யானைக்காட்டில் வீரப்பனுடன்

யானைக்காட்டில் வீரப்பனுடன்
Published on

திண்டிவனம் நீதிமன்றத்தில் பிள்ளையார் சிலையை நிறுவியதை கண்டித்து போராட்டம் செய்ததைத் தொடர்ந்து என்மீது பொய்வழக்குப் போடப்பட்டு நான் நிபந்தனை ஜாமீனில் சென்னையில் இருக்கநேரிட்டது. அது 2000மாவது ஆண்டு செப்டம்பர் மாதம். அப்போதுதான் வீரப்பன் கன்னட நடிகர் ராஜ்குமாரைக் கடத்தி சென்றிருந்தார். ராஜ்குமார் கர்நாடகத்தின் மிகப்பெரிய நடிகர், அம்மக்களின் அன்பைப் பெற்றவர் என்பதால் இருமாநில அரசுகளுமே பெருங்கவலைக்குள்ளாயின. இருமாநில அரசுகளின் தூதராக பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் காட்டுக்குப் போய் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

இந்தநிலையில் மீட்புபேச்சுவார்த்தைக்கு பழ.நெடுமாறன், நான், புதுவை சுகுமாறன், கொளத்தூர்மணி ஆகியோரும் நக்கீரன் கோபாலுடன் வரவேண்டும் என்று வீரப்பன் குழுவினர் விரும்புவதாக சென்னையில் இருந்த எனக்கு புதுவை சுகுமாறன் தகவல் தெரிவித்தார். சற்று நேரத்திலேயே நெடுமாறன் அய்யாவும் பேசினார்.

இதையடுத்து அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் அவர்களை நாங்கள் மூவரும் சந்தித்தோம். கொளத்தூர் மணி அப்போது திராவிடர் கழகத்தில் இருந்தார். அவர் எங்கள் குழுவில் பயணம் செய்வது முதல்கட்டத்தில் ஊடகங்களுக்குச் சொல்லப்படவில்லை. என் மீது வழக்கு இருப்பதாகவும் நான் நிபந்தனை பிணையில் சென்னையில் இருப்பதைத் தெரிவித்ததும் வழக்கு விவரத்தை முதல்வர் கேட்டுத் தெரிந்துகொண்டார். உடனே அமைச்சர் பொன்முடியை அழைத்து நிபந்தனைகளைத் தளர்த்த ஏற்பாடு செய்யுமாறு சொன்னார். மறுநாளே நீதிமன்றத்தில் எனக்காக மனுதாக்கல் செய்யப்பட்டு என் பிணை நிபந்தனைகள் தளர்த்தப்பட்டன. எங்கள் பயணத்துக்கு நிதி உதவி எதுவும் வேண்டுமா என்று முதல்வர் கேட்டபோது நெடுமாறன் மறுத்துவிட்டார். அவரது வாகனத்தில் நாங்கள் பயணம் செய்தோம். ஈரோட்டில் ஒருவர் இல்லத்தில் ரகசியமாகத் தங்கியிருந்தோம். எங்களுடன் கொளத்தூர்மணியும் இணைந்துகொண்டார். மூன்று நாட்கள் அங்குதான் இருந்தோம்.

ஆனால் அதற்குள் நாங்கள் காட்டுக்குள் போய்விட்டதாக ஊடகங்களில் செய்திகள் பரவின. மூன்று நாள் கழித்து காட்டுக்குள்ளிருந்து தகவல்வந்தது. நாங்கள் முன்னிரவில் ரகசியமாக காட்டுக்குள் சென்றோம். ஒரு குறிப்பிட்ட இடம் வரைக்கும்தான் வாகனத்தில் செல்லமுடியும். அதன்பின்னர் நடைதான். எங்களை மூன்றுபேர் அங்கே காத்திருந்து வரவேற்றார்கள்.  காட்டுக்குள் பயணம் செய்வது பகலில்தான் இயலும். இரவில் பயணம் செய்தால் அந்த காட்டுக்குள்  ஒரே அச்சுறுத்தலாக இருக்கும் யானைகளிடம் மாட்டிக்கொள்ள வேண்டும். எனவே முதல் நாள் இரவு மழைபெய்திருந்த ஈரச் சமவெளி ஒன்றில் ப்ளாஸ்டிக் தாள்களை விரித்துப் படுத்துக்கொண்டோம். காலையில் நான்கைந்து மைல்கள் நடந்தபின்னர் வீரப்பனைச் சந்திக்க முடிந்தது. ஆனால் ராஜ்குமாரைக் காணவில்லை. மதியத்துக்குப் பின்னர் ராஜ்குமாரைச் சந்தித்தோம். வீரப்பனுடன் தமிழர் விடுதலைப் படையைச் சேர்ந்தவர்களும் இருந்தார்கள். அவர்களின் கோரிக்கைகளுக்கு அரசு சார்பில் பதில்களை எழுதிக்கொடுத்திருந்தார்கள். அவற்றை வைத்துப் பேசினோம். மூன்றுநாட்கள் பேச்சுவார்த்தை நடந்தது. மீண்டும் இன்னொருமுறை வருமாறு கூறியபோது எங்கள் குழுவினர் மறுத்தோம். நெடுமாறன் அய்யா,  நீங்களாச்சு அரசாங்கம் ஆச்சு என்று கடுமை காட்டினார். அதன்பின்னர் ராஜ்குமாருடன் கடத்தப்பட்டிருந்த அவருடைய மைத்துனருக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டதால் அவரை மட்டும் எங்களுடன் அனுப்ப சம்மதித்தனர். அத்துடன் திருச்சி ஜெயிலில் இருக்கும் அவர்களது இயக்கத்தினர்  சம்மதமின்றி அரசு கொடுத்த பதில்களுக்கு தாங்கள் ஒப்புக்கொள்ள இயலாது என்று கூறினர்.  திருச்சி சிறைக்குச் சென்று அவர்களைச் சந்தித்து சம்மதத்துடன் வந்தால் ராஜ்குமாரை விடுவிப்பதாகக் கூறினர். நாங்கள் ராஜ்குமாரின் மைத்துனருடன் திரும்பினோம்.

அவரை ஈரோட்டில் மருத்துவர் பானுவிடம் ஒப்படைத்துவிட்டு சென்னை சென்று முதல்வரைச் சந்தித்து நடந்ததைத் தெரிவித்தோம். அவர் திருச்சி சிறையில் இருக்கும்  அந்த இயக்க  உறுப்பினர்களை சந்திக்க ஏற்பாடு செய்தார். அரசுகள் கொடுத்த உறுதிமொழிகளைத் தாண்டி தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் தடா போன்ற வழக்குகளில் சிக்கியிருப்பவர்களுக்காக தமிழகம் முழுக்கச் சென்று மனித உரிமை ஆர்வலர்களான நாங்களும் பிரச்சாரம் செய்வோம். மீட்க வழக்கு நடத்துவோம் என்ற உறுதிமொழியை அவர்களுக்குத் தந்தோம்.  எங்கள் பேச்சுக்கு அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து நாங்கள் மீண்டும் காட்டுக்குச் சென்றோம். இம்முறை கோபால் எங்களுடன் வரவில்லை. ஆனால் இம்மீட்பு முயற்சியில் அவர் பங்கு மிகவும் முக்கியமானது என்பதைக் குறிப்பிடவேண்டும். காட்டுக்குள் சென்றபோது மருத்துவர் பானு எங்களுக்கு முன்பே அங்கே இருந்தார். ராஜ்குமாருக்கு சிகிச்சை தேவைப்பட்டதால் அவரை வரவழைத்திருந்தனர்.

வீரப்பன் ராஜ்குமாரை விடுவித்தபோது இருவரும் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி கண்ணீர்விட்டனர். வீரப்பன் வாங்கிவைத்திருந்த புதுவேட்டி போன்றவற்றை அவருக்குப் பரிசாக அளித்து அனுப்பி வைத்தார். நாங்கள் கூட்டிக்கொண்டு வேறொரு பண்ணை வீட்டில் ஒரு நாள் தங்கி இருந்தோம். ராஜ்குமார் விடுவிப்பு உடனே வெளியுலகத்துக்கு அறிவிக்கப்படவில்லை. வீரப்பன் தன் குழுவினருடன் வேறொரு பத்திரமான இடத்துக்குச் செல்ல அவருக்கு கால அவகாசம் தேவைப்பட்டது. பின்னர் நக்கீரன் கோபாலும் எங்களுடன் இணைந்துகொண்டார். ராஜ்குமார் மீட்கப்பட்ட செய்தி அறிந்து இப்போதைய டிஜிபியும் அன்றைய உளவுத்துறை தலைமை அதிகாரியுமான ராமானுஜம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் வந்திருந்தனர். ராஜ்குமார் கர்நாடக அரசின் ஹெலிகாப்டரில் பத்திரமாக அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்த மீட்புப்பணியில் அரசுகளின் தூதராக செல்வதால் இதுதொடர்பாக பிற்காலத்தில் தன் மீது வழக்குத் தொடரக்கூடாது என்று நக்கீரன் கோபால் இருமாநில தலைமைச்செயலர்களின் கடிதம் வாங்கி வைத்திருந்தார். இருப்பினும் பின்னர் அவர் மீது வழக்குத் தொடரப்பட்டு பெரும் சங்கடங்களை எதிர்கொண்டார். என் மீதும் சுகுமாறன் மீதும்கூட வழக்கு தொடரப்பட்டது. ஆனால் அப்போது வழக்கறிஞராக இருந்த சந்துரு எங்களுக்காக வாதாடிக் காப்பாற்றினார்.

நான் பல்லாண்டுகளாக மனித உரிமைகள், கல்வி,சுரண்டலுக்கு எதிரான களப்பணியைச் செய்து வருபவன்.  இந்த சம்பவங்கள் முடிந்த பின்னால் ஊரில் சைக்கிளில் சென்ற ஒருவர் என்னை மறித்து நீங்கள் வீரப்பனுடன் பேச்சு நடத்தச் சென்றவர் தானே என்று கேட்டார். எனக்கு சிரிப்புதான் வந்தது. எல்லாம் ஊடகவெளிச்சம்!

(நமது செய்தியாளரிடம் கூறியதிலிருந்து)

ஆகஸ்ட், 2014.

logo
Andhimazhai
www.andhimazhai.com