மொழியைக் கொலை செய்வது எப்படி?

மொழியைக் கொலை செய்வது எப்படி?
Published on

அர்ஜெண்டினாவில் கால்நடை மருத்துவரான ரால் செர்டா எனது நண்பர். இந்தியாவின் பல மாநிலங்களுக்கு என்னோடு பயணம் செய்யும் போது அந்தந்த மொழிகளைப் பற்றி அபூர்வமாக விசாரிப்பார். அர்ஜெண்டினாவின் பூர்வீக மொழிகள் சார்ந்த எனது கேள்விக்கு அவரிடமிருந்து கிடைத்த பதில் அதிர்ச்சி தந்தது.

அர்ஜெண்டினாவில் சுமார் 13000 ஆண்டுகளாக மனிதர்கள் பல்வேறு மொழிகளைப் பேசி வாழ்ந்து வந்திருக்கிறார்கள். 1516 ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டிலிருந்து ஒரு குழு அர்ஜெண்டினாவில் கால் பதிக்கிறது. இரு நாட்டிற்கும் இடையே உள்ள தூரம் 10700 கிலோ மீட்டர். 1530 ல் அர்ஜெண்டினாவை தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்த ஸ்பெயின் 1810 வரை ஆள்கிறார்கள்.

அர்ஜெண்டினாவின் ஆதி குடிகள் பேசிய அபிபான்(Abipon), கேகன் (Cacan), சேன்(Chane), ஹாஸ்(Haush) போன்ற பல மொழிகள் அழிந்து விட்டன. பல மொழிகள் கடைசி மூச்சை விடுவதற்கு காத்திருக்கின்றன. விலேலா(Vilela) என்ற மொழியை 20 பேர் பேசுகிறார்கள். பால்சி (Pualche ) மொழியை 6 பேர்களும், டெஹூஹால்சி (Tehualche) மொழியை நான்கு பேரும், ஓனா (Ona) மொழியை மூன்று பேரும் பேசுகிறார்கள். 2010 கணக்கீட்டின்படி அந்நாட்டின் 99.99 விழுக்காடு மக்கள் ஸ்பேனிஷ் மொழியைப் பேசுகிறார்கள். உங்கள் தாய்மொழி என்ன? என்ற கேள்விக்கு ‘ எங்க அம்மா பேசிய மொழி ஸ்பேனிஷ் தான். ஆனால் எங்க முப்பாட்டன் பேசிய மொழியோ அல்லது தாய்மொழியோ ஏதென்று தெரியாது' என்றார் மருத்துவர் ரால். அந்த வார்த்தைகளின் சோகம் என்னை உருக்கியதன் விளைவு இந்த சிறப்புப் பக்கங்கள்.

13000 ஆண்டுகள் வயதான நாகரீகத்தில் இடையில் 280 ஆண்டுகள் ஆட்சி புரிந்தவர்கள் பூர்வ குடிகளின் மொழியைக் கொன்று புதைத்துவிட்டு தமது மொழியைப் படரவிட்ட சோக வரலாறு இது.

கல்லூரி முடிந்து வேலைக்குப் போனபோது எனது முதல் பணி கர்நாடக மாநிலம் ஹப்பள்ளியில். அப்போது வேலை நிமித்தமாக 45 நாட்களுக்கு ஒரு முறை கோவா செல்வதுண்டு. அப்போது கொல்லத் துடிக்கும் போர்த்துக்கீசியர்களுக்கு பயந்து கொங்கணி மொழி உயிரைப் பிடித்துக் கொண்டு ஓடிய கதைகளைக் கேட்டிருக்கிறேன். (அந்தக் கதை தனிக் கட்டுரையாக உள்ளது) தமிழ் நாட்டின் நிலப்பரப்பில் தமிழைத் தவிர சௌராஷ்டிரா, படகா (Badaga), காணிக்காரன் (Kanikkaran), இருளா (Irula), தோடா (Toda) மற்றும் மெட்ராஸ் பாஷை உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட மொழிகள் புழக்கத்தில் உள்ளன. தமிழை வளர்க்கும் நமக்கு இந்த மொழிகளைப் பாதுகாக்கும் பொறுப்புமிருக்கிறது. மெட்ராஸ் பாஷை எப்படிப்பா தனி மொழியாகும் என்று கேட்டால், மொழியியல் ஆய்வாளர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மொழிக்குழுக்கள் ஒரு இடத்தில் புழங்கும் போது ஒரு கலப்பின ( கதம்ப) மொழி உருவாகிறது, அதை பிட்ஜின் (Pidgin) மொழி என்று வகைப்படுத்துகிறார்கள். பிட்ஜின் உருவாக மூன்று மொழிகள் தேவைப்படலாம். அதில் ஒரு மொழி மற்ற இருமொழிகளைவிட ஆதிக்கம் கூடுதலாகச் செலுத்தலாம் என்று மொழியியலாளர் கீத் வின்னோம் கூறி உள்ளார்.

தமிழை அடிப்படையாகக் கொண்டு அன்றைய சென்னையில் வந்துபோன மற்ற மொழிக்காரர்களின் மொழியையும் சேர்த்து உருவானது தான் மெட்ராஸ் பாஷை. நைனா தெலுங்கிலிருந்தும், கலீஜ் உருதுவிலிருந்தும், அட்டு, மொக்கை பர்மீசிலிருந்தும், ஓஸி (On the company account), ஃபிகர் போன்ற சொற்கள் ஆங்கிலத்திலிருந்தும் தமிழோடு கலந்திருக்கின்றன மெட்ராஸ் பாஷையில்.

தமிழை அடிப்படையாகக் கொண்டு அன்றைய ஒலி வடிவ மொழிகளும் உள்ளன. விசில் மொழிகள் உலகின் பல பகுதிகளில் புழங்குகின்றன. குறிப்பாக துருக்கி நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள மலை வாழ் பகுதி கிரிசன் (Giresun). அங்கே ஒருவர் வீட்டிலிருந்து பக்கத்து வீட்டிற்கு காற்றில் தூரம் குறைவு. ஆனால் நடந்து செல்வதென்றால் நீண்ட நேரம் பிடிக்கும். அதனால் அங்குள்ள மக்கள் விசில் மூலமே பேசிக் கொள்கிறார்கள். விசில் மூலம் கேள்வி கேட்டு விசில் மூலமே பதிலளிக்கும் இந்த விசில் மொழி 500 வருட பழமையானது. தற்போது சுமார் பத்தாயிரம் பேரால் பேசப்படும் கிரிசன் பகுதி விசில் மொழியை யுனெஸ்கோ அபூர்வமான கலாச்சார மரபு பட்டியலில் சேர்த்துள்ளது.

மொழிகள் குறைவாக இருப்பது யாருக்கு லாபம்? அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு லாபம், மக்களுக்கு அல்ல. ஒரே மொழியின் மூலம் மக்களை ஒன்றிணைத்து விடலாம் என்பதும் தவறான கருத்து. 'இங்கிலாந்தும் அமெரிக்காவும் ஒரே மொழியினால் பிரிக்கப்பட்ட இரண்டு வெவ்வேறு நாடுகள்' என்ற ஜார்ஜ் பெர்னாட்ஷாவின் கருத்து முக்கியமானது.

தனது மொழியின் மேல் காதல் கொண்டு வளர்க்க பற்றோடு பாடுபடும் அத்துணை பேருக்கும் மொழி காலங்காலமாக எப்படி அழிக்கப்படுகிறது என்பதும் தெரிந்திருக்க வேண்டும்.

அக்டோபர், 2018.

logo
Andhimazhai
www.andhimazhai.com