எங்களுடைய சொந்தவீடு தாதன்குளம் என்ற கிராமத்தில் இருந்தது. அது எவ்வித வசதிகளுமற்ற கிராமமாக அந்தக்காலத்தில் இருந்தது.
மின்சாரமில்லாத, பஸ் வசதி இல்லாத, சாலை வசதி இல்லாத & இப்படி பல இன்மைகளைக் கொண்ட கிராமமாக அது இருந்ததால், 1950&லேயே நாங்கள் திருநெல்வேலிக்குக் குடி பெயர்ந்து விட்டோம். அப்போது அப்பார்ட்மெண்ட் என்றால் என்னவென்றே தெரியாது. திருநெல்வேலியில் ‘வளவுகள்' உண்டு. ‘வளவு' என்றால் ஒரே இடத்தில் கொத்துக் கொத்தாக, எதிரும் புதிருமாக வரிசையாக வீடுகள் இருக்கும். நாலு வீட்டு வளவு, எட்டு வீட்டு வளவு, பனிரெண்டு வீட்டு வளவு என்றெல்லாம் பெயர்களுண்டு. இது தவிர பழனியாச்சி வளவு, ஆயான் வீட்டு வளவு என்று அந்த வீடுகளின் சொந்தக்காரர்களுடைய பெயர்களும் வளவுகளுக்குச் சூட்டப்பட்டிருக்கும்.
1950களில் நாங்கள் ஒரு மச்சில்(மாடி) குடியிருந்தோம். அதற்கு 5 ரூபாய் வாடகை. அந்த வளவில் அடி பம்ப் ஒன்று உண்டு. அந்த அடிபம்ப்தான் அத்தனை வீடுகளுக்கும் தண்ணீர் கொடுத்தது. அந்தப் பம்பை மெதுவாகத்தான் அடிக்க வேண்டும் என்பது வீட்டுச் சொந்தக்காரரான நெல்லையப்ப பிள்ளை ஆயானின் வாய்மொழி உத்தரவு. ஆனால் அந்த வளவில் குடியிருக்கிறவர்கள் யாரும் அதை மதித்ததே இல்லை. ‘ணங்,ணங்'கென்று வேகமாக அடிக்காவிட்டால், யாருக்கும் பம்ப் அடித்த மாதிரியே இருக்காது. ஆயானின் தலை பம்படிப் பக்கம் தென்பட்டால் எல்லோரும் சமர்த்துகளாகி விடுவார்கள்.
அந்த அடி பம்பில் அடிக்கடி வாஸர் தேய்ந்துவிடும் அல்லது நட்டு கழன்று கைப்பிடி தனியே வந்துவிடும். கழன்று விழுந்த கைப்பிடியை இரண்டாம் பேருக்குத் தெரியாமல் துவைக்கிற கல்லின் மீது சாத்தி வைத்துவிட்டு நழுவி விடுவார்கள். அதை ஆயான் புலன் விசாரணை செய்வார். ஆனால் யார் அதைச் செய்தது என்பதற்குத் துப்பே கிடைக்காது. குடியிருக்கிற அத்தனை வீட்டுக்காரர்களும் கல்லுளிமங்கன்கள். இதில் ஆண், பெண், குழந்தைகள் என்ற வித்தியாசமெல்லாம் கிடையாது.
காலையில் வளவைப் பெருக்கிக் கூட்டிச் சுத்தம் செய்து, தெருவாசலில் கோலம் போடுகிற ‘முறைவாசல்' என்கிற வேலையை ஒவ்வொருமாதமும் ஒவ்வொரு வீட்டுக்காரர்கள் செய்ய வேண்டும். மேல வீட்டில் குடியிருக்கிற கம்பௌண்டர் தீத்தாரப்பன் மனைவியின் முறைவாசல் முறை வருகிறபோது, அவள் வயிற்று வலி என்று சொல்லி பாதி நாள் படுத்துக் கொண்டுவிடுவாள். வேறு வழியில்லாமல் ஆயானின் பொஞ்சாதிதான் அவ்வளவு பெரிய வளவையும், தெரு வாசலையும் பெருக்கிச்சுத்தம் செய்யும்.
தெருவாசலை ராத்திரி பத்து மணிக்கெல்லாம் ஆயான் சாற்றி விடுவார். அதற்குள் வளவுக் காரர்கள் எல்லாம் அவரவர் வீடுகளுக்குத் திரும்பிவிட வேண்டும். பத்து மணிக்குப் பிறகு கதவை கடப்பாரை கொண்டு இடித்தாலும் நெல்லையப்ப ஆயான் திறக்க மாட்டார். வீட்டில் எந்த அறையிலும் 15 வாட்ஸ் பல்புக்கு மேல் போடக்கூடாது. இதை அடிக்கடி வீடுகளுக்குள் நுழைந்து ஆயானின் மூத்த மகன் சோதனை போடுவான். மாதா மாதம் கரண்ட் சார்ஜ் ரெண்டு ரூபாய் வாடகையோடு சேர்த்துக் கொடுக்கவேண்டும்.
எந்தக் குடித்தனக்காரரையாவது ஆயானுக்கோ, அவருடைய மனைவிக்கோ பிடிக்கவில்லை என்றால், அவர்கள் மறுபேச்சுப் பேசாமல் வீட்டைக் காலி செய்துவிட வேண்டும். வீட்டுச் சொந்தக்காரர் மீது உள்ள கோபம், ஆத்திரத்தை எல்லாம் அந்த அடிபம்பின் மீது குடித்தனக்காரர்கள் காட்டுவதால், அந்தப் பம்ப் அடிக்கடி ரிப்பேராகி விடும். நடைக்கூடத்தில் எரிகிற பல்ப் அடிக்கடி பியூஸாகிவிடும். அதாவது பியூஸான பல்பை யாராவது மாட்டி, ஆயானுக்குச் செலவு வைப்பார்கள். ரேடியோ பெட்டி யார் வீட்டிலாவது இருந்தால் அதற்கு இரண்டு ரூபாய் கரண்டுக்காக சேர்த்துக்கொடுக்க வேண்டும்.
திருநெல்வேலியில் கீழப்புதுத்தெரு, தெற்குப் புதுத்தெருவிலுள்ள வீடுகளுக்கு வாடகை அதிகமாக இருக்கும். இந்த இரண்டு தெருக்களும் தாமிரவருணி ஆற்றுக்குப் போகிற குறுக்குத் துறை ரோட்டின் அருகே இருக்கின்றன. அந்தக்காலத்தில் திருநெல்வேலிக்காரர்களுடைய வாழ்வின் முக்கிய அம்சம் தினசரி காலை ஆற்றுக்குப்போய் குளிப்பது. இந்த இரண்டு தெருக்களிலும் குடியிருக்கிறவர்களுக்கு ஆற்றுக்குச் செல்வது எளிது என்பதால், இந்தத் தெருக்களில் வாடகை கொஞ்சம் அதிகமாக இருக்கும்.
முன்பின் தெரியாதவர்களுக்கு வீடு வாடகைக்குக் கொடுக்க மாட்டார்கள். வீட்டுச் சொந்தக்காரர்களுக்குத் தெரிந்த நண்பர்கள் அல்லது உறவினர்கள் யாருடைய சிபாரிசா வது இருந்தால்தான் வீடு வாடகைக்குக் கிடைக்கும். அதுவும் வீட்டுச்சாவியை உடனே தூக்கிக்கொடுத்துவிடமாட்டார்கள். வீடு வாடகைக்குக் கேட்கிறவரின் பூர்வோத்ரங்களை விரிவாக அலசி ஆராய்வார்கள். அசைவம் சாப்பிடுகிறவர்களுக்குச் சிலர் வீடு தரமாட்டார் கள். சில குறிப்பிட்ட சமூகத்தினருக்கு தராத வீட்டு உரிமையாளர்களும் உண்டு. இப்படிப் பல்வேறு கெடுபிடிகளையும் மீறி, ஒரே வீட்டில் பதினைந்து வருடம், இருபது வருடம் என்று வாடகைக்கு குடியிருக்கிறவர்களும் உண்டு. அவர்கள் பாக்கியவான்கள்.
நான் 1973ல் சென்னைக்கு வேலை தேடி வந்தேன். 1973&ஜூனில் கண்ணதாசன் பத்திரிகையில் சேர்ந்தேன். அப்போது எனக்குத் திருமணமாகவில்லை. சென்னையில் பேச்சலர்களுக்கும், சினிமா துறையில் பணிபுரிகிறவர்களுக்கும் லேசில் வாடகைக்கு வீடு கிடைக்காது. வீட்டு உரிமையாளரருக்கு வயதுக்கு வந்த பெண்கள் இருந்தால், கண்டிப்பாக அவர் தன் வீட்டைத் திருமணமாகாத இளைஞருக்கு வாடகைக்குத் தரவே மாட்டார்.
நல்ல வேளையாக திருவல்லிக்கேணியில் ஏராளமான மேன்ஷன்கள் இருப்பதால், கல்யாணமாகாத பிரம்மச்சாரிகளின் பாடு பரவாயில்லை. திருவல்லிக்கேணியில் ஒரு காலத்தில் ஏராளமான மெஸ்களும் இருந்தன.
‘உளியின் ஓசை' திரைப்படத்தை இயக்கியவரும்,இன்குலாப் கவிதைகள் எழுதிய ‘கார்க்கி' என்ற சிற்றிதழின் ஆசிரியருமான இளவேனில் 1970&களில் திருவல்லிக்கேணி பிள்ளையார் கோவில் தெருவிலிருந்த ஒரு மேன்ஷனில்தான் நீண்ட காலமாகத் தங்கியிருந்தார். அவருடைய மேன்ஷன் இருந்த அதே வரிசையில், ஆறேழு வீடுகளுக்கு அப்பால்,‘எழுத்து' என்ற இலக்கியப் பத்திரிகையை நடத்தி வந்த சி.சு.செல்லப்பா குடியிருந்து வந்தார்.அதேபோல் பிள்ளையார் கோவில் தெருவுக்குப் பக்கத்தில் வல்லப அக்ரஹாரத்தில் பத்திரிகையாளர் சின்னக்குத்தூசியும் ஒரு மேன்ஷனில் தங்கியிருந்தார். எனக்குத் திருமணமானபோது வீட்டுச் சொந்தக்காரர்கள் ஒரு மாத வாடகை அல்லது இரண்டு மாதவாடகைதான் முன்பணமாக வாங்கினார்கள். இப்போது முன்பணமாக லட்சங்களைக் கேட்கிறார்கள். வாடகைக்குக் குடியிருக்கிறவர்கள் ‘நித்தியகண்டம் பூரண ஆயுசு' என்பது போல்தான் நாட்களைக் கடத்தி வருகிறார்கள்.
மே, 2018.