லாஜிக் கருந்துளைகள்!

லாஜிக் கருந்துளைகள்!
Published on

தமிழில் மட்டுமே கொடூரமான
சென்ட்டிமென்ட்கள், க்ளிஷே எனப்படும் ஆயிரம் முறை பார்த்து சலித்த காட்சிகள் என்றெல்லாம் வருகின்றன; உலகம் முழுக்க எவ்வளவு அருமையான படங்கள் எடுக்கிறார்கள் பார்த்தீர்களா என்றெல்லாம் அங்கலாய்க்கும் ஆசாமி யாக நீங்கள் இருந்தால், உங்களுக்காகத்தான் இந்தக் கட்டுரை. உலகம் முழுக்கப் பிய்த்துக்கொண்டு ஓடும் ஹாலிவுட் படங்களிலும் படுபயங்கரமான அபத்தமான காட்சிகள் உண்டு.

ஹாலிவுட்டைப் பொறுத்தவரை, அங்கே genres (ஜான்ராக்கள் & ஜால்ராக்கள் அல்ல. இது தமிழில் ஜானர் ஜானர் என்று தவறாக அழைக்கப்படுகிறது) எனப்படும் திரைப்பட வகைகள் மிக முக்கியம். கதை எழுதும் கட்டத்தில் இருந்தே, இது இந்த ஜான்ரா என்று வகைப்படுத்திக்கொண்டு, அந்த ஜான்ராவுக்கான தனிப்பட்ட அம்சங்கள் என்னென்ன என்று ஆராய்ந்து, அவற்றை உள்ளே நுழைப்பது வழக்கம். உதாரணமாக, ஒரு பேய் பங்களா பற்றிய கதை என்றால், பேய் பங்களா என்ற ஹாரர் ஜான்ராவில் என்னென்ன வரும் என்று ஆராய்ந்து, அவற்றை உள்ளே வைப்பார்கள். தானாகத் திறந்து மூடும் கதவு, மின்சாரம் நடு இரவில் தடைபடுவது, நள்ளிரவில் நாயகி நடுங்கிக்கொண்டு நிற்கும்போது (எத்தனை ந..) டமாலென்று பின்னால் இருந்து அவள் தோளை யாரோ தொடுவது (இது கட்டாயம் நாயகனோ அல்லது அவளது நண்பர்களாகவோதான் இருப்பார்கள்), தனியாக யாரேனும் வழி தெரியாமல் நிற்கும்போது அங்கிருக்கும் ஒரு நாற்காலி மட்டும் திடீரென்று ஆடுவது, பின்னால் யாரோ நிற்கிறார்கள் என்று தெரிந்து, மிக மெதுவாக பயத்தில் யாராவது திரும்பும்போது, பேஏஏஏ என்று கத்திக்கொண்டு டைட் க்ளோஸப்பில் தெரியும் கோரமுகம் என்று பல க்ளிஷேக்களை எழுதலாம். இது, பேய்வீடு என்ற ஒரே ஒரு ஜான்ராவில் மட்டும்.

இவையெல்லாம் ஒரு தேர்ந்த இயக்குநர் எடுக்கும்போது கலையாக மாறிவிடுகின்றன. அதுவே ஒரு மொக்கை இயக்குநர் எடுக்கும்போது, அவர்கள் அலறுவதைப் பார்த்து நமக்குச் சிரிப்பு வருகிறது. ஸ்டான்லி க்யுப்ரிக் இயக்கிய "The Shining' படம், நான் மேலே சொன்னவற்றில் பெரும்பாலான அம்சங்களை வைத்தே அட்டகாசமாக எடுக்கப்பட்ட ஒரு நல்ல திரைப்படம் எனலாம். அதுவே Evil Dead படம் வந்ததும், அதைப்பார்த்தே எடுக்கப்பட்ட பல படங்களை மொக்கைக் கணக்கில் வைக்கலாம்.

இருப்பதிலேயே வாய்விட்டுச் சிரிக்கவைக்கும் பல டுபாக்கூர் லாஜிக்குகள், ஹாலிவுட்டின் ஆக்‌ஷன் படங்களில்தான் வருகின்றன. கதாநாயகனும், அவனுடன் இருக்கும் சைட்கிக் எனப்படும் முக்கியமான குணச்சித்திர ஆசாமியும் (இவர் 95 சதவிகிதம், க்ளைமேக்ஸ் நடக்கும்முன் கொல்லப்பட்டுவிடுவார் அல்லது படுகாயப்படுவார்) பரபரப்பாகக் காரில் வில்லனின் ஆட்களை சேஸ் செய்துகொண்டு போவார்கள். அவர்கள் எங்கோ ஓரிடத்தில் காரை நிறுத்திவிட்டு ஓடுவார்கள். இவர்களும் காரை அப்படியே நிறுத்திவிட்டு, ஜன்னல் கண்ணாடிகளைக் கூட ஏற்றாமல், காரையே பூட்டாமல், திறந்த கதவோடு விட்டுவிட்டுப் பின்னாலேயே ஓடுவார்கள். உண்மையில் இப்படிச் செய்து பாருங்களேன்... உலகின் எந்த நாடாக இருந்தாலும் அடுத்த நொடி, கார் அங்கே இருக்காது. இதையே வேறு மாதிரி யோசித்தால், வில்லன்கள் ஹீரோவையோ அல்லது ஹீரோயினையோ துரத்துவார்கள். இவர்களும் விழுந்து புரண்டு ரோட்டில் ஓடுவார்கள். ரோட்டின் இரு புறங்களிலும் பல மரங்கள் இருக்கும். ஆங்காங்கே வலது இடது புறங்களில் தப்பித்து ஓட, அல்லது மறைந்துகொள்ளக் கட்டடங்களும் இருக்கும். அவற்றின் இடையே பாதைகளும் நமக்கே தெரியும். ஆனால் இவர்கள் நேராகவேதான் ஓடுவார்கள். இறுதியில் வில்லன்கள் இவர்களைப் பிடித்தும் விடுவார்கள். கூடவே, ஆக்‌ஷன் காட்சியில், ஹீரோ துப்பாக்கியால் சுட்டுப் பலரையும் கொல்லுவார். அவர் மேலேயே பல குண்டுகளும் படும். அப்போதெல்லாம் பயங்கர சீரியஸாக முகத்தை வைத்துக்கொள்வார். ஆனால் அந்தக் குண்டை யாரேனும் கத்தியால் தோண்டி எடுக்கும்போது மட்டும்(அந்தக் கத்தியில் விஸ்கியை வேறு ஊற்றுவார்கள்), அய்யோ அம்மா என்று பயங்கரமாகக் கத்துவார். இதேபோல், கட்டடம் விட்டுக் கட்டடம் தாவுவார்கள். அதில் சிலசமயம் ஹீரோ தவறி விழுவார். அப்போதெல்லாம் மிகச்சரியாக, கீழே ஒரு லாரி நிற்கும் அதில் இருக்கும் பொருட்களுக்கு நடுவேதான் விழுவார். சில சமயம் அது குப்பை லாரியாகக்கூட இருக்கும். ஏன்? மட்ட மல்லாக்க தொபேர் என்று சாலையில் விழுவதுதானே? ஒருசில த்ரில்லர் படங்களில், ரகசியமாக வில்லனின் வீட்டுக்குள் புகுந்து (அல்லது) வில்லனின் அலுவலகம், ராணுவத் தலைமையகம் போன்ற இடங்களில் புகுந்து, அவர்களின் கணிணிகளில் இருந்து ரகசியங்களை ஹீரோவும் ஹீரோயினும் திருடுவார்கள். அப்போதெல்லாம், ஒரு பென் டிரைவை அவற்றில் மாட்டிவிட்டு, டபடபடப என்று தன்னுடைய மடிக்கணிணியில் தட்டுவார் ஹீரோ. ஒருசில தட்டுகளில், யெஸ்ஸ்ஸ்ஸ் என்பார். பார்த்தால், அத்தனை கடினமான பாஸ்வேர்ட், கோடிங் தொழில்நுட்பம் எல்லாவற்றையும் ஒரே கணத்தில் சரி செய்திருப்பார். உடனடியாகத் தகவல்கள் இவரது பென் டிரைவில் ஏறும். அப்போதும், எல்லாப் படங்களிலும், 10%, 20%, 30% என்றே காட்டும். அது 80% நெருங்கும்போது சரியாக வில்லன் உள்ளே வந்துகொண்டிருப்பான். உடனே ஹீரோ பதட்டம் ஆவார். அவன் கதவைத் திறக்கும் நேரத்தில் மிகச்சரியாக 100% என்று வந்திருக்கும். கதவு திறக்கப்படும் நேரத்தில் ஹீரோ தன் லேப்டாப்பை படால் என்று மூடிவிட்டு, ஜன்னலில் இருந்து வெளியே குதித்திருப்பார். சஸ்பென்ஸ் வைக்கிறார்களாம்!  இவையெல்லாம் சாம்பிள்கள் மட்டுமே. எந்த ஆக்‌ஷன் படத்தையும் கவனியுங்கள். புதிதானாலும் சரி, பழைய படமானாலும் சரி - இப்படிப்பட்ட, எளிதில் கண்டுபிடிக்கக்கூடிய லாஜிக் கருந்துளைகள் ஏராளம் இருக்கும். இன்னொன்று & எல்லா ஆக்‌ஷன் படங்களிலும், தப்பிப்பது எப்படியென்றால், மேலே ஏசி வருவதற்காக இருக்கும் வழியில்தான். அதனுள் புகுந்து, வளைந்து நெளிந்து தப்பிப்பார்கள். உண்மையில் அதற்குள் புகுந்து பார்த்தால் தெரியும்!

ஜேம்ஸ் பாண்ட் படங்களை எடுத்துக்கொள்வோம். சமீபத்தில், டானியல் க்ரெய்க் நடிக்கத் துவங்கியபின்னர்தான் பாண்ட் படங்கள் ஓரளவாவது லாஜிக்குடன் எடுக்கப்படுகின்றன. கஸீனோ ரொயால் படத்தில் இருந்துதான். அதற்குமுன்பெல்லாம்:

1. ஜேம்ஸ் பாண்ட் எந்த பாருக்கு சென்றாலும், அடுத்த நொடி அந்த இடத்திலேயே மிக அழகான பெண்/பெண்கள் இருந்தால், உடனே இவரிடம் வந்து பேசுவார்கள். எடுத்த எடுப்பிலேயே, பல டபிள் மீனிங் பொருந்திய வசனங்கள்தான் பேசுவார்கள். அவற்றுக்கு இவர் அதே பாணியில் பதிலும் கொடுப்பார். அடுத்த இரண்டாவது நிமிடம், கட் செய்தால் இருவரும் ஒரு அறைக்குள் புஜுக் புஜுக் செய்துகொண்டிருப்பார்கள்.

2. பாண்ட் யாரை சுட்டாலும் குறி தவறாது. கூடவே, அவரது துப்பாக்கியில் குண்டுகளும் தீராது. அதுவே வில்லனின் ஆட்கள் சுடும்போது ஒரே ஒரு குண்டு கூட பாண்ட் மேல் படாது.

3. பார்த்தாலே டுபாக்கூர் கண்டுபிடிப்பு என்று நன்றாகத் தெரியும் கண்டுபிடிப்புகளைத்தான் இங்லாந்தின் உளவுத்துறையான MI6, பாண்டிடம் கொடுக்கும். உதாரணமாக, வாட்ச்சில் இருந்து நீ...ளமாகப் பாயும் கம்பி. அதை செலுத்தி, ஒரு இடத்தில் ஒட்டவைத்து, அந்தக் கம்பியைப் பிடித்துக்கொண்டே பாண்ட் தப்பித்துவிடுவார் (???!!). இதுபோல் பல காமெடி கண்டுபிடிப்புகள் அவரிடம் இருக்கும்.

4. எல்லா பாண்ட் படங்களிலும் வில்லன்கள் அவரைப் பிடித்துவிடுவார்கள். உடனேயே, அவரைக் கண்டபடி கட்டிப்போட்டுவிட்டு, தனது திட்டம் முழுக்க, க்ளைமேக்ஸ் வரையில் செய்யப்போகும் எல்லாவற்றையும் வில்லன் நிதானமாக, வரிவரியாக பாண்டிடம் சொல்வான். அதையெல்லாம் அவரும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருப்பார். பின்னர் அங்கிருந்து தப்பிப்பார். ஆனாலும் வில்லன் விடாப்பிடியாக, அவன் சொன்னதையேதான் இறுதிவரை செய்வான். அதையும் பாண்ட் ஒவ்வொரு கட்டமாகக் கண்டுபிடித்து (???!!) முறியடிப்பார்.

5. எந்த ஊராக இருந்தாலும் அங்கே ஒரு ஆசாமி பாண்டுக்கு உதவுவான். ஹாலிவுட் ரமணா போல, அவருக்கு அவ்வளவு பேர் இருப்பார்கள். அதேபோல், உதவியதும் அந்த ஆள் இறந்துவிடுவான்.

6. பாண்டுக்கும் அவரது மேலதிகாரியான எம்முக்கும் எப்போதும் பிரச்னையாகவே இருக்கும். ஆனாலும் பாண்டை அவர் மலை போல் நம்பி, எல்லா கேஸ்களையும் பாண்டிடமே கொடுப்பார்.

இதுபோல் இன்னும் பல மொக்கை லாஜிக்குகள் பாண்ட் படங்களில் காணலாம்.

இப்போது, ஆக்‌ஷன் படங்களை விட்டுவிட்டு, இன்னபிற ஜான்ராக்களை கவனிக்கலாம்.

பிரமாண்ட ஜந்துகள் உலவும் மான்ஸ்டர் படங்கள் என்றால் ஹாலிவுட்டுக்கு அல்வா சாப்பிடுவது போல. லாஜிக் என்ற வஸ்துவையே உடைத்து வீசி விடுவார்கள். உதாரணமாக, ஒரு பிரமாண்ட ஜந்து வருகிறது என்று வைத்துக்கொள்வோம். கச்சிதமாக, எல்லா ஜந்துப் படங்களிலும் அந்த ஜந்துவால் முதலில் கொல்லப்படுவதற்கு என்றே ஒரு ஆளை நேர்ந்து விட்டிருப்பார்கள். அந்த ஆளும், அந்த ஜந்துவையே நம்பாமல் திட்டிக்கொண்டிருப்பார். சரியாக அந்த ஆளைத்தான் அந்த ஜந்து ஒரே மிதியில் சட்னி செய்துவிடும். ஜுராஸிக் பார்க், காட்ஸில்லா, கிங் காங், ஜாஸ், டீப் ப்ளூ சீ  என்று இதற்கு ஏராளமான உதாரணங்கள் உண்டு.  அடுத்ததாக, இப்படி ஒரு ஜந்து வெறிபிடித்து ஓடி வருகிறது என்றால், சொல்லிவைத்ததுபோல் எல்லா மக்களும் ஒன்று அதை நோக்கியே ஓடுவார்கள்; அல்லது ஒரே நேர்க்கோட்டில், அந்த ஜந்து பார்த்து மிதிப்பதற்கு வசதியாகவே அதை விட்டுவிட்டு ஓடுவார்கள். அக்கம் பக்கத்தில் புகுந்து தப்பிக்கலாம் என்றே தோன்றாது. மூன்றாவதாக, அந்த ஜந்துவின் வெறியை, படத்தில் இருக்கும் ஒரு கதாபாத்திரம் தணித்து வைக்கும் (இரட்டை அர்த்தத்தில் புரிந்துகொள்ளவேண்டாம்). ஜுராஸிக் பார்க் படத்தில், ஹீரோயின் மற்றும் குழந்தைகளிடம் மட்டும் சில டைனசார்கள் அன்புடன் பழகும். அதுவே கிங் காங்கில், கடுகு சைசில் இருக்கும் ஹீரோயினிடம் அம்மாம்பெரிய கிங் காங் விழுந்துவிடும். உங்களுக்குத் தெரிந்த எல்லா மான்ஸ்டர் படங்களையும் கவனியுங்கள். இப்போதைய மான்ஸ்டர் படங்களின் லாஜிக் என்னவென்றால், இந்த மான்ஸ்டரை வைத்துக் கொண்டு இன்னொரு பெரிய மான்ஸ்டரைப் பிடிப்பது. இதற்கு, யூனிவர்சல் ஸ்டுடியோஸின் புதிய Monsterverse படங்களை உதாரணமாக எடுத்துக்கொள்ளமுடியும். சமீபத்தில் வந்த இரண்டு காட்ஸில்லா படங்கள் மற்றும் கிங் காங். ஏற்கெனவே இருக்கும் ஒரு மான்ஸ்டரே இல்லாத சேதம் விளைவிக்கும். அதையெல்லாம் பொறுத்துக்கொண்டு, இதை வைத்துக்கொண்டே இன்னொன்றையும் பிடிப்பார்களாம்.

அடுத்து சைன்ஸ் ஃபிக்‌ஷன். உண்மையில்
சைன்ஸ் ஃபிக்‌ஷன் படங்கள்தான் பாவம். ஆக்‌ஷன், பேய், மான்ஸ்டர் படங்களாவது, இதுவரை இல்லாத ஒன்றைக் காட்டுகின்றன. எனவே மொக்கை லாஜிக்குகளை சகித்துக்கொள்ளலாம். ஆனால் சைன்ஸ் ஃபிக்‌ஷன் படங்களோ, விஞ்ஞானம் என்று ஏற்கெனவே நிரூபிக்கப்பட்ட ஒன்றையே கேள்விக்குறி ஆக்குகிறது. உதாரணமாக, ஆர்மகெட்டன் படத்தில், பூமியை நோக்கிப் பறந்து வரும் வால் நட்சத்திரம் ஒன்றில் குதித்து, அதை வெடிக்கவைப்பார்கள் (!!!). இது நிஜத்தில் சாத்தியமா? நிச்சயம் முடியாது. அது என்ன எண்ணெய்க்கிணறா? அதில் குதித்துத் துளையிட? இந்தப் படம் முழுக்கவே இப்படி டுபாக்கூர் விஞ்ஞானத் தகவல்கள் இருக்கும். இந்தப் படத்தை இன்றுவரை உலகம் முழுக்க விஞ்ஞானிகள் நகைச்சுவைப் படம் என்றே கருதுகிறார்கள். இதேபோல், இண்டிபென்டன்ஸ் டே படத்தில், க்ளைமேக்ஸில், பூமியைச் சேர்ந்த இரண்டு விஞ்ஞானிகள், ஏலியன்களின் கப்பலில் புகுந்து, ஒரு வைரஸை அவர்களின் தொழில்நுட்பத்துக்குள் அனுப்பிவிடுவார்கள். இதனால் அந்த ஏலியன் கப்பல்களின் தொழில்நுட்பம் சிதைந்து, அவர்களைச் சுற்றியிருக்கும் கேடயம் போன்ற அமைப்பு உடைந்துவிடும். இதனால் பூமியில் இருந்து எளீதில் அந்தக் கப்பல்களை ஏவுகணைகளால் தாக்க முடியும். அடப்பாவிகளா? பூமியே தக்கினியூண்டு கிரகம். விண்வெளி என்ற அளப்பரிய விஷயத்தின் ஒரு பக்கம் இருந்து இந்தக் கடுகு போன்ற கிரகத்தைக் கண்டுபிடித்து வந்திருக்கிறார்கள் அவர்கள். அவர்களின் தொழில்நுட்பம் என்ன? அவர்களின் மொழியை அவ்வளவு எளிதில் கண்டுபிடித்து, ஒரு வைரஸை உருவாக்கி, அதை அவர்களின் கப்பலுக்கு உள்ளேயே தொழில்நுட்பத்தை உடைத்து அனுப்பி, இப்படிச் செய்கிறீர்களே? யாருடா
நீங்கல்லாம்? இவைபோல் இன்னும் பல மொக்கை லாஜிக்குகள் கிட்டத்தட்ட எல்லா சைன்ஸ் ஃபிக்‌ஷன் படங்களிலும் இருக்கும்.

இங்கே கொடுக்கப்பட்டவை, மிகச்சில உதாரணங்களே. இப்படிப்பட்ட டுபாக்கூர் லாஜிக்குகளை ஹாலிவுட்டிலேயே கிண்டலும் நக்கலும் அடித்து, அங்கேயே spoof வகைப் படங்கள் பல எடுத்திருக்கிறார்கள். அங்கே அது சாதாரணம். Scary Movie series ஒரு உதாரணம். பாண்ட் படங்களைக் கிண்டல் அடிக்கும் Johnny English சீரீஸ் இன்னொரு உதாரணம். அதற்கும் முன், Naked Gun சீரீஸ், பாண்டை படுபயங்கரமாகக் கிண்டல் அடித்தது. அங்கெல்லாம் பல நடிகர்கள், இத்தகைய ஸ்பூஃப் படங்களில் நடித்தே பிரபலம் ஆகியிருக்கிறார்கள். லெஸ்லீ நீல்ஸன் அப்படிப் பிரபலம் ஆனவர்தான். நேக்கட் கன் திரைப்படங்களின் நாயகர். இப்படிப்பட்ட ஸ்பூஃப் படங்களின் பிதாமகர், இயக்குநர் மெல் ப்ரூக்ஸ். இவர் ராபின் ஹூட்டை ஓட்டியிருக்கிறார். டென் கமாண்ட்மென்ட்ஸைக் கிழித்திருக்கிறார். இன்னும் ஏராளமாக ஸ்பூஃப் படங்களை எடுத்துத் தள்ளியிருக்கிறார்.

இப்படிப்பட்ட ஸ்பூஃப் படங்கள்தான், உண்மையில் ஆடியன்ஸின் எண்னங்களைப் பிரதிபலிக்கின்றன என்று நான் எண்ணுவதுண்டு. தமிழில், சி.எஸ்.அமுதன் இயக்கிய இரண்டு படங்களான தமிழ்ப்படம் 1 - தமிழ்ப்படம் 2 ஆகியவை சிறந்த உதாரணங்கள்.

நவம்பர், 2019.

logo
Andhimazhai
www.andhimazhai.com