ரசிகர் மன்றங்கள் ஒரு சங்கப்பலகை!

எம்ஜிஆர் நூற்றாண்டு
ரசிகர் மன்றங்கள் ஒரு சங்கப்பலகை!
Published on

பட்டணத்தில் பூதம் பார்த்துக் கொண்டிருந்தோம். படத்தில் ஒரு காட்சி வரும். ஜீ பூம்பாவாக நடிக்கும் ஜாவர் சீதாராமன், பேப்பர் படித்துக் கொண்டிருப்பார். என்ன பேப்பரெல்லாம் படிக்க ஆரம்பிச்சாச்சா, என்று நாகேஷ் கேட்பார். இல்லை நான் திருவிளையாடல் படம் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்பார். நாகேஷ் எட்டிப் பார்த்தால், பேப்பரிலேயே திருவிளையாடல் விளம்பரம் சினிமாவாக மாறி பாட்டும் நானே காட்சி சினிமா போல ஓடும். கைதட்டலும்  விசில்களும் பறக்க, பக்கத்திலிருந்த வாத்தியார் ரசிகர்கள் எல்லாம், ‘ஏல ஜெய்சங்கருக்கு சிவாஜியைத்தான் பிடிக்கும் என்று புலம்பினார்கள். முக்கியமாக  கே.டி. சிதம்பரம். நான், இருங்கலே இப்ப என்ன நடக்குன்னு பாருங்க என்று சொல்லி முடிக்கவும்,  நாகேஷ் அதே பேப்பரின் இன்னொரு பக்கத்தை திருப்பி, எங்க வீட்டுப் பிள்ளை விளம்பரத்தைக் காண்பித்து இதை இந்தப் படத்தைப் பார்க்க முடியுமா என்பார். ஓ! எங்க வீட்டுப் பிள்ளை, ‘ஜீ பூம்பா’ என்று மந்திரம் போட்டதும், நான் ஆணையிட்டால் என்று பாட்டு ஓடும். இப்போது தியேட்டர் இடிந்து போய் விடுகிற அளவுக்கு விசில் தூள் பறந்தது. முதலில் எம்.ஜிஆரைக் காட்டாமல் ஒரு எதிர்பார்ப்பைத் தூண்டி அல்லது எதிர்பாராமல் அவரைக் காட்டியதுதான் சிலாக்கியமான விஷயம்.

இதுதான் அன்றையத் தமிழ் ரசிகனின் நாடித்துடிப்பு. இன்றைக்கும் அதுதான்.  அதை திரைக்கதையாசிரியரும் இயக்குநரும் நன்கு உணர்ந்து கொண்டு காட்சி அமைத்ததுதான் சூப்பர். சிதம்பரம் எம்.ஜிஆரின் ஒண்ணாம் நம்பர் ரசிகன். திருநெல்வேலியில், “உடல் மண்ணுக்கு! உயிர் எம்.ஜி.ஆருக்கு !!” என்று தலைப்பில் போட்டு  முதல் வசூல் நோட்டீஸ் அடித்தது அவன்தான். அவனுக்கு எந்தக் கட்சி ஈடுபாடும் கிடையாது.  எங்கள் தெருவில் 11 வது வட்ட  தி.மு.க உட்கிளையாக ’மக்கள் திலகம் மன்றம்’ அமைக்க முடிவு செய்து, 1966 பொங்கலுக்கு திறப்பு விழா என்று முடிவு செய்தோம். பிரதம மந்திரி லால் பகதூர் சாஸ்திரி இறந்து போனதால் ஒத்தி வைத்தோம். நிதியும் போதுமான அளவு வசூலாகவில்லை.

சிதம்பரத்திடம் ஒரு ரசீது புத்தகம் கொடுத்து வசூல் பண்ணிக் கொடு என்று கேட்டேன். மறுத்து விட்டான். கட்சி உட்கிளையென்பதால் ஈடுபாடு காட்டவில்லை என்று நினைத்தேன்.

அவன் அடிக்கடி சொல்லுவான், தொண்டனை வைத்துத்தாண்டா கட்சி, கட்சிக்காகத் தொண்டன் இல்லை என்று. அதில் பிடிவாதமானவன். கட்சியில் எம்.ஜி.ஆருக்கு பெரிய மரியாதை இல்லை என்பது அவனுடைய கட்சி. எங்கள் மன்றம் 18.2.1966 இல் ஆரம்பித்தோம். நம்நாடு பத்திரிகையில் செய்தி வந்தது. கடிதத்தொடர்பு என் பொறுப்பு. படிப்பகத்திற்கு தினமும் நிறையப்பேர் வந்தார்கள்.1967 தேர்தல் வரை மும்முரமாக நடந்தது. ஆட்சிக்கு வந்த பின் பலருக்கும் அரசியல் ஆர்வம் வந்து விட்டது. வேலை படிப்பு என்றும் பிரிந்து விட்டார்கள்.

எனக்கு வேலூரிலிருந்து இரா. மாறன் என்று ஒருவரிடமிருந்து வேலூர் நகர எம்.ஜி.ஆர் ரசிகர் மன்ற சார்பாகக் கடிதம் வந்தது. முழுக்க முழுக்க வேலூர் நகரில் எம்.ஜி.ஆர் படங்களின் சாதனைகள் பற்றிய விளம்பரங்களும் தகவல்களும். அப்போதுதான் ரசிகர் மன்றங்கள் என்று அரசியல் கலப்பில்லாத பலர் இருப்பது  தெரிந்தது. மன்றம் என்று ஆரம்பிக்காவிட்டாலும் சிதம்பரத்திற்கும் இன்னும் இரண்டு பேருக்கும் இதே போல மதுரை தூத்துக்குடி நகரங்களிலிருந்து ரசிகர் மன்றக் கடிதங்கள் வருவதுண்டு. இவையெல்லாமே கட்சி ஈடுபாடு அதிகம் இல்லாதவர்கள். எல்லோருமே எங்க வீட்டுப் பிள்ளை படத்தின் மகத்தான  வெற்றிக்குப் பிறகு அதிகரித்த ரசிக வெள்ளத்தின் ஒரு பகுதி என்றால் மிகையில்லை.

நாடோடி மன்னன் வெற்றிக்கு கட்சியின் பங்களிப்பு அதிகம் இருந்தது. மாஸ்கோவிலுள்ள ‘தொழிலாளியும் விவசாயப் பெண்ணும்’ சிலையின் மாதிரியில் தனது நிறுவனத்தின் சின்னத்தை உருவாக்கி அவர்கள் கைகளில் துணிந்து தி.மு.க கட்சிக் கொடியைத் தந்து அது படத்தின் ஆரம்பத்தில் பட்டொளி வீசிப் பறப்பது போலக் காண்பித்ததுதான் அன்று தி.மு.கவை எம்.ஜி.ஆர் கட்சி என்று பாமரர்களிடையே நம்ப வைத்தது என்று  எங்களுடைய தி.மு.க ஆசான் ஒருவர் சொல்லுவார்.   அதுவரை யாரும் அப்படிச் செய்யவில்லை. பின்னால் எஸ்.எஸ்.ராஜேந்திரன், முத்து மண்டபம் படத்தில் அவரே தி.மு.க கொடியைப் பிடித்துக் கொண்டு நின்ற நினைவு. நாடோடி மன்னனின் வெற்றிக்கு தி.மு.க பெரும் காரணம். அப்போதெல்லாம் கட்சியையையும் எம்.ஜி.ஆரையும் பிரிக்க முடியாது.

1964ல் எம்.எல்.சி பதவியை ராஜினாமா செய்கிற சூழலில்தான் கொஞ்சம் விரிசலடைகிறது அந்த உறவு. அப்போது வெளி வந்த என் கடமை நன்றாக ஓடவில்லை.  அதற்கு அதையே காரணம் என்பார்கள். ஆனால் கே.டி. சிதம்பரம் போன்றவர்கள், அதெல்லாம் கிடையாதுடா, படமே சுமார், எம்புட்டு நாளா எடுக்காங்க என்றான். அவன் சொன்னது போலவே அடுத்து வந்த பணக்காரக் குடும்பம் நன்றாக ஓடியது. அடுத்து வந்த, தெய்வத்தாய், படகோட்டி படங்களும் நன்றாக ஓடியதுடன், அவருக்கு சினிமாவில் பெரும் திருப்பு முனைகளையும் உண்டாக்கியது. பந்துலு போன்றவர்கள் சிவாஜியை விட்டு எம்.ஜி.ஆரிடம் வந்தார்கள். 1964 டிசம்பரில் நிகழ்ந்த தனுஷ்கோடி புயல் அழிவுகளை நேரில் போய்ப்பார்த்து நிவாரண நிதியாக ஒரு லட்ச ரூபாய் கொடுத்தார். அது அவரது ரசிகர்களிடையே அவர் பேரில் இன்னும் மதிப்பை உண்டு பண்ணியது.

1967 ஜனவரி  12 எம்.ஜி.ஆர் சுடப்பட்ட அன்று இந்த ரசிகர்கள் பட்ட வேதனையை நான் உடனிருந்து அனுபவித்தவன்.  கே.டி.சிதம்பரம், சுருண்டு விழுந்து இரவு பூராவும், சந்திப் பிள்ளையார் முக்கில் கிடந்தான். எத்தனையோ பேர் சமாதானப்படுத்தியும் ஒன்றும் சாப்பிடவில்லை. மறுநாள் தாய்க்குத் தலைமகன் படத்திற்குக் கூட வரவில்லை. அவன் பார்க்காமல் எந்த எம்.ஜி ஆர் படமும் 60களுக்கு அப்புறம் வந்திருக்காது.  தேர்தலுக்குப் பின்னான காலகட்டத்தில் இந்த செல்வாக்கையெல்லாம் எம்.ஜி.ஆர் தக்கவைத்துக் கொண்டார். எங்கள் வட்டத்தின் மக்கள்திலகம் மன்றத்தை நாங்கள் சிலர் ரசிகர் மன்றமாக நடத்தினோம். நான் செயலாளர். மதுரை புதுக்குயவர்பாளையம் சீதாராமன், பந்தடி ராஜேந்திரன், சுந்தர்ராஜன் திருச்சி வரதராசன், தென்சென்னை. எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றம் எஸ்.கல்யாணசுந்தரம், வடசென்னை ஏழுகிணறு எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றம், வேலூர் மாறன், தூத்துக்குடி, பாலகிருஷ்ணன்,  ராஜேந்திரன், நாகர்கோயில் உசேன், என்று நிறையப் பேருடன் தொடர்பு இருந்தது. 1965 இல் எம்.ஜி.ஆர் முதலும் கடைசியுமாக இலங்கை போய் வந்தார். அங்கே அவருக்கு (இலங்கை அரசு என்று நினைவு) நிருத்தியச் சக்கரவர்த்தி பட்டம் வழங்கினார்கள். கே.டி. சிதம்பரம் நிருத்தியச் சக்கரவர்த்தி எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றம் என்று ஆரம்பித்தான். அவனும் நானும் போட்டி போட்டுக் கொண்டு எம்ஜியாரின் 100 வது படமான ஒளி விளக்கு படத்திற்கு சாதனை மலர் அச்சடித்தோம். நான் எம்ஜியாருக்கு அனுப்பி அவர் அதைப் பாராட்டி கடிதம் எழுதியிருந்தார்.

1970-71 வாக்கில் விகடன் இதழில் நான் ஏன் பிறந்தேன் தொடர் எழுதும் போது அதன் போஸ்டர்களை ரசிகர் மன்றங்களுக்கு அனுப்பி தமிழகமெங்கும் ஆர்வத்துடன் ஒட்டினார்கள். விகடன் மணியன் ரசிகர்களைப் பயன்படுத்திக் கொண்டார் என்று சில ரசிகர்களிடையே அதிருப்தி இருந்தாலும்,  இதனை ஒட்டியே அனைத்துலக எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றம் ஆரம்பிக்கப்பட்டது. அதுவும் தி.மு.கழக அனுமதியோடு. அப்போது கலைஞரின் எங்கள் தங்கமாக இருந்தார் எம்.ஜி.ஆர். அந்தக் காலத்தை என் போன்ற கட்சியின் மீதும் எம்.ஜி.ஆர் மீதும் அன்பு கொண்டவர்கள் பொற்காலமாக நினைக்கிறோம். அப்புறம் 1971 தேர்தல். உறவில் விரிசல் எல்லாம் உண்டாகி. அ.தி.மு க உதயமானபோது இந்த ரசிகர்கள் எல்லாம் தேர்ந்த அரசியல் தொண்டர்களாகவும் ஆனார்கள். ஆனால் அவர்கள் தொண்டர்களாகவே இருந்தார்கள், இருக்கிறார்கள். கே.டி. சிதம்பரம்  அ.தி.மு.கவிலும் எதையும் கோரவில்லை. அவன் சொல்வது போல  தொண்டனை வைத்துத் தான் கட்சி. அதை இப்போதும்  சில  எம்.ஜி.ஆர்  ரசிகர்களாக அறிமுகமாகி முகநூல் நண்பர்களாக இருப்பவர்கள் மூலம் அறிய முடிகிறது.

என்னிடம் பலரும் கேட்பார்கள் நீங்கள் எம்.ஜி.ஆர் ரசிகரா, இன்னும் அதை ஒப்புக் கொள்ளுகிறீர்களா, ஏன் என்று. வாழ்க்கையில் அப்படி ஒரு பருவம் இருந்தது, பதின் வயதுக் காதல் போல, அதைத் தாண்டி வந்து விட்டதால் அது இல்லையென்று ஆகி விடுமா என்று நினைப்பேன். என்னுடைய அந்த ரசிகப் பருவத்தில்  பல நண்பர்களைப் பெற்றிருக்கிறேன், பல விளிம்பு நிலை மனிதர்களின் துயர உலகினை நெருங்கி அறிய முடிந்திருக்கிறது. அவர்களுடன் இருப்பது பாதுகாப்பாகத் தோன்றியிருக்கிறது. அவர்களெல்லாம் கூட என் எழுத்துக்களில் வருகிறார்கள்.  வாழ்க்கையை எங்கும் எதிலிருந்தும் கற்றுக் கொள்ளலாம், அந்த வகையில்  ரசிகர் மன்றங்களை ஒரு விதமான  சங்கப்பலகை என்று சொல்லத் தோன்றுகிறது.

டிசம்பர், 2017.

logo
Andhimazhai
www.andhimazhai.com