிச்ச செய்திகளை வெளியிட்டு உன் செய்தி சரிதான் என்பதை நிரூபிக்க வேண்டும் என்பார்!

கல்யாணமும் நாராயணனும் என் முகத்தைப் பார்த்துக் கண்டுபிடித்து,  என்ன வற்புறுத்தியும் அந்த செய்திகளை நான் சொல்லவே இல்லை!

ஓர் இளம் அரசியல்வாதி செய்தித்துறை அமைச்சராக பதவியேற்றிருந்தார். அவருக்கு திருமணம் நிச்சயமாகியது! அது முதல் செய்தி. ஓர் அமைச்சர் தனக்கு ஒதுக்கிய பங்களாவில் குடியேறத் தயங்கினார்! அங்கே

‘ஆவி' நடமாட்டம் இருப்பதாக அவர் மனைவிக்குத் தகவல்! இது அடுத்த செய்தி!

ராமநாதன் புத்திமதியை தாண்டி அடுத் தடுத்து இந்த செய்திகள் வெளியாக,  கல்யாணமும் நாராயணனும் பிறகு என்னுடன் சங்கதிகளைப் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தார்கள்!

இந்த வம்பு சேகரிக்கும் ‘புத்தி' என்னுடன் நன்றாக ஒட்டிக்கொண்டு விட்டது. விகடன் குழுமத்தில் பணிபுரியத் தொடங்கியவுடன் நீண்டகாலம் என் உள்ளேயே இருந்து ஊறி, பிறகு ‘மிஸ்டர் கழுகு' என்பதாக உருவெடுத்தது!

‘கழுகுக்கு மூக்கில்வேர்க்கும் என்பார்கள். எங்கே செய்தி இருக்குமோ அங்கே கழுகார் இருப்பார்' என ஆசிரியர் மதன் கொடுத்த பெயர் இது!

அரசியலில் ரகசியங்களுக்கோ பின்னணி தகவல்களுக்கோ வம்புகளுக்கோ இப்போதுவரை பஞ்சமே கிடையாது! ஆகவே நான் வெளியேறிய பிறகு கழுகார் பயணம் வெற்றிகரமாகவே நடக்கிறது என்று நினைக்கிறேன்.

நான் மிஸ்டர் கழுகு எழுதிக்கொண்டிருந்த காலகட்டத்தில் என்னை சந்திக்க யாராவது தயக்கத்துடன் வந்தால் ‘கழுகாரின் ஒரு சிறகு வருகிறது!' என்று கலாட்டா செய்வார் ஞாநி!

பெரும்பாலும் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் தகவல்களுக்கான தேடல்களை செய்வது என் பழக்கம்! வீட்டு டெலிபோனை உபயோகப்படுத்தியதே இல்லை! எனக்கு தகவல் தருவது யார் என்பதற்காக டெலிபோன் ஒட்டு கேட்டுப் பார்க்கப்பட்டது உண்டு! வீட்டு வாசலில் மஃப்டியில் காத்திருந்தது உண்டு. ஒரு தகவலும் அதன்மூலம் கிடைத்தது இல்லை.

அதனால் எனக்கு ஒரு துளி தொல்லையும் ஆள்வோரால் வந்தது இல்லை! வக்கீல் நோட்டீஸ்கள் வந்தது இல்லை!

ஆந்திரத்தில் என்.டி. ஆர். அரசை பாஸ்கரராவ் என்பவரை வைத்து கவிழ்க்கும் முயற்சி நடப்பதை ஒரு மாதத்துக்கு முன்பாகவே கழுகார் சொன்னது, ஒரு விஐபி கல்யாண வீட்டில் காதில் விழுந்த செய்தி!

பரபரப்பான ஒரு இடைத்தேர்தலில் முடிவு எப்படி இருக்கும் என சொல்ல, அப்படியே நடந்தது. இந்த இரு செய்திகளும் கழுகாருக்குப் புகழ்சேர்க்க, அலுவலக வாயிலில் கழுகாருக்கு வாழ்த்து பேனர் வைத்து சிறப்பு செய்தார்கள்!

பொய்ச்செய்திகளோ அவதூறு செய்திகளோ ஒரு கட்சி& ஒரு தலைவரை உயர்த்தியோ தாழ்த்தியோ கழுகு சொல்லாது! கழுகு தன்னை எம்ஜிஆர் ரசிகன் என்று சொல்லி ‘விசிலடிச்சான் குஞ்சு' என்று சின்னக்குத்தூசியால் குத்து வாங்கியது உண்டு! கலைஞரின் சாதுரியங்களையும் சொல்லி ரசிக்கத் தவறியதில்லை! ஆகவே கட்சி சார்பற்ற தன்மையால் பெரும் வரவேற்பு கிடைத்தது!

சிலமாதங்களில் கழுகுக்கு என்று செய்திகளை ஒதுக்கித் தருவதற்கு எல்லா கட்சியிலும் பிரமுகர்கள் சேர்ந்தார்கள். கழுகு கற்பனையாக மோட்டுவளையைப் பார்த்து கப்சாக்களை அடிக்காது என்பது உறுதி ஆகிவிட்டது!

ஒருமுறை  ஒரு அரசியல் பிரமுகர், எதிர்க்கட்சி நடத்திய ஊர்வலத்தை தன் வீட்டு ஹாலில் வீடியோவில் பார்த்ததும்,  உடன் இருந்த கட்சிப் பிரமுகர்களிடம் கூறிய விமர்சனங்களையும் கழுகார் எழுதிவிட,பெரிய பரபரப்பு!

‘நான் செய்தியை மறுக்கவில்லை. ஆனால் நான் ஜாக்கிரதையாக இருக்கவேண்டுமல்லவா? இந்த செய்தியை உங்களுக்கு அளித்தது யார்?' என்று ஆசிரியரை பிரமுகர் தரப்பில் இருந்து வலியுறுத்திக் கேட்கப்பட்டது!

யார் சொன்னது என்று அப்போதும்  சொல்லவில்லை! இப்போதும் சொல்ல விரும்பவில்லை! கழுகார் அதை செய்தி ஆக்கியது சொன்னவருக்கே  தெரியாது என்பதுதான் உண்மை!

‘கழுகு ரொம்ப பிரசித்தமாக இருந்தது. தில்லியில் நான் பஸ்ஸில் சென்றபோது கல்லூரி  மாணவர்கள், ஓடிவந்துகொண்டிருந்த ஒரு மாணவனைச் சுட்டிக்காட்டி கழுகு வர்றாண்டா, பஸ்சை நிறுத்து, வம்பு கிடைக்கும் என்று கத்தினார்கள்!' என்று சுஜாதா ஒருமுறை ஆசிரியரிடம் கூறினார்.

கழுகாருக்கு பிறகு அலுவலகத்தில் உள்ள பல நிருபர்கள் ‘சிறகுகளாக' மாறினார்கள். சுதாங்கன், வைகோ ரகசியமாக ஈழத்துக்குச் சென்ற செய்தியைக் கொடுத்தார்! எங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது அது! மிஸ்டர் கழுகார் வாசகர்கள் ஆர்வத்துடன் வாசித்து ரசிக்கும் பகுதி ஆயிற்று! அதனால் அவருக்கு இப்போதும் மரியாதை கூடியிருக்கிறதே தவிர குறையவில்லை!

ஜூன், 2021

logo
Andhimazhai
www.andhimazhai.com