சென்னை கோயம்பேட்டில் இருந்து விமானநிலையம் செல்லும் மெட்ரோ ரயில் புறப்படத் தயார் நிலையில் இருந்தது. கறுப்புக்கண்ணாடியும் இரு காதிலும் இயர்போனும் அணிந்த இளைஞனான நிதின் பெட்டியில் ஏறி அமர்ந்தான். லேப்டாப்பைத் திறந்து ப்ராஜெக்ட் ரிப்போர்ட்டைப் பார்க்க ஆரம்பித்தான்.
அவனுக்கு எதிரே இருந்த இளம்பெண் பட்டுப்புடவையில் அழகே உருவாக இருந்தாள். இவனைச் சற்று நேரம் பார்த்ததும் அவள் முகத்தில் இரக்கக் குறி துலங்கியது.
பக்கத்தில் இருந்த கருணையே வடிவான இளைஞரிடம், “ஹென்றி, சின்னவயசிலேயே ஆண்டவன் இந்தப் புள்ளையாண்டானுக்கு இப்படியொரு குறை வெச்சிட்டானே... கண்ணும் தெரியலை, காதும் கேக்கலைப் போலருக்கு.. கறுப்புக் கண்ணாடியும்
செவிட்டு மிசினும் வெச்சிருக்கான் பாருங்கோ. அது என்ன மடியில...ஹார்மோனியப் பொட்டி போலருக்கு.... இதை வெச்சி பாட்டுப் பாடி ரயிலில் பிச்சை எடுப்பான் போலத் தோன்றது..” என்றாள்.
“ஆமாம்... யமுனா...இவன் ரொம்பப் பாவம் ...” என்ற ஹென்றி பாக்கெட்டில் கைவிட்டு பத்துரூபாய் நோட்டை எடுத்தார்.
நவீன் காதில் இந்த உரையாடல் விழுந்ததும் கொதித்துவிட்டான். கண்ணாடியைக் கழற்றி, இயர் போனையும் உருவிவிட்டு யமுனாவைக் கோபக்கனலுடன் பார்த்து கத்தினான்..“ஹே லேடி, ஐ அம் நாட் பிளைண்ட் ஆர் டெஃப். திஸ் இஸ் நாட் ஹார்மோனியம். திஸ் இஸ் லேப்டாப்...”
அடுத்த நிமிடம்,“எந்தப் பதரடா அவன் ஆங்கிலத்தில் பேசுவது? அவன் நாவைத் துண்டாடிவிடுகிறேன்” என்று சிவாஜி கணேசனின் கோபக்குரலில் சப்தம்கேட்டது. முகமெல்லாம் மீசையாக, படு உயரமாக, வலிமையான ஆள் ஒருவர் ஆவேசமாக நின்றுகொண்டிருந்தார்.
நவீனுக்கு உச்சா வருவது போல் இருந்தது. “வாளுக்குவேலித் தேவரே பொறுமை...பொறுமை” என்று இன்னொரு இளைஞன் சொன்னான். அவன் சிவந்த நிறத்தில் இருந்த அழகன். முகத்தில் பெரும் அமைதி இருந்தது. “வந்தியத் தேவரே.. தாங்கள் சொல்வதால் இவனை விடுகிறேன்” என்று வாளுக்குவேலி அமர்ந்துகொண்டார்.
நிதின் சுற்றிலும் பார்த்தான். வாளுக்குவேலி, வந்தியத்தேவர் அருகே இன்னொரு உயரமான கம்பீரமான ஆள் இருப்பதையும் பார்த்தான். அவரிடமும் வாள் போன்ற ஆயுதம் இருந்தது. மிக நீளமாக இருந்தது.
“தம்பி என் பெயர் கருணாகர பல்லவன். பயப்படாதே உட்கார்” என்றார் அவர்.
அழுதுவிடும் நிலைக்குப் போன நிதினிடம் மில் தொழிலாளர்களைப் போலிருந்த இரண்டுபேர் வந்தார்கள். “ஐ யாம் கோபாலன், ஐ யாம் சங்கரன்” என்று அறிமுகம் செய்துகொண்டனர்.
சற்றுத் தள்ளி சற்று மிரள விழித்தபடி அமர்ந்திருந்த பெண்ணைக் காட்டி, அவள் காயத்ரி என்றார் கோபாலன். அவள் கருநீலப் புடவை அணிந்திருப்பதைக் கவனித் தான் நிதின்.
அவனுக்குச் சற்றுப் பின்னால் இருந்த சீட்டில் ரயில் பெட்டிக்குள்ளும் குடையை விரித்துப் பிடித்துக்கொண்டிருந்த இளம் தம்பதி அவனை நோக்கித் திரும்பினார்கள். குடை மடக்கப்பட்டது. அந்த இளைஞன் மிக அழகாக தூய்மையின் உறைவிடமாக இருந்தான். ஜிப்பா போட்டிருந்தான். அந்த பெண்ணும் அழகான மஞ்சள் பட்டுப்புடவையில் அவனுக்கு ஏற்ற ஜோடியாகத் தோன்றினாள். கைவிரல்களுக்கு மருதாணி இட்டு, குலுங்கக் குலுங்க வளையல் அணிந்திருந்தாள்.
“ நான் அரவிந்தன், இவள் பூரணி” என்ற அந்த குடை இளைஞன் நிதினை நோக்கி வந்தான். அவன் முகத்தில் இருந்த சிநேக பாவம் நிதினை நார்மல் ஆக்கியது.
“பாஸ் நீங்கல்லாம் ஒரே டீமா? கூத்துப் பட்டறை
முத்துசாமி ஆளுங்களா? ஏதாவது ட்ராமாவுக்குப் போறீங்களா?”
அரவிந்தன் அழகாகப் புன்னகை செய்தான். இப்படி ஒரு புன்னகையை அவன் கண்டதே இல்லை. கோபாலனும் சங்கரனும் சிரித்தார்கள். பின்னால் வாளுக்குவேலி மீசையை முறுக்குவதும் வந்தியத்தேவன் அவரை அமைதிப் படுத்துவதும் நிதின் கண்ணில் பட்டது.
“எங்கள் பெயர்கள் உனக்கு பரிச்சயம் இல்லையா?” என்றான் அரவிந்தன்.
“நோ. ஹூ ஆர் யூ” என்றவன் வாளுக்குவேலியைப் பார்த்து நாக்கைக் கடித்துக் கொண்டான்.
“நாங்கள் எல்லாம் ஐம்பதுகளில் இருந்து எண்பதுகள் வரை தமிழ் வாரப்பத்திரிகைகளில் பெரும் எழுத்தாளர்கள் எழுதிய தொடர்கதைகளில் உலாவிய முக்கிய கதாபாத்திரங்கள்” என்றான் அரவிந்தன்.
“நாட்டு விடுதலைக்குப் பின்னால் உருவான லட்சியவாத தலைமுறையின்பிரதிநிதிகள் நாங்கள் இருவரும்.” என்ற பூரணி கம்பீரமாகப் பேசத் தொடங்கினார். “பாலுணர்ச்சியைத் தாண்டிச்
சென்றால்தான் இளைஞர்கள் சாதிக்கமுடியும் என்பதை உணர்த்திய பெண் யமுனா. அன்பும் கருணையும் வடிவான லட்சியமனிதன் ஹென்றி. தமிழ்ச்சமூகத்தின் பெருமை வாய்ந்த பழம்வரலாற்றின் பிரதிநிதிகள்தான் வந்தியத் தேவரும் கருணாகரப் பல்லவரும். எண்பதுகளில் தமிழ்த்தேசிய அரசியல் தேடலில் கண்டுபிடித்து எழுதப்பட்டவர்தான் வாளுக்குவேலி. படித்த நவீன தமிழ்ச்சமூகத்தில் ஏற்படும் குழப்பங்களில் பிறந்தவள்தான் காயத்ரி. அதோ அமைதியாக ஜன்னலுக்கு வெளியே பார்த்துக்கொண்டிருக்கிறாளே விசாலி... அவள் இந்த தமிழ்ச்சமூகத்தில் என்றென்றைக்கும் இருக்கப் போகிற ஏமாளியான ஆனால் உறுதியான பெண்.கோபாலனும் சங்கரனும் தமிழ்நாட்டின் தொழிலாளி வர்க்கத்தின் பிரதிபலிப்புகள்.” அவரது பேச்சில் இருந்த ஆளுமை நிதினை மிரட்டியது.
“நான் இதெல்லாம் படிச்சதில்ல.. எனக்கு 23 வயசுதான். சாருவோட ப்ளாக்தான் தெரியும். எப்பாச்சும் ஜெ.மோ, எஸ்.ரா. ப்ளாக் படிப்பேன். ஆனா பேஸ்புக்ல நிறைய ஸ்டேட்டஸ் போட்டிருக்கிறேன்” என்றான் நிதின்.
சற்றுத் தொலைவிலிருந்து பட்டுச்சேலை சரசரக்க எழுந்து வந்த இன்னொரு அழகியப் பெண்ணைக்கண்டதும் எல்லோர் கண்களும் அந்த திசையில் திரும்பின. நிதின் ஒரு நிமிஷம் இவ்வளவு ஒரு அழகா என்று வாயைப் பிளந்தான். அந்த பெண்ணின் நடையே நடனம் போலிருந்தது. “ என்னை விட்டுவிட்டீர்களே?” என்றார் அவர். குரலே சங்கீதம் போல் இருந்தது. “ஆம். மன்னித்துக்கொள்ளுங்கள். இவர் மோகனாம்பாள். தில்லானா மோகானாம்பாள் படம் பார்த்திருப்பாயே..” என்றார் பூரணி. நிதின் மண்டையை ஆட்டினான்.
எல்லோரும் அமைதியாக இருந்தார்கள். கருணாகரப் பல்லவன் மட்டும் விருட்டென எழுந்தார். வேகமாக அருகே வந்தார். இடையில் கையைவிட்டு எதையோ எடுத்தார். நிதின் ஆடிப்போனான்.
அது ஒரு பத்திரிகை. அந்திமழை என்று எழுதப்பட்டிருந்தது. “ இதைப் படித்துப் பார்.. எங்களைப் பற்றி எழுதி இருக்கிறார்கள்.. புரியும்” என்று சொல்லி அவர் இடி இடியென சிரித்தார்.
அச்சம் விலகிய நிதின் எல்லோருடனும் ஒரு செல்ஃபி எடுத்துக்கொள்ள ஆசைப்பட்டு தன் செல்போனை உருவினான்.
நவம்பர், 2014.