மேலோட்டமாக அரசியல் செய்தோம்
திமுக 1967-ல் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி வெற்றிபெற்றபோது நான் பள்ளி மாணவன். அதன் பின்னர் சில ஆண்டுகளில் சென்னை சட்டக்கல்லூரியில் படித்தபோது சட்டக் கல்லூரி மாணவர் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டேன். திமுக சார்பாக வலம்புரிஜான் போட்டியிட்டார். அவருக்கு ஆதரவாக முரசொலி மாறன்,வைகோ, துரைமுருகன் போன்றவர்கள் வேலை செய்தார்கள். இருப்பினும் 800 வாக்குகள் அதிகம்பெற்று நான் வெற்றிபெற்றேன். அதன் பின்னர் இளைஞர் காங்கிரஸ், தமிழ்நாடு காங்கிரஸ் பதவிகள் எம்.எல்.ஏ., எம்.பி. என்று பல அனுபவங்களைப் பெற்றிருக்கிறேன். இந்த ஐம்பதாண்டு அனுபவத்தில் காங்கிரஸ் கட்சியை அதன் உறுப்பினராக இருந்து பார்த்தவன் என்கிறமுறையில் அதன் சரிவைப் பற்றி என்னால் சொல்லமுடியும்.
காங்கிரஸ் இப்போது தன்னுடைய வாக்கு வங்கியையும் தொண்டர் பலத்தையும் இழந்துவிட்டது. எல்லாதரப்புக்கும் பொதுவான கட்சியாகவே காங்கிரஸ் தன்னை பொதுமைப் படுத்திக்கொண்டாலும்கூட காமராஜர் காலத்தில் அவருக்கென்று ஒரு வாக்குவங்கி இருந்தது. தாழ்த்தப்பட்டோர், மொழி, மதச்சிறுபான்மையினர், தேசிய இஸ்லாமியர், தென் தமிழகத்து நாடார் இன மக்கள், அனைத்து சாதியையும் சேர்ந்த தேசிய எண்ணம் கொண்டோர் ஆகியோர் காங்கிரசின் வாக்கு வங்கியாக இருந்தனர். காமராஜர் காலத்தில் காங்கிரஸ் 45 சதவீத வாக்குவங்கி பெற்றிருந்தது.
திராவிட முன்னேற்றக் கழகம் எழுச்சி பெற்ற 1960களில் சிறுபான்மையினர், இஸ்லாமியர் மத்தியில் அதன் செல்வாக்கு உயர்ந்தது. ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் ஆதரவைப் பெற்றது. அதனால் இந்த வாக்குவங்கியில் காங்கிரசுக்கு பின்னடைவு ஏற்பட்டது. பின்னர் தலித் இயக்கங்களின் எழுச்சி, தென்மாவட்டங்களில் இந்துத்துவ அரசியலின் வளர்ச்சி, ஆகியவற்றாலும் வாக்குவங்கியில் சரிவு ஏற்பட்டது. இன்றைக்கும் காங்கிரஸுக்கு வாக்கு வங்கி இல்லாவிட்டாலும் மரியாதை உண்டு. சிலருக்கு வாக்குவங்கி உண்டு; ஆனால் மரியாதை இல்லை.
தமிழ்நாட்டில் காமராஜர், மூப்பனார், ஓரளவுக்கு வாழப்பாடியார் தவிர்த்து மீதி தலைவர்களுக்கு தங்கள் நலன், தங்கள் ஆளுமை, எதிர்காலம் பற்றி இருந்த அளவுக்கு கட்சியின் மீது அக்கறை இல்லாமல் போயிற்று. 1971-க்குப் பிறகு திராவிடக் கட்சிகளுடன் ஏற்பட்ட அரசியல் கூட்டணி காரணமாக பல இடங்களில் காங்கிரசில் உயிரோட்டத்துடன் இருந்த தொண்டர்களை இழக்க நேரிட்டது. டெல்லி தலைமையும் இந்த கூட்டணியை மிக இலகுவாக நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெறும் வாய்ப்பாக மட்டுமே கருதியது. காங்கிரஸ் கட்சியின் அமைப்பு ரீதியிலான சிதைவை யாரும் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. தமிழக காங்கிரஸ் தலைவர்களும் கூட்டணியில் எப்படியாவது இடம் பிடித்து எம்பியாகி மத்தியில் அமைச்சர் பதவி பெற்றுவிடமுடியுமா என்றுமட்டும் பார்த்தார்கள். கட்சியின் அடிமட்டம், தொண்டர்கள் கரைவதைக் கண்டுகொள்ளவில்லை. உள்ளாட்சி அமைப்புகள், சட்டமன்றத் தொகுதி அரசியல் ஆகியவற்றைமுன்னிட்டு காங்கிரஸ் தொண்டர்களும் தங்கள் எதிர்கால வாய்ப்புகள் கருதி திராவிட கட்சிகளுக்குச் சென்றுவிட்டனர்.
தமிழக காங்கிரஸ் பல பிளவுகளைச் சந்தித்துள்ளது. 1969 இல் காமராஜர் தலைமையில் ஏற்பட்ட பிளவு, தமாகா உருவானது, காமராஜர் காங்கிரஸ், சீர்திருத்த காங்கிரஸ் என்று பல உண்டு. ஆனால் அக்கட்சிகள் மீண்டும் காங்கிரஸுடனே இணைந்திருக்கின்றன. தொண்டர்களும் அப்படியே இணைந்துகொள்வார்கள். ஆனால் இப்போது முதல்முறையாக தமிழ்மாநிலக் காங்கிரஸில் இருப்பவர்கள் அங்கிருந்து மீண்டும் காங்கிரசுக்கே திரும்ப வராமல் திமுக, அதிமுக, பாஜக போன்ற கட்சிகளுக்குச் செல்லும் நிலை உள்ளது. அவர்கள் திரும்பிவந்தால் அவர்களை அரவணைக்கும் சக்தி இங்கு இல்லை. தாம் அனாதைகளாகக் கருதப்படுவோம் என்று அவர்கள் நினைத்து வேறு கட்சிகளுக்குச் செல்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சியின் இந்த நிலையால் தமிழ்நாட்டுக்குத்தான் இழப்பு. வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது என்று திராவிட இயக்கத்தினர் முன்பு பேசியபோது அதை சாக்காக வைத்து நிறைய முதலீடுகளைக் காமராசர் தமிழ்நாட்டுக்குப் பெற்றிருக்கிறார். ஆனால் இப்போதிருக்கும் நிலைமை என்ன? தென்னிந்தியாவில் ஆந்திரமும் தெலுங்கானாவும் முதலீடுகளை அதிகம் ஈர்க்கின்றன. இது பற்றி இங்கே கவலைப்படக்கூட ஆட்கள் இல்லை. வங்கிகள், ரயில்துறை, துறைமுகம் போன்ற மத்திய அரசுத்துறைகளில் தமிழ்நாட்டில் காலியாக இருக்கும் இடங்களில் வட இந்திய இளைஞர்கள்தாம் இருக்கிறார்கள். நம் பிள்ளைகள் இடம் பெற முடிவதில்லை. தரம் வாய்ந்த நவோதயா பள்ளிகள் இன்றைக்கு 32 பள்ளிகள் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டிருக்கவேண்டும். இந்தி வேண்டாம் என்று சொன்னதன் விளைவு இன்று ஒரு பள்ளிகூட இல்லை. அதுவும் இப்போது இந்தி வழிக்கல்விதொடர்பான விதிகளைத் தளர்த்திய பிறகும்கூட அந்த பள்ளிகளை அமைக்க யாரும் முயற்சி எடுக்கவில்லை. கோதாவரி, கிருஷ்ணாவை சந்திரபாபு நாயுடு ஆறுமாதத்தில் இணைக்கிறார். இங்கே அண்ணா நகர் அமைந்தகரை பாலத்தைக்கூட ஆறு ஆண்டுகளாக அமைக்கமுடியாத நிலை. யாரும் இதையெல்லாம் ஏனென்று கேட்கிறார்களா? காங்கிரஸ்காரர்களாக நாங்கள் ஐம்பது ஆண்டுகளாக மேலோட்டமாக அரசியல் செய்துவிட்டதால் சரிவைச் சந்தித்திருக்கிறோம்.
என்ன செய்யவேண்டும்?
1. காங்கிரசுக்கு தமிழ்நாட்டில் வாக்குவங்கி எது? அடையாளப்படுத்தவேண்டும்.
2. காங்கிரசின் கொள்கை எது? எதற்கு ஆதரவு? எதற்கு எதிர்ப்பு போன்றவற்றை தெளிவுபடுத்தவேண்டும். நண்பர்களைத் தெரிந்திருக்காவிட்டாலும் கூட எதிரிகளைத் தெரிந்துவைத்திருக்கவேண்டும்.
3. உள்ளாட்சி தேர்தல், சட்டமன்றத் தேர்தல் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தவேண்டும். நாடாளுமன்றத் தேர்தல்களின்போது கிடைக்கிற கவனம், அணுசரணை உள்ளாட்சித் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியால் தரப்படுவதில்லை என்ற நிலை மாறவேண்டும்
4. நான்குமுறை போட்டியிட வாய்ப்புப் பெற்ற தலைவர்கள் கட்சியின் நிர்வாகத்தை கவனித்துக் கொண்டு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை புதியவர்களுக்குத்தரவேண்டும். என்னுடைய சீட்டை என் வாரிசுக்குத் தாருங்கள் என்று கேட்கக்கூடாது.
5. பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், சிந்தனையாளர்கள் ஆகியோரை இனங்கண்டு நல்லமுறையில் பயன்படுத்தவேண்டும்.
6. யாருக்கு அதிகாரம் இருக்கிறதோ, அவரிடம் பொறுப்பும் அளிக்கப்படவேண்டும். கட்சியின் செயல்பாடுகளைப் பற்றி முடிவெடுப்பதில் களப்பணி செய்பவர்களுக்கும் வாய்ப்பளிக்கவேண்டும்.
(பீட்டர் அல்போன்ஸ் காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர். நமது செய்தியாளரிடம் பேசியதிலிருந்து எழுதப்பட்டது)
டிசம்பர், 2016.