வசனத்தில் வாழ்தல்

வசனத்தில் வாழ்தல்
Published on

இன்றைய தமிழ்ச்சமூகத்தைக் கண்ணை மூடிக்கொண்டு ஒரு நிமிடம் யோசிக் கலாமா? வீட்டுக்குள் இருந்தாலும் பள்ளிக்குப்போனாலும் பேருந்தில் சென்றாலும் சமையலறையில் இருந்தாலும் கழிப்பறையில் இருந்தாலும் திரும்பத் திரும்பச் சொல்லப்படும் ஒற்றை வரிகளால் நிறைந்திருக்கிறது வாழ்வு.

சட்டி சுட்டதடா கை விட்டதடா என்று சமையலறையில் சொல்லாதவர்கள் இருக்கக்கூடுமா? சோதனைமேல் சோதனை போதுமடா சாமி! என்று முனகாத குடும்பத்தலைவனைக் காட்டுங்கள்! ஏராளமான ஒற்றைவரிகளை திரைப்படப்பாடல்களின் மூலம் கண்ணதாசனும் வாலியும் வைரமுத்துவும் நம்மிடையே திரும்பத்திரும்ப உலவும் சாகா வரம்பெற்றவையாக உலா விட்டிருக்கிறார்கள்.

நண்பர்கள் குழாமைச் நோக்கிச் செல்லுங்கள். அங்கே இப்போது பெரும்பாலும் வழி நடத்துவது வடிவேலுதான். வந்துட்டான்யா வந்துட்டான்.. என்று நம்மை வரவேற்பவர்கள் அவனா நீயீ? என்று காலையும் வாருகிறார்கள். இந்த கோட்டைத் தாண்டி நீயும் வரக்கூடாது; நானும்  வரமாட்டேன் என்று கள்ளச்சிரிப்பு சிரிக்கிறார்கள். அரசியலில் இதெல்லாம் சகஜம்பா, என்று கவுண்டமணி பாணியில் கெக்கே பிக்கே என்கிறான் ஒருவன். உடனே அலறிச் சிரிக்கும் கூட்டம், இந்த கொசுத் தொல்லை தாங்கலப்பா! என்கிறது மீண்டும் கவுண்டரின் சொல்லைக் கடன்வாங்கி.  உஸ் இப்பவே கண்ணை கட்டுதே என்று நீங்கள் பெருமூச்சு விடுகிறீர்கள். சண்டையில் கிழியாத  சட்டை எங்கே  இருக்கிறது என்று ஒருவன் உங்களை உலுக்குகிறான். இங்க பாரு பேச்சு பேச்சாதான் இருக்கணும் என்கிறீர்கள் நீங்கள். அப்டியே நான் ஷாக் ஆகிட்டேன் என்றவாறே இன்னொருவன் பேச்சைத் தொடங்குகிறான்.

நான் ஒரு தடவை சொன்னா... நூறு தடவை சொன்ன மாதிரி என்ற வரிதான் இதுவரைக்கும் தமிழ் சினிமாவில் வந்திருக்கும் பஞ்ச் டயலாக்குகளில் உச்சம். சாதாரணமாக யாரும் உச்சரித்தால் சிரிப்பு வரவைக்கும் வரிகள் இவை. அதை அசாத்திய தன்னம்பிக்கையுடம் கூடிய பாணியில் ரஜினி உச்சரித்து உயிர்க்க வைத்தார்.

என் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் நானே செதுக்கியதுடா என்று அஜீத் உறுமினார். எம்பேச்சை நானே கேக்கமாட்டேன் என்று சீறினார் விஜய். ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா.. பாக்குறியா பாக்குறியா.. என்று இரைந்தார் சூர்யா.

இவர்களுக்கு ஒற்றை வரிகளாக பஞ்ச் டயலாக்குகளை உருவாக்கித்தர பெரும் குழுக்களே இயங்குகின்றன. ஆனால் இதெல்லாம் மீறி சில சமயம் பேட்டி தரும் பெரும்புள்ளிகள் சாதாரணமாகச் சொல்லும் சொற்களையே பஞ்ச் டயலாக்குகளாக மாற்றி கலாய்க்க சமூக ஊடகம் தயாராக இருக்கிறது. கத்துகிட்ட மொத்த வித்தையையும் இறக்கி இருக்கேன்! என்று  இயக்குநர் லிங்குசாமி அஞ்சான் படத்தின்போது சொல்லி மாட்டினார். இந்த சொற்கள் இன்றைக்கு சமூக ஊடகங்களில் மட்டுமல்ல, அதற்கு வெளியேவும் புகழ்பெற்ற பிரயோகமாக இருக்கிறது.

சினிமாவிலிருந்து போராட்ட களத்துக்கு வாருங்கள். வரலாறு என்னை விடுதலை செய்யும் என்ற காஸ்ட்ரோவின் சொற்களையும் துப்பாக்கி குழலின் முனையிலிருந்து அதிகாரம் பிறக்கிறது என்கிற மாவோவின் வரிகளையும் உலகத் தொழிலாளர்களே ஒன்று படுங்கள் என்ற மார்க்ஸின் அறைகூவலையும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். அநீதியைக் கண்டு பொங்கினால் நீயும் என் தோழனே - என்கிற சேகுவேராவின் வரிகளை முழங்காமல் ஒரு சமூகப்போராளி உலவமுடியாது.

பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளை வழி நடத்த அங்கே திருவள்ளுவரும் அவ்வைப்பாட்டியும் பாரதியாரும் கடந்த தலைமுறையில் காத்திருந்தார்கள். ஓடி விளையாடு பாப்பா என்றும்  சாதிகள் இல்லையடி பாப்பா என்றும் எத்தனை முறை சொல்லக்கேட்டிருப்போம். தமிழுக்கும் அமுதென்று பேர் என்ற பாரதிதாசன், பூட்டிய இரும்புக்கதவு திறக்கப்பட்டது.

சிறுத்தையே வெளியே வா என்றபோது எத்தனை ஆவேசம்! பாரதியும் பாரதிதாசனும் பொதுவெளியில் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட கவிஞர்கள்! இவர்கள் தலைமுறைக்கு அடுத்தபடியாக வைரமுத்து பொதுவெளியில் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்டார் எனலாம்! காதலித்துப்பார் கவிதை வரும்! என்ற கவிதையைக் கடந்து வந்திராத இளைஞர்கள் இருக்கமுடியுமா?

இந்த தலைமுறை இளைஞர்களுக்கு ஓர் ஆதர்சமாக நிற்பன அப்துல்கலாமின் வரிகள். கனவு காணுங்கள் என்று கலாம் சொல்லிவிட்டுப் போய்விட்டார். அவர் சொன்ன மற்றும் சொல்லாத வரிகளும் கூட ஆட்டோ முதுகுகளிலும் தெருவோரச்சுவர்களிலும் எழுதப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. எதற்கெடுத்தாலும் சொலவடைகளும் பழமொழிகளும் சொல்லும் வழக்கம் கொண்ட சமூகத்தில் இருந்து கிளைத்து வந்தவர்கள் நாம். நூற்றாண்டுகளாக வழிகாட்டிய பாட்டன்களின், பாட்டிகளின் இடத்தை இன்றைக்கு ஊடகங்களின் வல்லமையால் ஆளுமைகளும் அவர்தம் சொற்களும் பிடித்துக்கொண்டிருக்கின்றன. ஆளுமைகள் ஆவேசத்திலும் அன்பிலும் உச்சரிக்கும் சொற்களில் சிலவற்றை திரும்பத்திரும்பத் சொல்லும்போது அச்சொற்களுக்கு ஒரு பிம்ப வலிமை கிட்டுகிறது! மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்று அண்ணா சொன்னதில் இருந்து, நான், நீ என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது; நாம் என்று சொன்னால் உதடுகள் ஒட்டும் என்று கலைஞர் சொன்னது வரை திரும்பத்திரும்ப அவை சொல்லப்பட்டு நம் மனதில் ஒட்டவைக்கப்படுகின்றன. ஆளுமைகள் மறைந்த பின்னும் அவர்களின் சொல் வாழ்கிறது.

கண்ணா இன்னொரு லட்டு தின்ன ஆசையா என்று இன்றுவரை சொல்லிக்கொண்டு திரிகிறோம். ஓபிஎஸ் அவர்களுக்குப் பிடித்த விளம்பர வாசக மாக இது இருக்கலாம். இது போன்ற விளம்பர வாசகங்களும்கூட அன்றாட வாழ்க்கையில் பொன்மொழிகளின் இடத்தைப் பிடிக்கின்றன. லட்சுமி ராமகிருஷ்ணனின் என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா என்கிற சாதாரண வெளிப்பாடு மிகப்பிரம்மாண்டமாக ஊதப்பட்டது.

சிவகார்த்திகேயன் அதைப் பாட்டாகவே படித்துவிட்டார்!

ஒரு சொல் வெல்லும்; ஒரு சொல் கொல்லும் என்பார்கள். ஆனால் எந்த சொல்லையும் செரித்து புழக்கத்தில் கொண்டுவந்து வாழ்வாங்கு வாழ்ந்துகொண்டிருக்கிறோம் நாம். நம்முடையது பொன்மொழிகளில் பஞ்ச் டயலாக்குகளில் ஒற்றை வரிகளில் வாழும் சமூகம்!

மே, 2017.

logo
Andhimazhai
www.andhimazhai.com