ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் தோழமை உணர்வோடு பழக நண்பர் என்று ஒருவர் கிடைப்பார். அது சாலையில் உங்கள் வண்டியை இடித்த எதிர்வண்டிக்காரரோ அல்லது மளிகைக்கடையில் சின்ன உரசலில் நீங்கள் கையில் வைத்திருந்த முட்டைபாக்கெட்டை சிதறடித்தவராகவோ கூட இருக்கலாம். ஆக நட்பு அமைவதற்காகவென்று ஒதுக்குப்புறமான இடமெதுவும் பூலோகத்தில் இல்லை.
எனக்கு மேலே குறிப்பிட்ட இடங்களில் நட்பு அமைவதற்கான சாத்தியப்பாடுகள் குறைவே. பதிலாக புதிய எதிரி என்றொருவர் தான் குறுநகரில் உதயமாகிவிடுவார். அவரை பார்க்கும் சமயங்களிலெல்லாம் பல்லை வெறுவிக்கொண்டும், உறுமிக்கொண்டும் அகலுவது நடந்தேறிக்கொண்டே இருக்கும். பின்பாக அந்த நபர் குறுநகரிலிருந்து மாயமாகியிருப்பார். என் பார்வைக்கு தட்டுப்படாத அந்த எதிரி என்னவானார்? ஒருவேளை வேற்றுலக ஜந்து அவரை விழுங்கிவிட்டதா? என்று யோசிக்க நேரமில்லாமல் அடுத்த புதிய எதிரி ஒருவர் பேக்கரிக்காரன் தயவிலோ, பெட்ரோல் பங்கிலோ எனக்கு கிடைத்திருப்பார்.
வாழ்க்கையானது வெட்டியாய் ஒன்றுமில்லாமல் கழிந்து போனால் யாருக்குமே சுவாரஸ்யம் இல்லாமல் போய்விடும். பிரச்னைகளே இல்லாத மனிதனை பார்ப்பது அரிதான விசயம் தான்.
கடைசிக்கு சளித்தொல்லையிலேனும் ஒருவன் மூக்கைச் சிந்திக்கொண்டேயிருக்கிறான். ‘ஏம்ப்பா சளியா?' என்றால், ‘அதையேம்ப்பா கேட்குறே.. ரெண்டு நாளைக்கிம் முன்ன வெய்யிலா இருக்கேன்னு ஒரு கூல்டிரிங்ஸ் குடிச்சதுதாங்கோடு!' என்று காரணக்கதை சொல்கிறான்.
எனக்கெல்லாம் பிரச்சனைகளே வாழ்க்கையாய் இருப்பதால், ‘மனுசன் கெட்டால் டாஸ்மார்க் பாரு!' என்ற சொலவடைக்கு ஏற்ப, தெரிந்த பாதையில் எனது இருசக்கர வாகனம் அதுவாகவே சென்று ஒரு வேப்பை நிழலில் நின்றுவிடும்! சாண்டில்யன் கதைகளில் தான் புரவிவீரன் மனநிலையறிந்து புரவியானது நிதானமாகவே சென்றுகொண்டிருக்கும். நீர்த்தேக்கத்தைக் கண்டால் அதுவாகவே நின்றுவிடும்.
அப்படித்தான் அன்றும் காரணம் என்று எதுவும் மனதுக்கு சிக்காமலேயே எனது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நேரே குறுநகரைவிட்டு ஒதுங்கியிருக்கும் கோவிலுக்குச் சென்று நின்றுவிட்டது. (கோவில் -டாஸ்மார்க் விற்பனையகம்) பெட்டிக்கடையினுள் சோடா அமர்ந்திருந்தான். பத்துவருட காலத்திற்கும் முன்பாக குறுநகரில் சோடா போட்டுக்கொண்டிருந்தவன் என்பதால் அவனை சோடா என்றுதான் அழைப்பேன். போக என் அலைபேசியிலும் சோடா என்றுதான் பதிவிட்டு சிறப்பித்திருக்கிறேன்.
கோவிலுக்கு அருகிலேயே பெட்டிக்கடை என்பதால் அதனுள் பக்தகோடிகளுக்கான காரஞ்சாரமான ஐட்டங்களும், தண்ணீர் மற்றும் பன்னீர் சோடா வகைகளும் நிரம்பியிருக்கும். ஆப்பிள், கொய்யா, வெள்ளரி என சீசனுக்கு தக்கமாதிரி பழவகைகளும் ஒரு தட்டில் நிரம்பியிருக்கும்.
புகைவிரும்பி ஒருவர் நான்கு வருடம் முன்பாக ஒரு கோல்டு பில்டர் சிகரெட் புகைக்க ஆசைப்பட்டு விலையை விசாரிக்க... இருபது ரூபாயென பக்தருக்கு சோடா சொல்லவும் அவர் விழுந்து உருண்டு அழுதபடி இடத்தைக்காலி செய்த சம்பவம் நிகழ்ந்த பிறகு பீடி மட்டுமே புகைவிரும்பிகளுக்கு அங்கு சில்லரையாக இன்றுவரை கிடைக்கும்.
நான் சென்று வேப்பை மர நிழலில் வண்டியை நிப்பாட்டிய சமயத்தில் ஓரளவு கணக்கான கிர்ரில் நண்பர் கிங்ஸ் புகைத்தபடி நின்றிருந்தார். அவர் எனக்கு ஒரு சலாம் வைத்து விட்டு, ‘எப்பூடி நாங்க இன்னிக்கி லெட்ஜர்ல கையெழுத்துப்போட உங்களுக்கு முந்தியே வந்துட்டோம்ல!' என்றவர் வேப்பை உச்சியைப்பார்த்து வளையம் வளையமாக புகை விட்டார்.
அவர் இரண்டு வருட காலமாக எனக்கு நண்பர். ஆனால் இன்றுவரை அவரது பெயர் எனக்குத் தெரியாது. ஆனால் குறுநகர் பேங்க் ஒன்றில் காசாளராக இருப்பதாக சோடா தகவல் வெளியிட்டிருந்தான். இதே போல் கல்லூரி விரிவுரையாளர் ஒருவர். விரிவுரையாளர் என்பதால் எனது சிறுகதை தொகுப்பு ஒன்றை கொரனாவுக்கும் முந்தைய காலகட்டமொன்றில் ராஜகிர்ரில் பரிசளித்திருந்தேன். பின்பாக ஒரு நாள் அவர், ‘இந்த மண்ணோட மொழி சிறப்பா வந்திருக்குங்க உங்க கதையில!' என்றார். அவர் பெயரும் தெரியாது எனக்கு. பெயர்களால் எனக்கு பயனெதுவும் இல்லை போலிருக்கிறது.
பெட்டிக்கடையினுள் காலைவைத்து சோடா ஏறும் இடத்திலேயே தண்ணீர் கலந்து முதல் ரவுண்டை முடித்தவன் கொய்யாத்துண்டிலிருந்து ஒரு துண்டை எடுத்து வாய்க்குள் திணித்துக் கொண்டே காசாளரிடம் சென்றேன். போனில் ‘இல்லம்மா! வந்துடறேன்மா!' என்று சொல்லிக்கொண்டிருந்தவர் எனக்கென ஒரு சிகரெட்டை எடுத்து நீட்டினார். மறுக்காமல் அதைப் பெற்றுக்கொண்டு பெட்டிக்கடையில் நூலில் கட்டித்தொங்கவிடப்பட்டிருந்த லைட்டரில் பற்ற வைத்துக் கொண்டு மரத்தடிக்கு திரும்புகையில் அவர் அலைபேசியை பாக்கெட்டில் திணித்திருந்தார்.
ஆங்காங்கே மரத்தடியில் குழுக்களாக பக்திப்பரவசத் தில் பக்தர்கள் அமர்ந்து பேச்சாய்ப்பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பேச்சில் அடுத்த நாளே நிலவிற்பனை முடிந்து கைக்கு பத்து லட்சம் கமிஷன் தொகை வந்துவிட்டதாகவும், டாட்டா சுமோ ஒன்று விலைக்கு கைவசம் இருப்பதாகவும், சூட்டிங்கிற்கு அடுத்த மாசம் ஒன்னாந்தேதியில இருந்து கிளம்ப வேண்டியது தான் ஜீ! என்றும் தாறுமாறாக பேச்சுகள் ஓடிக்கொண்டிருந்தது. ‘இருடி வர்றேன் கூமாச்சி பண்ணிட்டு!‘ என்றொருவன் அலைபேசியில்
பேசிக் கொண்டே நடந்துகொண்டிருந்தான். கத்தியையா அல்லது வாளையா? என்று நான் யோசிக்கவேயில்லை.
‘என்ன இன்னிக்கி கண்ணெல்லாம் இப்பவே சிவந்திருக்குங்ளே! புல்லட்டை ஓட்டீட்டு போயிருவீங்களா?' என்றேன் காசாளரிடம்.
‘இன்னும் ரெண்டு கோட்டர் அடிக்க முடியுங்க என்னாலெ! அம்மாவுக்கு காது கேட்காம போயிட்டே இருக்குதுங்க! நாம ஒண்ணு சொன்னா அது வேற ஒண்ணு
சொல்லுது! டிவில இப்பெல்லாம் சவுண்டு அதிகமா வச்சுட்டு தான் நாடகம் பார்க்குது! அதான் இப்ப நீங்க வர்றப்ப கூப்புட்டு பேசுச்சு. இந்தமாதிரி பசங்க ரெண்டு பேரும்
சாப்புட்டானுங்களாம்மா?ன்னு கேட்டேன். நீ வராம அவிங்க எப்போ சாப்புட்டு இருக்காங்க? என்னடா புதுசா கேக்குறேன்னு? சொல்லுச்சுங்க. அதுலபாருங்க போன்ல மட்டும் தெளிவா காது கேக்குது அம்மாவுக்கு!'
'காதுக்கு மிஷின் வாங்கி மாட்டி விட்டுடுங்க
காசாளரே!'
‘சொன்னா காதுலயே போட்டுக்க மாட்டீங்குதுங்ணா. காது கேக்காட்டி போயிச்சாட்டாதுங்கறது மாதிரியே நடந்துக்குது. ஒருவேள நடிப்போ என்னமோன்னு காலி டம்ளரையெல்லாம் கைநழுவிப்போடறாப்ல போட்டு பார்த்துட்டேன். திரும்பவே மாட்டீங்குது!'
‘பசங்க ரெண்டு பேருன்னு சொன்னீங்க..
வயசென்ன என்ன படிக்கறாங்க?'
‘ரெண்டுபேரும் டிவின்ஸ்ங்ணா! கொழப்பமாயிடும் உங்களுக்கு.. இருங்க நான் செல்போன்லயே வீடியோ எடுத்து வச்சிருக்கேன் பாருங்க!' என்றவர் பாக்கெட்டிலிருந்து அலைபேசியை எடுத்துத்தடவி வீடியோ ஒன்றை ஓடவிட்டு என்னிடம் நீட்டினார். ஒன்னெக்கண்டாப்புலயே இரண்டு நாய்கள்
சோபாவிலிருந்து எழுந்து வீட்டின் வெளிக்கதவு நோக்கி ஓடின ‘பவ் பவ்வென‘ ஒலியெழுப்பிக்கொண்டே!
‘பார்த்துட்டீங்களாண்ணா! போன மாசம் இதே எடத்துல நம்ம கறிக்கடைக்கார அண்ணாச்சிக்கி இதே வீடியோவைக் காட்டினேன். இந்த ரெண்டு நாய்களையுமா பசங்க பசங்கன்னு சொல்லிட்டு இருந்தே, படுவா! அப்படின்னுட்டாரு! போதையில எனக்கு அழுகாச்சி வந்துருச்சுங்ணா! பசங்களைப்போயி நாயிகன்னு சொல்லிட்டாரு அவரு! எவ்ளோநேரம் தேம்பித் தேம்பி அழுதேன்னு பொட்டிக்கடைக்காரரை கேளுங்க நீங்க.. அவரு சொல்லுவாரு!'
நான் நைசாகத்திரும்பி சோடாவை ஒரு பார்வை பார்த்தேன். பீடி ஒன்றை புகைத்துக்கொண்டிருந்தவன் தலைவலி என்பது மாதிரி கையை தலையில் வைத்து குனிந்தபடி புகை விட்டான். என்ன இருந்தாலும் ஒரு கோல்டுபில்டர் கிங்ஸ் கொடுத்திருக்கிறார். இன்னும் கூட ஒன்று அவர் பற்றவைக்கையில் எனக்கும் தருவார். பிள்ளைகளின் கதை தானே சொல்கிறார். ஏராப்பிளேன்லயோ அல்லது ஹெலிக்காப்ட்டர்லயோ நாளைக்கி கோவிலுக்கு வருவேன் குடிக்க என்று சொல்லவில்லையே!
‘ஆனாப்பாருங்கண்ணா, ரெண்டு வருசமா நான் கறிக்கடையில கோழித்தலை, கால்கள்னு ஞாயிற்றுக்கிழமை நூறுரூவாயை குடுத்துட்டு தான் வாங்கிட்டு போவேன். ஆனா நான் அழுறதை பார்த்துட்டு அப்ப இருந்து அதுகளை என் பசங்களுக்கு ஃபிரியாவே குடுத்துடறாரு. நல்லமனுசன் அவருண்ணா! அவரும் ரோட்டும்பேர்லயே கறிக்கடை போட்டிருக்காரா.. ஊருல இருக்குற நாயிகெல்லாம் கடைவாசலுக்கு வந்து நின்னுட்டு ஒரே சண்டையின்னு அவரே ரெண்டு நாய்க்குட்டிகளை வாங்கி வளர்த்தினாராம்ணா.. ஆனா காரும் பைக்கும் ரோட்டுல போயிட்டே இருக்குதே! கண்ணை மூடிட்டு தானே அவிங்கெல்லாம் ஓட்டுறாங்க! அடிபட்டு
செத்துடுச்சாம்ணா.. சோறுபோட்டு வளர்த்துன அதுங்க வாயை பிளந்துட்டு ரோட்டுல கெடக்குறதை பார்த்தா எப்டி இருக்கும் தெரியுமாடான்னு அவரு கண்ணுலயும் கண்ணீரு வந்துருச்சுங்ணா! அதுக்கொரு
விசுக்கா நான் அழுதேன்ணா! அப்புறம் என்னோட
பசங்கள்ல ஒருத்தனை கடைக்கிக்கேட்டாரு. நானே வேணாலும் ஞாயித்துக்கிழமை கறிக்கடைக்கி காவலுக்கு வந்து பொழுதுக்கும் நின்னுக்குறேண்ணா.. அப்படியெல்லாம் ஒருத்தனை வேணும்னு கேக்காதீங்கன்னு
சொல்லிட்டேன்!'
நான் இரண்டாவது ரவுண்டு ஊற்றிக்கொண்டு அவரிடமே கொய்யாத் துண்டைக்கடித்துக் கொண்டே வந்தேன். அவர் நான் அகன்ற மறுநிமிடமே அலைபேசியில் யாருடனோ பேசத்துவங்கிவிட்டார். பேச்சில் பிள்ளைகள் பிள்ளைகள் என்றே இருக்க நான் உன்னிப்பாய் காதை தீட்டிக்கொண்டு கேட்டேன். எதிர்முனையில் என்ன பேசுகிறார்கள் என்று தெரியவில்லை. அவரே என் நிலைமையை உணர்ந்தவர் போன்று வெளி ஸ்பீக்கரை போட்டு விட்டார்.
‘ராஜாவும் கஜாவும் பண்ணுறதே செரியில்லீங்க. எனக்கு ஏனோ கோவமாவே வருது. ரெண்டு பேரையும் வீட்டுக்கு வெளிய வெச்சுத்தான் வளர்த்தப்போறேன் இனிமே'
‘என்ன பண்ணுனானுகம்மா?'
‘பெட்ரூம் போயி பெட்டுல ஏறி விளையாண்டிருக்கா
னுங்க! ரூம் பூராவும் பஞ்சுங்களாப் பறக்குது. தலையணை ஒரு பக்கம் பிஞ்சு கிடக்குது! பெட்ல ஓட்டையை போட்டுட்டானுங்க ரெண்டு பேரும் சேர்ந்து! ஒரு மனுஷிக்கு கோவம் வருமா வராதா சொல்லுங்க?'
‘அவனுங்களை திட்டுனியா? பாவம்டி சின்ன பசங்க அவனுங்க! அன்னைக்கி கூட என் பைக்கி சீகவரை பிச்சு நாசமாக்கிட்டாங்க! அதுக்காக நான் திட்டவே இல்லையே! தெரியாமப் பண்ணியிருப்பானுங்க! இப்ப எங்க அவனுங்க?'
‘என் முகத்தை பார்த்தே கோவமா இருக்கேன்னு தெரிஞ்சுட்டு போயி உங்கம்மா கூட உட்கார்ந்து ஒன்னும் தப்பே பண்ணாதவனுங்களாட்டம் டிவி பாத்துட்டு இருக்கானுங்க! இன்னில இருந்து ரெண்டு பேரும் வீட்டுக்கு வெளிய தான் இருக்கணும்!'
‘திடீருன்னு வெளிய வுட்டு கதவை சாத்திட்டா மனசை உட்டுடுவானுகம்மா! அவனுங்களுக்காக நான் வேணா மன்னிப்பு கேட்டுக்கறனே. சரி என்ன டிபன் இன்னிக்கி? சப்பாத்தியா?'
‘பேச்சை மாத்தப் பார்க்காதீங்க. இன்னில இருந்து ரெண்டு பேரையும் வீட்டுக்குள்ள நான் அனுமதிக்க மாட்டேன். என்ன சொல்றீங்க?'
'பேசிக்கலாம்மா.. நான் இன்னும் அரைமணி நேரத்துக்குள்ள வந்துடறேன்மா!'
'என்ன சொல்றீங்க நீங்க இப்போ? இன்னிக்கி ரெண்டுல ஒன்னு தெரிஞ்சாகணும்!' என்றவர் எதிர்முனையில் போனை அணைத்துக்கொண்டார் போலிருக்கிறது!
‘சின்னப்பசங்கன்னா தப்புத்தண்டா செய்யத்தானுங்கண்ணா செய்வாங்க! அவனுங்களைப்போயி வீட்டுக்கு வெளிய விட்டு கதவைசாத்தீட்டா.. எனக்கு அழுவாச்சி வருதுங்ணா! சித்தங்கூரியம் அழுதுக்கறேன் நானு!' என்றவர் ஓரமாய் உயர்ந்து வளர்ந்திருந்த டில்லிமுள் பக்கமாக குலுங்கிக்கொண்டே சென்றார்.
எனக்கிருந்த எரிச்சலில் ஒரே ரவுண்டில் மீதத்தை ஊற்றிவிட்டு கொய்யாவை மென்றேன். சோடா எனக்கு கேட்காமலேயே பத்தாம்நெம்பர் பீடி ஒன்று கொடுத்தான். வாங்கி லைட்டரில் பற்றவைத்துக் கொண்டேன்.
‘நீங்க வரலைன்னா இந்த நேரத்திக்கி ஊடே போயிருப்பாரு அவரு! நீங்க வந்தங்காட்டி நின்னுட்டாரு! எங்க பொறவுக்கு உச்சா அடிக்க போயிட்டாரா?' என்றான் சோடா.
‘இல்ல, அவரு பசங்க பிரச்சனையாட்ட இருக்கு! அழுதுட்டு அங்க நிக்கிறாரு!' என்றவனுக்கு சோடா பதிலெதும் சொல்லவில்லை. இதுமாதிரி பலகேஸ்களை நாள்முழுக்க பார்த்தபடி வெறுமனே வியாபாரத்தில் கண்ணும் கருத்துமாய் இருப்பவன் அவன். ஒருகாலத்தில் நல்ல குடிகாரனாக குறுநகரில் வாழ்ந்தவன் சேர்க்கை செரியில்லாமல் குடியை ஒதுக்கி விட்டு குடும்பம் நடத்துகிறான்.
‘அவரு பசங்களுக்கு காசாளரு ராஜா, கூஜான்னு பேரு வச்சிருக்காரு போல!' என்று சோடாவிடம் நான் சொல்கையில் அவரே மூகைச்சிந்திக்கொண்டு ஒரு சிகரெட் பற்றிக்கொண்டு புகைவிட்டபடி வந்தார்.
‘ண்ணோவ்! கஜாவை கூஜான்னு பொட்டிக்கடைக்காரருக்கு அறிமுகப்படுத்தாதீங்க! அப்புறம் அழுவேன் நானு!' என்றார். மீண்டும் அலைபேசியில் வீடியோ ஒன்றை ஓடவிட்டு என்னிடம் கொடுத்தார்.
‘சோபால நான் உக்காந்திருக்கன் பார்த்தீங்களா.. ராஜா அங்க டிவி பார்த்துட்டு இருக்கானா.. கஜாவைப்பாருங்க இப்ப என் காலடியில நீட்டி உட்கார்ந்திருக்கான் பாருங்க!..கொரனா டைம்ல இவனுக்கு குளிப்பாட்டி வுட்டேனுங்கண்ணா.. கையை கடிச்சு வச்சுட்டான்.. அதான் கடிச்சுப்போட்டியில்லடான்னு நான் கேட்குறேன்.. அவன் ஊ ஊன்னு அழுவாம்பாருங்கண்ணா!' நன்றாக மாட்டிக்கொண்டேனோ? என்று அப்போது தான் பொறி தட்டிற்று எனக்கு! ஆக இன்னொரு பாட்டிலுக்கு செலவீனம் இருக்கிறது!
‘காலையில டூட்டிக்கு வண்டிய எடுத்தேன்னு வச்சிக்கங்கண்ணா.. காம்பௌண்டு சுவத்துல ஒடியாந்து ஏறி நின்னுக்குவானுங்க ரெண்டு பேரும். எங்க வீதி முக்கு திரும்புற வரைக்கும் நின்னுட்டு பார்ப்பானுங்க! சப்பாத்தின்னா ரெண்டு பேருக்கும் பிரியம்ணா! இருங்கண்ணா.. எதோ வாட்சப் மெசேஜ் சத்தம் வருது.. என்னன்னு பார்த்துடறேன்.. ஒரே நிமிசம்!' வாங்கியவர் ஆவலாய் அலைபேசியை தடவினார். அவர் முகம் மகிழ்ந்து சுருங்கிற்று!
‘இங்க பாருங்கண்ணா என் சம்சாரம் பண்ண வேலையை! ச்சை! ஊருக்கே பார்வேடு பண்ணியிருப்பாளே!' கையில் அலைபேசியை வாங்கிப் பார்த்தேன்.
ராஜா, கஜாவுடன் இவர் பெட்டில் தூங்குவது போன்ற படத்தில், ‘மூன்று நாய்கள் நிம்மதியாய் தூங்குகின்றன!‘ என்று எழுதி இவர் மனைவி வாட்சப் மெசேஜ் செய்திருந்தார். பிரச்சனை பெருசு போல! உடனே புல்லட்டை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டார் காசாளர். நான் அடுத்த கோட்டருக்கு கோவிலுக்குள் சென்றேன்.
டிசம்பர், 2021.